மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அன்பின் ஐந்திணை

தேமொழி

Oct 10, 2020

siragu aindhinai2

தமிழிலக்கியத்திற்கு இலக்கணம் வகுக்கப்படும் பொழுது, ஒரு திணைக்கு உரியபொருள் அத்திணையின் உரிப்பொருள் எனக் காட்டப்படுகிறது. ஐந்து நிலங்களுக்குரிய ஒழுக்கங்களாகபுணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் ஆகியவையும் அவற்றின் நிமித்தமும் முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய ஐந்திணைகளின் உரிப்பொருள் எனப்படும்.

இந்த அன்பின் ஐந்திணைகளை,

     ‘புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்

ஊடல் இவற்றின் நிமித்த மென்றிவை

தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே.’

       (தொல். பொருள். அகத்திணையியல் நூற்பா-16)

என்று தொல்காப்பிய நூற்பா வரையறுக்கிறது.

ஆகவே,

புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி;

பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலை;

இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லை;

இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தல்;

ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதம்

ஆகிய நிலங்களுக்கு உரியவையாக நாம் அறிகிறோம்.

ஒரு திணைக்குரிய உரிப்பொருள் மயங்குவதில்லை. ஒரு பாடலின் உரிப்பொருளே அப்பாடல் அகத்திணையில் எந்த திணையைச் சார்ந்தது எனத் தீர்மானிக்க உதவுகிறது. குறிஞ்சித்திணைப் பாடல்களின் காட்சிகள் கருத்துகள் உரையாடல்கள் என எவற்றுக்குமே அதன் பொருண்மையான புணர்தலும் புணர்தல் நிமித்தமும்தான் அடிப்படை. இதே வரையறையே மற்ற பிறதிணைப் பாடல்களுக்கும் பொருந்தும்.

பாட்டும் தொகையும் என அறியப்படும் சங்கப்பாடல்களில் தோழிக்குத் தனிச் சிறப்புண்டு. தலைவன் தலைவியை மணந்து (வரைவு) கொள்ளாமல் காலம் தாழ்த்தும் பொழுது தோழி தலைவனிடம் தலைவியை மணந்து கொள்ள வரைவு கடாதல் என்ற நோக்கில் தலைவியைச் சந்திக்க அவன் வரும் இடர் தரும் வழி, தலைவிக்குக் காவல் மிகுதி, இற்செறிப்பு, ஊரில் அலர் துவக்கம், வரைவு வேட்கை, வெறியாட்டு ஏற்பாடு என்று நிலைமையை அறிவுறுத்துதல், குறியிடம் மறுப்பது, பகற்குறி, இரவுக்குறி, அறத்தொடு நிற்றல், ஆற்றுவித்தல், தூது செல்லல் என்றும், உடன்போக்கு, வரைவு மலிதல் உதவிகள் செய்வது என்றும் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே காதல் துவங்கி வளர்ந்து கைகூடுவதில் சங்ககாலத் தோழியின் பங்களிப்பு மிகுதி.

எளிய வழியில் அகப் பாடல்கள் கூறும் அன்பின் ஐந்திணை ஒழுக்கம் குறித்து அறிய ‘திணைமாலை நூற்றைம்பது’ நூலின் பாடல்கள் உதவுகின்றன. மதுரைத்தமிழாசிரியர் மாக்காயனார் மாணாக்கர் கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது என்ற நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ‘ஏலாதி’ நூல் இயற்றிய அதே கணிமேதாவியார் இயற்றிய நூல் இது. இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதையும், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் என்ற செய்தியையும் ஏலாதி நூலின் முகவுரையின் மூலம் நாம் அறிய முடிகிறது. இந்நூலில், அகத்திணை ஒழுக்கம் குறித்த வெண்பாக்கள் குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்ற வரிசையில் அமைந்துள்ளன.

ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தொடுத்துள்ளமையால் ‘திணைமாலை’ என்றும், நூலில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கையின் அளவினால் ‘திணைமாலை நூற்றைம்பது’ என்றும் இந்நூல் பெயர் பெற்றது என்ற விளக்கம் கொடுக்கப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு திணைக்கும் 30 பாடல்கள் என மொத்தம் 150 பாடல்கள் இருக்க வேண்டிய நிலைக்கு மாறாக, இந்நூலில் குறிஞ்சி, நெய்தல், முல்லை திணைகள் மூன்றும் 31 பாடல்களைப் பெற்றுள்ளதால் மொத்தம் 153 பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நூலின் இறுதியிலே காணப்பெறும் பாயிரச் செய்யுள் ஒன்றையும் கணக்கில் கொண்டால் இந்நூல் மொத்தம் 154 பாடல்களைக் கொண்டதாகும்.

இவற்றுக்கு மிகப் பழைய உரையும் உள்ளது. அகத்திணை தொகுப்பாக அமைந்த மற்ற கீழ்க்கணக்கு நூல்களில் தலைப்பிற்கு ஏற்ப பாடல்களின் எண்ணிக்கை அமைந்திருக்க, இந்த நூல் மட்டும் அந்த விதியிலிருந்து மாறுபடுவது குறிப்பிடத்தக்கது. தமிழிலக்கியம் கூறும் அகத்திணைகள் பற்றி அறிய இது ஒரு சிறந்த நூல் என்று இதற்கு உரை எழுதிய மகாவித்வான் ரா. ராகவையங்கார் தனது நூலின் முன்னுரையில் பரிந்துரைக்கிறார். ஐந்திணை இயற்கைக் காட்சிகள் அழகாக இந்நூலில் விவரிக்கப்படுகிறது. குறிஞ்சித் திணையின் முதற்பொருள்(நிலமும் பொழுதும்), கருப்பொருள்(நிலத்தின் தனித்தன்மையைக் குறிப்பன), உரிப்பொருள்(அந்த நில மக்களின் ஒழுக்கமும் வாழ்வு முறையும்) என இம்மூன்று பொருள்களும் பாடல்களில் வழி தெளிவாக்க அறிந்து கொள்ள முடியும்.

தொடுக்கப்பெற்ற மலர் மாலையினைப் போன்று, ஒப்புமை கூறுவதற்கு அரிய இனிய தமிழ் மொழியில் சிறப்பாக ஆராய்ந்து இயற்றிய திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலில், அகத்திணை கருத்துக்களை வெறுத்தவர்களின் வெறுப்பு விலகும்படியாக, முத்துக்களைப் போன்ற வெண்பாச் செய்யுட்களில் அகப் பொருளாகிய களவியல் கொள்கைகளைக் கணிமேதாவியார் கனிவுடன் கூறினார் என்று நூலின் இறுதியில் இடம்பெறும் பாயிரம் குறிப்பிடுகிறது.

திணைமாலை நூற்றைம்பது நூலின் குறிஞ்சித் திணைப் பாடல்கள் அனைத்திலும் குறிப்பிடப்படும் தலைவனும் தலைவியும் ஒருவரே என்றோ, அவர்களின் தோழியும் தோழனும், செவிலித்தாயும், நற்றாயும், தந்தையும் தமையன்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றோ, அல்லது அவர்கள் வாழிடம் குறிப்பிட்ட குறிஞ்சி நில ஊர் என்றோ கூறுதலும் இயலாது. இருப்பினும், 31 குறிஞ்சிப்பாடல்களையும் ஒரே தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழும் காதலாகக் கொண்டு ஒரு வரிசைப்படுத்தி அவற்றிலிருந்து ஒரு கதையும் உருவாக்கலாம். அத்தகைய முயற்சியே இக்கட்டுரை. வரிகளுக்குப் பின்னர் அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்படும் எண், திணைமாலை நூற்றைம்பது நூலில் உள்ள பாடல்களின் வரிசை எண்.

புணர்தலும் புணர்தல் நிமித்தமுமாகிய ஒழுக்கமும் கொண்ட குறிஞ்சி நிலத்தில், மலைநாட்டில் நிகழ்வது இக்கதை. தலைவனுக்கு ‘வேலன்’ என்றும் தலைவிக்கு ‘வள்ளி’ என்றும் பெயர்கள் சூட்டியும் அழைக்கலாம். தலைவன் கையில் வேலை வைத்துள்ளவன், வேட்டை ஆடும் வீரன். அவன் ஓர் அழகிய மலைநாட்டிற்குத் தலைவன். அவனுக்கு ஒரு நண்பன். இவர்களைப் பாடல்களின் மூலம் அறிய முடிகிறது.

தலைவியின் குடும்பத்தில் இருப்போர் நற்றாய், தந்தை, தலைவியின் வீரம் மிக்க அண்ணன்மார்கள், செவிலித்தாய், தலைவியைப் பிரியாத தோழி ஆகியோர். அழகிய நிலவு போன்ற முகத்தையும், அதில் வில் போன்ற வளைந்த புருவங்களையும், அதன் கீழ் உயிரைக் குடிக்கும் வேல் போன்ற கண்களையும் கொண்ட ஒளி பொருந்திய முகத்தைக் கொண்டவள் அத்தலைவி. நறுமணம் மிக்க தேன் சொட்டும் மலர்களைத் தனது அழகிய நீண்ட குழலில் அணிந்து, சிறப்பான அணிகலன்களையும் அணிந்தவள்.

அவளது தமையன்கள் வீரம் மிக்கவர்கள் தங்கள் வாழ்வில் குறுக்கிடும் எவருடைய உயிரையும் போக்கிவிடுபவர்கள். அவர்களுக்கு மிக அருமையான நறுமணம் மிக்க சந்தனம், அகில் போன்ற மரங்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அழகிய மலையில், முகில் தடவிச் செல்லும் அளவிற்கு உயர்ந்து வளர்ந்துள்ள அந்த மரங்களை வெட்டி வீழ்த்தி அங்குத் தினை விதைத்துப் பயிரிடுகிறார்கள்.

அந்தத் தினைப்புனத்தைக் காவல் காக்க தலைவியைத் தோழியுடன் அனுப்பி வைக்கிறார்கள். உடல் மணக்கும்படி சந்தனக் குழம்பைப் பூசிக்கொண்டிருக்கும் தலைவிக்கு, தினைப்புனத்தில் சந்தன மரங்களைக் கால்களாக நிறுத்தி அமைக்கப்பட்ட பரணில் நின்று தானியங்களைத் தின்ன வரும் கிளிகள் போன்ற பறவைகளை ஆலோலம் பாடி விரட்டுவது கொடுக்கப்பட்ட பணி.

அப்பொழுது அயலூரைச் சேர்ந்த கட்டிளம் காளை ஒருவன் வேட்டையாட அப்பகுதிக்கு வருகிறான். அவன் துரத்தி வந்த மானின் மீது அம்பெய்கிறான். ஆனால் அந்த மானோ உடலில் தைத்த அம்புகளுடன் தப்பி ஓடிவிடுகிறது. மானைத் துரத்தி வரும் தலைவன் பரணில் தினைப்புனம் வழி செல்கையில் பரணில் நிற்கும் தலைவியிடமும் தோழியிடமும், பெண்களே நான் வேட்டையாடிய மான் அம்புகளுடன் இப்பக்கம் வந்ததைப் பார்த்தீர்களா? (1) என்று கேட்கிறான். இது தலைவன் தலைவி ஆகிய இருவரின் காதலின் துவக்கம். தலைவியின் அழகில் தனது உள்ளத்தை அவளிடம் பறி கொடுக்கிறான்.

தலைவியின் முகத்தை மறக்க இயலாமல் தனது ஊருக்குத் திரும்புகிறான். தலைவியின் நினைவு தன்னை வாட்டுவதாகத் தனது தோழனிடம் கூறுகிறான். வேட்டையாடிய விலங்கைக் கண்டீர்களா என்று கேட்கச் சென்ற இடத்தில் தலைவி என் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டுவிட்டாள்(9), தினைப்புனம் காக்கும் தலைவியின் அழகில் என்மனம் கட்டுண்டு கிடக்கிறது(30), தலைவியின் முலைகள் மேல் கொண்ட விருப்பினால் எனது நலனும் பெருமையும் அழிந்துவிட்டது(23) என்று தலைவன் தோழனிடம் கூறுகிறான். தலைவியைத் தான் சந்தித்த இடத்தை தோழனுக்கு அடையாளம் சொல்லி அனுப்புகிறான். ஆவல் மேலிடத் தலைவனின் உள்ளத்தைக் கவர்ந்தவள் எப்படி இருப்பாள் எனக் காணச் செல்லும் தோழனும் தலைவியைப் பார்த்து அயர்ந்து போகிறான். இத் தலைவியை விட்டு எவ்வாறு தலைவன் பிரிந்து வந்தான்? அது அவனது உள்ளத்தின் உறுதியைக் காட்டுகிறதோ (28) என எண்ணி வியக்கிறான்.

அரண் போன்ற மலைகள் சூழ்ந்து நடுவே இருக்கும் அழகிய தலைவியின் சிற்றூருக்கு, கொடிய விலங்குகளும், பாம்புகளும், வேங்கைப் புலிகளும், மதநீர் சொட்டும் மதம் பிடித்த யானைகளும் குறுக்கிடக் கூடிய அச்சம் தரக் கூடிய வழியில் தனது வலிமையான கால்களையும், தனது வேலையும் மட்டும் துணையாகக் கொண்டு மீண்டும் தலைவியைக் காண வருகிறான் தலைவன். அவளைச் சந்திக்க வாய்ப்பு தேடி அவளது தோழியின் மூலம் அணுக விரும்புகிறான். தினைப்புனம் அருகில் உள்ள வேங்கை மரத்தின் கீழ் நின்று தலைவிக்குக் கொடுக்க கையில் தான் கொணர்ந்த பூந்தழைகளுடன் நின்று கொண்டிருப்பவன் கண்ணில் தோழி தென்படுகிறாள்.

தலைவியைக் காண்பதே தன்னை வாட்டுவதாக (19) தனது ஆற்றாமையைத் தோழியிடம் தலைவன் கூறுகிறான். சந்தன மரம் போன்ற அருமையான மரங்களை எல்லாம் வேரோடு வெட்டி உழுது நிலத்தைப் பண்படுத்தி தினை வித்துக்களை விதைத்துப் பயிரிட்டு தினைப்புனம் உருவாக்கும் அவளது அண்ணன்மார் போன்று தலைவிக்கும் எனது வருத்தம் புரியவில்லை என்கிறான் தலைவன் (24). நான் தலைவியைக் குறித்து நன்கே அறிவேன். இளமை நிரம்பிய அவள் தனது இடை வருந்தும்படியாக சிறிது தொலைவு அவள் நடந்து செல்வதற்கு முன்னரே என் நெஞ்சம் அவளது இடை இற்று விழுந்து விடுமே என்று அஞ்சும், அவள் சிறிதும் என்பால் அன்புகாட்டுவதைக் காணாது நைந்து உருகி என் நெஞ்சம் வருந்துகிறது. என் உள்ளம் அவள் பின் சென்று தளர்ந்து விடுகிறது (17) என்று தலைவன் தோழியிடம் கூறுகிறான்.

நான் வந்தால் மலை நெற்குவியலுக்குப் பாதுகாப்பு இருக்கும். இங்கேயே நான் இருப்பேன் என்றால் சிவந்த தினையினையும் கருந்தினையினையும் கொண்ட தினைப்புனக் காவலாகவும் இருக்கும் (8) என்று தலைவன் தோழியிடம் நயமாகப் பேசி தனக்கு ஆதரவாக மனமாற்றம் கொண்டுவர விரும்புகிறான். தனது ஊரிலிருந்து தலைவிக்குக் கொணர்ந்த பூந்துகளைத் தலைவிக்குக் கொடுக்குமாறு தோழியிடம் கொடுக்கிறான்.

தலைவன் தரும் அன்பளிப்பை ஏற்க இயலாமல் மறுக்க வேண்டிய சூழ்நிலையை விளக்குகிறாள் தோழி. வலிமைமிக்க பெரும் புலியினைப் போன்று கொடுமை மிக்கவர் என்தமையன் மார்கள். நீயும் வலிமை மிக்க பெரும்புலியினைப் போன்றுள்ளாய். ஆதலால் இருவருக்கும் இடையில் மோதலைத் தவிர்க்க விரும்புவதால் நாங்கள் நீ கொணர்ந்த அருமையான இத்தழையினை ஏற்க இயலாத சூழ்நிலை இன்று. ஆதலால் நீ இத்தழையினை நாளைக் கொண்டுவந்தால் நாங்கள் ஏற்றுக் கொள்ள இயலும் (20) என்கிறாள் தோழி தலைவனிடம். பிறகு அவனது வற்புறுத்தல் காரணமாக ஏற்றுக் கொள்கிறாள். நீ கொண்டு வந்த இக் குறுங் கண்ணிகள் வாடாதவாறு தலையிடம் சேர்த்து, இக்கண்ணிகள் நல்லனவென்று நான் கூறினால், மையுண்ட கண்களையுடைய தலைவி வருந்தாமல் ஏற்றுக் கொள்ள உடன்படுவாள் (21) என்று தலைவனிடம் தோழி கூறி, தலைவன் தலைவிக்குத் தரும் அன்பளிப்பைத் தோழி ஏற்றுக் கொண்டு தலைவியிடம் சேர்ப்பிக்க உதவுகிறாள்.

siragu aindhinai1

பரணில் உள்ள தலைவியை அணுகும் தோழி தலைவன் தந்த பூந்தழைகளை அவளிடம் கொடுத்துவிட்டு, உன்னால் தன் விருப்பம் நிறைவுறும் என்று எண்ணி உனக்கு அன்பளிப்புகளுடன் வருகிறான் அந்த மலைநாட்டுத் தலைவன். ஆனால் தனக்கு என்ன தேவை என்பதை எனக்கு விளங்கச் சொல்கின்றானில்லை. வேங்கை மரத்தினது நிழலில் நிலை கொள்ளாது நிற்கின்றான். வலிமை மிக்க பெரும் புலியினை ஒத்தவனாகிய இவனது மனக் கருத்துதான் என்னவாக இருக்கலாம் (31) என்று தோழி தலைவியைக் குறும்பாக வினாவுகிறாள்.

பரணில் காவல் காக்கும் தலைவியையும் தோழியையும் தினைப்புனத்தில் நுழைந்த மதயானை ஒன்று அச்சுறுத்துகிறது. தக்க நேரத்தில் அங்கு வந்த தலைவன் அம்பு வீசி யானையை விரட்டி பெண்களைக் காப்பாற்றுகிறான். சுனையில் பூத்த நீலோற்பலம் பூக்களையும் மணம் வீசும் அசோக மலர்களையும் கொய்து வந்து தலைவியின் கூந்தலில் சூட்டுகிறான். தலைவி தலைவன் மீது காதல் கொள்கிறாள். தலைவன் தலைவியிடம், வீரம் மிக்க உன் அண்ணன்கள் ஒரே அம்பினால் மற்றவரைக் கொல்வர். ஆனால் காமனின் கணைகளை உனது இருவிழிகளாகக் கொண்டு நீ உன் இரு கண்களால் தாக்கி என்னைக் கொல்கிறாய் (22) சொல்கிறான்.

தலைவனும் தலைவியும் தினைப்புனம் அருகில் உள்ள சோலையில் அடிக்கடி சந்தித்து தங்கள் காதலில் கட்டுண்டு இருக்கையில் காலம் கடந்து செல்வதைக் கருத்தில் கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆனால் தினைப் பயிர் வளர்ந்து முற்றிவிடுகிறது. வேங்கை மரபும் பூக்கத் தொடங்கி அறுவடைக் காலம் நெருங்குவதை உணர்த்துகிறது. காதலர் இருவரும் அதை உணர்ந்தார் இல்லை. ஆனால் தோழிக்குக் கவலை ஏற்படுகிறது.

தலைவியைத் தேடி வரும் தலைவனை விரைவில் தலைவியைத் திருமணம் செய்து கொள்ள வைக்கும் ஏற்பாட்டில் இறங்குகிறாள் தோழி. அவனிடம், தலைவனாகிய உங்கள் மீது கொண்ட காதல் உணர்வால், பெண்மை மிகுந்த நிலையில் வாய்திறந்து தலைவி ஆலோலம் பாடி விரட்டுகையில் அவளது குரல் கிளியின் குரல் போலவே இருப்பதால், தினை உண்ணும் பறவைகள் அஞ்சி எழுந்து பறப்பதில்லை. ஆகவே குரல் மாறிவிட்ட இவள் பறவை விரட்டும் தொழிலுக்கு ஏற்றவள் இல்லை என இனி அவளை வீட்டிலேயே நிறுத்திவிடுவர் (3) என்று தோழி தலைவனிடங் கூறுகிறாள். அதேபோல தலைவியிடம், தலைவியே, பனை போன்ற வளர்ந்த இன்பத்தை நாம் எதிர்நோக்கியிருக்க, அதற்கு மாறாகப் பாத்தியில் விளையும் சிறு தினையாக அது மாறிவிடுமாறு, அறுவடைக் காலத்தின் அறிகுறியாக வேங்கை மரம் பூத்துவிட்டது. அறுவடை நெருங்கும் அளவு பயிரும் வளர்ந்துவிட்டது, இனி தலைவனைப் பார்க்க இங்கு வரும் வாய்ப்பு இல்லாது போகும். இற்செறிப்பால் தலைவனிடம் இருந்து பிரியும் நிலை வரப்போகிறது (5) எனத் தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

அவ்வாறே, பகலில் தலைவியை நாடி வந்த தலைவனைக் கண்டு தலைவியை விரைவில் மணம் புரிந்து கொள்ளச் சொல்லி மீண்டும் வலியுறுத்துகிறாள் தோழி. என்ன ஆகப்போகிறதோ! பெருந்தன்மை இல்லாத இந்த இள வேங்கை மரமானது பூ பூத்து தினைக் கதிர் அறுவடை செய்ய வேண்டிய நாள் வருவதைத் தெரிவிக்கிறது. பொன்னாலாகிய அணிகலன் முதலியவற்றைப் பரிசமாக எதிர்பார்க்கும் போர் விருப்பமிக்க வேலினையுடையவர் எந்தையும் என்னையன் மாரும். என்ன கொடுமை. இனிமேல் தலைவிக்கும் உங்களுக்கும் உள்ள நட்பானது கதிர் அறுக்கப்பட்ட புனம் போல வறண்டு விடும் (18) என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

இனி தலைவி வீட்டில் அடைபட்டுவிடுவாள் என்பதைப் புரிந்து கொள்ளும் தலைவன் எவ்வாறு இனி அவளைச் சந்திப்பது என்று கவலை கொள்கிறான். அவனது துயரை உணர்ந்த தோழி தலைவி இற்செறிப்புக்கு உள்ளானால், வேறு எவ்வாறு சந்திக்கலாம் எனக் குறிப்பு கொடுக்க நினைக்கிறாள். தலைவனே, உயர்ந்த பலாமரங்களின் பக்கத்திலே, மரங்களால் பாத்தியாகப் பிரிக்கப்பட்ட தோட்டத்தின் நடுவே, நிலவொளி படர்ந்தது போன்ற மிகுந்த மணல் வட்டமாகப் பரவியுள்ள பகுதியில், காட்டாற்றுக்கு அருகே உள்ள குளிர்ந்த சோலையில் நானும் தலைவியும் பகலில் விளையாடுவோம் (29) என்று தோழி தலைவனிடம் சந்திக்க வேண்டிய இடத்தைக் குறிப்பால் கூறுகிறாள்.

தலைவி இற்செறிப்பு செய்யப்படுகிறாள். அவளைக் காண வரும் தலைவனால் அவளைப் பார்க்கக் கூடும் என்று எண்ணும் இடங்களில் எங்கும் அவளைக் காணாது தவிக்கிறான். மாறாதப் புகழுடைய பாண்டியனின் மதுரை மாநகரைப் போன்ற சிறப்புப் பொருந்திய என் தலைவியினை அவளது விளையாட்டுப் பண்ணையிலும் காணமுடியவில்லையே. அழகிய என் தலைவியை என்னால் எங்கும் காண இயலவில்லையே (4) என்று அவளைக் காண இயலாத வருத்தத்துடன் தனக்குள் சொல்லிக் கொள்கிறான். இரவில் வந்து சந்தித்து விடுவது என்று தீர்மானித்துக் கொள்கிறான். கொடிய விலங்குகள் வாழும் காட்டு வழியில் அவளைத் தேடி இரவில் வருகிறான். இந்நிலையில் தலைவனின் உயிருக்கு ஏற்படக்கூடிய இடர் குறித்து, அவ்வாறு ஏதாவது நிகழ்ந்தால் தலைவியும் உயிர் வாழ விரும்ப மாட்டாளே என்று தோழி அச்சம் கொள்கிறாள்.

அவன் இரவில் வருவதைத் தவிர்க்க வேண்டுகிறாள் (இக்கருத்திற்கே திணைமாலை நூற்றைம்பது நூலில் இருக்கும் 31 குறிஞ்சிப் பாடல்களில் 8 பாடல்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தோழி எந்த அளவு தலைவனின் இச்செயலைத் தடுக்க நினைக்கிறாள் என்பதைக் காட்டுகிறது). தலைவனே, மிகுந்த இருள் நிரம்பிய நள்ளிரவிலே, நீ வந்தாயானல் அதனால் உனக்கு இடையூறு நேரும் எனத் தலைவி கலங்குவாள் அல்லவா? அதனை நீ எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன் (6). மதம் கொள்ளும் யானைகளை, பெரும் புலிகளை, கொடிய நாகங்களை எதிர் கொள்ளக்கூடிய வழியில் இரவில் நீ வருவதை என் தலைவியால் தாங்கிக் கொள்ள இயலாது (7, 11, 13,10). உன் நலனுக்காகத் தலைவி வருந்தும்படி அவளைக் காண இரவில் வரவேண்டாம். அவ்வாறு வருவீர் என்றால் அதைத் தாளாது இனி உயிர் வாழ மாட்டாள் தலைவி (25, 26) என்று பலவாறு கூறி தோழி தலைவனைத் தடுக்கிறாள்.

தலைவனைக் காணாது அவனை எண்ணி உடல் நலிவுறுகிறாள் தலைவி. அவளுக்கு ஏற்பட்டிருக்கும் நோயை நீக்க வேலவனின் வெறியாட்டுக்கு ஏற்பாடு செய்கிறாள் செவிலித்தாய். அவளுக்குத் தலைவியின் நிலைக்கான காரணத்தை விளக்குகிறாள் தோழி. வெறியாட்டும் பொருட்டு வரவழைத்த வேல் கைக்கொண்ட பூசாரி சென்றுவிடட்டும். பலியிடக் கொண்டுவந்துள்ள ஆட்டுக் குட்டியினையும் விடுவிக்கவும், கடவுளுக்குப் படைக்கக் கொண்டு வந்துள்ள கள்ளினையும் அதனை உண்ணக் காத்திருக்கும் மக்களுக்குக் கொடுத்துவிடவும் (12). தலைவியின் நெஞ்சத்தைக் கவர்ந்தவன் ஒருவன் உள்ளான் செவிலித்தாயே! தினைப்புனம் காக்கையில் மதங்கொண்ட யானை ஒன்று தலைவியைத்தாக்க வந்த வேளையில் அதனைத் தாக்கிவிரட்டி தலைவியைக் காப்பாற்றினான் ஒருவன். அக் கட்டழகன் தலைவியின் உள்ளத்தில் இடம் பிடித்துவிட்டான் (2), யானையிடம் இருந்து காப்பாற்றிய தலைவனைத்தான் தலைவி மணப்பாள் (14) என்று தோழி செவிலிக்குக் கூறுகிறாள். குற்றமில்லாத என் தலைவிக்கு நலக்குறைவு எதுவும் இல்லை (காட்டாற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட பொழுது, பாய்ந்து சென்று காப்பாற்றிக் கரை சேர்த்த அவளது காதலனைத் தவிர்த்து வேறு எவரையும் உறுதியாகத் தலைவி தன் வாழ்க்கைத் துணையாக ஏற்க மாட்டாள் என்று செவிலியிடம் தோழி கூறும் ஒரே ஒரு பாடலின் (12) கருத்து மட்டும் கதைப்போக்கில் ஏற்படுத்தக் கூடிய முரண் கருதித் தவிர்க்கப்பட்டிருக்கிறது).

தலைவியைத் தேடி தலைவன் வருவதைத் தாயும் அறிந்து விடுகிறாள், நிலை மோசமாவதை உணர்கிறாள் தோழி. எனவே தலைவனிடம், தலைவனே, இதற்கு முன் தலைவியை மணவாது நாளைக் கழித்தீர்கள். இனிமேலாகிலும், காலம் தாழ்த்தாது மணந்து கொள்வீர்கள் என்று எண்ணி உங்களுக்கு ஒன்று சொல்கின்றேன். இடர் கண்டு வெறுக்கத்தக்க இம்மலை வழியாகத் தலைவியைத்தேடி நீங்கள் வருவதை எங்கள் அன்னை பார்த்துவிட்டதால் எங்களைச் சினந்தாள். இனி எங்கள் மீது கண்காணிப்பை அதிகப்படுத்துவாள். ஆகையால், தலைவியை விரைவில் மணமுடிப்பீர்களாக (27) என்று தோழி தலைவனிடம் கூறினாள். தலைவனும் தனது ஊரைச் சேர்ந்த சான்றோர்களைத் தனது சார்பாகத் தலைவியின் இல்லத்திற்கு அனுப்புகிறான்.

ஆனால், தலைவியின் குடும்பத்தார் தலைவன் தலைவியை மணமுடித்துத் தருமாறு முன்வைத்த கோரிக்கையை ஏற்கவில்லை. தலைவியை அடைய முடியாத ஆற்றாமையால் மடல் ஊரத் துணிந்த தலைவன் அதைத் தோழிக்குத் தெரிவிக்கிறான்(16). அன்று பூத்த மணக்கும் சுரபுன்னை மலர்களைச் சூடி, அதன் தேனால் நனையப்பட்ட கூந்தலையுடைய தலைவி, அணிகலனோடு கூடிய தன்னுடைய மார்பினை எனக்குக் கொடுத்து, என்னோடு சேரும் காலம் வரைக்கும், மடலேற அணிந்த எலும்பாற் செய்த அணிகலன் என் மார்பிலிருந்து நீங்கப் போவதில்லை என்று உனக்குச் சொல்கிறேன். அதற்கு மாறாக வேறு சொல் கூறமாட்டேன். பனைமடலால் செய்யப்பட்ட குதிரையின் மீதே அமர்ந்து தலைவியின் தெரு வழியே மடல் ஊருதற்குத்துணிந்து விட்டேன் என்று தலைவன் தோழியிடம் கூறுகிறான்.

தலைவனும் தலைவியும் காதல் கைகூடாமல் துயர் கொள்வதைச் சகிக்கமாட்டாத நற்றாய் தலைவனின் கோரிக்கையை ஏற்றுத் தலைவியை அவனுக்கு மணமுடிக்குமாறு தலைவியின் தந்தைக்கும் தமையனுக்கும் அறிவுறுத்துகிறாள்(15). தலைவன் மன்றல் விரும்பி அனுப்பிய, குறையேதும் கூறவியலாத சான்றோர்களினது வருகையினை ஏற்றுக் கொண்டவர்களாக, மறுக்காது நீர் வார்த்துக் கொடுத்தலாகிய மண முறையில் மகளை மணம் செய்து கொடுத்தல் நல்லது. அல்லாமல், மகளின் தளர்ச்சியுறாத எழிலும் முலைகளுமாகிய இரண்டினுக்கும், கடலாற் சூழப்பட்ட இந்த உலகைக் கொடுப்பினும் பொருத்தமான விலையாகுமோ? காதலினையே மதிக்கவேண்டும் என்று நற்றாய் தலைவியைத் தலைவனுக்கு மணமுடிக்க முடிவெடுக்கிறாள்.

குறிப்பு – கதையாகக் கோர்க்கப்பட்ட பாடல்களின் வரிசை, பாடல் எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது:

பெண்களே நான் வேட்டையாடிய மான்கள் அம்புகளுடன் இப்பக்கம் வந்ததைப் பார்த்தீர்களா? (1)

வேட்டையாடிய விலங்கைக் கண்டீர்களா என்று கேட்கச் சென்ற இடத்தில் தலைவி என் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டுவிட்டாள் (9)

தினைப்புனம் காக்கும் தலைவியின் அழகில் என்மனம் கட்டுண்டு கிடக்கிறது என்று தலைவன் தோழனிடம் கூறுகிறான் (30)

காதலியின் முலைகள் மேல் கொண்ட விருப்பினால் தன் நலனும் பெருமையும் அழிந்துவிட்டதாகத் தலைவன் கூறுகிறான் (23)

தலைவியைக் கண்ட தோழன் இவளை விட்டு எவ்வாறு தலைவன் பிரிந்து வந்தான்? அது அவனது உள்ளத்தின் உறுதியைக் காட்டுகிறதோ என எண்ணி வியக்கிறான் (28)

தலைவியைக் காண்பதே தன்னை வாட்டுவதாகத் தனது ஆற்றாமையைத் தோழியிடம் தலைவன் உரைத்தல் (19)

பிறர் அருமை அறியாத தனது அண்ணன்களைப் போன்று தலைவிக்கும் எனது வருத்தம் புரியவில்லை என்கிறான் தலைவன் (24)

நான் தலைவியைக் குறித்து நன்கே அறிவேன் என்று தலைவன் கூறுவது (17)

தலைவன் தோழியிடம் நயமாகப் பேசி தனக்கு ஆதரவாக மனமாற்றம் கொண்டுவர விரும்புதல் (8)

தலைவன் தரும் அன்பளிப்பை ஏற்க இயலாமல் மறுக்க வேண்டிய சூழ்நிலையை தோழி விளக்குகிறாள் (20)

தலைவன் தலைவிக்குத் தரும் அன்பளிப்பைத் தோழி ஏற்றுக் கொண்டு தலைவியிடம் சேர்ப்பிக்க உதவுகிறாள் (21)

உன்னால் தன் விருப்பம் நிறைவுறும் என்று எண்ணி உனக்கு அன்பளிப்புகளுடன் வருகிறான் தலைவன் என்கிறாள் தோழி (31)

வீரம் மிக்க உன் அண்ணன்கள் அம்பினால் மற்றவரைக் கொல்வர், ஆனால் நீ உன் கண்களால் என்னைக் கொல்கிறாய் (22)

தலைவனே உன் உறவால் தலைவியின் இயல்பு மாறியதைக் கண்டு இனி அவளைத் தினைப்புனம் காக்க அனுப்பாமல் வீட்டில் இருத்திவிடுவார்கள் (3)

தலைவியே அறுவடை நெருங்கும் அளவு பயிர் வளர்ந்துவிட்டது, இனி தலைவனைப் பார்க்க இங்கு வரும் வாய்ப்பு இல்லாது போகும் எனத் தோழி தலைவியிடம் கூறுகிறாள் (5)

பகலில் தலைவியை நாடி வந்த தலைவனைக் கண்டு தலைவியை விரைவில் மணம் புரிந்து கொள்ளச் சொல்வது (18)

பலாமரக் காட்டருகில், காட்டாறு பாயும் சோலைக்கருகில் உள்ள மணல் வெளியில் நானும் தலைவியும் பகலில் விளையாடுவோம் என்று தோழி தலைவனுக்குக் குறிப்பு கொடுக்கிறாள் (29)

அழகிய என் தலைவியை என்னால் எங்கும் காண இயலவில்லையே (4)

தலைவனே இரவில் வருவதால் உனக்கு ஏற்படக்கூடிய இடையூற்றுக்குத் தலைவி வருந்துவாள் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள் (6)

தலைவனே நீ இரவில் நீ வருவதை என் தலைவியால் தாங்கிக் கொள்ள இயலாது என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள் (7)

இரவில் மதம் கொண்ட யானைகள் உலாவும் வழியாகத் தலைவியைக் காண வரவேண்டாம் (11)

பாம்புகளும் யானைகளும் நிறைந்த காட்டு வழியின் வழியே இரவில் தலைவிக் காண வரவேண்டாம் என்று தோழி கூறுகிறாள் (13)

தலைவனே தேவர்கள் உலாவும் இடங்கள் வழியாகத் தலைவியைக் காண வருவதைக் கைவிடுங்கள் (10)

உங்கள் நலனுக்கா தலைவி வருந்தும்படி அவளை இரவில் காண வரவேண்டாம் (25)

உங்கள் நலனுக்கா தலைவி வருந்தும்படி அவளை இரவில் காண வரவேண்டாம் (26)

செவிலியிடம் வெறியாடலைத் தவிர்க்கும்படியும், தலைவி அவளது காதலனை மணக்க விரும்புகிறாள் என்றும் தோழி அறிவுறுத்துகிறாள்(12)

தலைவியின் நெஞ்சத்தைக் கவர்ந்தவன் ஒருவன் உள்ளான் செவிலித்தாயே! (2)

தினைப்புனம் காக்கையில் மதங்கொண்ட யானையிடம் இருந்து காப்பாற்றிய தலைவனைத்தான் தலைவி மணப்பாள் என்று தோழி செவிலிக்குக் கூறுகிறாள் (14)

தலைவிக்காக நீ வருவதைத் தாய் அறிந்து கொண்டாள், இனி காவல் மிகுதியாகும் எனவே தலைவியை விரைவில் மணம் முடிப்பாயாக (27)

தலைவியை அடைய முடியாத ஆற்றாமையால் மடல் ஊரத் துணிந்த தலைவன் அதைத் தோழிக்குத் தெரிவிக்கிறான் (16)

தலைவனின் கோரிக்கையை ஏற்றுத் தலைவியை அவனுக்கு மணமுடிக்குமாறு நற்றாய் தலைவியின் தந்தைக்கும் தமையனுக்கும் அறிவுறுத்துகிறாள் (15)

_____________________________________________________

உதவிய தளங்கள்:

1. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது

மூலமும் உரையும் – மகாவித்வான் ரா. ராகவையங்கார்

செந்தமிழ்ப் பிரசுரம், 1927 (இரண்டாம் பதிப்பு)

https://upload.wikimedia.org/wikipedia/commons/4/4e/திணைமாலை_நூற்றைம்பது.pdf

https://ta.wikisource.org/s/31hg

2. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது

விளக்க உரை – தமிழ்ப் புலவர் திரு. அ. நடராச பிள்ளை

http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00ind.htm

http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00vur.htm

3. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது

உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.

https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/thinaimaalai150.html

4. திணைமாலை நூற்றைம்பது – கணிமேதாவியார்

தமிழ் இலக்கியத் தொடரடைவு, முனைவர்.ப.பாண்டியராஜா

http://tamilconcordance.in/TABLE-THINAIMALAI150-TEXT.html

—–


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அன்பின் ஐந்திணை”

அதிகம் படித்தது