ஏப்ரல் 4, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

வேண்டாமே … நமக்கு நவோதயா பள்ளிகள்

சுசிலா

Sep 16, 2017

Siragu navodaya school2

நீட் எனும் அரக்கனைத் தொடர்ந்து, நம்மை நோக்கி குறி வைக்கப்படும் அடுத்த அம்பு நவோதயா பள்ளிகள். இது நம் தமிழ்மொழிக்கும், சமூகநீதிக்கும் பேராபத்தை விளைவிக்கக்  கூடியது. இதனை முளையிலேயே கிள்ளி எறியவில்லை என்றால், நம் தமிழ்ச்சமூகத்தை மிகவும் கல்வி மறுக்கப்பட்ட பின்தங்கிய நிலைக்குக் கொண்டு சென்று விடும். மத்திய பா.ச.க அரசு தொடர்ந்து நம்மை போராட்டக்களத்திலேயே வைத்திருக்க முடிவு செய்திருக்கிறது போலும்.!

இந்த நவோதயா பள்ளிகளைப்  பற்றி சற்று விரிவாக பார்ப்போமா. 1986 ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் இந்த ஜவஹர்லால் நவோதயா பள்ளிகள் என்பதாகும். பின்தங்கிய மக்களுக்காக மாவட்டத்தில் ஒன்று என, கல்வி பெற முடியாத குழந்தைகளுக்கு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை மூலமாக,  உண்டு உறைவிடப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டதாக கூறினார்கள். ஆனால், இந்தத் திட்டத்தில், வசதியான, மேல்தட்டு மாணவர்கள்தான் பயில்கின்றனர் என்பதுதான் உண்மை. இத்திட்டம் அறிமுகமான போதே தமிழகம் இப்பள்ளியை எதிர்த்து வந்திருக்கிறது. முக்கியமாக திராவிடர் கழகம் இதற்காக எதிர்த்து போராடியிருக்கிறது. ஏனென்றால், நாம் ஏற்கனவே இரு மொழி கொள்கையுள்ள மாநிலம். மும்மொழி கொள்கையை ஏற்காத மாநிலம். நவோதயா பள்ளி மூன்று மொழிகள் கற்க வேண்டும் என்ற விதியில்  இயங்குகிறது. அதிலும்,  இந்தியும், ஆங்கிலமும் தான் பயிற்று மொழியாக இருக்கிறது. இதில் சேர்க்கை என்பது கூட நன்கு படிக்கும் மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களை மேலும் கூர்மையாக்கப்படும் என்ற விதியின் கீழ் இயங்குகிறது. இதற்கு மாநிலங்கள் 30 ஏக்கர் நிலம் கொடுத்தால், மத்திய அரசு, அந்த இடத்தில், பள்ளிகள் அமைத்து, நன்கு படிக்கும் மாணவர்களை சேர்த்து, தங்கவைத்து அவர்களுக்கு கல்வி தரப்படும் என்ற முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

Siragu navodaya school3

இதில், மிக முக்கியமான விசயம் என்னவென்றால், இங்கே 6 -ஆம் வகுப்பிலிருந்துதான் சேர்க்கை ஆரம்பிக்கிறது. 5 – ஆம் வகுப்பு வரை மாநில பாடத்திட்டத்தில் படித்த பிள்ளைகளை, தகுதித்தேர்வு வைத்து, நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை மட்டும் தேர்வு செய்யும். இதில், கடந்த 2015- ஆம் ஆண்டு 18.78 லட்சம் மாணவர்கள் தகுதித்தேர்வு எழுதி இருக்கிறார்கள். அதில் வெறும் 41 ஆயிரம் பேர்கள்தான் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.  660 பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும் என்ற அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், 586 பள்ளிகள் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தத் திட்டத்தை நாம் ஏன் வேண்டாம் என்று சொல்கிறோமென்றால், மாநில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், இந்தியை பரப்பும் நிலையில் இருக்கிறது. இந்தியைப் பரப்ப நினைப்பவர்கள்,  நேரடியாக வர முடியவில்லை என்பதால், இந்த குறுக்கு வழியை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். ஆனால் இப்போது மாநில  மொழி 6 ஆம் வகுப்பிலிருந்து 10 வகுப்பு  வரை கட்டாயம் எனவும், 11, 12 வகுப்பிற்கு விருப்பப்பாடமாகவும்  கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என்பது தொடங்கப்பட்டபிறகுதான்  தெரியும். இதில் பல ஓட்டைகள் வைத்து, பூசி மெழுகப்பார்க்கும் மத்திய பா.ச.க அரசு. மேலும் இது சமூகநீதிக்கு எதிரானதாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. எப்படி என்றால், நன்குபடிக்கும் பிள்ளைகள் என்று சில பிள்ளைகளுக்கு மட்டும் தரமான கல்வி கொடுக்கும் நிலை எப்படி ஏற்றத்தாழ்வுகளை நீக்கும். தகுதித்தேர்வில் வெற்றிபெறாத பிள்ளைகள் வேறு பள்ளிகளில் படிக்கும் நிலை தானே உருவாக்குகிறது. பின்தங்கிய மாணவர்கள் என்று சொல்லிக்கொண்டு, சில குறிப்பிட்ட பிள்ளைகளுக்கு மட்டும் இடம் அளிப்பது எப்படி சமத்துவத்திற்கு வழி வகுக்கும். மேலும்  நாம் மருத்துவம், பொறியியல்  படிப்புகளுக்கே நுழைவுத்தேர்வு கூடாது என்று சொல்கிறோம். அப்படி இருக்கையில், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு தகுதித்தேர்வு என்பது  எப்படி இது சாத்தியமாக முடியும்.?

அடுத்து  பார்த்தோமானால், நம் குழந்தைகள் எவ்விதத்திலும் குறைந்து போய்விடவிலை. இங்கு எல்லாமே அரசு சார்பில், வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஏழை மாணவர்களுக்கு, மதிய உணவு, சீருடை, புத்தகங்கள், இலவசப் பேருந்து வசதி, கணினி வரை அரசு கொடுக்கிறது. வடநாட்டில் அப்படியில்லை. அங்கே படிக்கும் குழந்தைகளுக்கு இந்த வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. அது மட்டுமல்லாமல், பழங்குடியினர், மலைவாழ் மக்கள் குழந்தைகளுக்கு குறைந்தபட்ச செலவுகூட இல்லாமல் இலவசமாக, தரமான கல்வி இங்கே கொடுக்கப்படுகிறது.

Siragu navodaya school1ஒரு சிறந்த உதாரணம் என்னெவென்றால், கல்வி முன்னேற்ற அட்டவணையில், பார்த்தீர்களானால்,  நவோதயா பள்ளிகளே இல்லாத நம் தமிழக மாநிலத்திற்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. அதிக அளவு இந்த பள்ளிகளைக்கொண்ட உத்திரப்பிரதேசத்திற்கு 31 ஆம் இடம். இது எதைக் காட்டுகிறது. நம் மாணவர்களுக்குத் தேவையான, தரமான கல்வி   மாநில அரசால் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதற்கான சான்று அல்லவா.

கல்வி தொடர்பான ஒரு மாநில அரசின் கொள்கை முடிவில் தலையிட நீதிமன்றங்களுக்கு உரிமையில்லை என உச்சநீதிமன்றம் பல நேரங்களில் தெரிவித்திருந்ததும், மதுரை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும். தமிழக அரசு இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். மேல் முறையீடு செய்து நம் மாநில குழந்தைகளை ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவம் பேணும், சமசீர் கல்வித்திட்டம் தொடர, அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்.

ஆயிரக்கணக்கில் பள்ளிகளுக்கு கழிப்பிட வசதி இல்லை, குடிநீர் வசதியில்லை, தேவையான அளவு ஆசிரியர்கள் இல்லை என்ற நிலை இருக்கிறது. அதை எல்லாம் விட்டுவிட்டு, தேவையில்லாத இந்தித்திணிக்கும் வேலையிலும், கல்வியை காவி மயமாக்கும் வேலையிலும் மத்திய அரசு இறங்கியுளளது.

எங்கள் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வும் தேவையில்லை, நவோதயா பள்ளிகளும் தேவையில்லை.!
நம் தமிழ் மொழியைக் காப்போம்… இரு மொழிக்கொள்கை முறையை தொடர்ந்து செயல்படுத்துவோம்.!
இதற்கான போராட்டத்தை கையில் எடுப்போம்… கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவரும்வரை போராடுவோம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வேண்டாமே … நமக்கு நவோதயா பள்ளிகள்”

அதிகம் படித்தது