செப்டம்பர் 19, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

ஶ்ரீதேவிகளும், அஸ்வினிகளும் மரணித்தும் கொல்லப்படுகின்றனர்!!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Mar 24, 2018

Siragu-Shridevi1

அண்மையில் இரு மரணச் செய்திகள் நம்மை வருத்தத்தில் ஆழ்த்தியது. ஒன்று புகழ் பெற்ற நடிகை ஸ்ரீதேவியின் மரணம். அவர் மரணச் செய்தி வந்தவுடன் நாடு முழுவதும் திரைப்பட ரசிகர்கள் அவர்களுக்கு அஞ்சலியைத் தங்கள் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்கள். அடுத்த நாள் அவரின் மரணம் மாரடைப்பால் அல்ல, குடிபோதையில் தண்ணீர் தொட்டியில் தவறி வீழ்ந்து இறந்து விட்டார் என்ற செய்தி பரவியதும் எந்த மக்கள் விழுந்து விழுந்து அவரைப் போற்றி அஞ்சலி செலுத்தினார்களோ? அவர்களே ஒரு பெண்ணுக்கு இந்த போதை தேவையா? குடி போதையில் தவறி விழுந்து இறந்தவளுக்கு என்ன அஞ்சலி வேண்டிக் கிடக்கு என்று அந்த நடிகையின் ஒழுக்கத்தை கீழ்த்தரமாக பேசி, அவரின் மரணத்தை நையாண்டி செய்தும் பதிவுகள் இட்டனர்.

இங்குதான் நமக்கு ஒரு கேள்வி வருகின்றது. இதே திரைப்படத் துறையில் இருக்கும் பல ஆண் நடிகர்கள் குடித்து அழிந்து ஒழியவில்லையா? பல கவிஞர்கள் குடிக்கு அடிமையாகி மடியவில்லையா? தனி மனித ஒழுக்கம் என்பதே இல்லாமல் பல பெண்களோடு உறவு வைத்துக் கொண்டு உலா வரவில்லையா?.
ஆனால் அவர்களைப் பற்றி இன்று குறிப்பிட்டாலும் அவர் போன்ற நடிகர் உண்டா? அவர் போல கவிஞர் உண்டா? மனிதர் எப்படி வாழ்ந்துள்ளார் என்று போற்றிப் பாடும் இதே சமூகம் ஒரு நடிகையை இவ்வளவு தரம் தாழ்ந்து அவர் மரணத்தில் விமர்சிக்கும் காரணம் என்ன என்று சிந்தித்துப் பார்த்தால் ஒன்று விளங்கும்!
மரணம் கூட ஒரு பெண்ணைப் பொறுத்த வரையில் இந்தச் சமூகம் பெண்ணுக்காக கட்டி வைத்துள்ள ஒழுக்க மதிப்பீட்டிற்குள் தான் நிகழ வேண்டும்.

அதே போன்று அஸ்வினி மாணவியின் கொலை நம்மை உலுக்கிப்போட்டது. இது நடப்பது முதல் முறை அல்ல என்ற போதும் அந்தப் பெண் கொலையில் நியாங்களைத் தேடும் தீவிரவாத சமூகம் இது. கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவி, காதலிக்க மறுத்த காரணத்தால், அல்லது திருமணம் செய்ய மறுத்த காரணத்தால் குத்திக் கொல்லப்படுகிறாள். கொலையைப் பேச மறுக்கும் சமூகம், அவள் அவனை ஏமாற்றினால்ல, அதான் கொலை பண்ணிட்டான் என கொலைச்செய்யப்பட்ட பெண்ணையே மீண்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் கொடுமையான சமூக அமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒரு பாலியல் வன்புணர்வு நடக்கும்போது, பெண்ணின் உடையையும், அவள் இரவில் வெளியே சென்றதால் வந்த வினை என்று கூறப்படுவதற்கு சற்றும் சளைத்ததல்ல இந்தக் கூற்று.

இப்படி பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் மரணித்தப் பின்பும் தொடர்ந்து இந்தச் சமுகத்தின் ஒழுக்க மதிப்பீடுகள் அவர்கள் பிணத்தையும் கழுகுப்போல குத்தித்தின்று கொண்டிருக்கின்றது.

அமெரிக்காவின் பெண்ணியக் கவிஞர் மேரி ஏஞ்சலோயு (Mary Angelou) “Each Time a woman stands up for herself ,she stands up for all women” என்கின்றார். பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒவ்வொரு வன்முறையை எதிர்த்திடும் போது, நாம் பாதிக்கப்பட்ட அந்தக் குறிப்பிட்ட பெண்ணுக்காக மட்டுமல்ல ஒட்டு மொத்த பெண்களுக்காகவும் குரல் எழுப்புகின்றோம். அந்த ஒற்றுமையும் , சகப் பெண்களை வலுப்படுத்துதல் மட்டுமே, பெண்களை ஒழுக்க வளையத்திற்குள் வைத்து இந்தச் சமூகத்தின் சாதியத்தின் ஒழுக்கத்தை நிலைநாட்டத் துடிக்கும் சனாதன சமூகத்திற்கு சாட்டையடியாக இருக்கட்டும் .


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஶ்ரீதேவிகளும், அஸ்வினிகளும் மரணித்தும் கொல்லப்படுகின்றனர்!!”

அதிகம் படித்தது