ஜூலை 4, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

வெளிநாட்டு உறவு

ஈழம் மலர்மன்னன்

Jul 20, 2019

siragu-velinaattu-uravu

ஆழிசூழ் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளுக்கிடையேயும் கடல் கடந்த செயல்பாடுகள் பண்ட மாற்றுகள், வர்த்தகங்கள் அந்தந்த நாடுகளுக்கிடையேயான, உறவுகளை மேம்படுத்தியிருக்கின்றன. சங்க காலத்தில், தமிழகம், ஏனைய நாடுகளோடு, எவ்வாறெல்லாம், ஒட்டி ஒழுக பரந்த அளவில் முயன்றிருக்கிறது, செயல்பட்டிருக்கிறது என்பதை இன்றைய நாகரிக உலகில், அகழ்வாராய்ச்சிகள் மூலம் கிடைக்கும் ஆதாரங்களைக்கொண்டு அறியமுடிகிறது.

மேற்கத்திய நாடுகளான, கிரிஸ், இரோம், எகிப்து தொடங்கி கிழக்கில் சீனா வரை மட்டுமல்லாமல் பாலஸ்தீனம் மெசப்பெட்டோமியா பரிலோனியா, ஆகிய நாடுகளுடன் வணிகத்தொடர்பு இருந்திருக்கும் தமிழகத்திற்கும் பாபிலோனியாவிற்குமிடையே மிக விரிவான நாகரிகம் பரவியிருந்தமைக்கும் ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. இத்தகைய பெருமைமிகு வணிகம் மற்றும் பண்பாட்டுத் தொடர்பினை, கடல்வழியாக தங்கள் பயணத்தை நம் தமிழ்ச்சமூகம், கடலில் ஆமை வலசைப் பாதையை பயன்படுத்தியே விரைவாக பயணப்பட்டிருக்கிறது.

உலகின் முதற்கப்பலையும், கப்பற்படையையும் வைத்திருந்தவர்கள் தமிழர்கள் என்பதற்கான ஆதாரங்கள் பல. தென் பசிபிக் மாகடலில் ஆஸ்திரேலியா கடற்பகுதியில் ஆழ்கடல் அகழ்வராய்ச்சியில் மிகப்பெரிய சரக்குக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வறிக்கைகள் அக்கப்பல் 25000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது என்றும் தமிழர்களுடையது என்று தெரிவிக்கின்றன. நாவாய் என்ற தமிழ்ப்பெயரே மருவிநேவி என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கி.மு. ஏழாம் நூற்றாண்டிலிருந்துதான் அயல்நாட்டுவாணிகம் தமிழர்களிடையே தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஏற்றுமதிச்சரக்குகளை அராபியரும், எகிப்தியரும் மரக்கலங்களில் வந்து ஏற்றிச்சென்றனர்.

தமிழகத்தின் உறையூரில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தியாடைகளுக்கு, மேலை நாடுகளில் பெரும் தேவை காணப்பட்டது. காவிரிப்பூம்பட்டிணம், முசிறி, தொண்டி ஆகிய ஊர்கள் பண்டையத் துறைமுகங்களாக அமைந்திருந்தன.

கொங்குநாட்டுத் தங்கம், பாண்டிநாட்டுமுத்து, தந்தம், சந்தனம், மிளகு, இஞ்சி, ஏலம் கிராம்பு போன்றவைகள் பண்டமாற்று முறையில் வாணிகம் செய்யப்பட்டன.

தமிழகத்திலிருந்து, ரோமாபுரிக்கு சென்ற ஒவ்வொரு கப்பல்களிலும் ஏலக்காய், இலவங்கப்பட்டை, வெல்லப்பாகு, நல்லெண்ணை, மிளகு, போன்றவைகளோடு தேங்காய், நெய், வாழை, அரிசி, சோளம், கம்பு முதலியவற்றுடன், புளி வெற்றிலை பாக்கு போன்ற மூலிகைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

சுள்ளியம், பேரியாற்று, வென்னுரை கலங்க,
யவனர் தந்த வினைமான் நன்கலம்,
பொன்னொடு வந்து, கறியொடு பெயரும்
என்பது அகநானூறு காட்டும் சான்றாகும். மிகவும் பிற்பட்ட கி.மு 60 களிலேயே நம் இந்தியத் துறைமுகங்கள் முக்கியமான மேற்குத்துறைமுகங்களுடன் இணைக்கப்பட்டிருந்தமைக்கு வணிகம் மட்டுமே முக்கியக்காரணமாக இருந்தது.

2003ம் ஆண்டில், செங்கடல் பகுதி துறைமுகத்தில் அகழ்வாராய்ச்சியில், பானை,கெரியுடன் (தொங்கும் வலைக்குள் பானை-உறி) தமிழ் பிராமி எடுத்துக்களுடன், ஒரு உடைந்த மண்சாடியும் கிடைத்துள்ளது.

எகிப்தைச் சேர்ந்த பெரனிஸின் என்பவர் எகிப்திய துறைமுகங்களிலும், தமிழ் பிராமி எழுத்துக்கள் உள்ள கல்வெட்டுகளும், காணப்பட்டதாக பதிவு செய்கிறார். இதன்மூலம் ஐரோப்பாவிற்கும், தமிழ்நாட்டுக்குமிடையே வர்த்தக உறவுகள் செழித்தோங்கியிருந்தது என்பதும் உறுதியாகிறது.

‘த. பெரிப்ளஸ் ஆஃப்தி எரித்திரேயன் சீ “ என்ற நூல் பண்டைய இந்தியகடல்சார் வணிகத்தின் சிறந்ததொரு ஆவணமாக உள்ளது. இந்த நூலில், குஜராத் கடற்கரையிலிருந்து தமிழ்நாடு மற்றும் அதற்கு அப்பாலும், அனைத்து முக்கியத்துறைமுகங்களையும், இது விவரிப்பதாக கடலாய்வறிஞர் நரசய்யா தெரிவிக்கிறார்.

தமிழ்நாட்டில், தொண்டியைப் போன்று மகாபலிபுரம் ஒரு கடல் துறைமுகமாக இருந்துள்ளது. மகாபலிபுரம் கடற்கரையில் பாறைகள் அதிகமாக இருந்ததால், அதற்கு மாற்றுத்தடமாக மரக்கானம் இரந்ததாக இந்த பெரிப்ளஸ் நூலில் குறிப்புகள் உள்ளது. பாண்டிசேரியில் அரிக்கமேடு மத்தியதரைக்கடலில் பெரும் வர்த்தக மையமாக விளங்கியது.

கங்கை வாரியும் காவிரிப்பயனூம்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும். . .

என பட்டினப்பாலை விவரிக்கிறது. காழகம் என்பது மலேயாவில் கடாரத்தைக் குறிக்கின்றது. இதன் மூலம் சோடி அரசர்களில் ஒருவரான கரிகாற் பெருவளத்தான் சோழன் ஆட்சியில் தென்கிழக்காசியா வரை சோழர்களின் வணிகப்பரப்பு விரிந்துள்ளதையும் அறிய முடிகிறது. சோழர்களின் வெளிநாட்டு வணிகத்திலும், சிறந்து விளங்குகியதை சீனாவின் சோங் வம்சத்தின் குறிப்பொன்றில் சோழ வணிகக் குழுவொன்று கி.பி.1077ம் ஆண்டில் சீன அசரவைக்குச் சென்று வந்ததைக் கூறுகிறது.

siragu-velinaattu-uravu2
கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானியப் பேரரசர்கள் வெளியிட்ட ரோமானிய நாணயங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், இலக்கியம், தொல்லியல், நாணயவியல் ஆதாரங்களைக் கொண்டு கி.மு.300 தொடக்கம் கி.பி.300 வரை எழுதப்பட்ட இலக்கியம், சங்க இலக்கியம் எனப்படுகிறது. பண்டைய தமிழ்ச் சமூகத்தினரின் சூழலை தெளிவுபட உரைக்கின்றவைகளில் முன்னணியில் உள்ளவை சங்க இலக்கியங்களே.

ஓயாத உழைப்பு அதன் மூலம் கிடைத்த உயர்வு கடல் கடந்து தங்கள் பிழைப்பை நடத்தியது. தமது மொழி கலை பண்பாட்டுடன் கூடிய பாரம்பரியங்களை தங்களது வணிகத் தொடர்பினால் அந்தந்த நாடுகளிலும் பரவச் செய்துள்ளனர். இதன் விளைவாக பிற நாடுகளில் பல தமிழ்ச் சொற்கள் திரிந்தும் மருவியும் வழங்குகின்றன.

கி. மு. ஐந்தாம் நூற்றாண்டில் தமிழகத்துடன் இருந்த வணிகத் தொடர்பினால் பல தமிழ்ச் சொற்கள் கிரேக்க மொழியில் கலந்துள்ளதை. தமிழக வரலாறு மக்களும் -பண்பாடும் என்ற நூலில் டாக்டர் கே.கே பிள்ளை , என்பவர் விளக்கியுள்ளார்.

சிறந்த தமிழறிஞரும் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாக அரும்பாடுபட்டவருமான, ஈழத்தைச் சேர்ந்த தனிநாயக அடிகள் தன்னுடைய தமிழ்த்தூது என்ற நூலில் சாவகம், சுமத்ரா போன்ற இடங்களில் இரண்டாம் நூற்றாண்டுக்கும் முன்னரேயே தமிழ் மக்கள் குடியேறியிருக்க வேண்டும் என்பது கெல்டோன் போன்ற அறிஞர்கள் கருத்து. இன்றும் சுமத்ராவில் வாழ்ந்து வரும் கரோபட்டாக் வகுப்பினரின் உட்பிரிவினராயிருக்கும், கிம்பரிங் என்போர் தம்மைச் சோளியர், சேரர், பாண்டியர் , கலிங்கர் என்று வகுத்திருப்பதையும் வழிபாடுகள் கோயில்கள் சைவசித்தாந்தத் தத்துவங்களை அடிப்படையாக்க கொணடதாகவும் கட்டிடங்கள் திராவிட தென்னிந்திய மக்களின் கட்டடச் சிற்பக் கலைகளை ஒட்டியே அமைந்திருக்கின்றன என்றும் அவர்களுடைய பேச்சு வழக்கில் தமிழ் சொற்களான வாடை, சுக்கு, இஞ்சி, கொத்தமல்லி , குதிரை கூடை பெட்டி, பிட்டு ஆகியவை அவர்களின் பேச்சுவழக்கில் உள்ளன. அம்மா, அக்கா, மாமா, தம்பி போன்ற உறவுச் சொற்களும் இதில் அடங்கும்.

கம்போதியாவின் அரண்மனையில் நடைபெற்று வந்த நாட்டியக்கலை தமிழ் நாட்டியக் கலைகளோடு ஒப்பிட்டுப்பார்க்க முடியுமென்பதையும் தாய்லாந்து நாட்டில் அந்த நாட்டு மன்னர்களின் முடிசூட்டு விழாவில் தமிழ்பாக்கள் பாடிவருவதையும் அங்குள்ள கோயில்களில் ‘‘ஆதியும், அந்தமும் இல்லா அரும் பெருஞ்சோதியை” என்ற பாட்டைத் தமிழ் தெரியாது ஏடுகளில் பாதுகாத்து வைத்துள்ளதையயும், மார்கழி திருவெம்பாவைத் திரு நாட்களைக்கொண்டாடி வருவதையும், கோயில்கள் வழிபாட்டு முறைகள் தென்னிந்திய முறைகளைத் தழுவி அமைந்துள்ளதாகவும், அடிகள் தெரிவிக்கிறார்.

இலத்தின் மொழி மேலைநாட்டுச் சமயங்களின் மொழியாய் விளங்கி வந்தது. இந்தியாவின் சமயங்களைப் பற்றிய நூல்கள் எழுதப்பட்டன. ஆனால் தமிழ் இலக்கியத்தில் சிறந்து விளங்கும் பல்வேறு சமய இலக்கியங்களைப்போல வெறு எம்மொழியிலும் இல்லை. சைவரும், வைணவரும், சமணரும் பௌத்தமும் முகம்மதியர்களும், கிறித்தவர்களும் ஒருங்கே இலக்கிய உரிமை பாராட்டக்கூடிய மொழி தமிழ்தான் என்பதும், பெரிய புராணம், கம்பராமாயணம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சீறாப்புராணம், மேபாவணி, இரட்சண்ய யாத்திரிகம் போன்ற காப்பியங்களுக்கு ஒப்பாய் பல்வேறு சமயங்களுக்குரிய நூல்கள் தமிழ்மொழியில் இருப்பது போல வேறு எந்த மொழியிலும் இல்லை யென்பது அடிகளின் முடிவாகும்.

அங்கோர் எனுஞ்சொல் நகர், நகரம் எனும் சொல்லின் திரிபு. நகர் என்பது வடமொழிச் சொல்லென்று பொதுவாகக் கருதப்படுகிறது. வடமொழி தவிர்த்து ஏனைய இந்திய ஐரோப்பிய மொழிகளில் இல்லாததால் , திராவிடர்கள் நகரங்களை அமைப்பதில் சிறந்து விளங்கியதால் நகர் எனுஞ்சொல் திராவிடமொழிக்கே உரிய சொல்லாகும். வியட்நாம்நாட்டில் போநகர் எனப்படும் குன்றின்மேல் உள்ள கட்டிடங்கள் மாமல்லபுரத்தின் சிற்பக்கலை வழியாகத் தோன்றிய கட்டிடங்கள் என்றும், மீசான் எனப்படும் இடத்திலிருக்கும் இடிந்த கட்டிடங்களைப் பார்த்தாலும் பல்லவ மன்னர்களின் கோயில்களின் பான்மையைக் காட்டுகின்றன என்றும் சைக்கோன், நாத்திராங், தூரான் போன்ற இடங்களில் பாம் பொருட்காட்சிசாலைகளை ஆராய்ந்தால் அங்கிருக்கம் சிலைகளிலிருந்து இந்திய நடனக்கலை, சமயம், சிற்பம், கட்டிடம் ஆகியவை எந்தளவி;ற்கு அந்நாட்டில் பரவியிருந்தன என்று தமிழர் தமிழ்க்கலை தொடர்பான பல செய்திகளை தனது ஒன்றே உலகம் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

இந்தோனிசியத் தீவுகளில் முதன்பெற்ற தீவான சாவகம் (ஜாவா) தொன்று தொட்டே இந்தியப் பண்பாட்டைப்பெற்றிருந்தது. கி.பி.முதல் இரண்டாம் நூற்றாண்டுகளிலே தமிழ் நாட்டிலிருந்தது கப்பலோட்டிகளும் வணிகரும் அங்கு சென்றிருக்க வேண்டும். இதை மணிமேகலைக் காப்பியத்திலும், அந்த நாட்டில் காணப்படும் கல்வெட்டுகளிலிருந்தும் அறியமுடிகிறது என்கிறார் அடிகள்.

இத்தாலியை பற்றிக் குறிப்படும்போது, தமிழ்நாட்டைப்பற்றி எழுதிய பிளினி, மார்க்கோபோலோ, இவர்களைத் தொடர்ந்து பெஸ்கி என்ற இயற்பெயருடைய வீரமாமுனிவரும் இத்தாலி நாட்டினரே போர்த்துகல் நாட்டைப்ப்றறிக் குறிப்பிடும் அடிகள் 16 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க மதகுரு ஒருவர் எழுதிய தமிழ் இலக்கண கையெழுத்துப்படியை பார்வையிட்டு இதுவே ஐரோப்பிய ஒருவரால் எழுதப்பட்ட முதல் இலக்கண நூல் என்ற கருத்தையும் முன்வைக்கிறார்.

டென்மார்க்கில் இருக்கும் நூலகத்திலும், தமிழ் நூல்கள் பல இருப்பதாக அடிகளார் குறிப்பிடுகிறார். தரங்கம்பாடி முதலிய தென்னிந்திய துறைமுகங்கள் இருந்த காலத்தில் அந்நூல்கள் டென்மார்க்கிற்கு அனுப்பியிருக்க வேண்டும் என்றும், குடந்தையில் அச்சிடப்பட்ட கண்டிராசன், நொண்டி சிந்து எனும் நூல் அங்குள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

மொரிசியஸ் நாடுபற்றிகுறிப்பிடும் அடிகள், பிரெஞ்சு ஆங்கிலம் மற்றும் தமிழ்பண்புகள் கலந்த நிலையிலேயே அங்கு தமிழர்கள் வாழ்கின்றனர். அங்கு போர்ட்லுசயிசி எனும் நகரில் தஞ்சாவூர் வீதி, திருச்சிராப்பள்ளி வீதி என்றும் இருந்ததையும், அங்கு தமிழர்களே வாழ்ந்துவந்தனர். அங்கு தமிழர்களே வாழ்ந்துவந்தனர். ஆங்கிலேயர்கள் மொரிசியஸ் தீவினைக் கைப்பற்றியதும், மொரிசியஸ் குடிமக்கள் கையொப்பமிட்ட பதவிப்பிரமாணத்தில் சவரிமுத்து, சின்னத்தம்பி துரைச்சாமி என்று பலர் தமிழிலேயே கையெழுத்திட்டுருப்பதையும் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்லாமல் பிரெஞ்சு ஆங்கிலம் கலந்த கிரையோல் எனும் ஒரு திசைமொழி வழங்கி வருவதையும் அக்கலப்பு மொழியில், பீரக்கங்காய். முருங்கை, கருவேப்பிலை, கொத்தமல்லி, தோழன், கேள்வி போன்ற தமிழ்ச்சொற்கள் இடம்பெற்றிருப்பதையும், 1816ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பிரெஞ்சு செய்தித்தாளில், தமிழ்அச்சுகள் கொண்ட தமிழ் விளம்பரங்கள் வெளியாகியிருப்பதையும் 1868ல் ஒரு தமிழ்ச் செய்தித்தாளை பதிப்பித்துள்ளார்கள் என்றும் தெரிவிக்கிறார். அத்தோடு தமிழுக்காக அயராது ஆய்வுப்பணியை மேற்கொண்ட தனிநாயகஅடிகள் இது தமிழ்ப் புலவர்களுக்காக அமைக்கப்பட்ட ஆய்வல்ல. வெளிநாட்டிலும் இந்தியாவிலும் உள்ள மாணவர்களுக்காகவும் தமிழைப் பற்றி அறிந்திராதவர்களுக்காகவும், அறிய விழைவோருக்கும் மேற்கொள்ளப்படுகிறது என்னும் உலகச் செம்மொழிகளிலிருந்து தமிழ் எந்தளவிற்கு வேறுபட்டும் உயர்ந்தும் ஒப்புமையுடன் திகழ்கிறது என்பதை நிறுவுகிறார்.

பண்டைத்தமிழ் மக்கள் அயல்நாடுகளுடன் வணிகத்தொடர்பு கொண்டிருந்ததின் மூலம், நம்நாட்டு பொருட்களை ஏற்றுமதிசெய்வதில் சிறப்பிடத்தைப் பெற்றிருந்தனர். இதன் காரணமாகவே, தமிழகத்திற்கு உலகத்தொடர்பு என்பது ஏற்பட்டது. இத்தொடர்பு கருத்தியல் அளவில் வளர்ச்சி பெற்றிருந்ததைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

இத்தாலிய நாட்டில் வாழ்ந்த ஸ்டொமிக்வாதிகள் உரோமப்பேரரசு காலத்தில் எவ்வாறு ஓர் உலக மனப்பான்மையை வளர்த்தார்களோ, அவ்வாறே சங்க காலத்திற்கு முற்பட்ட காலந்தொடங்கி, ஓர் உலக மனப்பான்மை தமிழகத்தில் பரவியுள்ளது என்பதும் ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்” யாதானும் நாடாமல், ஊராமால” ஆகிய செவ்விலக்கியத் தொடர்கள், தமிழர் தம் உலக மனப்பான்மையை எடுத்துக்காட்டும் தொடர்களாகும். அதேபோல தமிழ்ப்பண்பாட்டின் களஞ்சியகளான தொல்காப்பியம், குறுந்தொகை, புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் தமிழர் தம் வாழ்வியலை, பண்பாட்டின் தொன்மங்களை அயல்நாடுகளோடு அவர்களின், உலகத்தொடர்புகளை நலம். அறிந்துகொள்ள உதவும் உன்னத இலக்கிய நூல்கள் என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.


ஈழம் மலர்மன்னன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வெளிநாட்டு உறவு”

அதிகம் படித்தது