மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அச்சமற்ற பெண்

தேமொழி

Apr 1, 2017

Siragu fearless girl2

அமெரிக்க மக்களைக் கவர்ந்த காளைக்கும் ஒரு போட்டி வந்து சேர்ந்தது… அதுவும் எதிர்பாராதவிதமாக ஒரு சின்னஞ்சிறுமியின் வடிவில்!!!!!

இங்குக் குறிப்பிடப்படும் காளை, “சார்ஜ்ஜிங் புல்” (Charging Bull) என அழைக்கப்படும் “பாயும் காளை” உருவில் உள்ள நியூயார்க் நகரின் வெண்கலச் சிற்பம். நியூயார்க் நகருக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பார்க்கவிரும்பும் இடங்கள் என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தப் புகழ்பெற்ற “வால் ஸ்ட்ரீட் புல்” (Wall Street Bull) சிற்பம் 3,200 கிலோகிராம் எடையும், 11 அடி உயரமும், 18 அடி நீளமும் கொண்ட ஒரு மிகப் பெரிய உருவம். இந்தப் பாயும் காளையை உருவாக்கிய சிற்பி “ஆர்ட்டுரோ டி மோடிக்கா” (Arturo Di Modica) என்பவர் (இந்தச் சிற்பம் குறித்த விரிவான சிறகு இதழின் கட்டுரையை http://siragu.com/?p=19567 பக்கத்தில் காணலாம்).

அமெரிக்க நியூயார்க் நகரின், மன்ஹாட்டனில் உள்ள நிதி மாவட்டத்தின் பவுலிங் கிரீன் பார்க் (at Bowling Green Park, Financial District of Manhattan, New York City, USA) என்ற இடத்தில்தான், இந்தப் பாயும் காளை சிற்பம் நிறுவப்பட்டுள்ளது. வால் ஸ்ட்ரீட் வணிக சந்தையின் சின்னமாகக் கருதப்படும் பாயும்காளை சிற்பம், ஒரு முரட்டுக்காளை தோற்றத்துடன் பின்னோக்கிச் சரிந்து, கூர்மையான கொம்புகள் கொண்ட தலையைத் தாழ்த்தி, சீற்றத்துடன் முன்நோக்கிப் பாயத் தயாராக உள்ள அமைப்பில் வடிக்கப்பட்டது.

Siragu fearless girl3

பாயும்காளை சிற்பம் மூலம் உணர்த்த விரும்பியக் கருத்து; முப்பதாண்டுகளுக்கு முன்னர், 1987 ஆம் ஆண்டு பெரிய வீழ்ச்சியை எதிர்கொண்ட அமெரிக்க வர்த்தகம் மீண்டுவிட்டது, வேகமாக முன்னேறுகிறது, அதன் வளர்ச்சியைத் தடுக்கமுடியாது என்ற பெருமித உணர்வை வெளிப்படுத்த விரும்பிய ஒரு நோக்கம். ஆகவே, இந்தச் சிற்பம் அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சியையும், அமெரிக்கப் பங்குச்சந்தையின் ஆளுமைத் தன்மையையும், நாட்டின் செழிப்பையும், நிதிநிலை மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் கொண்டுள்ள ஆணித்தரமான நம்பிக்கையை வெளிப்படுத்தவும், வால் ஸ்ட்ரீட்டின் பண்பையும் சித்தரிக்கும் வகையிலுமே அமைக்கப்பட்டுள்ளது.

Siragu fearless girl5

ஆனால், இப்பொழுதோ அதன் பொருளே மாறிவிட்டது. அதை மாற்றியது சீறிப் பாயும் காளையை அச்சமற்றவாறு எதிர்கொள்வது போல நிறுவப்பட்ட ஒரு சிறுமியின் சிற்பம். “அச்சமற்ற பெண்” (fearless girl) என்று பெயரிடப்பட்ட இந்தப் பெண் சென்ற மாதம் உலக மகளிர் தினம் முதல்நியூயார்க்கையும் அமெரிக்காவையும் கலக்கிக் கொண்டிருக்கிறாள். காற்றில் துடிக்கும் சட்டையணிந்து, அலைபாயும் குதிரைவால் சடையும், சற்றே தூக்கிய மோவாயுடன் முகம் உயர்த்தி, துணிவுடன் எதிர்கொள்ளும் பார்வையும் கொண்ட இந்த வெண்கலச் சிலை சிறுமி பாரதியின்,

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்

     நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்

     திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

     செம்மை மாதர் திறம்புவது இல்லையாம்…”

என்ற வரிகளுக்கு உயிர் கொடுத்தது போலவே அமைந்துள்ளது.

Siragu fearless girl10

அச்சமற்ற பெண் சிலையை உருவாக்கிய சிற்பி “கிறிஸ்டன் விஸ்பல்” (Kristen Visbal) என்ற அமெரிக்கப் பெண்மணி. கிறிஸ்டன் விஸ்பல் பழமையான முறையில் மெழுகின் உதவியுடன் வெண்கலச் சிற்பம் வார்த்தெடுக்கும் முறையில் (The Ancient Art of Lost Wax Bronze Casting) விருப்பம் கொண்டவர். உயிருள்ளோர் அளவில் சிறுவர் சிறுமியர் செயல்களை சிற்ப வரிசைகளாக (Life Size Children’s Series) வடிப்பதிலும் வல்லவர்.

Siragu fearless girl11வால் ஸ்ட்ரீட்டில் அச்சமற்ற பெண்ணைத் தற்காலிகமாக நிறுவ வேண்டும் என்ற முயற்சி “ஸ்டேட் க்ளோபல் அட்வைசர்ஸ்” (State Street Global Advisors – SSGA) என்ற நிறுவனத்தின் உலகமகளிர் தினத்திற்கான திட்டம். முன்னர் 2011 ஆம் ஆண்டில், முறையற்ற பொருளாதார உலகின் நடவடிக்கைகள் உருவாக்கும் ஏற்றத் தாழ்வுகளைக் கண்டித்து கவனயீர்ப்பு செய்வதற்காக “வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம்” (Occupy Wall Street Movement) நிகழ்த்திய புரட்சியாளர்கள், பாயும் காளை சிற்பத்தின் மீது பாலே நடனமாடும் பெண்ணின் உருவத்தைக் கொண்ட படங்கள் கொண்ட பதாகைகளை உருவாக்கி, வணிக நிறுவனங்களுக்கு எதிரான தங்கள் போராட்டத்தை நிகழ்த்தினர். பாயும்காளையை அமெரிக்க பங்குச்சந்தையில் பங்குபெறும் நிறுவனங்களின் பிரதிநிதியாகவும் கொண்டனர். அதே போன்று இம்முறையும் ஸ்டேட் க்ளோபல் அட்வைசர்ஸ் நிறுவனமும் பணியிடங்களில், குறிப்பாக நிதி நிறுவனங்களின் பணிகளில் காணப்படும் பாலினபேதங்களையும், அங்கு அதிகாரம் உள்ள பதவி வாய்ப்புகள் மகளிருக்கு மறுக்கப்பட்டு பெண்கள் புறக்கணிக்கப்படுவதையும் சுட்டிக்காட்ட ஒரு அச்சமற்ற சிறு பெண்ணைக் காளையை எதிர்க்கத் துணிந்தவளாக காட்ட விரும்பினர்.

அமெரிக்க பங்குச்சந்தையில் இடம் பெறும் அமெரிக்க நிதி நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுக்களில் (board of directors) பெண்களின் பங்கு குறைவு என்பதைச் சுட்டிக்காட்ட, இது போன்று நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளுக்கு பெண்களை நியமிக்க பங்கு சந்தை வணிக நிறுவனங்கள் முயலுவதில்லை என்ற கவனயீர்ப்பை முன்வைக்க, பாலின பேதம் காட்டி மகளிரைப் புறக்கணிக்கும் நடவடிக்கை தொடர்கதையாகவே இருப்பதை அறிவுறுத்தப் பாயும் காளையை மையமாக்கி இந்தச் சிலையை வால்ஸ்ட்ரீட்டில் மகளிர்தின நாளில் நிறுவியுள்ளனர்.

Siragu fearless girl7

துணிச்சலுடன் எதிர்த்து நிற்கும் அச்சமற்ற பெண் சிலையின் காலடியில் “Know the power of women in leadership – She Makes a Difference” எனக் குறிப்பிட்ட பட்டயம் ஒன்று தலைமைப் பொறுப்பேற்கும் பெண்களின் ஆற்றலை அறிக என்று அறிவுறுத்துகிறது. சிலை நிறுவுவதை மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு, பொருத்தமான நாளாக மார்ச் 8 – உலக மகளிர் தின நாளைத் தேர்வு செய்து, மகளிர் சார்பாக செய்தியை முன்னனுப்பியுள்ளனர். இச்செயல் ஓர் அறிவார்ந்த துணிகர நடவடிக்கை என்பதை மறுப்பதற்கில்லை. நியூயார்க் நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலையுடன் தங்கள் படங்களை எடுத்துக் கொள்ளும் அளவிற்குப் புகழ் பெற்று விட்டாள் இந்த அச்சமற்ற பெண்.

ஒரு கலைஞர் தனது கலைப்படைப்பை விலையின்றி நியூயார்க் நகருக்குள் காட்சிப்படுத்த ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே அனுமதியுண்டு. சிலை செய்ய ஏற்பாடு செய்த ஸ்டேட் க்ளோபல் அட்வைசர்ஸ் நிறுவனம் சிலையை காட்சிப்படுத்த நகராட்சியிடம் ஒரு வாரத்திற்கு அனுமதி பெற்றாலும் மேலும் நீட்டிக்க விருப்பம் தெரிவித்தது. நகராட்சியும் ஏப்ரல் 2 வரை காட்சிப்படுத்தும் காலத்தை நீட்டி அனுமதி அளித்தது. ஆனால், சிலையை விரும்பிய பொதுமக்கள் அதற்கு மேலும் காலவரையை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க விரும்பி “சேஞ்ச் டாட் ஆர்க்” (www.change.org) மூலம் பொதுமக்களிடம் ஆதரவு கோரி கையெழுத்து வேட்டையில் இறங்கினார்கள்.

நியூயார்க் நகராட்சித் தலைவர் “மேயர் பில் டி பிளாசியோ” (Bill de Blasio) அவரது அதிகாரத்தின் வரையறைக்குள் அடங்கும் முயற்சிகள் யாவையும் முன்னெடுத்து இயன்றவரைச் சிலையினை காட்சிப்படுத்தும் காலவரையறையை நீட்டிக்க உதவுவதாகவும் ஒப்புக்கொண்டார். இந்தப் பெண் தலைமைப் பதவிகளில் பெண்களின் பங்களிப்பின் தேவைகளைப் பற்றிய நல்ல விவாதங்களைத் தொடக்கியுள்ளாள் என்று பாராட்டிய பில் டி பிளாசியோ, அவளது திறமையால் சிலையைக் காட்சிப்படுத்தும் கால எல்லையையும் நீட்டிக்கவும் செய்துவிட்டாள், தனது குறிக்கோளுக்கான முயற்சியைக் கைவிட மறுக்கும் ஒரு பெண் தேர்வு செய்யும் பாதைக்கேற்றவாறு நடந்துள்ளாள் என்றார். அச்சமற்ற பெண்ணை அடுத்த பிப்ரவரி 2018 வரை காட்சிப்படுத்த நியூயார்க் நகராட்சியும் இப்பொழுது அனுமதி அளித்துள்ளது.

Siragu fearless girl8

சேஞ்ச் டாட் ஆர்க் இணையத்தளம் வழியாக முதலில் கோரிக்கை மனுவை முன்வைத்து ஆதரவு திரட்டத் துவக்கிய “நீரா தேசாய்” (Nira Desai) இப்பொழுது நிரந்தரமாகவே பாயும்காளை சிலையின் முன்னர் இந்த அச்சமற்ற பெண்ணை நிறுத்தி, பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பு வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டிய முயற்சியின் சின்னமாகக் இச்சிலைக் கருதப்பட வாய்ப்பளிக்குமாறு மேயர் பில் டி பிளாசியோவிடம் வைத்த கோரிகை மனுவை நீட்டித்துள்ளார். அந்த மனுவை ஆதரிப்போரின் எண்ணிக்கை இப்பொழுது 30,000-த்தைத் தாண்டியுள்ளது (https://www.change.org/p/city-of-new-york-make-wall-street-s-fearless-girl-permanent). டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் “#shemakesadifference” என்றும் “#Fearlessgirl” “@makemepermanent” என்றும் அச்சமற்ற பெண்ணிற்கு ஆதரவு குவிகிறது.

சொந்த விருப்பத்தில் சிற்பம் வடித்து நகரின் சாலையில் நிறுவி விடும் முயற்சியை “கொரில்லா கலை” (guerrilla art) என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது. முன்னர் டிசம்பர் 15, 1989இல், கிறிஸ்துமஸ் காலத்தில், சிற்பி ஆர்ட்டுரோ டி மோடிக்காவும் தனது பாயும்காளை சிலையை வால் ஸ்ட்ரீட்டின் அரசுக்கு உரிமையான இடத்தில் நிறுவி அதனை நகருக்குத் தான் வழங்கும் கிறிஸ்துமஸ் பரிசு என்று குறிப்பிட்டார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் ஸ்டேட் க்ளோபல் அட்வைசர்ஸ் நிறுவனம் சிலையைத் தற்காலிகமாகக் காட்சிப்படுத்த ஒரு வார அனுமதி கோரியது போல அல்லாமல், தற்காலிக அனுமதி கூட கோராமல் அதிரடியாகத்தான் இரவோடிரவாக சிலையை வால்ஸ்ட்ரீட்டில் விட்டுச் சென்றார்.

இப்பொழுது அச்சமற்றப் பெண் சிலையைப் பாயும்காளையின் முன்னிறுத்திய பின்னர் பாயும்காளை சிலை வேறு கோணத்தில் பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. பாயும்காளை இப்பொழுது அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியான வணிக நிறுவனங்களையும், அங்குக் காணப்படும் ஆணாதிக்கத்தையும் பிரதிபலிக்கும் ஒரு எதிரியாகவும் பார்க்கப்படுகிறது. சுமார் ஒரு 4 அடி உயரமும் 115 கிலோகிராம் எடையும் கொண்ட சிறுபெண் ஒருத்தி அச்சமற்று அதனை எதிர்கொள்வதாகவும், வல்லானை எதிர்க்கும் துணிவு கொண்ட நாயகியாக ஒரு சிறுபெண் தோற்றம் தரும் நிலை இன்று உருவாகிவிட்டது. பொது மக்கள் பார்வையில் கோலியாத்தை எதிர்த்த டேவிட்டின் மறுவுருவமாக அச்சமற்ற பெண் தெரியத் தொடங்கும் மாறுதல் நிகழ்ந்துள்ளது.

Siragu fearless girl4

இவ்வாறு சிலையின் பொருள் மாற்றம் ஏற்பட்டதை விரும்பாதவர்களும் உள்ளனர். அவர்களில் முக்கியமானவர் பாயும்காளை சிலையை உருவாக்கிய சிற்பி ஆர்ட்டுரோ டி மோடிக்கா ஆவார். இவர் தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்து சிலை நிரந்தரமாகக் காட்சிப்படுத்தப்படும் நிலையைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். “நான் கலை நோக்கத்தில் அமெரிக்காவின் பண்பைக் குறிக்கும் எனது பாயும்காளை சிலையை அங்கு வைத்தேன், ஆனால் இவர்களோ விளம்பர நோக்கில் சிலை வைத்துள்ளார்கள்” என்று சிலை வைத்தவர்களையும் சாடியுள்ளார்.

மாற்றங்களைக் கொண்டதுதான் வரலாறு. பாயும்காளையை எதிர்த்து அச்சமற்ற பெண் என்றுமே நிரந்தரமாக நிற்கப்போகிறாளா? அடுத்த ஆண்டு இந்நேரம் முடிவு தெரிந்துவிடும்.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அச்சமற்ற பெண்”

அதிகம் படித்தது