செப்டம்பர் 19, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

வெளிச்சத்திற்கு வரும் பாலியல் புகார்கள் (#MeToo)

வெங்கட் நடராஜன்

Dec 1, 2018

siragu Metoo4
கடந்த 2017 ஆம் ஆண்டு ட்விட்டர் (Twitter) சமூக வலைதளத்தில் தொடங்கப்பட்ட #MeToo இயக்கம் இன்று உலகம் முழுதும் பாணி(Trend) ஆகிவிட்டது. #MeToo என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக ஒலிக்கும் சமூகக் குரல்.

திரைத்துறை

ஹாலிவுட்டில் ஆரம்பித்த இக்குரல் இன்று இந்தி மற்றும் தமிழ் திரைத்துறை வரை ஒலித்துக்கொண்டிருந்தது. திரைத்துறையில் இதுபோன்ற அத்துமீறல்கள் சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்தே நடப்பதாக நம்பப்படுகிறது. புகழ் மற்றும் பணம் புரளும் துறை என்பதால் வாய்ப்பு தேடி வரும் பெண்களும் சில ஆண்களும் தெரிந்தே இதில் விழுவதாகவும் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழில், எனவே இதுபோன்ற செயல்கள் நடைபெறக்கூடாது என்பதில் யாருக்கும் நிச்சயம் மாற்று கருத்து இருக்காது.

மற்ற துறைகள்

இது பெரும்பாலும் சமூக வலைத்தளத்தில் பகிரப்படுவதால், புகார் தொடுப்பவர் மற்றும் பழி சுமத்தப்படுபவர் தகுதி மற்றும் பிரபலம் சார்ந்தே வெளிச்சத்திற்கு வருகிறது. இதனால் சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகை போன்ற ஊடகத் துறையில் தொடங்கியதில் ஆச்சர்யம் இல்லை. அதைத்தாண்டி அரசியல் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் மீதும் வந்து கொண்டிருக்கிறது. இந்த #MeToo கொடுத்த துணிச்சலால், சமீபத்தில் உச்சநீதிமன்ற வேட்பாளர் மீது கூட பழி சுமத்தப்பட்டு அமெரிக்க நாடாளுமன்றத்தையே உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் இப்போது?

இது காலங்காலமாக நடந்தாலும் இப்போது வெளிச்சத்திற்கு வரவேண்டிய அவசியம் என்ன? முதலாவதாக சமூகவலைத்தளங்கள். இதில் பெரும்பாலான புகார்கள் சட்டத்தின் முன் குற்றமாகக் கருத்தப்படாதவை அல்லது நிரூபிக்கமுடியாதவை. அதேநேரம் சமூகநீதி மீறிய செயல். எனவே சமூக ஊடகங்களின் வாயிலாக எளிதாக தெரிவிக்கமுடிகிறது. இரண்டாவதாக அதிகாரத்தில் இருந்து கொண்டு அத்து மீறுபவர்களை எதிர்த்து குரல் கொடுக்கும் பெண்களின் துணிச்சல். மேலும் பணியிடம் மற்றும் சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான ஒரு சூழ்நிலை உருவாகும் எனும் நம்பிக்கை போன்ற காரணங்களால் இந்த அவலங்கள் இப்போது மெல்ல வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

siragu Metoo1அந்தகாலப் பெண்கள்:

இதுபோன்ற பிரச்சினைகள் அந்த காலங்களில் இல்லையா? நிச்சயமாக மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே இத்தொல்லைகள் இருந்திருக்கவேண்டும். ஆனால் சமூகத்தின் பார்வை மற்றும் பெண்களின் நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்வது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. அரசன், அரச அதிகாரிகள் மற்றும் செல்வந்தர்கள் பெண்களை தன் இச்சைக்குப் பயன்படுத்துதலும் அதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத நிலையும் இருந்தது.

ஆனால் ஆயிரக்கணக்காணோர் பணியாற்றும் பன்னாட்டு நிறுவனங்களோ அல்லது சினிமா போன்ற பிரபல துறைகளோ அவ்வளவாக இல்லை. மேலும் ஆண் என்பவன் பொருள் ஈட்டுபவனாகவும் பெண் என்பவள் வீட்டைக் கவனிப்பவளாகவும் இருந்ததால் இதுபோன்ற குற்றங்கள் நிகழும் சூழலும் இல்லை.

இன்று ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலைவாய்ப்புகளில் பங்கேற்பதால், இதுபோன்ற இன்னல்களும் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது என்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். வாதத்திற்காக, இப்பொழுது கூட பெண்கள் வீட்டை மட்டும் கவனிப்பவளாக இருந்தால், இது போன்ற புகார்கள் நிச்சயம் குறையும். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமன்று.

அறிவியல் சொல்வது என்ன?

இயற்கையிலேயே ஆண் என்பவன் பெண்கள் மீது ஈர்ப்பு கொண்டவனாக இருக்கிறான். உடல் ரீதியாக மட்டுமல்லாமல், நடை உடை பாவனைகளாலும் கவரப்படுகிறான். இதனால் பெண்களை இழிவு படுத்துகிறான் அல்லது போகப்பொருளாகப் பார்க்கிறான் என்பதையும் தாண்டி ஒரு வித இனம் புரியாத கவர்ச்சியில் சிக்குகிறான், சுய சிந்தனையை இழக்கிறான். இது மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். என்னதான் ஆறறிவு பெற்றிருந்தாலும், மனிதன் இந்த விசயத்தில் விலங்கிலிருந்து பெரிதும் வேறுபடவில்லை என்பதையே காட்டுகிறது.

ஆணுக்கு இது ஒரு குறுகிய தேவை, பாதிப்பும் குறைவு. மாறாக உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகம். பெண் என்பவள் அன்பு,பாதுகாப்பு, நீண்டகால உறுதுணை இவைகள் இருந்தால் மட்டுமே அந்த ஆணை ஏற்றுக்கொள்கிறாள். எனவே நிலையான குடும்ப வாழ்க்கைக்கு அஸ்திவாரமே பெண்கள் தான் என்று சொன்னால் கூட அது மிகையாகாது.

அறிவியல் கூற்றுபடி, ஆண் பெண்ணின் இந்த எதிரெதிர் குணாதிசயத்திற்கு உடம்பில் சுரக்கும் ஹார்மோன்கள் எனப்படும் இரசாயனங்களே காரணம் என்று கூறப்படுகிறது.

சட்டம் சொல்வது என்ன?

வயது வந்த இருவர் உறவில் ஈடுபட்டால் அது குற்றம் இல்லை என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றமே தீர்ப்பு அளித்துள்ளது. அந்த துணையை எப்படி அடைவது என்று எந்த சட்டமும் தெளிவாக சொல்லவில்லை. அந்த துணையை தேடும் முயற்சியில் தான் பல ஆண்கள் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். கட்டாயம் ஏதுமின்றி ஒரு ஆண், ஒரு பெண்ணை அணுகுவது குற்றம் இல்லை என்றே பொருள்படுகிறது.

பாலியல் தொல்லை என்றால் என்ன?

ஒரு பெண் தன் பணியை அல்லது இயல்பான வாழ்க்கையைத் தொடர முடியாத அளவுக்கு உடல்ரீதியாகவும் மோனோரீதியாகவும் கொடுக்கப்படும் பாலியல் சார்ந்த நெருக்கடி. இது உண்மையிலேயே ஒரு சிலப் பெண்களுக்கு நடந்தாலும், பல பெண்கள் இந்த வரையறையைத் தவறாகவே பயன்படுத்துகிறார்கள் அல்லது புரிந்துகொள்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

ஆண் ஒரு பெண்ணை இச்சைக்கு அழைப்பதும் அதைப் பெண் மறுப்பதும் பாலியல் தொல்லை ஆகாது. அது இயற்கை. அதுவே ஒரு பெண்ணைக் கட்டாயப்படுத்துவதும், இணங்க மறுத்தால் விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்துவதும் தான் பாலியல் தொல்லை ஆகும்.

siragu Metoo3

பதவிக்காகவும் வாய்ப்புக்காகவும் ஆண்களை மயக்கும் சில பெண்களும் இருக்கிறார்களே? பணத்திற்காக சினிமாவிலும் இரவுநேர கேளிக்கை விடுதிகளிலும் ஆடை துறந்து ஆடும் பெண்களும் இருக்கிறார்களே? விபச்சாரம் செய்யும் பெண்கள் கூட இருக்கிறார்களே? ஏன்? இது ஏழை பணக்கார வித்தியாசமின்றி அனைத்து நாடுகளிலும் நடைபெறுகிறதே? ஏன்? என்ன தான் நாகரிகமும் நவீன விஞ்ஞானமும் வளர்ந்தாலும், சமூகத்தில் ஏதோ ஒரு தேவை இருந்துகொண்டு தானே இருக்கிறது. இதில் ஈடுபடும் ஆண்களையும் பெண்களையும் தடுக்க முடியுமா? நிச்சயம் முடியாது.

எனவே பெரும்பாலான ஆண்கள் தேடிக்கொண்டிருப்பது இது போன்ற பெண்களைத் தானே தவிர உங்களைப் போன்ற நேர்வழியில் நிமிர்ந்து நடக்கும் உத்தமிகளை அல்ல. இதை உணர்ந்து அவர்களுக்கு வழி விட்டு விடுங்கள். உங்களை தொல்லை செய்ய மாட்டார்கள்.

பெண்கள் என்ன செய்யலாம்?

ஒரு ஆண் தன்னை நெருங்கினால், பெண் தன் நிலையை தெளிவோடும் உறுதியோடும் தெரிவித்துவிடவேண்டும். இது பாதிப் பிரச்சினையையும் குழப்பத்தையும் குறைத்துவிடும். உடனே சமூக வலை தளங்களில் பதிவிட்டு பிரச்சினையைப் பெரிதாக்கக் கூடாது. மனம் ஒத்து பழகுவதற்கும் ஒருவரை தவறாக உபயோகிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்.

பெண்கள் கண்ணியமான உடைகள் அணியவேண்டும். நாகரீகம் என்ற பெயரில், அரைகுறை உடையணிந்து அளவுக்கு மீறிய மேக்கப் போட்டுக்கொண்டு ஆண்களின் ஹார்மோனுக்கு தீனிப் போடக்கூடாது. ஆண்களின் சிந்தனையை சிதறடிப்பதும், மோகத்தை ஊக்குவிப்பதும் கூட ஒரு வித பாலியல் தொல்லையே. இதுபோன்று தெரிந்தோ தெரியாமலோ நடக்கும் செய்கைகளைப் பெண்கள் தவிர்க்கவேண்டும்.

அதையும் மீறி தன் இயல்பு நிலையைத் தொடர முடியாமல் போனால், துறை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு தகுந்த ஆதாரத்தோடு புகார் அளிக்கவேண்டும். தன் நண்பர்கள் மற்றும் உறவினர் ஆலோசனை பெறலாம். சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து எச்சரிக்கை விடுக்கலாம்.    ஒரு நடிகை பாதிக்கப்பட்டால், அனைத்துப் பெண்களும் நடிப்பை புறக்கணித்து போராடவேண்டும். அப்பொழுது நிச்சயம் தீர்வு கிடைக்கும். அதைவிடுத்து, பல ஆண்டுகள் கழித்து, பணம் புகழ் போதுமான அளவு சம்பாதித்துவிட்டு குற்றம் சாற்றுவது ஏளனத்துக்கு மட்டுமே ஆளாக்கும். வாய்ப்புக்காக தவறான பாதையில் செல்லும் ஒரு சில பெண்களால் அனைத்து பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

தீர்வு என்ன?

வெறும் அறிவியல் மட்டும் பயின்று பொருளீட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், பள்ளிகள் நல்லொழுக்கத்தையும், நீதி போதனைகளையும் மாணவப் பருவத்திலேயே பயிற்றுவிக்கவேண்டும். பெண்களை பற்றி ஆண்களுக்கும், ஆண்களைப் பற்றி பெண்களுக்கும் தெளிவாக எடுத்துச் சொல்லவேண்டும். அவரவர் கலாச்சாரத்தை பெற்றோர்கள் சிறுவர்களுக்கு அன்றாடம் கற்றுத்தர வேண்டும். சமூகத்தில் உள்ள பெரியவர்கள் முன்னோடியாக வாழ்ந்து காட்டவேண்டும்.

தவறு செய்யும் ஆண்களுக்கும் தவறான புகார் அளிக்கும் பெண்களுக்கும் தண்டனை உறுதிப்படுத்தப் படவேண்டும். தொழில் நிறுவனங்கள், பொது மையங்கள் என அனைத்திலும் பாலியல் தொல்லை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விசாரணை குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும். நேர்வழியில் நடக்கும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தத்தம் பணியை செய்ய பாதுகாப்பான சூழல் உருவாக்கவேண்டும்.


வெங்கட் நடராஜன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வெளிச்சத்திற்கு வரும் பாலியல் புகார்கள் (#MeToo)”

அதிகம் படித்தது