ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

வேண்டாம் நரகம். ஆனால் தெரிந்துகொள்வோம்! (பகுதி – 16)

முனைவர். ந. அரவிந்த்

Jul 24, 2021

siragu naragam1
மோட்சம் அடைவதே நம் குறிக்கோள் மற்றும் அதுதான் நல்லதும்கூட. நல்லதைப்பற்றியே முதலில் விரிவாக காண்போம். மோட்சத்தைப் பற்றி திரு. தென்கச்சி. கோ. சுவாமிநாதன் அவர்கள் ஒரு கதையையும் அதனுடன் ஒரு கருத்தையும் கூறியுள்ளார். தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் ‘இன்று ஒரு தகவல்’ என்ற வானொலி நிகழ்ச்சி வாயிலாக புகழ்பெற்ற பேச்சாளர். அவருடைய பேச்சுக்கள் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். இவர் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ஒருமுறை, ஒரு மேல்நாட்டவர் சொர்க்கம் பற்றி சொன்னதை மேற்கோள் காட்டி நமக்கு எடுத்துரைத்தவர். மேல்நாட்டவர் கூற்றின்படி, அவர் சொர்க்கம் சென்றால் மூன்று விஷயங்கள் அவருக்கு ஆச்சரியத்தை உண்டுபண்ணும். முதலாவது, அவர் யாரெல்லாம் அங்கு இருப்பார்கள் என்று நினைத்தாரோ அவர்கள் அங்கு இருக்க மாட்டார்கள். அடுத்தது, யாரெல்லாம் அங்கு செல்ல மாட்டார்கள் என்று நினைத்தாரோ அவர்கள் அங்கு இருப்பார்கள். கடைசியாக, அவர் சொர்க்கத்திற்கு சென்றதே ஒரு அதிசயம் என்று கூறியுள்ளார். இது ஒரு கற்பனை கதை என்றாலும் அதில் ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளன.

ஒரு சிலரிடம், தானும் மற்றும் தான் சேர்ந்த கூட்டமும் மட்டும் மோட்சம் அடைவோம் என்ற எண்ணம் உள்ளது. இது ஒரு தவறான எண்ணம். உதாரணமாக, ஒரு குடிகாரன் தினமும் குடித்து குடல் வெந்து ஒருநாள் சாகின்றான். ஆனால், தான் வாழ்ந்த காலத்தில், எவனையும் புறம் கூறவுமில்லை, பிறர் குடும்பத்தை கெடுக்கவுமில்லை. எந்த ஒரு கெட்ட எண்ணமுமில்லையென்றால் அவன் ஒருவேளை மோட்சம் அடையலாம். அவன் குடித்தது பாவமே. அதற்குரிய தண்டனையை அவன் குடல் வெந்து இந்த பூமியிலேயே அனுபவித்துவிட்டான். ஆனால், பொதுமக்கள் பார்வையில் அவன் மிகப்பெரிய பாவியாக சித்திகரிக்கப்படுகிறான். ஆனால், முடிவு இறைவன் கையில் வேறுமாதிரியாக இருக்கும். வெளி தோற்றத்தை பார்ப்பவன் மனிதன். இதயத்தை பார்ப்பவன் இறைவன். நம் எண்ணமெல்லாம், நாம் மோட்சம் அடைய வேண்டும் என்றுதான் இருக்க வேண்டும். அதற்கு பதிலாக, அடுத்தவன் மோட்சம் செல்வானா? இல்லையா? என்று சிந்திப்பது தவறான செயலாகும். இந்த கட்டுரையில், குடிகாரன் நல்லவன் என்றோ அல்லது சாராயம் குடிப்பது நல்லது என்றோ கருத்து சொல்லவில்லை மற்றும் அதனை நியாயப்படுத்தவுமில்லை.. நம்முடைய எண்ணங்கள் வேறு, இறைவனின் எண்ணம் வேறு என்பதே இந்த உதாரணத்தின் கரு..

அடுத்தது, மதம் நம்மை மோட்சம் அழைத்துச்செல்லுமா? என்பதை சொல்வேந்தர் திரு. சுகி சிவம் அவர்களின் பேட்டியிலிருந்து காண்போம். சுகி சிவம் என்னும் சுப்பிரமணியம் சதாசிவம் தமிழகத்தைச் சேர்ந்த சொற்பொழிவாளர். இவரும் ஒரு எழுத்தாளரே. அவருடைய கூற்றின்படி, மோட்சம் என்பதற்கு சுத்தமான தமிழ் பெயர்கள் ‘வீடு’ மற்றும் ‘வீடுபேறு’ ஆகும். நாம் வீடு செல்ல தெருவை பயன்படுத்துகிறோம். வீடுதான் மோட்சம். தெருதான் மதம். தெருவானது வீட்டிற்கு உள்ளே செல்லாது. அதுபோல்தான் மதம் மோட்சம் சேராது. மனிதன் இறப்பிற்குப்பின், இறைவன் தீர்ப்பின்போது நீ எந்த மதம், சாதி, நிறம், குலம், படிப்பு, பணம் எதையும் கேட்பதில்லை. நம் எண்ணங்களையும் செயல்களையும் வைத்து மட்டுமே தீர்ப்பு வழங்கப்படுகிறது.

இன்னும் ஒருபடி மேலே சொல்லப்போனால், தெரு வழியாக நடந்தோ, காரிலோ வீடு செல்லலாம். அதற்கு பல நாட்கள் அல்லது பல மணி நேரங்கள் ஆகலாம். அதுபோல்தான் மதமும், மதம் மூலம் இறைவனை அடைய நிறைய தடங்கல்கள் உண்டு. சில சமயங்களில் வீடு செல்ல முடியாமல்கூட போகிறது. மதம் என்ற தெருவை கடந்து அல்லது தவிர்த்து விமானத்தில் பறந்து சென்றால் சில வினாடிகளில் வீடு என்ற மோட்சம் அடையலாம். மதம் மனிதன் உருவாக்கியது. மதம், சாதி அனைத்தும் திருமண பந்தத்திற்கு மட்டுமே. அதற்கும் ஒரு காரணம் உண்டு. ஒரே சாதி மற்றும் ஒரே மதத்தை சார்ந்த துணையை திருமணம் செய்தால் பழக்க வழக்கங்கள் மாறாது. இது இருவருக்கும் வாழ்க்கையை வாழ எளிதாக இருக்கும். உதாரணமாக, சுத்த சைவம் உண்ணும் ஒருவன் அசைவம் உண்ணும் ஒருத்தியை திருமணம் செய்தால் உணவு முறைகளை மாற்ற வேண்டியிருக்கும். அல்லது, சில தியாகங்கள் வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டியிருக்கும். அவ்வளவுதான். மற்றபடி வேறு எந்த வேற்றுமையும், பாகுபாடும் கிடையாது.

மோட்சத்திற்கு பரலோகம் என்றொரு பெயருண்டு. பர என்றால் வேறு என்றும், லோகம் என்றால் உலகம் என்றும் பொருள். பரதேசம் என்றால் ‘வேறொரு தேசம்’ அல்லது ‘வெளி நாடு’ என்று பொருள்படும். பரதேசி என்பவன் ‘வெளிநாட்டுக்காரன்’. இது மருவி, சொந்த ஊர் அல்லது நாட்டை விட்டு பிற ஊரில் அலைபவன் அல்லது திண்டாடுபவன் ‘பரதேசி’ என்றழைக்கப்படுகிறான். பரலோகம் என்றால் பூமியை தவிர்த்து வேறு ஒரு உலகம் என்று பொருள்படும். அது மட்டுமின்றி, ‘பரம்பொருள்’ என்றால் மிக மேலான பண்புகளைக் கொண்டுள்ள இறைவனை குறிக்கும் சொல்லாகும். பரன் என்றால் எல்லாவற்றிலும் மேலானவன் என்று பொருள். பரம் என்றால் உயர்ந்தவற்றில் எல்லாம் உயர்ந்ததாகும். பரத்திற்கு மற்றொரு பொருள் ‘மேலானது’ அல்லது ‘மேலுலகம்’ ஆகும். வீட்டில் உள்ள மேல்தட்டிற்கு ‘பரண்’ என்ற பெயர் இப்படித்தான் வந்தது. பரலோகமாகிய சொர்க்கம் பூமிக்கு மேலே இருப்பதால் ‘பரலோகம்’ என்றால் ‘மோட்சம்’ என்று பெயர் வந்தது.

மோட்சத்தின் எதிர்ச்சொல் நரகம். இதற்கு பாதாளம், பெருங்குழி, படுகுழி, பாதாள லோகம், கீழுலகம், பூமிக்கு அடியில் உள்ள உலகம், இருள் உலகம் போன்ற பெயர்கள் உள்ளன. பாதாளத்திற்கும் நரகத்திற்கும் சிறு வேறுபாடு உள்ளது. பாதள உலகத்தின் கீழ், இறப்பிற்குப் பின் படுபாவிகள் வசிக்கும் நரக லோகம் உள்ளதாக கருதப்படுகிறது. அதாவது, அதல பாதாளமாகிய கடைசி கீழ் உலகம்தான் நரகம். பொதுவாக அண்டம் என்ற பிரபஞ்சமானது மோட்சம், பூமி மற்றும் நரகம் என மூன்றாக பிரிக்கப்படுகிறது. நரகம் என்ற சொல் கொடிய வேதனை நிறைந்த அல்லது வேதனையை அனுபவிக்கும் இடம் எனப்படுகிறது.

பாதாள உலகம் நாகர்கள் வாழும் நாகலோகம் என்றும் புராணங்கள் கூறுகின்றன. மேலும் நாகர்களின் உறவினர்களான அசுரர்கள், தானவர்கள் மற்றும் தைத்தியர்களும் பாதளத்தில் வாழ்கின்றனர். அசுர குலத்தவர்களில் ஒரு பிரிவினர் தானவர்கள். தானவர்கள் பற்பல உருவங்களை எடுக்கக் கூடிய அட்டமா சித்திகளைப் பெற்ற மாயா அசுரர்கள் ஆவார்கள். தைத்தியர்கள் அரசுரர்களில் ஒரு பிரிவினரே. தைத்திய இன அசுரர்கள் தேவர்களை அழித்து தங்கள் ஆட்சியை தேவலோகத்திலும் நிறுவ போராடுபவர்கள். ஆதிமுதலே சக்தியுள்ள தேவதைகளாக நாகப்பாம்புகள் கருதப்படுகிறது. ஆண் பாம்புகளை நாகர்கள் என்றும் பெண் பாம்புகளை நாகினிகள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இதனால்தான் அசுரர்களின் தலைவனான சாத்தான்கூட பாம்பு மூலமாகதான் இறைவன் படைத்த முதல் மனிதர்களை வஞ்சித்ததாக புராணங்கள் கூறுகின்றன. நாகர்களின் இருப்பிடம் பாதாள லோகம் எனப்படுகிறது.

நரகம் என்பது ஒருவழிப் பாதை. அங்கு சென்றவர்கள் வெளியே வர முடியாது என்றும், இறைச்சியைத் தின்பவர்களை நரகம் விழுங்கும் என்றும் திருவள்ளுவர் குறள் எண் 255 யில் குறிப்பிட்டுள்ளார்.
உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு – குறள் 255
இதன் விளக்கம் யாதெனில், இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்பது உயிருள்ள அறம். இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது என்பதாகும்.

நரகம் பற்றி ஒவ்வொரு நூல்களும் என்ன சொல்கின்றன என காண்போம். திருவிவிலியத்தின்படி, இறை நம்பிக்கை இல்லாத ஆன்மாக்கள் செல்லும் இடம் பாதாளம். இறை நம்பிக்கை இல்லாத, அதே சமயம் கொடுஞ்செயல் புரிபவர்கள் செல்லும் இடம் வேதனை மிகுந்த பாதாள நரகம். கெட்டவர்களும் இறைவனை மறக்கிற எல்லா மக்களும் நரகத்திலே தள்ளப்படுவார்கள் என்று வேறோர் இடத்தில் கூறப்பட்டுள்ளது..நரகம் என்பது சாத்தானின் அரசாங்கம்.

வேதாகமத்தில், ‘பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து’ என்று ஒரு வாக்கியம் உள்ளது. இதன் மூலம், பாதாளம் பூமிக்கு கீழே இருக்கிறது என்பதை அறியலாம். மற்றொரு பகுதியில், மோசேயை எதிர்த்தவர்களை பூமி பிளந்து உள்வாங்கி கொண்டது, அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கினார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாதாளமானது பாவிகளைப் பட்சிக்கும் என்று ஒரு பழமொழியும் உள்ளது. பட்சித்தல் என்றால் உண்ணுதல், கவர்தல் அல்லது அழித்தல் என்று பொருள்படும். பாவிகளை எல்லாம் விழுங்கி வைத்திருக்கும் ஒரு இடம்தான் பாதாளம் என்றும் வேதம் கூறுகிறது. இந்த பாதாளம் கீழான பாதாளம், தாழ்ந்த பாதாளம், நரக பாதாளம் என்று மூன்று அடுக்குகளாக இருக்கிறது.

என் ஆன்மாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர் என்று இறைவனை தாவீது மன்னன் புகழ்ந்து பாடியுள்ளான். விபச்சாரியிடம் செல்பவர்கள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்கள் என்கிறது நீதிமொழிகள். இந்த மூன்று அடுக்குகளான பாதாளத்தில், நரக பாதாளம் என்னும் இடத்தில் மட்டும் கொடூர வேதனைகள் உண்டு. இந்த நரக பாதாளமே நரகம் ஆகும். மற்ற இரண்டு அடுக்கு பாதாளத்தில் ஒன்றில் இறைவனை ஏற்றுக் கொள்ளாத ஆனால், நேர்மையாய் வாழ்ந்த மனிதர்கள் செல்லும் இடம் என்று கூறப்பட்டுள்ளது.

நரகத்தில் அக்கினிக்கடல் எப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்கும். இங்கே, பயப்படுகிறவர்களும், இறைவனை நம்பாதவர்களும், அருவருப்பானவர்களும், கொலைகாரர்களும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், சிலைகளை வணங்குபவர்களையும், பொய் சொல்பவர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்று வசனங்கள் கூறுகின்றன.. அக்கினி கடல் என்பது தேவனின் வெள்ளை சிங்காசன இறுதி நியாய தீர்ப்புக்கு பிறகு சாத்தானும் கொடிய பாவம் செய்தவர்களும் தள்ளப்பட போகும் இடம். இங்கும் வேதனை உண்டு என்பதால் இதையும் ‘நரகம்’ என்று சொல்லலாம்.

உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒரு கை அல்லது ஒரு காலுடன் சொர்க்கம் செல்வது நலம் என்று இறைவன் அறிவுரை கூறுகிறார்.. இறைமகன் இயேசு ஒருமுறை, அவருக்கு இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்’ என்று கூறியுள்ளார்.

கொதிக்கும் எண்ணெயில் போட்டு தாளிப்பது, கொடிய மிருகங்களை ஏவி விடுவது, உடல் உறுப்புகளை முண்டமாக்குவது, பசி, நோய் என எல்லா வகை துன்பங்களின் உச்ச இடமாக நரகம் கருதப்படுகிறது. இது தீய வழிகளில் சென்றவர்களுக்கு இறைவனால் வழங்கப்படும் தீர்ப்பு என்று நம்பப்படுகிறது. வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாதோர் நெருப்பு ஏரியில் எறியப்பட்டார்கள். என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நெருப்பு ஏரியே நரகம்.

நீ செய்யும் தருமம் உன்னைச் சாவிலிருந்து விடுவிக்கும்; இருளுலகில் செல்லாதவாறு காப்பாற்றும் என்றும் வேதம் சொல்கிறது.. இறைப்பற்றில்லாதவர்களுக்கு நெருப்பும் புழுக்களும் தண்டனையாகக் கிடைக்கும். நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது. பாதாளத்தில் இன்பத்தைத் தேட முடியாது. பாவிகளின் பாதை வழவழுப்பான கற்களால் கட்டப்பட்டுள்ளது; அதன் முடிவில் கீழுலகின் வாயில் உள்ளது. இருளுலகாகிய நரகத்தில் அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் என்று இறைமகன் இயேசு கூறியுள்ளார்.

நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகளை பற்றி திருக்குரான் இவ்வாறாக கூறுகிறது. நரகத்தில் தீயோர்களின் கழுத்துக்களில் விலங்குகளும், சங்கிலிகளும் இருக்கும். அவர்கள் கொதிக்கும் நீரில் வீசப்படுவார்கள். பின்னர் நெருப்பில் எரிக்கப்படுவார்கள். இறைவனை மறுத்தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலைகள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும். நரகவாசிகள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள். அதில் குளிர்ச்சியும் இல்லை. இனிமையும் இல்லை.

நரகத்தில் கெட்டவர்கள் யுகம் யுகமாகத் தங்குவார்கள். அங்கு அவர்கள் குளிர்ச்சியையும், குளிர் பானத்தையும் சுவைக்க முடியாது. இரும்புக்கம்பி நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, வரம்புமீறி தவறு செய்பவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். நரகத்தில் உள்ளவர்களுக்கு தண்டணை ஒருநாளும் குறைக்கப்படாது. இறைவனிடம், இவ்வுலகிலும் மறுமையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! என வணங்குவோம் என்று திருக்குரான் கூறுகிறது.
நாம் நரகம் சென்றுவிடுவோம் என்று பயந்து குற்றம் செய்யாமல் இருந்தால் அது ஒன்றும் சாதனையல்ல. ஆனால், இறைவன்மேல் உள்ள அன்பால், நன்மை செய்யும் எண்ணங்கள் மட்டும் நம் இரத்தத்தில் ஊறிப்போய் நாம் நல்லது செய்தால் அதுதான் உண்மையான இறைபக்தி.

 


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வேண்டாம் நரகம். ஆனால் தெரிந்துகொள்வோம்! (பகுதி – 16)”

அதிகம் படித்தது