மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அடித்தட்டு மக்களும், பணமில்லா வர்த்தகமும்

சுசிலா

Dec 24, 2016

siragu-atm-bank3

கடந்த நாற்பத்தைந்து நாட்களாக மக்கள் தங்கள் பணத்திற்காக அலையும் ஒரு அவலத்தை நாம் எல்லோரும் பார்த்தும், அனுபவித்துக் கொண்டும்தான் இருக்கிறோம். மத்திய பா,ஜ.க. அரசின் முன்யோசனையின்றி செய்த இந்த செயலால் மிகவும் பாதிப்புள்ளவர்கள் அடித்தட்டு மக்கள் தான்.!

திடீரென்று ஒருநாள் இரவு, ஐந்நூறு, ஆயிரம் ரூபாய்களை மதிப்பிழக்கச் செய்தபோது மக்கள் சற்று அதிகமாவே அதிர்ச்சிக்குள்ளாகினர் என்பது மறுக்க முடியாத உண்மை. பின்பு கருப்புப்பண ஒழிப்பிற்காகத் (கறுப்புப்பணம் ஒழிக்கப்பட்டு விட்டதா என்பது வேறு செய்தி…!) தான் இந்த நடவடிக்கை என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டனர். முதலில் இரண்டு நாட்கள் என்றும், பிறகு மூன்று வாரங்கள் ஆகி, அதற்குப் பிறகு ஐம்பது நாட்கள் என்று சொல்லப்பட்டு, இன்றுவரை மக்கள் படும் அவதிக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

செல்லாப் பணமாக்கப்பட்ட பணத்தை வங்கிகளில் போட வந்தவர்களும், இப்போது பணம் எடுக்க வந்தவர்களும் வரிசையில் நின்று ஓய்ந்து போய்விட்டார்கள். நீண்ட நெடுநேரம் வரிசையில் நின்று மயக்கம் அடைந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 150 -ஐ தாண்டி விட்டது.!

People withdraw money

ஏ.டி.ம்-களில் நிற்பவர்களின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை… மேன்மேலும் அதிகரித்துக் கொண்டுதானிருக்கிறது. இதில் என்ன கொடுமையென்றால், அன்றாட செலவிற்கு தங்கள் பணிகளை விட்டுவிட்டு, ஏ.டி.ம்-களில் வந்து பலநேரம் காத்திருந்து தங்களின் வாழ்வாதாரத்தையே இழந்து கொண்டிருப்பது அடித்தட்டு மக்கள் தான்.!

பல ஏ.டி.எம்-கள் மூடியே கிடக்கின்றன. அப்படியே திறந்திருந்தாலும் ஏ.டி.எம்-களில் பணம் போதிய அளவு இல்லை. மக்கள் 100-க்கும், 50-க்கும் அலைய வேண்டிய நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது.!

ஏழை மக்களின் தொழிலும் மிகவும் பாதிப்புக்குள்ளாயிருக்கிறது. சிறு வணிகம் முழுவதும் முடக்கப்பட்டிருக்கிறது. அனைத்து சிறு, குறு வணிகர்களின் நிலைமை மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது.!

அடுத்து மத்திய அரசு, கையில் எடுத்திருக்கும் பணமில்லா வர்த்தகம், துவண்டு போயிருக்கும் மக்களை புதைக்குழியில் தள்ளிவிடும் செயலாக இருக்கிறது. மேலை நாடுகளில் கூட இல்லாத இம்முறை இங்கு நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் மைய அரசிற்கு இப்போது வருவதற்குக் காரணம் என்ன …?

நம் கிராமங்களில் இன்னும் படிப்பறிவில்லாத மக்கள், இணையத்தொடர்பு பற்றி தெரியாத மக்கள் அதிகம் இருக்கின்றனர். படித்திருந்தாலும், பெரும்பாலான முதியவர்கள் இம்முறைகளைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது தான் உண்மை.! இவர்கள் அனைவரும் மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.!

siragu-atm-bank2

எல்லோரிடமும் கடன் அட்டை இருக்கிறதா… அல்லது அனைத்து கடைகளிலும் அட்டை தேய்ப்பான்கள் தான் இருக்கிறதா..! அட்டை தேய்ப்பான் உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு செல்லும் வசதி அடித்தட்டு மக்களுக்கு எப்படி சாத்தியம்? வீட்டுக்கொரு கழிப்பறை அவசியம் என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில், பணமில்லா வர்த்தகம், இணையதள வர்த்தகம் என்பது தேவை தானா..?

மக்கள் மனதிற்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்தால் அது அரசின் அறியாமை… மக்கள் கொதித்தெழுந்தால் நாடு தாங்காது என்பதை மத்திய அரசு உணர வேண்டும். !

முதலில் மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வது தான் முக்கியம். அதன் பிறகு டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி சிந்திப்போம்.!

வரும் 2017-ஆம் ஆண்டிலாவது மக்களின் முன்னேற்றத்திற்கான நல்ல திட்டங்களை மத்திய அரசு வகுக்கும் என்று நம்புவோம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அடித்தட்டு மக்களும், பணமில்லா வர்த்தகமும்”

அதிகம் படித்தது