மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அனைவருக்குமான மருத்துவ பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதா?

பேராசிரியர் பு.அன்பழகன்

Dec 26, 2020

siragu maruththuva paadhugaappu2

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியினை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவினைக் கொண்டு கணக்கிடமுடியும். இம்முறை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இது சரியானதல்ல என்று பல பொருளியல் அறிஞர்கள் வாதிடுகின்றனர். சமூக-பொருளதாரக் கூறுகளான தலாவருமானம், சுகாதாரம், கல்வி ஆகிய மூன்றையும் கொண்டு அளவிட்டால்தான் சரியானதாக இருக்கும் என்கின்றனர். இந்தியாவின் நோபல் பரிசுபெற்ற பேரா.அமர்த்தியா சென் மற்றும் பாக்கிஸ்தான் பொருளியல் அறிஞரான பேரா.மஹபூப்-உல்-உக் ஆகியோரின் வடிவமைப்பில் இம்மூன்று கூறுகளையும் அடிப்படையாக்கொண்டு ஐக்கிய நாடுகளின் மன்றம் 1990ஆம் ஆண்டு முதல் மனிதவளக் குறியீட்டை வெளியிட்டு வருகிறது. அண்மையில் (2020) வெளியிடப்பட்ட மனிதவளக் குறியீட்டில் 2019ஆம் ஆண்டு கணக்கின்படி உலகில் உள்ள 189 நாடுகளில் நார்வே முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியா 131 இடத்தில் உள்ளது (2018ஆம் ஆண்டு 129ல் இருந்தது). இந்தியா எந்த அளவிற்கு உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் பின்தங்கி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. மேற்கண்ட மூன்று கூறுகளில் மருத்துவம் மிகவும் அடிப்படையானதாகும். உலக நாடுகள் 1978ஆம் ஆண்டு அல்மா அட்டா என்ற இடத்தில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கில் பிரகடனப்படுத்தப்பட்ட அனைவருக்குமான மருத்துவம் என்பதை ஏற்று இந்தியா பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இப்பிரகடனம் வெளியிடப்பட்டு 40 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இந்தியாவில் மருத்துவத்திற்கான சேவை எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் முதன்மையான நோக்கம்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி சுகாதாரம் (மருத்துவம்) மாநில அரசின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் மருத்துவ சேவை பொது மற்றும் தனியார் துறைகளால் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பொதுத்துறையினைப் பொருத்த வரையில் மருத்துவம் மற்றும் நலம்சார் மையங்கள், முதன்மை சுகாதார மையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், சமூக சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் வழியாக மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் துறையினைப் பொருத்தவரையில் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் வழியாகவும் மத்திய அரசானது பாதுகாப்புத் துறை, தொடர் வண்டித் (இரயில்வே) துறை, மாநில தொழிலாளர் காப்பீட்டு நிறுவனம் வழியாகவும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தேசிய மாதிரி ஆய்வின்படி (75வது சுற்று) இந்தியாவில் நோய்வாய்பட்டவர்களில் அதிகமானவர்கள் 60வது வயதினைக் கடந்தவர்கள் ஆவார்கள், இவர்கள் மொத்த நோய் பாதித்தவர்களில் 27.7 விழுக்காடு ஆகும் என்கிறது. பாலின அடிப்படையில் பார்த்தால் ஆண்களைவிட பெண்களை அதிக அளவு நோய்கள் பாதிக்கின்றன. வட்டார அடிப்படையில் பார்த்தால் கிராமப்புறத்தைவிட நகர்புறங்களில் அதிக நோய் பாதித்தவர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் (95 விழுக்காடு) ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சையை எடுத்துக்கொள்கிறனர். இந்தியாவில் வாழுகின்ற மக்களில் 85 விழுக்காடு மக்களுக்கு எந்தவித மருத்துவ பாதுகாப்பும் இல்லை. தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களால் நடத்தப்படும் தனியார் சிகிச்சை மையங்களில் மொத்த நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கினர் மருத்துவ சேவையைப் பெறுகின்றனர். ஆனால் அரசு பொது மருத்துவ மனைகளில் 30 விழுக்காடு அளவிற்கு மருத்துவ சேவையினை பெறுகின்றனர். தனியார் மருத்து மையங்களில் மருத்துவம் பார்ப்பதினால் மருத்துவச் செலவுகள் அதிகஅளவு எற்படுகிறது. இதனை எதிர்கொள்ள பெரும் பகுதி வீட்டு வருமானம் அல்லது சொந்த சேமிப்பிலிருந்து எடுத்து செலவு செய்கின்றனர் (கிராமப்புறங்களில் 79.5 விழுக்காடும் நகர்புறங்களில் 83.7 விழுக்காடும்). இதைத்தவிர்த்து கடன்வாங்கி மருத்துவம் பார்பவர்களும், நண்பர்கள்உறவினர்களின் உதவியுடன் மருத்துவம் பார்பவர்களும் உள்ளனர். தனியார் மருத்துவ மனைகளில் மருத்துவம் பார்பவர்கள் சாராசரியாக ரூ.31845 செலவு செய்கின்றனர். ஆனால் இதுவே அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்ப்பவர்களாக இருந்தால் ரூ.4452 செலவு செய்கின்றனர். ஒட்டுமொத்த நோய்க்கான சிகிச்சை பெறுபவர்களில் 85 விழுக்காட்டினர் தனியார் மருத்துவமனைகளின் செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் உள்ளனர். இந்தியாவில் 75 விழுக்காடு மருத்துவ மையங்கள் நகர்புறங்களில் வாழும் 25 விழுக்காடு மக்களுக்காக இயங்குகின்றன. எஞ்சிய 25 விழுக்காடு மருத்துவ மையங்கள் கிராமப்புறங்களில் வாழும் 73 விழுக்காடு மக்களுக்காக இயங்குகின்றன.

இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 72 விழுக்காடு உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் கர்நாடக மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. தனியார் மருத்துவமனைகளின் அளவு மாநிலங்களுக்கு இடையே வேறுபட்டுக் காணப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் மிகக் குறைவாக 25 விழுக்காடு தனியார் மருத்துவமனைகளும் அதிகபட்சமாக மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் 80 விழுக்காடு தனியார் மருத்துவ மனைகளும் செயல்பட்டு வருகிறது (National Health Agency). தனியார் மருத்துவ மனைகளில் குறைவான படுக்கைகள் இருந்தாலும் இம் மருத்துவ மனைகளில் சிறப்பு மற்றும் உயர் சிகிச்சைக்கான கட்டமைப்பு சிறப்பாக உள்ளதாலும், உடனுக்குடனான சிகிச்சை மற்றும் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் கிடைப்பதால் அதிமான நோயாளிகள் இவற்றை நாடி செல்கின்றனர்.

மாநிலவாரியாக மருத்துவ சேவை மற்றும் செலவு

மாநிலங்கள் அரசு மருத்துவ மனைகள்

(%)

தனியார் மருத்துவ மனைகள்

(%)

தன்னார்வ/

அறக்கட்டளை மருத்துவமனைகள் (%)

மொத்த மருத்துவச் செலவு (%) சொந்த பணத்திலிருந்து மருத்துவச் செலவு (%)
ஆந்திரப்பிரதேசம் 27.8 69.2 3.0 4.2 72.2
அசாம் 70.9 26.9 2.2 3.3 53.8
பீகார் 37.8 60.2 1.9 6.4 77.6
குஜராத் 31.1 61.6 7.3 2.1 48.1
ஹிமாசல் பிரதேஷ் 77.3 21.2 1.5 3.1 46.4
ஜம்மு காஷ்மீர் 91.2 8.2 0.6 4.1 58.5
ஜார்கண்டு 40.7 53.5 5.8 3.5 66.0
கர்நாடகா 26.6 71.2 2.1 2.8 49.2
கேரளா 38.3 57.9 3.8 4.5 69.0
மத்திய பிரதேஷ் 47.9 48.7 3.4 2.9 68.9
மகாராஷ்டிரா 22.2 73.7 4.1 3.4 56.7
ஒடிசா 72.2 26.9 0.9 4.6 68.9
பஞ்சாப் 29.4 65.9 4.7 4.0 77.3
ராஜஸ்தான் 50.5 48.1 1.4 3.4 56.7
தமிழ்நாடு 49.9 48.1 2.0 2.8 62.1
தெலுங்கானா 21.0 78.0 0.9 - -
உத்திரகாண்ட் 35.7 63.1 1.1 2.3 62.1
உத்திர பிரதேஷ் 27.1 70.4 2.4 6.1 74.8
மேற்கு வங்காளம் 69.2 29.4 1.5 4.7 74.1
  இந்தியா 42.0 55.3 2.7 - -

குறிப்பு:  மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விழுக்காடு.

ஆதாரம்: இந்திய அரசு (2019): “இந்தியாவின் தேசிய சுகாதார கணக்கீடு 2016-17,” சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், புதுதில்லி; தேசிய மாதிரி ஆய்வு 75வது சுற்று.

இந்தியாவைப் பொருத்தவரையில் மருத்துவத்திற்கான அரசின் செலவு மிகவும் குறைவானதாகும். மத்திய-மநில அரசுகளுக்கிடையே 31.4 விழுக்காடு மற்றும் 68.6 விழுக்காடு என்ற அளவில் பொது மருத்துவச் செலவினை பகிர்ந்துகொள்கிறது. 2016-17ஆம் ஆண்டின்படி இந்தியாவில் மொத்த மருத்துவத்திற்கான செலவு (தனியார் மற்றும் பொது) ரூ.581023 கோடி அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.8 விழுக்காடு ஆகும் (2004-05ஆம் ஆண்டு 4.2 விழுக்காடு) அரசின் மருத்துவ செலவு ரூ.188010 கோடி இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 விழுக்காடு ஆகும். குறைந்தபட்சம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மருத்துவத்திற்கு 3 விழுக்காடு ஒதுக்கப்படவேண்டும் என்பது பரிந்துரை (உலக சுகாதார அமைப்பு 6 விழுக்காடு என பரிந்துரைத்துள்ளது) ஆனால் இதில் பாதி அளவினைக்கூட இதுவரை செயல்படுத்த முடியவில்லை. இதன்காரணமாக அதிக அளவிலான மக்கள் மருத்துவத்திற்கு தங்களின் சொந்த பணத்தினை செலவிட வேண்டிய கட்டாயம் எற்படுகிறது. வீட்டின் சொந்த பணத்திலிருந்து மருத்துவத்திற்கு செலவு செய்வது ரூ.340196 கோடி அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.2 விழுக்காடு இதன் தலா மருத்துவச்செலவு ரூ.2570 ஆகும். மருத்துவத்திற்கான மொத்த செலவில் தலா செலவு ரூ.2066ஆக 2004-05இல் இருந்தது ரூ.3503ஆக 2015-16ஆம் ஆண்டில் நிலையான (2011-12) விலையின் அடிப்படையில் அதிகரித்துள்ளது. சொந்த பணத்திலிருந்து மருத்துவ செலவுகளை பார்ப்பதற்கு மொத்த மருத்துவச் செலவில் 58.7 விழுக்காட்டினை செலவு செய்கின்றனர். (GoI 2019). மத்திய–மாநில அரசுகள் மொத்த சுகாதாரச் செலவில் 32 விழுக்காடு மட்டுமே செலவு செய்கிறது. மீதமான 68 விழுக்காடு தனியர் துறைகளின் செலவாகும். இதன் விளைவு மக்கள் தங்களின் சொந்த பணத்திலிருந்து மருத்துவம் (Out-of-pocket expenditure) செய்வது அதிகமாகக் காணப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது சொந்த பணத்திலிருந்து ரூ.4701 செலவிடுகின்றனர் என்று 2017-18ஆம் ஆண்டு கணக்கின்படி தெரியவருகிறது (2014இல் ரூ.6421). இதுவே தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது இது ரூ.29021ஆக உள்ளது (2014இல் ரூ24824). இதில் முக்கியமானது பொதுத்துறை சார்ந்த மருத்துவமனைகளில் மருத்துவம் பெறும்போது சொந்தப்பணத்தில் செலவிடுவது குறைந்தும் அதுவே தனியார் மருத்துவமனையில் இச்செலவு அதிகரித்தும் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 siragu maruththuva paadhugaappu

மேற்கண்ட வரைபடத்தில் உள்ளதை எளிமையாக விவரிக்கும்போது ரூ.100 மருத்துவ செலவு செய்வதாகக் கொண்டால் அதில் வீட்டு வருமானத்திலிருந்து ரூ.63.10 செலவு செய்யப்படுகிறது, மாநில அரசு ரூ.15.70ம், மத்திய அரசு ரூ8.70ம்; தனியார் காப்பீட்டு வழியாக ரூ.5.10ம் மற்றவைகள் மூலமாக ரூ.7.40ம் செலவு பங்கிடப்படுகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் சொந்த பணத்திலிருந்து மருத்துவத்திற்காக செலவிடுவது மிகவும் குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைப் பொருத்தவரையில் பின்தங்கிய மாநிலங்களில் சொந்த பணத்தின் மூலமாக மருத்துவ சிகிச்சைக்கு செலவிடுவது அதிகஅளவாக உள்ளது.

மக்களுக்கு மருத்துவப் பாதுகாப்பு அளிப்பதற்கு போதுமான மருத்துவக் கட்டமைப்பு தேவை இது மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், மருத்துவமனை படுக்கைகள் போன்றவைகளை உள்ளடக்கியதாகும். உலக சுகாதார அமைபின் பரிந்துரையின்படி 1000 மக்களுக்கு 5 மருத்துவமனை படுக்கைகள் தேவை என்கிறது. ஆனால் இந்தியாவில் 1000 மக்களுக்கு 0.7 படுக்கைகள் உள்ளது இது அரசு மருத்துவமனையினைப் பொருத்தவரையில் மேலும் குறைந்து 0.4 படுக்கைகள் உள்ளது. இந்தியாவில் அதிக மருத்துவமனைகளில் படுக்கைகள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது (1.1 படுக்கைகள்) பல வடமாநிலங்களில் தேசிய அளவினைவிட மிகக் குறைவாகவே உள்ளது. இதுபோன்று 1000 மக்களுக்கு 1 மருத்துவர் தேவைப்படுகிறது ஆனால் இந்தியாவில் 0.8 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இந்தியாவில் ஒரு மருத்துவருக்கு 0.6 செவிலியர்கள் உள்ளனர் இது உலக சுகாதார அமைப்பு வரையறுத்த ஒரு மருத்துவருக்கு 3 செவிலியர்கள் என்பதை பிரதிபலிக்கவில்லை. பயிற்சி பெற்ற செவிலியர்களின் பற்றாக்குறை 65 லிருந்து 95 விழுக்காடு அளவிற்கு உள்ளது. 1000 மக்களுக்கு 1.7 செவிலியர்கள் உள்ளனர் இது உலக சுகாதார அமைப்பின் பரிந்துரை அளவான 2.4 என்பதைவிடக் குறைவானதாகும். ஒரு அரசு மருத்துவமனையானது சராசரியாக 90,000 மக்களுக்கு மருத்தவச் சேவையினை அளிக்கிறது. மேலும் அரசு மருத்துவமனைகளில் இருப்பில் உள்ள மருத்துவ வசதிகளை முழு அளவிற்கு பயன்படுத்தப்படுவதில்லை அதாவது 30 விழுக்காடு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நகர்புறங்களில் பொது மருத்துவமனைகள் சுமார் நான்கில்-ஒரு பங்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது கிரமாப்புறங்களில் இது மூன்றில்-ஒரு பங்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் புறநோயாளிகள் 42 விழுக்காடு மட்டுமே அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். இவர்களில் பெரும்பாலும் சமூக அடிப்படையில் பார்த்தால் பட்டியல் இனமக்களும்,இதர பிற்படுத்தப்பட்ட மக்களும் என்பது குறிப்பிடத்தக்து. இந்தியாவில் பொதுமருத்துவமனைகளில் போதுமான வசதிகள் குறைவாக இருப்பதினால் அதிக அளவிலான மக்கள் தனியார் மருத்துவமனைளை நாடிச் செல்கின்றனர்.

தனியார் மருத்துவமனைகள் வசதி வாய்புள்ளவர்கள் மட்டும் மருத்துவம் எடுத்துக்கொள்வது அன்றி சமூகத்தில் அடித்தட்டில் இருக்கும் 20 விழுக்காடு மக்களும் மருத்துவ சேவைகளை பெறுகின்றனர்.உள்நோயாளிகளில் 58 விழுக்காடு கிராமப்புறங்களிலும் 68 விழுக்காடு நகர்புறங்களிலும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்கின்றனர் என்கிறது 71வது தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம். இதுவே புறநோயாளிகளாக இருந்தால் 72 விழுக்காடு கிராமப்புறங்களிலும் 79 விழுக்காடு நகர்புறங்களிலும் மருத்துவம் பார்க்கிறார்கள். தொலைதூர கிராமங்களுக்கும் சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கும் மருத்துவம் அளிப்பதில் தனியார் மருத்துவமனைகள் அரசு மருத்துவமனைக்கு ஈடாக சேவை அளிக்கின்றன என்பது மறுப்பதற்கில்லை. நகர்புறங்களில் இயங்கி வரும் தனியார் மருத்துமனைகளின் பங்களிப்பு மாநிலங்களுக்கிடையே பெருத்த வேறுபாடுடன் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் 93 விழுக்காடு மருத்துவச் சேவையினை நகர்புறங்களில் தனியார் மருத்துவமனைகள் வழங்கிவருகிறது. இது குஜராத்தில் 75 விழுக்காடும், மகாராஷ்டிராவில் 71 விழுக்காடும் கேரளாவில் 70 விழுகாடாகவும் உள்ளது. வடஇந்திய மாநிலங்களில் இது 50 விழுக்காட்டிற்கு குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவப்பாதுகாப்பு அளிப்பதில் 86 விழுக்காடு தனியார் மருத்துவமனைகள் வசமும் உள்ளது. இவர்களில் 99 விழுக்காடு; இந்திய நிறுவன சட்டம் 2013ன் கீழ் பதிவு பெற்றவை அல்ல. இம்மருத்துவமனைகள் பெரும்பாலும் நகர்புறங்களில் செயல்பட்டு வருகின்றன. மேலும் இதன் மருத்துவச் சேவை பெரும்பகுதி புறநோயளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக உள்ளது. மொத்த தனியார் மருத்துவ சேவையில் 57 விழுக்காடு மருத்துவ சிகிச்சை நடவடிக்கைகளிலும் (Medical practice activities), 10 விழுக்காடு மருத்துவமனை (Hospital activities) நடவடிக்கைகளிலும், 8 விழுக்காடு ஹோமியோபதியும் 7 விழுக்காடு ஆயுர்வேதிக் மருத்துவமும் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்படத்தக்க அம்சம் என்னவென்றால் 10 விழுக்காடு உடைய பதிவுபெறாத மருத்துவமனைகள் அதிக அளவிளான உள்நோயாளிகளுக்கு மருத்துவம் அளித்து வருகிறது. அனைவருக்குமான மருத்துவம் என்பதை தனியார் துறையினை ஒத்துழைப்புஇன்றி அடையமுடியாது என்பது வெளிப்படையானது. இந்தியாவில் அனைவருக்குமான மருத்துவம் என்ற இலக்கினை நோக்கி மெதுவாக பயணித்து வருகிறது. மத்திய-மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் இதற்கான பங்களிப்பினை வெகுவாக செய்துவருகின்றன. அண்மையில் நடைமுறைபடுத்தப்பட்ட பிரதம மந்திரியின் ஜன ஆரோக்கிய யோஜனா ஒரு சிறந்த மருத்துவக் காப்பீட்டு திட்டமாக உள்ளது. இத்திட்டம் பெருமளவில் தனியார் மருத்துவமனைகளை சார்திருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

பிரதம மந்திரியின் ஜன ஆரோக்கிய யோஜனா

சொந்தப் பணத்திலிருந்து மருத்துவத்திற்கு செலவிடுவது இந்தியாவில் அதிமாக இருப்பதால் இதற்கு மாற்றாக இச்செலவினை எதிர்கொள்ள மருத்துவக் காப்பீட்டை நோக்கி மக்கள் பயணிக்க தொடங்கியுள்ளனர். இந்தியாவில் மருத்துவ காப்பீட்டின் கீழ் 15 விழுக்காடு மக்கள் மட்டுமே 2014ஆம் ஆண்டு பங்கேற்கின்றனர். கிரமாப்புறங்களில் 14.1 விழுக்காடும் நகர்புறங்களில் 18 விழுக்காடும் மருத்துவக் காப்பீட்டினால் பயன் அடைந்துள்ளனர். மாநில அளவில் பார்தால் அரசு சார்ந்த மருத்துவ காப்பீட்டால் அதிகம் பயன் பெற்ற மாநிலமாக ஆந்திர பிரதேசம் உள்ளது (63.8விழுக்காடு) இதனைத் தொடர்ந்து தெலுங்கான (61.1விழுக்காடு), கேரளா (39.5விழுக்காடு), சத்தீஸ்கர் (39.3விழுக்காடு) காணப்படுகிறது. தற்போதைய நிலையில் 7.6 விழுக்காடு அளவிற்கே மொத்த மருத்துவ செலவில் இக்காப்பீடுகளால் பங்கேற்றுக்கொள்கிறது. இதில் அரசு சார்ந்த மருத்துவக் காப்பீடு 4 விழுக்காடும் தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் 3.6 விழுக்காடும் பங்கெடுத்துக் கொள்கிறது. மத்திய-மாநில அரசுகள் பல்வேறு மருத்துவக் காப்பீட்டு திட்டங்களை தொடர்ந்து சமூகத்தில் அடித்தட்டில் வாழும் மக்கள் பயன்பெற கொண்டுவந்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் என்கிற திட்டத்தினை தேசிய சுகாதாரக் கொள்கை 2017ன்படி அனைவருக்குமான மருத்துவ பாதுகாப்பு ஏற்படுத்தி தந்து நீடித்த வளர்ச்சி குறிக்கோளை அடைய இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் விரிவான மருத்துவ பாதுகாப்பினை உறுதி செய்கிறது. இத்திட்டத்தின் கீழ் இரண்டு சேவைகளை உருவாக்கியுள்ளது அவை மருத்துவம் மற்றும் நலம் சார் மையகளை உருவாக்குதல் பிரதம மந்திரியின் ஜன ஆரோக்கிய யோஜனா நடைமுறைபடுத்துதல் போன்றவைகளாகும். 2018 பிப்ரவரியில் 1.5 லட்சம் மையங்களை உருவாக்கி முதன்மை மற்றும் துணை மருத்துவ மையங்களை விரிவான மருத்துவ சேவையை மகப்பேறு, குழந்தைகளுக்கான மருத்துவம், தொற்று அற்ற நோய்களுக்கு மருத்துவம் மற்றும் தேவையான மருத்துகளை இலவசமாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தினால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வயது வேறுபாடின்றி மருத்துவ சிகிச்சை பெறமுடியும்.

பிரதம மந்திரியின் ஜன ஆரோக்கிய யோஜனா 23 செப்டம்பரில் 2018இல் உருவாக்கப்பட்டது. இது உலக அளவில் மிகப்பெரிய மருத்துவப் பாதுகாப்பினை ஏழைஎளிய மக்களுக்கு வழங்குகிறதாக உள்ளது. இதன்படி ஒரு குடும்பத்திற்கு ஓர் ஆண்டிற்கு ரூ.5 லட்சம் மருத்துவ நிதிஉதவியினை மத்திய–மாநில அரசுகளின் நிதியிலிருந்து தர உறுதிசெய்கிறது. இதன்படி சமூகத்தில் அடித்தட்டில் இருக்கும் 40 விழுக்காடு (10.74 கோடி) மக்களுக்கு மருத்துவ சேவையினை பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2008ல் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டுவந்த தேசிய சுகாதார காப்பீட்டு திட்டம் (Rashtriya Swasthya Bima Yojana) இப்புதிய திட்டத்தின் கீழ் செயல்பாட்டுக்கு வந்தது. இத்திட்டத்திற்கு செப்டம்பர் 2020 முடிய 12.55 கோடி மக்களுக்கு இ-கார்டு வழங்கப்பட்டுள்ளது ஆனால் 1.2 கோடி மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ளனர், ரூ.155579 கோடி மதிப்பிலான மருத்துவ சேவையினை 2331 மருத்துவ மனைகள் மூலம் செய்கிறது. தமிழ்நாடு, கேரளா, குஜராத், சத்தீஸ்கர் மாநிலங்கள் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றன. மேலும் இத்திட்டத்தில் 55 விழுக்காடு பொதுதுறை மருத்துவமனைகளும் 45 விழுக்காடு தனியார்துறை மருத்துவமனைகளும் மருத்துவ சேவையினை வழங்குகின்றன. நோயாளிகளைப் பொருத்துவரையில் இத்திட்டத்தின் கீழ் 51 விழுக்காடு தனியார் மருத்துவமனைகளிலும் 49 விழுக்காடு பொதுத்துறை மருத்துவமனைகளிலும் மருத்துவம் பெற்றுள்ளனர். கோவிட்19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்பவர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் மருத்துவம் பெற அரசு வழிவகை செய்துள்ளது. இதனால் கோவிட்19 பரிசோதனை செய்துகொள்ளவும், மருத்துவம் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசு இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியினை பெரும்பகுதி தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இம்மருத்துவமனைகள் இத்திட்டத்தில் மருத்துவம் பெறுபவர்களுக்கு சிலவகையான சேவைகளை மட்டுமே அளிக்கிறது. ஆனால் அரசினால் அளிக்கப்படும் பணம் முழுவதும் கோரப்பட்டு பெற்றுக்கொள்கிறது. இம்முறையினால் அரசு மருத்துவ மனைகள் பெருமளவு புறக்கணிக்கப்படுகின்றன.

அதிக எண்ணிக்கையிலான முதன்மை சுகாதார மையங்கள் உலக அளவில் இந்தியாவில் செயல்படுகின்றன. ஆனால் அதற்கான அரசு செலவு மிகவும் குறைவாக உள்ளது. பெரும்பாலான முதன்மை சுகாதார மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இல்லை, செவிலியர்கள் இல்லை, தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லை, மருந்தாளுநர்கள் இல்லை. இம் மருத்துவ மையங்களில் மருத்துவர்கள் ஒரு குறிப்பிட்ட சிலமணி நேரங்கள் மட்டுமே மருத்துவப் பணிகளை மேற்கொள்கின்றனர். மருத்துவமனைகளில் 25-26 மருத்துவம் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர் தேவை என்கிறது உலக சுகாதார அமைப்பு. ஆனால் இந்தியாவில் 8லிருந்து 11 பணியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். கிராமப்புறங்களில் 80 விழுக்காடு மருத்துவம் செய்பவர்கள் முறையான மருத்துவ கல்வியினை பயின்றவர்கள் இல்லை. பொது மருத்துவமனைகளில் கட்டமைப்பு போதுமானதா இல்லை என்பதால் மக்கள் சிகிச்சைபெற அதிக செலவு செய்யவேண்டியுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 70 மில்லியன் வறுமைசாராத மக்கள் மருத்துவத்தை அணுகமுடியாததாலும் வாய்பின்மையாலும், மருத்துவ சேவையில் தரமான மனிதவளம் இல்லாததாலும் வறுமைகோட்டிற்குகீழ் தள்ளப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 2லிருந்து 3 விழுக்காடு மக்கள் மருத்துவ செலவினை மேற்கொள்ளுதலினால் வறுமைக்கோட்டிற்குக்கீழ் தள்ளப்படுகின்றனர் என்கிறது புள்ளிவிவரம். 2015ஆம் ஆண்டு உலக சுகாதரா மையம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் 50கோடி மக்கள் இதனால் வறுமைக் கோட்டிற்கு சென்றதாக குறிப்பிடுகிறது. இதில் அதிக அளவாக பாதிக்கப்படுபவர்கள் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் ஆவார்கள். 80 விழுக்காடு மருத்துவர்கள் போதுமான பயிற்சியற்று மருத்துவம் பார்ப்பது போன்றவைகள் சமூகத்தின் முக்கிய சவாலாக உள்ளது.

அன்மையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு (Jena et al 2018) அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சேவையினை பெறமுடியாத காரணங்களை புள்ளி விவரத்துடன் வெளியிட்டது அவை, மருத்துவ சிகிச்சை தாரமானதாக இல்லை என்று 42.7 விழுக்காடு மக்களும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என்று 27.3 விழுக்காடும், மருத்துவ வசதிகள் மிகவும் குறைவானதாக உள்ளது என்று 11.6 விழுக்காடும், சிறப்பான மருத்துவம் இல்லை என்று 10.3 விழுக்காடும் என சுட்டிக்காட்டுகின்றனர். இந்த நிலையினை போக்க குறிப்பாக முதன்மை சுகாதார மையங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியினை அதிகரிக்கவேண்டும், மருத்துவம் மற்றும் மருத்துவம் சாராத பணியாளர்களை நிரப்புவது மட்டுமல்லாமல் மக்கள் தொகை அளவிற்கு ஏற்ப அதிக பணி இடங்களை உருவாக்கி பணியமர்த்த வேண்டும், முழுநேரமும் மருத்துவர்கள் இம்மையங்களில் பணிசெய்ய அவர்களுக்கு போதுமான ஊக்கத்தினையும் வசதிவாயப்புகளை ஏற்படுத்தவேண்டும். மேலும் அனைவருக்குமான மருத்துவக் காப்பீட்டினை உறுதி செய்து சொந்த பணத்திலிருந்து மருத்துவ செலவினை எதிர்கொள்ளுதலை குறைக்கவேண்டும். தனியார் மருத்துவமனைகளில் அதிகஅளவு மருத்துவ சிகிச்சை கட்டணம் விதிக்கப்படுவதை கட்டுப்படுத்த அரசு முறைபடுத்த வேண்டும். பொது-தனியர் மருத்துவமனைகள் ஒன்றிணைந்து மருத்துவ சேவையினை மக்களுக்கு வழங்க வகை செய்ய வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகளுக்கு மேலாகியும் சமூக-பொருளாதார வளர்ச்சிகான அடிப்படை கூறான மருத்துவ பாதுகாப்பு அனைவருக்கும் எட்டாத நிலையே இன்றும் காணப்படுகிறது.


பேராசிரியர் பு.அன்பழகன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அனைவருக்குமான மருத்துவ பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதா?”

அதிகம் படித்தது