மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உலகெங்கிலும் அகதிகளின் அவலநிலை

தேமொழி

Sep 5, 2015

THAILAND-SEASIA-MIGRANTSஏதிலி அல்லது அகதி என்ற சொற்களோ, புலம் பெயர்தல் என்ற கருத்தோ தமிழருக்குப் புதிதல்ல. ஈழத்தமிழர் வாழ்க்கைப் போராட்டத்தையும், அவர்களில் சிலர் தமிழக அகதிகள் முகாம்களில் சிறைக்கைதிகள் போன்ற கொடுமைகளை எதிர்கொள்ளும் வாழ்வையும் அறியாதவர் யார்? அகதி என்றால் வாழ்வதற்கு அச்சம் தரக்கூடிய சூழலில் இருந்து தப்பிச் சென்று வேறொரு நாட்டில் புகலிடம் பெறுபவர் என்றும்; பிழைப்பு தேடி வேறு நாட்டிற்குச் சென்று வாழ்வது புலம் பெயர்தல் என்றும் அடிப்படையில் விளக்கங்கள் மட்டுமே வேறுபடுகின்றன.

இனஅழிப்பு, வன்முறை ஆகியவற்றில் இருந்து உயிர் தப்பி ஓடுபவர்களையும்; பஞ்சம் பிழைக்கச் செல்பவர்களையும் இவ்வாறாக சட்டப்படி ஒரு நாட்டில் குடிபுகுவதை வகைப்படுத்துவது வரை மட்டுமே அடிப்படையில் வேறுபாடு. எம்முறையில் புகலிடம் தேடிச் சென்றாலும், புலம்பெயர்பவர் வாழ்வு ஆரம்பக் காலங்களில் போராட்டம் மிக்கதாகவே இருக்கும். வேரடி மண்ணுடன் பிடுங்கி வேறொரு இடத்தில் நடப்பட்ட செடிகள் உயிர்பிழைக்கத் தத்தளிக்கும் நிலையுடன் ஒப்பிட வேண்டிய வாழ்வு அது. இந்த நிலையில் சட்டத்திற்குப் புறம்பாக ஒரு நாட்டிற்குள் குடிபுக எண்ணுபவர்களும், சட்டப்படி அனுமதி கோரி அடுத்த நாடுகளை அண்டுபவர்களின் வாழ்வும் துயரங்கள் பல நிறைந்தது. இந்தப் போராட்டத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

agadhigal1இன்றைய நாளில் உலக அளவில் சுமார் ஆறு கோடி மக்கள் அகதிகளாக இருக்கின்றனர். மனிதநேய அடிப்படையில் அகதிகளுக்குப் புகலிடம் கொடுக்கும் நாடுகளும் பொருளாதாரச் சுமையை சுமக்கின்றன. பாகிஸ்தான் பிரிவதற்குக் காரணமாக இருந்த வன்முறையில் இருந்து தப்பிய கிழக்குப்பாக்கிஸ்தான் அகதிகள் அலையலையாக இந்தியாவில் குடியேறிய பொழுது, பொருளாதார சுமையில் இருந்து மீள அஞ்சல்களின் விலையை உயர்த்திய இந்தியா, ஐந்து பைசா அகதிகள் தபால்தலைகளை (Refugee Relief Stamps) 1971 இல் இருந்து 1973 வரை வெளியிட்டது. இந்நாளில் சிரியாவில் இருந்து உள்நுழையும் அகதிகளுக்கும் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் அகதிகளுக்கும் புகலிடம் கொடுத்துச் சமாளிக்கும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரச் சுமையாலும், அகதிகளுக்கு மறுவாழ்வளிப்பதால் ஏற்படும் உள்நாட்டு அரசியல் கொந்தளிப்பினாலும் தடுமாறுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி நல்ல முன்னோடியாக பெரும் சுமையைச் சுமந்து வருகிறது. பிற ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகும் அகதிகள், அந்நாடுகளின் அகதிகள் முகாம் வாழ்வை வெறுத்து மேற்கு ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் பெறுவதையே விரும்புகின்றனர்.

இந்த 2015 ஆம் ஆண்டில் அகதிகளின் சோக வாழ்வுகள் பல தொடர்ந்து வெளியாகி மக்களின் கவனத்தைக் கவர்ந்த வண்ணமே உள்ளது. புத்த மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மார் நாட்டின் சிறுபான்மை ரோஹிங்க்யா முஸ்லிம்களுக்கு (Rohingya Muslim) குடியுரிமையுடன் மற்ற அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டன. அவர்கள் வங்காள தேசத்தினர் எனக் குறிப்பிடப்பட்டு துரத்தப்பட்டனர். தொடர்ந்த மதக் கலவரங்களில் நூற்றுக்கணக்கான ரோஹிங்க்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். தங்கள் நாட்டினால் புறக்கணிக்கப்பட்டு, தங்களுக்கென நாடென்ற ஒன்று இல்லாமல் ஆயிரக்கணக்கான முஸ்லீம் ரோஹிங்க்யாக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் குடியேற நினைப்பதும், அவர்களில் பலர் வழியில் கடத்தல்காரர்களால் ஏமாற்றப்பட்டு அகதி வதை முகாம்களில் கூட்டம் கூட்டமாக இறப்பதும் தொடர்ந்து வந்த வேதனை தரும் செய்திகள். இவர்களில் சுமார் 350 பேர் ஒரு மீன்பிடி படகு ஒன்றில் தப்பிச் சென்று புகலிடம் கோரி ஒவ்வொரு நாடாகப் பயணித்து பங்களாதேஷ், தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளால் ஏற்றுக்கொள்ளப் படாமல் அலைக்கழிக்கப்பட்டனர். குடிநீரும், உணவுமின்றி பசி பட்டினியால் துவண்டு, தங்களில் இறந்தவர்களை கடலில் வீசிவிட்டும், தங்கள் சிறுநீரையே குடித்து உயிர்வாழ்ந்த அவல நிலையை பி.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்தது.

agadhigal6வியட்நாம் போரின் கொடுமையை கண்முன் நிறுத்தும் படமாக, குண்டு வெடிப்பினால் உடல் எரிந்து, ஆடையின்றி அழுது கொண்டே அச்சத்துடன் ஓடிய “கிம் ஃபூ” (Kim Phuc) என்ற ஒன்பது வயது சிறுமியின் ஒளிப்படம் மக்களால் இன்றும் மறக்க இயலாத ஒன்று. அது போன்று, அகதிகளின் அவலநிலையை வரலாற்றில் நினைவுறுத்தப் போவது சிரியா அகதியான “ஐலன் கர்டி”(Aylan Kurdi) என்ற மூன்று வயது சிறுவனின் சடலம் துருக்கி கடற்கரையில் ஒதுங்கிய படம். சிவப்பு சட்டையும், நீல காற்சட்டையும், சின்னஞ்சிறு காலணிகளையும் அணிந்து, ஒரு செல்லூலாய்ட் பொம்மை போன்ற சிறுவன் கடற்கரையில் கவிழ்ந்த நிலையில் காணப்படும் படத்தின் பின்னணியில் இருப்பது சிரியாவில் இருந்து அகதியாய் புலம் பெயர எண்ணிய குடும்பத்தின் சோகக் கதை. ஐலன் கர்டியுடன் பயணம் செய்த அவனது அன்னையும், ஐந்து வயது அண்ணனும், அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததால் கரை சேரவில்லை.

உலகை உலுக்கிய இந்த துயரச் செய்தி ஓய்வதற்குள் தொடர்ந்து, மீண்டும் ஒரு அகதிகள் படகு மலேசியக் கடற்கரையில் கவிழ்ந்த செய்தியும், அதில் மேலும் 14 பேர் உயிரிழந்த தகவலும் தொடர்ந்துள்ளது. இம்முறை புலம்பெயர்வதில் உயிரிழந்தவர்கள் இந்தோனேசிய குடிமக்கள் என்பது மலேசிய அரசு தரும் தகவல்.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அகதிகளின் எண்ணிக்கை உச்சநிலையை அடைந்திருப்பதாக “அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்” (United Nations High Commissioner for Refugees – UNHCR) தெரிவிக்கிறது. அகதிகள், புலம் பெயர்வோர், அவர்களில் உயிரிழப்போர் என்ற செய்திகளும் தினசரி செய்திகளாக வரும் இந்த அவல நிலை மாறுவதற்கு உலகநாடுகள் ஒருங்கிணைந்து திட்டமிடவேண்டிய தேவை இருப்பதை நாம் மறுக்க இயலாது.

மேலும் தகவலுக்கு:

UNHCR viewpoint: ‘Refugee’ or ‘migrant’ – Which is right? (http://www.unhcr.org/55df0e556.html)

United Nations High Commissioner for Refugees – UNHCR (http://www.unhcr.org/cgi-bin/texis/vtx/home)

Migrant or refugee? That shouldn’t be a life or death question (http://www.washingtonpost.com/blogs/monkey-cage/wp/2015/09/03/migrant-or-refugee-that-shouldnt-be-a-life-or-death-question/)

SE Asia migrants ‘killed in fight for food’ on boat (http://www.bbc.com/news/world-asia-32772333)

Shocking image reveals ‘true horror’ of refugee crisis (http://www.irishexaminer.com/viewpoints/analysis/shocking-image-reveals-true-horror-of-refugee-crisis-351661.html)

Girl in iconic Vietnam photo still carries scars (http://www.cnn.com/videos/tv/2015/06/18/vietnam-photograph-girl-kim-phuc-cm.cnn)

Boat ‘carrying 70 migrants’ sinks off Malaysia (http://www.bbc.com/news/world-asia-34136995)


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உலகெங்கிலும் அகதிகளின் அவலநிலை”

அதிகம் படித்தது