மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வ.உ.சி.யும் சமூக நீதியும்

இராமியா

May 5, 2018

siragu voc1

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்று வ.உ.சிதம்பரனாரைப் பற்றிக் கல்விக் கூடங்களில் நமக்குப் பாடம் சொல்லித் தந்து இருக்கிறார்கள். அவர் ஒரு தொழிற்சங்கவாதி என்று பள்ளிகளில் சொல்லித் தருவது இல்லை. ஆனால் பொதுவுடைமை இயக்கங்களின் பரப்புரைகள் மூலம் அச்செய்தி ஓரளவிற்குத் தெரிகிறது. ஆனால் அவர் சமூக நீதிக்காக விட்டுக் கொடுக்காத போராட்டத்தை முன்னெடுத்தவர் என்ற செய்தி அடர்ந்த இருளுக்குள் திட்டமிட்டே மறைத்து வைக்கப்பட்டு உள்ளது.

இந்திய வரலாற்றில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராட்டம் நடந்து கொண்டு இருக்கையில் மகாத்மா ஃபுலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மற்றும் பிற தலைவர்களின் தலைமையில் சமூக நீதிப் போராட்டங்களும் நடந்து கொண்டு தான் இருந்தன. அப்படிப்பட்ட போராட்டங்களில் ஒன்று தான் சேலம் நகரில் 5.11.1927 அன்று வ.உ.சி. தலைமையில் நடந்த ஒரு மாநாடு. இம்மாநாட்டில் தலைமை உரையை ஆற்றுகையில் நாட்டு மக்களிடையே பிளவுகளும் பகைமைகளும் இருப்பதற்குக் காரணமே கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாமையே (அதாவது பார்ப்பனர்கள் மேல் நிலை வேலைகளில் கொடூரமான அளவில் நிரம்பி வழிவது தான்) என்று பின் வரும் சொற்களில் வ.உ.சி. தெளிவாக விளக்குகிறார்.

உலகத்திலும் அதன் ஒரு பாகமாகிய நம் தேசத்திலும், சரியான ஒன்றையோ, தப்பான ஒன்றையோ ஆதாரமாகக் கொண்டு சாதி வேற்றுமைகளும், அவற்றைப் பற்றிய உயர்வு தாழ்வுகளும் எக்காலத்திலும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும். அவற்றை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுதலும், அவற்றை ஒழிப்பதற்கு ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ தடை என்று சொல்லுதலும் ஆழ்ந்து ஆலோசியாமல் மேலெழுந்தவாரியாகச் சொல்லுதலாம். நாம் வேண்டுவது நம் தேசத்தவருள் நித்தியமாக நிலவும் ஒற்றுமையே. அவ்வொற்றுமைக்கு சாதி வேற்றுமை ஒழிவும், அது பற்றிய உயர்வு தாழ்வு ஒழிவும் அவசியம் என்று சிலர் சொல்லி வருகிறபடியால் அவ்விரண்டு ஒழிவையும் நம்மில் சிலர் விரும்புகின்றனர். அவற்றின் ஒழிவு அவசியம் என்று சிலர் கூறுவதற்குக் காரணம், தற்காலம் நமது தேசத்தில் நிலவும் பிறப்பை ஆதாரமாகக் கொண்ட அநியாயமான சாதி வேற்றுமைகளும் அவற்றைப் பற்றிய உயர்வு தாழ்வுகளுமே.

ஆனால் உயர்வு தாழ்வு இல்லாத ஒரே சாதியாருள்ளும், ஒரே குடும்பத்தினருள்ளும், ஒற்றுமையின்மையும், பகைமையும் கொலை முதலியனவும் நிகழக் காண்கிறோம், இதன்றியும் தம் சாதி உயர்வென்றும், பிறர் சாதி தாழ்வென்றும் கருதும் இரு வேறு சாதியார் சிலர் ஒற்றுமைப்பட்டு அந்தியந்த நண்பர்களாக வாழ்கின்றதையும் காண்கின்றோம். இக்காட்சியால் நம் தேசத்தாருள் நிலவும் ஒற்றுமையின்மை பகைமை முதலியவற்றிற்கு முக்கியமான காரணம் சாதி வேற்றுமையும், அது பற்றிய உயர்வு தாழ்வும் அல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கத்தக்கது. ஆயின், நம் தேசத்தாருள் நிலவும் ஒற்றுமையின்மை, முதலியவற்றிற்கு முக்கியமான காரணம் தான் யாதோ? எனின் நம் தேசத்து இராசாங்க உத்தியோகங்களிலும், சட்டசபை முதலிய ஸ்தல ஸ்தாபன உத்தியோகங்களிலும், காங்கிரசு மகாசபை முதலிய பொது ஸ்தாபன உத்தியோகங்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படாமையே.

இவ்வாறு கூறிய வ.உ.சி. அதைப் பொருத்தமான எடுத்துக்காட்டுடனும் விளக்குகிறார்.

ஒரு குடும்பத்தில் சகோதரர்கள் பத்துப் பேர்கள் இருக்கிறார்கள். குடும்பத்துக்கு ஆயிரம் ஏக்கர் நன்செய் புன்செய்களும், கர்ணம் உத்தியோகம் ஒன்றும் கிராம முனுசீபு உத்தியோகம் ஒன்றும் இருக்கின்றன. சகோதரர் பதின்மரில் வயதிலும் கல்வியிலும் முதிர்ந்த இருவர், கர்ணம் உத்தியோகத்தை ஒருவரும், கிராம முனிசீபு உத்தியோகத்தை மற்றொருவருமாகக் கொண்டு அவற்றின் சம்பளங்களைப் பெற்றும் குடும்ப நிலங்களை எல்லாம் மற்றைச் சகோதரர்கள் எண்மரைக் கொண்டு பயிரிடுவித்து விளைபொருள்களை அடைந்தும், அவற்றைத் தம் இஷ்டப்படி தமது மனைவி மக்களின் சுகவாழ்க்கைக்கு உபயோகித்துக் கொண்டும் மற்றைச் சகோதரர்கள் எண்மரும் அவர்கள் மனைவி மக்களும் அன்னவஸ்திரத்திற்குத் திண்டாடும்படி விட்டுக் கொண்டும் இருக்கின்றனர். வயதிலும் கல்வியிலும் முதிர்ந்த அவ்விரு சகோதரரும் கர்ணம், கிராம முனிசீபு உத்தியோக அதிகாரம், சம்பளம், செல்வாக்கு, குடும்ப நிலங்களின் ஊதியம் முதலியவற்றை அனுபவிக்கின்றதையும், தாமும் தமது மனைவி மக்களும் அன்னவஸ்திரத்திற்குத் திண்டாடுகின்றதையும், மற்றைச் சகோதரர்கள் எண்மரும் கவனித்தார்கள்.

உடனே அவர்கள் எண்மரும் முந்திய இருவரையும் பார்த்துக் ‘கர்ணம் கிராம முனிசீபு உத்தியோகங்கள் குடும்பத்துக்குப் பொதுவான உத்தியோகங்கள், ஆயிரம் ஏக்கர் நன்செய் புன்செய்களும் குடும்பத்துக்குப் பொதுவான நிலங்கள். அவ்விரு உத்தியோகங்களையும் நிலங்களையும் சமமாகப் பத்துப் பங்கு வைத்துப் பிரித்து அநுபவிப்போம்’ என்று கூறுகின்றனர். முந்திய சகோதரர் இருவரும் மற்றச் சகோதரர் எண்மரையும் பார்த்து ‘நமது உத்தியோகங்களையும் சொத்துக்களையும் நாம் பிரிவினை செய்து கொண்டால், நமக்கு ஒற்றுமையின்மை ஏற்பட்டு விடும். கர்ணம் உத்தியோகத்தையும் கிராம முனிசீபு உத்தியோகத்தையும், வகிக்க நீங்கள் தகுதி இல்லாதவர்கள். அன்றியும் இரண்டு உத்தியோகங்களைப் பத்துப் பேர்கள் பகிர்ந்து கொள்வதெப்படி? உத்தியோக அதிகாரமும் செல்வாக்கும் இல்லாதவர்கள் சொத்துக்களைச் சரியாகப் பரிபாலித்தல் முடியாது. ஆதலால் நம் குடும்ப உத்தியோகங்களையும் சொத்துக்களையும் பிரிக்க வேண்டா’ என்று சொல்லுகின்றனர்.

மற்றை எண்மரும் ‘நாங்கள் ஒவ்வொருவரும் கர்ணம் உத்தியோகத்தையும் கிராம முனிசீபு உத்தியோகத்தையும் வகித்துப் பார்த்தால் தானே நாங்கள் அவற்றிற்குத் தகுதி உடையவராவோம். இரண்டு உத்தியோகங்களைப் பத்துப் பங்கு வைப்பதெப்படி என்றால் ஒவ்வொருவர் ஒவ்வொரு வருஷமாக அவ்வுத்தியோகங்களைப் பார்த்து அவற்றின் சம்பளம், அதிகாரம், செல்வாக்கு முதலியவற்றை அடைவோம். நன்செய் புன்செய்களைச் சமபாகமாகப் பிரித்துக் கொள்வோம்’ என்று கூறுகிறனர்.

கனவான்களே! உத்தியோகங்களையும் குடும்பச் சொத்துக்களையும் சமமாகப் பிரித்துக் கொள்வதால் அச்சகோதரர்களுக்குள் ஒற்றுமை ஏற்படுமா? அல்லது உத்தியோகங்களையும், சொத்துக்களையும் பிரித்துக் கொள்ளாமல் முந்திய சகோதரர் இருவரும் மாத்திரம் அவற்றின் ஊதியங்களை அடைந்து அநுபவிப்பதால் அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படுமா? அவ்வுத்தியோகங்களையும் சொத்துக்களையும் சமபாகமாப் பிரித்துக் கொள்வதே அச்சகோதரர் பதின்மருள்ளும் ஒற்றுமை நிலவுவதற்கு வழி என்பதும், அவை பிரிக்கப்படாதிருத்தல் அச்சகோதரர் பதின்மருள்ளும் ஒற்றுமையின்மயும் பகைமையும் வளர்வதற்கு வழி என்பதும் பள்ளிச் சிறார்க்கும் தெள்ளென விளங்கத்தக்கவை.

இவ்வாறு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் மூலமாக மட்டுமே நாட்டின் சாதிக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியும் என்று வ.உ.சி. தெளிவாக விளக்கி இருக்கிறார்.

அறிவாளிகள் ஒரே மாதிரியாகச் சிந்திக்கின்றனர் (Wise men think alike) என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. வ.உ.சியும் அம்பேத்கரும் ஒரே மாதிரியாகவே சிந்தித்து இருக்கின்றனர்.

siragu voc2
அண்ணல் அம்பேத்கர் போராடிப் பெற்ற தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கான ‘தனி வாக்காளர் தொகுதி முறைப்படி, நாடாளுமன்றம் சட்ட மன்றம் முதலிய அரசியல் அதிகார மையங்களுக்குத் தாழ்த்தப்பட்ட வகுப்பு உறுப்பினர்களைத் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் மட்டுமே வாக்களித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். அம்பேத்கரின் இச்சீரிய எண்ணம் செயல்பட்டு இருந்தால் இந்நேரம் இந்தியாவில் தீண்டாமையும், சாதிய ஒடுக்கு முறையும் பழங்கதை ஆகிப் போய் இருக்கும். ஆனால் வர்ணாசிரம அதர்மம் நிலைத்து இருக்க வேண்டும் என்று தீவிரமாக விரும்பிய காந்தியார் தன் உயிரைப் பணயம் வைத்து அதைத் தடுத்தார். அம்பேத்கர் கேட்ட தனி வாக்காளர் தொகுதிகளின் எண்ணிக்கையை விட அதிகமாக அளிக்கவும் ஆயத்தமாக இருந்த காந்தியார், பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது மட்டும் அனைவருமாக இருக்க வேண்டுமே ஒழிய தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அம்சம் இருக்கக் கூடாது என்று அதைக் கடுமையாக எதிர்த்தார். அதற்காகத் தன் உயிரையும் விடச் சித்தமாய் இருந்தார். தன் நோக்கத்தில் வெற்றியும் அடைந்தார். அதனால் தான் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்ரமங்கலம் தொகுதி உள்ளாட்சி மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மறு கணமே பதவி விலகல் கடிதம் அளிக்கும் அடிமைகள் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சாதிக் கொடுமைகள் ஒழிந்தே தீர வேண்டும் என்ற அம்பேத்கரின் தொலைநோக்குத் திட்டத்திற்கும், வர்ணாசிரம அதர்மம் உயிர்ப்புடன் இருந்தே ஆக வேண்டும் என்ற காந்தியாரின் தொலைநோக்குத் திட்டத்திற்கும் இந்நிகழ்வுகள் சான்றாக உள்ளன.

அம்பேத்கர் 1932இல் முன் வைத்துப் போராடிய கருத்தை வ.உ.சி. 1927இலேயே முன் வைத்து இருக்கிறார். அவர் தலைமை தாங்கிய மாநாட்டில் பின் வருமாறு கூறினார்.

வகுப்புவாரிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அந்தந்த வகுப்பினர்களே உடையவர்களாய் இருத்தல் வேண்டும். ஆனால், சிலர் அப்பிரதிநிதிகளும் கலப்புத் தொகுதிகளால் தான் தேர்ர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றும், அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வகுப்புவாரித் தொகுதிகள் ஏற்படுத்தப்படுமானால் சாதி வேற்றுமைகள் இன்னும் வளருமென்றும் கூறுகின்றனர். வகுப்புவாரித் தொகுதிகள் ஏற்படுத்துவதனால் சாதி வேற்றுமைகள் வளரப் போவதில்லை. அவை வளர்ந்தாலும் அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. ஒவ்வொரு இந்தியனும் ஒவ்வொரு சாதியாய் இருந்தாலும் கூட, அதனால் நம் தேசத்திற்குக் கேடு ஒன்றும் உண்டாகப் போவதில்லை. நாம் வேண்டுவதெல்லாம் ஒற்றுமை ஒன்றே. வகுப்புவாரிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு வகுப்புவாரித் தொகுதியாக வாக்காளர்கள் (வோட்டர்கள்) ஏற்படுத்தப்படவில்லையானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பொய்ப் பேச்சாகிப் பழையபடி நமக்குள் ஒற்றுமையின்மையும், பகைமையும், சண்டையும் தான் வளர்ந்து கொண்டு இருக்கும். நமக்குள் ஒற்றுமையை உண்டாக்கி வளர்ப்பதற்கு வகுப்புவாரிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வகுப்புவாரி வோட்டர்த் தொகுதிகள் இன்றியமையாதவை. ஆதலால் வகுப்புவாரிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு அந்தந்த வகுப்பில் உள்ள 21 வயதுக்கு மேற்பட்ட ஆண்பாலரையும், பெண்பாலரையும் வாக்காளர்களாக ஏற்படுத்துவதற்கு வேண்டுவன செய்யும்படிக்கும் தேசாபிமானச் சகோதரர்களையெல்லாம் பிரார்த்தித்துக் கேட்டுக் கொள்கிறேன்.

வ.உ.சி.யின் எண்ணமும் அம்பேத்கரின் எண்ணமும் அச்சு அசலாக ஒத்து இருப்பது வியப்புக்குரியது அல்ல. இருவருமே இந்தியச் சமூகத்தில் உள்ள ஒடுக்கு முறைக்கு எதிராக நியாயமும் நீதியும் கிடைக்க வேண்டும் என்று உண்மையாகப் பாடுபட்டவர்கள்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முதன்மை கொடுக்க வேண்டுமா அல்லது சமூக நீதிக்கு முதன்மை கொடுக்க வேண்டுமா என்ற வினாவிற்கு, (சாதி ஒழிப்பு வீரராக விளம்பரப் படுத்தப்படும் பாரதியார் உட்பட) பார்ப்பனர்கள் அனைவரும் கட்சி வேறுபாடு இல்லாமல் ஆங்கிலேயர்களை வெளியேற்றுவதே முதன்மையான வேலை என்று வரிந்து கட்டிக் கொண்டு கூறினர். காந்தியாரும் தேசிய நீரோட்டம் என்ற மயக்கத்தில் இருந்த பலரும் அதையே கூறினர். பெரியாரும் அம்பேத்கரும் சமூக அநீதியான வர்ணாசிரம அதர்மம் தான் கொடுமையின் உச்சம் என்று கூறியது அனைவரும் அறிந்த செய்தியே. ஆனால் வ.உ.சி.யும் இதையே தெளிவாகக் கூறி இருக்கிறார் என்பது இருட்டடிப்பு செய்யப்பட்டு உள்ளது.

நமது தேசத்தின் வட மாகாணங்களில் ஹிந்துக்களுக்கும் முகம்மதியர்களுக்கும் ஏற்பட்டுள்ள பகைமையையும் சண்டையையும் நீக்கி ஒற்றமையை ஏற்படுத்த வேண்டும் என்று நமது மாகாணத்தில் உள்ள சிலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். என்ன வெட்கக் கேடு! நமது மாகாணத்தில் நம்முடன் வசித்து வரும் பிராமணருக்கும் பிராமணரல்லாதாருக்கும் ஏற்பட்டிருக்கிற ஒற்றுமையின்மையையும் பகைமையையும் நீக்கிஅவ்விரு வகுப்பினர்களுக்குள்ளும் ஒற்றுமை உண்டு பண்ண மாட்டாதார் பஞ்சாபு மாகாணத்தில் உள்ள முகம்மதியர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் ஏற்பட்டுள்ள பகைமையையும் சண்டைளையும் நீக்கி அவ்விரு வகுப்பினருள்ளும் ஒற்றுமையை உண்டாக்கப் போகின்றனராம்! இது புதுமையினும் புதுமை.

பிராமணருக்கும் பிராமணரல்லாதாரும் ஏற்பட்டுள்ள சண்டைகளை உண்டு பண்ணுகின்றவர் இராஜாங்கத்தாரே என்றும், சுதேச மன்னர்கள் அரசாட்சிக்குட்பட்ட நாடுகளில் சாதிச் சண்டைகள் இல்லை என்றும் நம் தேசத்துக்குச் சுய அரசாட்சி வந்து விட்டால் சாதிச் சண்டைகள் எல்லாம் நீங்கிவிடும் என்றும் சிலர் சொல்லுகின்றனர். இந்த மூன்றும் முழுப் பொய். பிராமணர் – பிராமணரல்லாதார் சண்டைகளுக்குக் காரணம் ஒன்றுமே இல்லையெனின் இராஜாங்கத்தாராலோ மற்றவராலோ அவர்களுக்குள் சண்டையை உண்டு பண்ண முடியாது. சுதேச மன்னர்கள் அரசாட்சிக்குட்பட்ட நாடுகளிலும் சாதிச் சண்டைகள் இல்லாமல் இல்லை. அவற்றிலும் தென்னாடுகளில் பிராமணர் – பிராமணரல்லாதார் சண்டைகள் இருக்கின்றன. சுய அரசாட்சிக்கு முதல் வழி நமது தேசத்தினர்கள் எல்லாம் ஒற்றுமைப்படுதல். உண்மை அவ்வாறிருக்க, சுய அரசாட்சி வந்து விட்டால் நமது தேசத்தினர்களுள் ஒற்றுமை உண்டாய்விடும் என்று சொல்வது நீந்தக் கற்றுக் கொண்டால் நீரில் இறங்கலாம் என்பது போலாம். ஒருவன் நீரில் இறங்காமல் நீந்தக் கற்றுக் கொள்ளப் போவதில்லை. அது போல நம் தேசத்தார்களெல்லாம் ஒற்றுமைப்படாமல் நாம் சுய அரசாட்சி அடையப் போவதில்லை.

இவ்வாறு உரைத்ததன் மூலம் நாட்டின் விடுதலை என்பது சமூக நீதியின் செயலாக்கத்திற்குப் பின்னர் தான் சாத்தியம் என்று வ.உ.சி. உணர்த்தி இருக்கிறார்.

மேலும் பார்ப்பனர்கள் அரசதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பிற வருணத்தாரை / சாதியினரை அடக்கி வைத்து இருப்பதை மாற்ற, பார்ப்பனர்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் போராடித் தங்கள் உரிமைகளைப் பெற வேண்டும். இதைத் தந்தை பெரியார் தெளிவாக நமக்கு உணர்த்தி இருக்கிறார். இதையே வ.உ.சி.யும் தனது உரையில் பின் வருமாறு கூறி உள்ளார்.

தாங்கள் மேலான சாதியார்கள் என்று கொண்ட கொள்கை அழியாதிருக்கும் பொருட்டு பிராமணர்கள் மற்றை சாதியார்களுக்கு விதித்த அபராதத் தண்டனை. அத்தண்டனையை மாற்றிக் கொள்வதற்குரிய அதிகாரம் பிராமணல்லாதார் கையிலேயே இருக்கிறதைக் கண்டு பிடித்து நம் திருவாளர் ஈ.வே.இராமசாமி நாயக்கர் அவர்கள் பிரமணரல்லாதவர்களுக்குக் கூறி அதனை உபயோகிக்கும்படி செய்து கொண்டு வருகிறார்கள். அவ்வதிகாரத்தைப் பிராமணரல்லாதார்கள் ஊக்கத்துடன்உறுதியாகச் செலுத்தி தங்கள் அபராதத் தண்டனையை மாற்றிக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

siragu voc3

‘சாதியைச் சந்திக்காமல் புரட்சியைச் சந்திக்க முடியாது’ என்று அண்ணல் அம்பேத்கர் கூறிய அதே நோக்கு நிலையில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் செயல்படுத்தப்படாமல் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் சாத்தியம் இல்லை என்று வ.உ.சி. தெளிவாகக் கூறி இருக்கிறார்.

இராஜாங்க உத்தியோகங்களும், ஸ்தலஸ்தாபன உத்தியோகங்களும், பொது ஸ்தாபன உத்தியோகங்களும், நம் தேசத்தில் உள்ள ஒவ்வொரு சாதியார்க்கும் அந்தந்த சாதியாரின் எண்ணிக்கை விகிதப்படி பகிர்ந்து கொடுக்கப்பட்டாலன்றி, நம் தேசத்தாருள் ஒற்றுமை உண்டாகப் போவதே இல்லை என்பதும், நமக்குள் ஒற்றுமை உண்டாகாமல் நாம் சுய அரசாட்சி அடையப் போவதே இல்லை என்பதும் மனித அறிவுடைய எவருக்கும் தெளிவாக விளங்கத்தக்கவை. இவ்வுண்மையை மாறாகப் பேசுகின்றவர் யாவராயினும் மனித அறிவில்லாதவர், அல்லது ‘பகலை இரவென்று கூறும் பாதகர்’ என்று நாம் கொள்ளக்கடவோம். பிராமணர்களும் பிராமணரல்லாதவர்களும் ஒத்துழைப்பின் அவ்விரு வகுப்பினருள்ளும் இப்போது நிலவும் பகைமையை விரைவில் ஒழித்து, ஒற்றுமையை எளிதில் ஏற்படுத்தி விடலாம். இவ்வொற்றுமையை உண்டு பண்ணுவதற்காக பிராமணரல்லாதார்களுடன் ஒத்துழைக்கப் பிராமணர்கள் முன் வரவில்லையானால் மேல் ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ என்னும் தலைப்பின் கீழ் யான் கூறியபடி இப்பொழுது பிராமணர்கள் வகித்துக் கொண்டிருக்கிற உத்தியோகங்களில் பிராமண சாதியார்களின் எண்ணிக்கை விகிதப்படி அவர்களுக்குரிய உத்தியோகங்களைத் தவிர மற்றைய உத்தியோகங்களை எல்லாம் இராஜாங்கத்தார் காலி செய்வித்து மற்றை சாதியார்களுக்கு அவரவர் எண்ணிக்கை விகிதப்படி கொடுக்க வேண்டும என்று பிராமணரல்லாதார் சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றி அச்சட்டத்தை ஊர்ஜிதத்துக்குக் கொண்டு வரும்படி இராஜாங்கத்தாரை வற்புறுத்த வேண்டும்.

மேற்கண்ட உரையில் இருந்து சமூக நீதியின் பால் வ.உ.சி. எவ்வளவு தீவிரமாக இருந்திருக்கிறார் என்று புரியும். நம் போராட்டக் குரல்கள் எல்லாம் இனி வாய்ப்புகள் எல்லாம் விகிதாச்சார அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதாகவே உள்ளன. ஏற்கனவே பார்ப்பனர்கள் கபளீகரம் செய்துள்ளதை மன்னித்து விடும் போக்கிலேயே நம் எண்ணங்கள் உள்ளன. ஆனால் வ.உ.சி.யோ பார்ப்பனர்கள் ஏற்கனவே கபளீகரம் செய்துள்ள வாய்ப்புகளைப் பறித்து அவற்றை ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களிடையே விநியோகம் செய்ய வேண்டும் என்று கூறும் அளவிற்குச் சமூக நீதிக் கோட்பாட்டின் பால் தீவிரமாக இருந்திருக்கிறார். வ.உ.சி.யின் சமூக நீதிக் கொள்கையை இருட்டடிப்பு செய்து வைத்து இருப்பது மிகப் பெரிய கொடுமை.

வ.உ.சி. கப்பலோட்டினார், செக்கிழுத்தார் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவருடைய சமூக நீதிக் கொள்கையை மிக வலுவாக மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வ.உ.சி.யும் சமூக நீதியும்”

அதிகம் படித்தது