நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

வெப்ப அலைகள்(Heat Waves)

தீபக் தமிழ்மணி

Apr 2, 2016

veppa alaigal1மே மாதம் வரப்போகிறது. கோடையின் தாக்கமும் வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த வருடம் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் சேர்த்து வெயிலின் காய்ச்சலுக்கு, ஐ.நா-வின் அறிக்கைப்படி 2248 பேர் இறந்தனர். பின்னர் அதைப்பற்றி அரசும் மறந்துவிட்டது, நாமும் மறந்துவிட்டோம். ஆனால் வருமுன் சிந்திப்பதே சாலச்சிறந்தது என்பதால், வெயிலின் பாதிப்பை முன் கூட்டியே கணித்து பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, நம்மை நாமே தயாராக்கிக் கொள்வோம்.

பொதுவாகவே பேரிடர் பாதிப்புகளில், நாம் நிலநடுக்க பாதிப்புகளையும், சுனாமி, வெள்ளம், புயல் போன்றவற்றின் பாதிப்புகளை மட்டுமே நாம் கவனத்தில் கொள்கிறோம். வெப்ப அலைகள்(Heat waves) என்பதனை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இதுபெரும் தவறு என்பதனை அதிகரித்துக் கொண்டிருக்கும் புவி வெப்பநிலை, நமக்கு எச்சரிக்கிறது. வெப்ப அலைகள் என்றால் சுற்றுப்புறம், காற்று ஆகியவற்றில் வெப்பத்தை ஏற்படுத்துவது.

வெப்ப அலைகளின் காரணமாக பல பாதிப்புகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அவற்றுள் சில,

veppa-alaigal15

 1. பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
 2. காட்டுத் தீ ஏற்பட்டு காடுகள் அழிகின்றன. அவற்றில் காட்டு விலங்குகளும், மூலிகைகளும் அழிகின்றன.
 3. விவசாயம் பாதிக்கப்பட்டு வறட்சி ஏற்படுகிறது.
 4. பருவநிலை மாறிவருகிறது,
 5. கடல் நீருக்கு உண்டாகும் வெப்பநிலையால் புயல் அடிக்கடி ஏற்படுகிறது.

வெப்ப அலைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள இந்தியப் பேரிடர் மேலாண்மை அமைப்பு சில வழிவகைகளைக் கூறுகிறது. அவை,

 1. நண்பகல் 12.00 மணியிலிருந்து மாலை 3.00 மணி வரை வெளியில் செல்லாதிருத்தல்.
 2. திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளல்.
 3. பருத்தி ஆடைகளையே அணிதல்.
 4. தேநீர், குளம்பி(Coffee) மற்றும் செயற்கை பானங்கள் ஆகியவற்றைத் தவிர்த்தல்.

மேற்கண்டவை நல்ல அறிவுரைகளாக இருந்தாலும், உழைக்கிற ஏழை எளிய மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. மேலும் பல வழிவகைகளை நாம் பின்பற்ற வேண்டியதாய் இருக்கிறது. அவற்றை நாம் குறுகிய காலத் தீர்வுகள் என்றும், நீண்ட காலத் தீர்வுகள் என்றும் பிரிக்கலாம்.

அவற்றில் குறுகிய காலத் தீர்வுகளை முதலில் பார்க்கலாம்:

veppa alaigal10

வாகனங்கள், பட்டாசுகள் வெளியிடும் மாசுகளில் பல தூசுத்துகள்கள் உள்ளன. காற்றில் கலந்துள்ள இவை வெப்பத்தை உறுஞ்சி வைத்துக் கொள்கின்றன. இதன் மூலம் பெருநகரங்களில் இரவு நேரங்களிலும் வெப்பமாக இருக்கிறது. மேலும் பல அடுக்கு கட்டிடங்கள், வெப்பம் வெளியேறாமல் நகரங்களுக்கு உள்ளேயே சுழல விடுகிறது. இதனை நகர வெப்ப தீவுகள் (Urban Heat Island) என்று நாம் அழைக்கிறோம். தூசுத் துகள்கள் வெப்ப அலைகளின் வீரியத்தை அதிகரிக்கின்றன. எனவே எல்லா காலமாக இருந்தால் மகிழ்ச்சி, குறைந்தது கோடை காலங்களிலாவது அரசு பல பேருந்துகளை இயக்கி, தனிநபர் வாகனப் போக்குவரத்தைக் குறைக்க வேண்டும். வாகனப் பெருக்கத்தால் வெப்ப அலைகள் அதிகரிக்கிறது. மேலும் சாலை விரிவாக்கத்திற்கு பல வயதான மரங்கள் வெட்டப்படுகின்றன.

veppa alaigal11

பிளக்ஸ்: இன்று பிறப்பு, இறப்பு, பண்டிகை என்று எல்லாவற்றுக்கும் பிளக்ஸ் தான். இது போதாது என்று அரசியல் விளம்பரங்கள் வேறுஅம்மா வாழ்க, அய்யா வாழ்க என்று. இவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் தான் வாழ வேண்டும். காற்று மாசுத் துகள்கள் செய்யும் வெப்ப உறிஞ்சலை பிளக்ஸ் பதாகைகளும் செய்கின்றன.

veppa-alaigal17

நகரங்களில் பல அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்கு பஞ்சமிருப்பதில்லை. எனவே வீடுகளில் மாடித் தோட்டங்களையும், செங்குத்துத் தோட்டங்களையும் வளர்க்கலாம். இவை குறைந்த 3 முதல் 5 டிகிரி வெப்பத்தை வீட்டிற்குள் குறைக்கிறது. மேலும் கற்றாழை, கள்ளி என இரவில் பிராணவாயுவை வெளியிடும் செடிகளையும் வளர்க்கலாம்.

வெட்டி வேர்களால் செய்யப்படும் திரைகளை பயன்படுத்தலாம். சன்னல்கள், கதவுகளில் ஈரப்பதம் உள்ள துணிகளால் மூடலாம்.

மேலும் நீண்ட தீர்வுகளைப் பற்றியும் கவனம் கொள்ள வேண்டும்:

veppa-alaigal16

 1. பாரம்பரிய வேளாண்மைக்கு மாற வேண்டும். மரங்கள் வான் உயர்ந்தவையாக இருக்க வேண்டும். இன்று பல மரங்கள் ஜப்பானியர்களின் உயரத்தை விட குறைவாகவே வளர்க்கப்படுகிறது. பெரிய மரங்கள் அதிகம் காற்று மாறுபாடுகளை உறிஞ்சிக்கொள்கின்றன. எனவே காற்று மாறுபடும், புவி வெப்பமயமாதலும் குறைக்கப்படுகிறது.
 2. செயற்கை உரங்கள், உயிர்க்கொல்லி(பூச்சுக்கொல்லி), களை அகற்றி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இவற்றை உற்பத்தி செய்யும்போது அதிக கரியமில வாயுக்கள் வெளியேறுகிறது. மேலும் இவை வெப்பத்தை அதிகம் வெளியிடும் தன்மை கொண்டவை. எனவேதான் செயற்கை விவசாயத்திற்கு அதிகம் தண்ணீர் தேவை.
 3. இயற்கை கழிவுகளிலிருந்தும், மனித கழிவுகளிலிருந்தும் எரிவாயு எடுப்பதன் மூலம், இவை புவி வெப்பத்தை அதிகரிப்பதைத் தடுக்கிறோம். நாமும் பயனடைகிறோம். மீத்தேன் கரியமில வாயுவைக் காட்டிலும் 20 சதவிகிதம் புவி வெப்பமயமாக்கலில் அதிகம் தொடர்புடையது.
 4. நீர்நிலைகளைப் பாதுகாப்பதன் மூலம் நுண்பருவ நிலை(Micro-climate) பாதுகாக்கப்படுகிறது அல்லது சீராக இருக்கும்.
 5. சுரங்கங்களின் பயன்பாட்டிற்குப் பிறகு மரங்களை வைத்து வளர்க்க வேண்டும் என்பது விதி. ஆனால் அவை நடைமுறையில் இல்லை.
 6. நெல் பயிரிடும் முறையில் அதிக தண்ணீர் தேக்கி வைப்பதால், பாசிகள் உருவாகி அவை அழியும்போது மீத்தேன் வெளியிடுகிறது. எனவே அசோலாவை வளர்க்கலாம். அவை மீத்தேனை உறிஞ்சிவிடும் மேலும் அசோலா கால்நடைகளுக்கு நல்ல தீவனம்.

இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த சமூக அக்கறையும், நேர்மையும், உறுதியும் வேண்டும். ஆனால் நடைமுறைக்குப் பின் மக்கள் பல வகையிலும் பயனடைவார்கள்.


தீபக் தமிழ்மணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வெப்ப அலைகள்(Heat Waves)”

அதிகம் படித்தது