மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அன்பின் ஐந்திணை – முல்லை

தேமொழி

Jan 2, 2021

siragu mullai2

“மாயோன் மேய காடுறை உலகமும்” எனத் தொல்காப்பியம் முல்லை நிலம் குறித்து வரையறுக்கிறது. இப்பகுதியில் மிகுந்துள்ள முல்லை மலரின் பெயரினைத் தாங்கியுள்ள முல்லை நிலத் திணையின் பெரும் பொழுது கார்காலம் எனவும், சிறுபொழுது மாலை நேரம் எனவும் நிலத்துக்குரிய பொழுதுகளாக அமைந்து வருகிறது. காடும், காடு சார்ந்த முல்லை நிலம், செம்மண் பரந்திருத்தலால் செம்புலம் எனவும் அழைக்கப்படுகிறது.

முல்லைத்திணைக்குரிய ஒழுக்கம் என்பது தலைவி தலைவன் வருகையை எதிர்நோக்கி ஆற்றியிருக்கும் இருத்தலும், இருத்தல் நிமித்தமும் என்ற ஒழுக்கமாகும்.  தலைவன் திரும்புவதாகக் குறித்துச் சென்ற கார்ப்பருவம் வந்தும் அவன் வராத நிலை கண்ட தலைவி மனம் கலங்கி தோழியிடம் புலம்பும் வகையிலும், தோழி தலைவியின் துயரை ஆற்றுவிக்கும் வகையிலும் பாடல்களின் கருத்துகள் அமைவதைக் காணலாம். திணைமாலை நூற்றைம்பது நூலின் முல்லைத் திணைப் பாடல்களில் முல்லை நில வளமையும் தோற்றமும், அழகிய மழைக்காலமும், மயங்கும் மாலைப் பொழுதும் மிக மிக அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது.

மேலும், திணைமாலை நூற்றைம்பது நூலின் முல்லைத் திணைப் பாடல்களில் தொன்மக் கதைகளும் இடம் பெறுகின்றன. வரிசையில் முதல் பாடலிலேயே மாமர வடிவில் கடலில் புகுந்து ஒளிந்து கொண்ட சூரனை முருகன் தனது வேலால் அழித்த தொன்மக் கதை இடம் பெறுவதைக் காணலாம். மழை முகில் சூரனை ஒழித்த முருகனின் வேல் போல ஒளி கொண்டு மின்னியதாகக் காட்டப்படுகிறது (93). கண்ணன் சக்கரப் படையைச் செலுத்தி யானையின் மத்தகத்தைத் தாக்கி அதனைக் கொன்ற தொன்மக் கதையும் (97) இடம் பெறுகிறது.  யானையின் மத்தகத்தில் புதைந்த சக்கரம் போல மலையின் பின் வட்ட வடிவ பகலவன் மறைவதாக ஒப்பிடப்படுகிறது.  அதுமட்டுமின்றி, கருத்து இருண்ட வானத்திற்கும், வெண்மையான பாலொளி சிந்தும் நிலவிற்கும் கண்ணனும் அவனது அண்ணன் பலராமனும் ஒப்புமையாகக் காட்டப் படுகிறார்கள்(96, 97).

முல்லைத் திணைக்குரியதாக இந்த நூலில் இடம்பெறும் பல பாடல்களில் மழை தோன்றும் அறிவியல் கருத்தும் இடம் பெறுகின்றது. முல்லைத் திணைக்கான 31 பாடல்களின் 7 பாடல்களில் (பாடல் எண்கள்: 93, 95, 100, 104, 105, 109,114) கடல் நீர் கதிரவன் வெப்பத்தால் மேகமாகிக் குளிர்ந்து மழையாகப் பொழியும் அறிவியல் உண்மை கூறப்படுகிறது.

பாடல்களில் வெளிப்படையாகக் குறிப்பிடாமல் தலைவி ஒருமுறை (பாடல் 108 இல்) “உருமுடை வான் ஒன்று ஒழிய, நோய் செய்தவாறு” என்று கூறுகிறாள். அதாவது, தோழியே! இடியோடு கூடிப் பெய்கின்ற இம்மழை, என் போன்று காமம் கொண்டவர்களுக்கு இறப்பு என்ற ஒன்று நீங்கலாக மற்ற பிற துன்பங்களையும் உண்டாக்குவதாகும் எனத் தலைவி குறிப்பிடுகிறாள். அதற்குப் பாடல் வரிகளை மட்டும் வைத்துப் பொருள் கொண்டால் இவ்வாறுதான் பொருள் கொள்ளலாம். இருப்பினும் பழைய உரையில், பிரிவினால் காதலர் கொள்ளும் நோய் வகை பத்து என்ற ஒரு எண்ணிக்கையையும், அதில் இறுதியில் உள்ள மரணம் என்பது தவிர மற்ற ஒன்பது துன்பங்களும் தலைவியை வருத்துகிறது எனக் குறிப்பிடப்பட்டு ஒரு காதல் நோய்களின் பட்டியலும் கிடைக்கிறது. காதலர் எதிர்கொள்ளும் பத்துவகை நோய்கள் என்பது அரியதோர் தகவலாக இருப்பதால் அது இங்குக் கொடுக்கப்படுகிறது.

பத்து வகை காதல் நோய்த் துன்பங்கள்:  1. அன்பொடு பார்த்தல், 2. உளங்கொடு பற்றல், 3. புணர்ச்சி வேட்கை, 4. உறக்க மொழிதல், 5. உடல் மெலிதல், 6. உணர்வொழிதல், 7. நாணழிதல், 8. வாய்விட்டரற்றல், 9. மயக்கமுறுதல் 10. இறப்பு.

Siragu aganaanootru paadal1

திணைமாலை நூற்றைம்பது நூலின் முல்லைத் திணைப் பாடல்கள் அனைத்திலும் குறிப்பிடப்படும் தலைவனும் தலைவியும் தோழியும் ஒருவரே என்றோ அல்லது அவர்கள் வாழுமிடம் குறிப்பிட்ட ஒரு முல்லை நில ஊர் என்றோ கூறுதலும் இயலாது. இருப்பினும், மற்ற பிற திணைப் பாடல்களைத் தொகுத்து ஒரே கதைக்களமாக அமைக்கக் கையாண்ட அதே முறையில், இத்திணைக்குரிய 31 முல்லை நிலப் பாடல்களையும் (பாடல்கள்: 93-123) ஒரே தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழும் காதலாகக் கொண்டு ஒரு வரிசைப்படுத்தி அவற்றிலிருந்து ஒரு கதையும் உருவாக்கலாம். அத்தகைய முயற்சியே இக்கட்டுரை.

திணைமாலை நூற்றைம்பது நூலின் முல்லை நிலப் பாடல்களில் இடம் பெறுபவர் தலைவியும் தோழியும் மட்டுமே. தலைவன் ஒரே ஒரு பாடலில் மட்டுமே இடம் பெறுகின்றான். அவனுக்குத் தோழனும் கிடையாது. தலைவி, தோழி தலைவன் என எவருக்குமே பெற்றோர் உடன் பிறந்தவர் போன்ற குடும்ப உறவுகளோ, கடந்த காலத்தில் காதலர்கள் சந்தித்துக் கொண்ட நிகழ்வுகள் போன்றவற்றைக் குறித்த குறிப்புகளோ கூட இப்பாடல்களில் கொடுக்கப் படவில்லை. ஆகையால் இதைக் கதை வடிவிற்குக் கொண்டு செல்வதைவிட ஓரங்க நாடகக் காட்சி ஒன்றில், மான் போல மருண்டு நோக்கும் இளமங்கையான தலைவிக்கும், வாள் போன்ற நீண்ட கண்களையுடைய அவளது தோழிக்கும் இடையே நடக்கும் உரையாடலாகவே காட்டிச் செல்ல இயலும்.

தலைவன் திரும்பி வர காலம் தாழ்த்துகிறானே என்று கலங்கும் தலைவியின் கவலைதான் எல்லா பாடல்களிலும் ஒலிக்கிறது. தோழியும் தக்க துணையாகத் தலைவிக்கு ஆறுதல் அளிக்கிறாள். கண்முன்னே கார்காலத்தின் சுவடுகள் தெரிந்தாலும் கூட தலைவன் திரும்புவதாகச் சொன்ன கார்காலம் இன்னமும் துவங்கவில்லை என்னும் அளவிற்குப் பொய்யுரைத்து தலைவிக்கு ஆறுதல் கூறும் நிலைக்கும் செல்கிறாள். உச்சக்கட்டக் காட்சியாகத் தலைவன் வருகிறான், அவன் வரவினால் தலைவி மகிழ்ந்தாள் என்ற வகையில் ஒரு சிறுகதையாக இப்பாடல்களைத் தொகுக்கலாம். வரிகளுக்குப் பின்னர் அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்படும் எண், திணைமாலை நூற்றைம்பது நூலில் உள்ள பாடல்களின் வரிசை எண்.

அழகிய முல்லை நிலப்பகுதியில், வீட்டின் தோட்டத்தில் அமர்ந்து தலைவியும் தோழியும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். கார்காலத்தில் தளிர்த்து வளரும் தளவமாகிய செம்முல்லைக் கொடிகள் அருகில் உள்ள குருந்த மரத்தினைப் பற்றி அணைத்துத் தழுவிப் படர்ந்திருக்கின்றன. மழை பொழிந்து முல்லை நிலத்தின் காடுகளெல்லாம் தழைத்தோங்கி முல்லை நிலப்பகுதி அழகாக மாறி இருக்கின்றது. பொன்னால் செய்யப்பட்ட சரங்களாகக் கொன்றை மரத்தில் பூக்கள் மலர்ந்திருக்கின்றன. காந்தள் மொட்டுக்கள் பூத்து நிற்கின்றன. சாதாரி பண்ணொலி போல இசை பாடிய வண்ணம் பூக்கள் தோறும் வண்டுகள் பறந்து செல்கின்றன. முல்லை நிலமெங்கும் ஆண் மான்கள் தம்முடைய பெண்மான்களுடனே கூடிக் களித்திட, அவற்றின் குட்டிகளும் அவற்றோடு சேர்ந்து குதித்துக் கும்மாளமிடுகின்றன. மயில்கள் தோகை விரித்து ஆடுகின்றன. கருக்கொண்டு பூத்துள்ள காயாம்பூச் செடியின் பூங்கொத்துகளை, இறகுகள் தொகுதியாக அமைந்த ஆண் மயிலின் தோகை என்று எண்ணி, அஞ்சி விலகிப் பின்வாங்கி, இடியால் தாக்குண்ட பூக்களையுடைய வெண் காந்தலின் அருகிலே சென்று நாகப்பாம்பானது அந்த வெண்காந்தள் பூ போன்றே தன் உருவை மறைத்து நிற்கின்றது. இடையர்களின் குழலோசை மனதைக் கவரும் வண்ணம் ஒலிக்கிறது. அவர்கள் பறியென்னும் படுக்கைக்கு மேலாக ஓலைப்படல் வேயப்பட்டிருக்க, பறிக்குக் கீழாக  பிறியோலையை விலக்கி அழைத்தும் அதட்டியும் ஆடுகளைப் படலுக்குள் அடைக்கிறார்கள். பகலவன் மலைத்தொடரின் பின் சென்று மறைந்ததால் இருள் பரவ, நிலவு தோன்றி அவ்விருளைத் தனது வெண்மையான நிலவொளியினை வெளிவிட்டு விரட்டிவிடுகின்றது.

கார்காலத்தில் திரும்புவேன் என்று தலைவன் அளித்த உறுதிமொழியை நினைத்து அவன் இன்னமும் வராததால் தலைவி மனம் கலங்குகிறாள். தனது துயரை தோழியிடம் கூறுகிறாள்.

மயக்கும் மாலைப்பொழுது எனது உயிரை வாட்டுகிறது (94). கார்ப்பருவம் வந்ததால் கொன்றை மலரத் துவங்குகின்றது தோழியே காண்பாயாக ! (98). கார்காலத்து முல்லைக்கொடிகள் குருந்த மரத்தை அணைத்துப் படர்ந்திருப்பதையும் காண்பாய் தோழி! (105). செம்முல்லைக் கொடிகள் அருகில் உள்ள குருந்த மரத்தில் படர்வது போலத் தலைவனை அணைத்துக் கொள்ள எனக்கு வழி இல்லையே (93). மாலை மயக்கத்தினை பொறுக்க இயலாதவளாகத் தலைவனை எண்ணி வருந்துகின்றேன் (97). புல்லாங்குழலின் இசையும் மாலைப் பொழுதும் என்னை வருத்துகின்றன (101). இருண்ட வானும் வெண்ணிலவும் காதல் துணை அற்றவருக்குத் துன்பத்தைத் தரும் தன்மையைக் கொண்டனவாய் உள்ளன தோழி! (96).

முன்னர் பிரியும் பொழுது, தன் விருப்பத்திற்கு நான் இணங்க வேண்டும் என்பதற்காக, கார்காலத்தில் திரும்பிவிடுவேன் என்று தலைவன் கொடுத்த உறுதிமொழி தவறிப் போனது. கார்காலம் துவங்கிவிட்டது. ஆனால், கொடுத்த உறுதிமொழியின்படி தலைவனின் தேர் இங்கு வரவில்லை. தோழியே! ஆதலால், உள்ளத்தில் ஏற்படும் அச்சத்தால் கண்ணீரால் நிறைகின்றன என் விழிகள் (100). தலைவனின் பிரிவால் என் மேனியின் ஒளி மங்கியது, ஒளியிழந்தன எனது கண்களும், என் தோள்களும் அழகினை இழந்தன. எனது மெல்லிய விரல்களும் தலைவனைப் பிரிந்ததால் நலமிழந்த நாட்களை எண்ணத் துவங்கி, அந்த நாட்களும் எண்ணிக்கையில் அதிகமானதால் விரல்களும் தேய்ந்து விட்டன (99). கார்காலத்தில் திரும்புவேன் என்று உறுதி கூறிய தலைவனின் மொழியும் பொய்யாக இருக்கக்கூடும் என்ற தெளிவைப் பெறாத நானும் தலைவன் வரவை எதிர்நோக்கி கடமையாக எனது உயிரை வருத்திக் கொண்டிருக்கிறேன் (102). துணையின்றி தவிக்கும் காதலர்கள் துயருற்று இறவாமல் வாழும் வகை ஏதேனுமிருப்பின் என்னவென்று எனக்கு அதை உரைப்பாயாக தோழி (111).

கார்காலத்தில் பூத்துத் தழைத்து மலர்களாய் சொரிந்து என்னைக் கொல்கின்றாய் கொன்றை மரமே! என்று தலைவி கொன்றை மரத்தை நோக்கி தோழியின் காதில் விழும்படி கூறுகின்றாள் (104).  தோழியும் தலைவியின் துயர் நீக்கும் பொருட்டு இது கார்காலம் அல்ல என்று சொல்லிவிட எண்ணுகிறாள். அவளும் மரத்தை நோக்கி, கார்காலத்தில் பொழியும் மழை போலச் சீரான மழை பொழியாத பொழுதும் செழித்துப் பூத்துள்ள குருந்த மரமே! நீ இவ்வாறாகப் பூத்திருப்பதைக் கண்டு கார்காலம் துவங்கிவிட்டதோ என்று தலைவி கருதும்படிச் செய்கிறாய். இவளை உடல் மெலிந்து வருந்து என்கிறாய். நீ இவளை மட்டும் பெரிதும் துன்புறுத்துகிறாய் என்று தலைவியை ஆற்றுவிக்கும் நோக்கில் இது கார்காலம் அல்ல எனத் தலைவியின் காதில் விழும்படி தோழி குருந்த மரத்தினை நோக்கிக்கூறுகிறாள் (114).

பிறகு தோழியை அணுகி, இதைக் கார்காலம் என்று உறுதியாகச் சொல்ல இயலாது. ஏன் எனில், மழை பெய்யும் தன்மையை நோக்கினால் அது கார்ப்பருவத்தின் மழைக்கேற்ற முதிர்ச்சியுடன் சீராக இல்லை. கார்காலம் வந்துவிட்டதே என்று தவறான ஓர் பருவ காலத்தில் எண்ணி வருந்துவதை நீ ஒரு செயலாகச் செய்யலாமா? தலைவியே! (103) என்று தோழி தலைவி ஆற்றுவிக்க முற்பட்டு இது கார்காலமே அல்ல என்று பொய்யுரைக்க முற்படுகிறாள்.

காந்தள் மொட்டுக்கள் பூத்து நின்றன. எங்கும் மழையால் நீர் நிரம்பி தனக்குரிய கார்ப்பருவத்தினைக் காட்டி நிற்கிறது கார்காலத்து முல்லை நிலக் காடு. அவ்வாறு இருக்க எதனால் இது என் காதலர் திரும்புவதாகச் சொன்ன கார்ப்பருவம் அல்லவென்று சொல்ல முயல்கிறாய் இப்பொழுது? (118).  கார்காலத்தில் பூக்கும் மலர்கள் எங்கும் தேன் வண்டுகள் பாடும் நிலை கண்டு இது கார்காலம்தான் என்று எவரும் அறிய மாட்டார்களா? (120). ஆனால், நீயோ இது கார்ப்பருவம் அல்ல என்று சொல்லி நிற்கின்றாய்,  அவ்வாறு கார்காலம் அல்ல என்று உரைப்பது பொருத்தமான செயலாகுமா? (119). கார்காலம் இன்னமும் வரவேயில்லை என்று பலவாறு சொல்லி எனக்கு ஆறுதல் சொல்லும், மூங்கில் போன்ற தோள்களை உடைய தோழியே! எனது கண்ணீரினையே தாரை நீராகக் கொண்டு எனது உயிரை வார்த்துக் கொடுத்தேன் இந்த பருவமல்லாத பருவத்திற்கு என்று தலைவி தோழியிடம் கூறினாள் (103).

மேலும் தொடர்ந்து, என் காதலர் இத்தனை நாட்களில் திரும்பிவிடுவேன் என்று கூறிச் சென்ற நாட்கணக்கு தவறாதிருக்குமானால் இது கார்காலமே.  இது கார்காலமாக இல்லாவிடில் மழை இவ்வாறு தொடர்ந்து பொழியாது. ஆதலால், எனக்கு ஆறுதல் கூறும் எண்ணத்தில், எனது துயர் நீக்கும் நோக்கில் இது கார்காலம் அல்ல என்று நீ சொல்வது எனக்கு நம்பிக்கை அளிக்காது என்று தலைவி தோழியிடம் கூறினாள் (108).

தனது மறுதலிக்கும் முயற்சி பயனின்றிப் போனதை உணர்ந்த தோழி, தலைவியை ஆற்றுவிக்கும் தனது வழிமுறையை மாற்றி, தலைவியின் கருத்தை ஏற்று அவளுக்கு இசைவாகப் பேசி அவளது துயர் நீக்க நம்பிக்கையூட்டும் வழிமுறையைக் கையாள்கிறாள். இந்த அழகிய கார்காலம் நம்மை வருத்துவதற்கு என்றே வந்துள்ளது தலைவியே ! (107). கார்காலத்தின் அறிகுறிகள் தோன்றிவிட்டன எனவே விரைவில் தலைவன் உறுதிமொழி தந்தது போல வந்துவிடுவான் (95). தலைவன் திரும்பி வாராது இருந்துவிடுவானோ? நிச்சயம் வருவான். கார்காலம் துவங்கியது. ஆகவே நாமும் தலைவன் வரவை எதிர்நோக்கி அவனுக்கு விருந்து முதலியன செய்து காத்திருத்தல் நமது கடமையாகும் தலைவியே (112). தலைவன் திரும்பும் கார்காலமும் வந்தது, தலைவனும் திரும்பி வந்துவிடுவான் என்று தெரிந்தும் என்ன காரணத்தால் இப்பொழுது உனது மெல்லிய தோள்களில் பசலை பூக்களாயின? என்று கேட்டு தோழி தலைவியை வருந்தவேண்டாம் எனத் தோழி வற்புறுத்துகிறாள் (117).

Siragu kurundhogai-3

தன்னை அன்புடன் ஏற்றுக் கொண்ட காதல் துணையைப் பிரிந்து செல்கின்ற காதலர் எப்படிப்பட்ட கொடியவர்! அந்தப் பிரிவினைப் பொறுத்துக் கொள் என்று பிரிவுத் துயரில் வருந்துபவர்களிடம் சொல்பவர்களும் அது போன்ற கொடியவர்களே ஆவார்கள். அவ்வாறு ஆறுதல் அடையச்சொல்லி  வற்புறுத்துவோர் கொடியவர்கள், ஆதலால் தோழி நீயும் கொடியவளே (106). பெரியோர் என்பவரின் பெருந்தன்மைப் பண்பு என்பது என்றும் பெருமைக்குரியதே. துன்பம் வரும் சூழலில் இதைக் கண்கூடாக நாம் அறிந்து கொள்ள முடியும். நமக்கு அருமையான துணையாக இருந்தவர் வருத்தத்தை நீக்கும் வகையில் அருகில் இல்லையே என வருந்தி, மனம் ஆறாது, அன்புடன் தலை சாய்த்துக் கொள்ள வகையற்ற நிலையில் நான் இருப்பதைக் கண்டு, குளிர்ந்த செம்முல்லைச் செடிகளோ சிறுமைக் குணத்தால் சிரித்துக்கொண்டு பூக்கின்றன. ஆனால், அதனைப் பார்த்துப் பொறுக்கவியலாத பெருந்தன்மை கொண்ட மலைகளோ மழை நீரினைக் கண்ணீராக வழிய விட்டு மிகவும் அழுது மயங்குகின்றன (110) என்று கூறி தலைவி வருந்துகிறாள்.

கார்காலம் தோன்றிய அறிகுறிகளால் தலைவனின் வரவை எண்ணியிருந்த தலைவி பசலை நோய் கொண்டதைக் கண்டு வருந்திய தோழி,  குருந்த மரமே! கொடி முல்லையே! கொன்றை மரமே! உங்களால் கார்காலம் தோன்றிய அறிகுறிகளைக் கண்டு அழகிய கூந்தல் தொங்கிப் புரளும்படியான மூங்கிலையொத்த தோள்களை, பெரும் பீர்க்கம் பூவின் நிறம் போன்று மீண்டும் பசலை பூக்கச் செய்துவிட்டீர்கள் என்கிறாள் (116).

நள்ளிரவு பொழுது கடந்தும்,  பரந்த பிடரி மயிரினையுடைய குதிரைகள் பூட்டப்பட்ட தேரிலமர்ந்து பொருள் தேடச் சென்ற என் தலைவன் வந்தாரில்லை (113). ஒற்றை ஆளாக நான் இருந்தும், ஒன்று அல்லாது பல பகைகளும் என்னை வருத்துதலே தமது தொழிலாகக் கொண்டுள்ளன. துணை அன்றிலை விட்டுப் பிரிந்து வேறாகப் பொருத்தமற்று பனைமடலில் தங்கியுள்ள அன்றில் பறவையும், மாலைப்பொழுதும், பெய்யும் மழையும், ஆம்பற் குழலோசையும், கடலும் மட்டுமின்றி ஊர்ந்து செல்லும் முகில்களும் என் மேல் சினம் கொண்டுள்ளன இதற்கு நான் என்ன செய்வது தோழியே? (121). கார்காலத்தில் மீளுவேன் என்று சொன்ன சொல் தவறிய தலைவன் வாராத இந்நிலை கண்டும் உயிரை நீக்காத நாணமில்லாத என்னுயிரானது, நொறுங்கி உதிர்ந்து விழுவது போலவுள்ளது (122). பொன் போன்ற சிறப்புமிக்க துணையின் அருமை புரியாது பொன் தேடப் பிரிந்து சென்றவர் இக்கார்காலத்தில் திரும்புவர். அவ்வாறு திரும்பி வாரார் என்றால் இனி துணையைச் சேரும் வாய்ப்பிழந்து வாழ்வார் (109) எனத் தோழியிடம் கூறி தலைவி வருந்தினாள்.

ஆனால் தலைவியை மேலும் காக்க வைக்காமல் மறுநாள் காலையில் தலைவன் திரும்பிவிடுகிறான். வாயிலில் தேரில் பூட்டிய குதிரைகளின் மணியோசை கேட்டு தோழி விரைந்து வந்து பார்க்கிறாள். அவளை நோக்கிப் புன்னகைக்கும் தலைவன்,  நீண்ட பெரிய கண்களில் கண்ணீர் தளும்பும் படி பார்க்கும், மூங்கில் போன்ற மெல்லிய தோள்களையுடைய தலைவியிடம், தலைவனின் தேர் வாசலில் வந்து  நிற்கிறது, உன் தலைவன் திரும்பிவிட்டான் என்பதைக் கூறுவாய் தோழியே! என்று கூறுகிறான்(115).

மகிழ்ச்சியுடன் மின்னலாகத் தோட்டத்திற்கு ஓடி அங்கு மூங்கிலைச் சுட்டுத் துளையிட்டுப் புல்லாங்குழல் செய்வதைப் பார்த்துக் கொண்டிருக்கும் தலைவியிடம் தலைவன் வரவைக் கூறுகிறாள் தோழி. தலைவன் வந்து விட்டான், தன்னை ஒவ்வொரு மாலையும் குழலிசையால் வருத்தும் மூங்கிலால் ஆன புல்லாங்குழலால் அவ்வாறு இனி செய்ய இயலாது என மகிழ்கிறாள் தலைவி. ஏடி தோழியே! தலைவனைப் பிரிந்திருந்த என்னை, வருத்துதற்கு இலகுவானவள் என்ற எண்ணத்தில் என்னை வருத்திய புல்லாங்குழலை உலகிற் பலர் அறியச் சுட்டுத் துளை செய்யப்படும் முறையினைக் காண்பாயாக என்று தலைவி தோழியிடம் கூறி (123) மூங்கில் மீது வஞ்சம் தீர்த்துக் கொண்டவள் போல உள்ளம் உவகையுற தலைவனை வரவேற்க வீட்டிற்குள் விரைகிறாள் தலைவி.

குறிப்பு – கதையாகக் கோர்க்கப்பட்ட பாடல்களின் வரிசை, பாடல் எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது:

94. மயக்கும் மாலைப்பொழுது எனது உயிரை வாட்டுகிறது தோழியே!

98. கார்ப்பருவம் வந்ததால் கொன்றை மலரத் துவங்குகின்றது தோழியே காண்பாயாக !

105. கார்காலத்து முல்லைக்கொடிகள் குருந்த மரத்தை அணைத்துப் படர்ந்திருப்பதைக் காண்பாய் தோழி!

93. செம்முல்லைக் கொடிகள் அருகில் உள்ள குருந்த மரத்தில் படர்வது போலத் தலைவனை அணைத்துக் கொள்ள எனக்கு வழி இல்லையே தோழி!

97. மாலை மயக்கத்தினை பொறுக்க இயலாதவளாகத் தலைவனை எண்ணி வருந்துகின்றேன் தோழியே!

101. புல்லாங்குழலின் இசையும் மாலைப் பொழுதும் என்னை வருத்துகின்றன தோழி!

96. இருண்ட வானும் வெண்ணிலவும் காதல் துணை அற்றவருக்குத் துன்பத்தைத் தரும் தன்மையைக் கொண்டனவாய் உள்ளன தோழி!

100. கொடுத்த உறுதிமொழியின்படி தலைவன் வராததால் என் உள்ளத்தில் ஏற்படும் அச்சத்தால் கண்ணீரால் நிறைகின்றன என் விழிகள் தோழியே!

99. தலைவனைப் பிரிந்த நாட்களை எண்ணி எண்ணி எனது விரல்களும் நலிந்தன தோழி!

102. கார்காலத்தில் திரும்புவேன் என்று கூறிய தலைவன் வாக்குறுதி தவறியவனாக இருக்கக்கூடும் என்ற தெளிவைப் பெறாது நானும் தலைவன் வரவை எதிர்நோக்கி எனது உயிரை வருத்திக் கொண்டிருக்கிறேன்!

111. அழகிய கார்காலம் தரும் துயரால் என் உயிர் நீங்காமல் இருக்க ஏதேனும் வழி இருந்தால் சொல்வாயாக தோழி!

104. கார்காலத்தில் பூத்துத் தழைத்து மலர்களாய் சொரிந்து என்னைக் கொல்கின்றாய் கொன்றை மரமே!

114. கார்காலம் வந்தது போன்று காலம் தவறிப் பூத்துள்ள குருந்த மரமே, இது கார்காலம் அல்ல, தலைவியை வருத்தும் நோக்கில் பூத்துள்ளாய்.

118. கார்காலத்தின் அறிகுறிகள் தெளிவாகத் தோன்றுகையில் எதனால் இது கார்ப்பருவம் அல்லவென்று சொல்ல முற்படுகிறாய் தோழி?

120. கொன்றை மலர்கள் மலர்ந்து, வண்டுகள் பாடும் மாலைப் பொழுதைக் கண்ட பிறகும் இது கார்காலம்தான் என்ற உண்மையை அறிய மாட்டார்களா?

119. கார்காலம் இதுவல்ல என்று சொல்கிறார் சிலர், அது சரியல்ல இது கார்காலம்தான் தோழி!

103. இது கார்காலம் அல்ல வென்று எனக்கு ஆறுதல் கூற முற்படும் தோழியே எனது உயிரை இந்தப் பருவத்திற்கே அளிக்கிறேன் நான்.

108. எனக்கு ஆறுதல் கூறும் பொருட்டு எனது துயர் நீக்கும் நோக்கில் இது கார்காலம் அல்ல என்று நீ சொல்வது எனக்கு நம்பிக்கை அளிக்காது தோழியே!

107. இந்த அழகிய கார்காலம் நம்மை வருத்துவதற்கு என்றே வந்துள்ளது தலைவியே !

95. கார்காலம் துவங்கியது, மழையால் காடுகள் தழைத்தோங்குகின்றன, தலைவன் திரும்பும் காலமும் வந்தது தலைவியே!

112. கார்காலம் துவங்கியது. தலைவன் வரவை எதிர்நோக்கி அவனுக்கு விருந்து முதலியன செய்து காத்திருத்தல் நமது கடமை தலைவியே!

117. தலைவன் திரும்பும் கார்காலமும் வந்தது. தலைவன் திரும்பி வந்துவிடுவான் என்று தெரிந்தும் ஏன் பசலை நோய் கண்டாய் தலைவி?

106. தலைவனின் பிரிவினைப் பொறுத்துக் கொள் என்று கூறி என்னை வற்புறுத்தும் நீ கொடியவள் தோழி!

110. சிறுமதி கொண்ட செம்முல்லைகள் என் துயர் கண்டு நகைக்க, பெருந்தன்மை கொண்ட மலைகளோ என் நிலை கண்டு அழுகின்றன தோழியே!

116. கார்காலம் தோன்றிய அறிகுறிகளால் தலைவனின் வரவை எண்ணியிருந்த தலைவி பசலை நோய் கண்டாள்.

113. நள்ளிரவு பொழுது கடந்தும் பொருள் தேடச் சென்ற என் தலைவன் வந்தாரில்லை தோழியே!

121. கார்காலத்துப் பல நிகழ்வுகளும் ஒற்றை ஆளான என்னை வருத்துதலே தமது தொழிலாகக் கொண்டுள்ளன தோழியே!

122. முல்லைநிலக் காடுகள் தழைத்துள்ள கார்காலத்தில் தலைவன் திரும்பாததால் என்னுயிரானது, நொறுங்கி உதிர்ந்து விழுவது போலவுள்ளது தோழியே!

109. பிரிந்து சென்ற தலைவர் சொன்னவாறு திரும்பி வாரார் என்றால் இனி துணையைச் சேரும் வாய்ப்பிழந்து வாழ்வார் தோழி!

115. தலைவனின் தேர் வாசலில் வந்து  நிற்கிறது, உன் தலைவன் திரும்பிவிட்டான் என்பதைக் கூறுவாய் தோழியே!

123. தலைவனைப் பிரிந்திருந்த என்னை வருத்திய குழலும் அதன் கொடிய செய்கையின் பலனை இப்பிறவியிலேயே அடையும் வண்ணம் துளையிடப்படுவதைக் காண்பாய் தோழி!

_____________________________________________

உதவிய தளங்கள்:

1. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது

மூலமும் உரையும் – மகாவித்வான் ரா. ராகவையங்கார்

செந்தமிழ்ப் பிரசுரம், 1927 (இரண்டாம் பதிப்பு)

திணைமாலை நூற்றைம்பது.pdf:  https://ta.wikisource.org/s/31hg

2. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது

விளக்க உரை – தமிழ்ப் புலவர் திரு. அ. நடராச பிள்ளை

http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00ind.htm

3. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது

உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.

https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/thinaimaalai150.html

4. திணைமாலை நூற்றைம்பது – கணிமேதாவியார்

தமிழ் இலக்கியத் தொடரடைவு, முனைவர்.ப.பாண்டியராஜா

http://tamilconcordance.in/TABLE-THINAIMALAI150-TEXT.html

5. திணைமாலை நூற்றைம்பது, வைதேகி ஹெர்பர்ட்,

https://pathinenkeelkanakku.wordpress.com/திணை-மாலை-நூற்றைம்பது/

_____________________________________________


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அன்பின் ஐந்திணை – முல்லை”

அதிகம் படித்தது