மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அமெரிக்கர்கள் இனக்கலப்பு உறவுகளுக்கு எதிரானவர்களா?

தேமொழி

May 7, 2016

interracial marriage 7கொலம்பஸ் மேற்குலகில் காலடி வைத்ததற்குப் பிறகு உள்ள குறுகிய வெகு சில நூற்றாண்டுகளே கொண்ட அமெரிக்க வரலாற்றை ஆராய்ந்தால், அதில்  இனஅழிப்புகள், இனபேதங்கள் அடிப்படையிலான வன்முறைகள், அமெரிக்கப் பழங்குடியினரைக் கொன்றுகுவித்தது, கறுப்பின மக்களை அடிமைப்படுத்தியிருந்தது என்று தற்கால உலகம் விரும்பாத பல நடவடிக்கைகள் நிறைந்ததாக இருக்கும். இன்றும்கூட ஆங்காங்கு பல துயர்களையும், சிலமுறை காவல்துறையின் பொறுப்பற்ற நடவடிக்கையில் அகப்பட்டு உயிரை விடுவதையும் கறுப்பின அமெரிக்கர்கள் எதிர்கொள்கின்றனர். இருப்பினும், அவர்களது நீதிக்காகப் போராடும் கூட்டத்தினரும் எண்ணிக்கையில் அதிகரித்துத்தான் வருகின்றனர். சட்டத்தை மதிக்கும் அமெரிக்க மண்ணில் இனபேத நடவடிக்கைகளால் அநீதி இழைக்கப்படுவதைத் தடுக்க சட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மக்களின் மனப்பான்மை உண்மையில் மாறிவிட்டதா?

அமெரிக்க வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால், ஆங்கிலேயர் விர்ஜீனியாவில் தங்கள் ஆட்சியை நிலைநாட்ட முற்பட்ட 1600 களிலேயே அமெரிக்கப் பழங்குடிப் பெண் ‘பாக்கஹாண்டஸ்’ என்பவரும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘ஜான் ரால்ஃப்’ (Pocahontas and John Rolfe) என்பவரும் திருமணம் செய்து கொண்ட நிகழ்வும் அமெரிக்க வரலாற்றின் ஒரு பகுதியே. இடைப்பட்ட காலங்களில் இனக்கலப்பு உறவில் கறுப்பின தந்தைக்கோ, அல்லது கறுப்பின தாய்க்கோ பிறந்த குழந்தைகளுக்கு சுதந்திரம் கிடையாது, அவர்களும் அடிமைகளே என்ற நடைமுறையும் இருந்தது. இதற்கு அடிப்படைக் காரணங்கள் இரண்டு, ஒன்று இனக்கலப்பைத் தவிர்த்து தூய வெள்ளையின மேன்மையைக் காப்பாற்றும் நோக்கம். மற்றொன்று, அடிமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எண்ணத்தில் மறைமுகமாக இனக்கலப்பையும் எதிர்க்கும் நடவடிக்கை, அதாவது ஒரே கல்லில் இரண்டு மாங்காய். தனது உறவின் விளைவால் தனது குழந்தை அடிமையாகும் என்பதை, கறுப்பின அடிமைகளுடன் உறவு கொள்ள விரும்பும் வெள்ளையர் தவிர்த்துவிடுவார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பு. இனக்கலப்பு உறவுகளைத் தடை செய்யும் சட்டங்களும் போடப்பட்டிருந்தும், அவற்றை அனைத்து மாநிலங்களும் சட்டமாக வைத்திருந்தாலும், அமெரிக்க அரசியல் சாசனத்திற்கு அவை எதிரானவை என்று சென்ற நூற்றாண்டில், 1967 ஆம் ஆண்டில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அறிவித்து விட்டிருந்தது. அதன்பிறகு மாநிலச் சட்டங்கள் யாவும் செல்லுபடியாகாத, அமல்படுத்தமுடியாத வெற்றுச் சட்டங்களாக மாறிப்போயின.

interracial-marriage-10தங்கள் அமெரிக்கக் கலாச்சாரத்தை ‘மெல்டிங் பாட்’ (melting pot), வேற்றுமைகள் மறைந்து ஒன்று கலந்துவிடும் நாடு, என்று பெருமையுடன் எண்ணிக்கொள்பவர்கள் அமெரிக்க மக்கள். அதிலும் இந்த நூற்றாண்டில் இருக்கும் புதிய இளைய தலைமுறையினரின் முற்போக்குப் பார்வையில் இருக்கும் அமெரிக்கா ஒரு முற்றிலும் மாறுபட்ட நாடுதான் என்பதை மறுப்பதற்கில்லை. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்தவர் கற்பனையிலும் காண வழியற்று இருந்ததை முறியடித்து ஒரு கறுப்பின மனிதரான ஒபாமாவை அமெரிக்க அதிபராக்கிவிட்டனர். இது போன்ற நடவடிக்கைகளால் இனவேற்றுமை குறித்த அமெரிக்க மக்களின் மனப்பான்மை மாறிவிட்டதா என்ற கேள்வியை மறுபரிசீலனை செய்யும் அளவிற்குச் சென்றவார சமூக வலைத்தள நடவடிக்கைகள் சில தலைகாட்டின.

அமெரிக்க ‘கேப்’ (GAP, Inc) நிறுவனமும், அதன் துணை ஆடை விற்பனை அங்காடிகளான ‘ஓல்ட் நேவி’ (OLD NAVY), மற்றும் ‘பனானா ரிபப்ளிக்’ (Banana Republic) ஆகியவையும் தற்கால அமெரிக்காவையும், அதன் பல்லின (diversity) மக்களையும் முன்னிறுத்தி விளம்பரங்களை வெளியிடுவதில் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த விளம்பரங்களில் வெள்ளையின மக்களுடன் கறுப்பின மக்களும் காட்சிப்படுத்தப்படுவது வழக்கம். சென்ற வார இறுதியில் ஓல்ட் நேவி (ஏப்ரல் 29, 2016) தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நன்றி கூறும் வகையில் விற்பனையில் 30% தள்ளுபடி அளிப்பதாக அறிவித்து தனது விளம்பரம் ஒன்றை ‘டிவிட்டர்’ சமூக வலைத்தளம் (twitter.com) வழியே வெளியிட்டது. அதில் இனக்கலப்பு உறவு கொண்ட இணையர், ஒரு வெள்ளையின ஆணும், கறுப்பின பெண்ணும் தங்கள் மகனுடன் இருப்பதாக, ஆண் தனது மகனைத் தோளில் சுமந்து, தனது துணைவியை அணைத்த வண்ணம் காட்சி தரும் ஒரு சிறிய மகிழ்ச்சியான குடும்பத்தைச் சித்தரிக்கும் படத்தை வெளியிட்டது.

interracial marriage 1ஆனால், அதைப் பார்த்த சமூகவலைத்தள உறுப்பினர்களில் சிலர் மகிழ்ச்சி அடைந்ததாகத் தெரியவில்லை. இனக்கலப்பைச் சித்தரிக்கும் படம் அவர்களுக்கு எரிச்சல் மூட்டியது. ஓல்ட் நேவி முற்றிலும் எதிர்பாராத வண்ணம் அதைச் சாடித் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்யத் துவங்கினர். ஓல்ட் நேவி இனக்கலப்பைச் ‘திணிப்பதாக’ அவர்கள் குற்றம் சாட்டினர். ‘மிசெஜினேஷன்’ (Miscegenation) என்று இனங்களைக் கலக்கும் சொல் பரவலாக பயன்படுத்தப்பட்டது. அத்துடன் ‘வெள்ளையினப் படுகொலை’ (white genocide), இயற்கைக்கு மாறான ‘மிருகத்தனமான’ (bestiality) உறவு ஆகியவற்றை ஓல்ட் நேவி ஆதரிப்பதாகக் கூறித் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தினர். மேலும், இனி ஓல்ட் நேவி கடையை புறக்கணிக்கப் போவதாகவும் மிரட்டல்களும் வெளியிடப்பட்டன.   இதற்கு, ஓல்ட் நேவி நிறுவனம் மறுமொழியைத் தவிர்த்து அமைதி காத்தது. பொதுவாக நிறுவனங்கள் இது போன்ற சூழல்களில் அமைதி காத்து எதிர்ப்பை முறியடிக்க முனைவது வழக்கம், இடைப்பட்ட நேரத்தில் மாறுபட்ட கோணம் கொண்டவர்கள் களத்தில் குதித்து வெறுப்பை வெளிப்படுத்துபவர்களைக் கண்டிப்பதும், நிறுவனத்தின் ஆதரவாளர்கள் எதிர் பதிவுகளை வெளியிடத் துவங்குவதும் பொதுவான நடைமுறைகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது.

interracial marriage 2இம்முறையும் அவ்வாறே நேர்ந்தது. ‘மிசெஜினேஷன்’ என்பது வழக்கத்தில் இருந்து ஒழிந்துபோன ஒரு சொல்லாக இருந்ததால் இக்கால மக்களுக்கு அது புதியதாக இருந்தது எனப் பலர் குறிப்பிட்டிருந்தனர். இச்சொல் எதிர்மறையான பொருளாக இனக்கலப்பு உறவை மறுக்கும் நோக்கத்தின் அடிப்படைக் காரணமாக இது கைவிடப்பட்டு வழக்கொழிந்துவிட்டது. அதற்குப் பதிலாக ‘இன்டெர் ரேசியல் மேரேஜ்’ , ‘மிக்செட் ரேஸ்’ (Interracial marriage, mixed race) போன்ற எதிர்மறைக் கருத்தை அறிவிக்காத சொற்களே தற்காலத்தில் வழக்கத்தில் உள்ளன. ஆனாலும், #Miscegenation என்ற ஹேஷ்டேக் குறியுடன் மிசெஜினேஷன் எதிர்ப்பு டிவிட்டரில் பரவத் தொடங்கியது. இனக்கலப்பு உறவுகளை ஆதரிப்பவர்கள் போட்டியாக ‘லவ் வின்ஸ்’ (#LoveWins) என்ற சொற்றொடருடன் அவர்களை எதிர்த்து மறுப்பு விடுத்தனர். அவர்களில் பலர் தங்கள் கலப்பினக் குடும்பப் படங்களை பெருமையுடன் பகிர்ந்து ‘இனப்பற்றுத் தீவிரவாதி’ (racist)-களின் நோக்கத்தை முறியடித்தனர். இந்த இணையவெளிப் போராட்டம் துவங்கி நடந்து கொண்டிருக்கும் இரண்டு நாட்களுக்குள் (மே 1, 2016 அன்று) புகழ் பெற்ற ‘மேசி’ (Macy) ஆடை விற்பனை நிறுவனமும் இதுபோன்று இனக்கலப்பு திருமணத்தை ஆதரிக்கும் படத்துடன் விளம்பரம் ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டது. அதில் ஒரு வெள்ளையின மணமகனும், கறுப்பின மணமகளும் மகிழ்ச்சியுடன் காட்சிதர, அவர்களுக்கு திருமணப் பரிசளிக்க மேசியில் பரிசு வாங்கக் கோரிக்கை வைத்தது அந்த விளம்பரம். இனப்பற்றுத் தீவிரவாதிகள் மேசி நிறுவனத்தையும் புறக்கணிக்கப் போவதாக மிரட்டத் துவங்கினர்.

வெள்ளையினம் உயர்வு என்ற கருத்து மாறாவிடினும், இனக்கலப்பைக் கண்டு கொதிப்படையும் மனநிலையைக் கொண்டவர்களாக இக்கால சமூகவலைத் தளங்களில் நேரம் செலவிடும் அமெரிக்க இளைய தலைமுறையினர் என்ற கேள்வி இந்த நிகழ்வுகளைப் பார்ப்பவருக்குத் தோன்றும். இனபேதம் காட்டுபவர்கள், மற்ற இனத்தை அலட்சியப்படுத்தும் வெள்ளையின மக்கள் என்றுமே உள்ளனர் என்பது உண்மையாயினும், இப்போக்கு குறையத் துவங்கிவிட்டது என்பதும் உண்மையே. இதற்குத் தரவுகளும், மாறிவரும் நிகழ்வுகளுமே சான்றுகள். மக்களின் மாறிவரும் இந்த மனப்போக்கினையே அமெரிக்க அரசின் சென்சஸ் மக்கட்தொகைக் கணக்கெடுப்பு (census.gov) நிறுவனத்தின் புள்ளிவிவரங்களும், ‘காலப் ஆய்வு நிறுவனம்’ (Gallup Organization), மற்றும் ‘பியூ ஆய்வு மையம்’ (Pew Research Center) ஆகியவற்றின் ஆய்வுகளும் கணக்கெடுப்புகளும் காட்டுகின்றன.

அமெரிக்க அரசின் சென்சஸ் மக்கட்தொகைக் கணக்கெடுப்பு:

அமெரிக்க அரசு ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் மக்கட்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவது வழக்கம். சமீபத்திய 2010 ஆண்டின் மக்கட்தொகைக் புள்ளிவிவர அறிக்கை தனக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இனப் பின்னணியோ, பல்லினப் பின்னணியோ இருப்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டவர்களின் விழுக்காடு, தங்களை ஓரினத்தின் கீழ் வகைப்படுத்திக் கொண்டவர்களைவிட விரைவில் அதிகரிப்பதைக் காட்டியுள்ளது. இவ்வாறு இனக்கலப்பு உள்ளவர்கள் என்றுக் குறிப்பிட்டுக் கொண்டவர்கள் 9 மில்லியன் மக்கள். அதாவது, அதற்கு முந்தைய பத்தாண்டு மக்கட்தொகைக் கணக்கெடுப்பு நிகழ்ந்த 2000 ஆண்டில் இருந்து 2010 இல் இவர்களின் எண்ணிக்கை 32% அதிகரித்துள்ளது என்கிறது தரவுகள். அதே கால கட்டத்தில், தங்களை ஏதோ ஓரினம் மட்டுமே என்று குறிப்பிட்டவர்களின் எண்ணிக்கை 9.2% விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளது. இனக்கலப்பு உறவுகள் ஏற்படாமல் 32% வளர்ச்சி நிகழ வாய்ப்பில்லை.

குறிப்பிடப்பட்ட 2000 ஆவது ஆண்டிற்கு முன்னர் இந்த வளர்ச்சியை ஒப்பிட நமக்கு வாய்ப்பில்லை. மாறிவரும் மக்களின் பின்னணியைக் கவனித்து, அதனை சரியாகக் கணக்கெடுக்கும் எண்ணத்தில் 2000 ஆம் ஆண்டுதான் மக்கட்தொகைக் கணக்கெடுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட இனப் பின்னணியைக் கொண்டவர்களைக் கணக்கிடும் முயற்சியும் எடுக்கப்பட்டது. எனவே, பத்தாண்டுகளில் ஏற்பட்ட மாறுதலைத் தவிர, மேற்கொண்டு ஒப்பிட்டு ஆராயத் தேவையான தரவுகளும் கிடையாது. இனக்கலப்பில் எந்தெந்த இனங்களுக்குள் அதிகக் கலப்பு நிகழ்கிறது என்பதும் அமெரிக்க அரசு அறிய விரும்பும் தகவல்களில் ஒன்று. வெள்ளையின கறுப்பினக் கலப்புதான் முன்னணியில் உள்ளது, இது 134% (ஒரு மில்லியன் மக்களுக்கும் மேல்) அதிகரித்துள்ளது. அடுத்து வருவது வெள்ளையின ஆசிய இனக்கலப்பு, இது 87% அதிகரித்துள்ளது என்பது மக்கட்தொகைக் கணக்கெடுப்பு வழி தெரிய வருகிறது.

அமெரிக்காவின் பெரும்பான்மையான மாநிலங்களிலுமே இனக்கலப்பு திருமணப் பதிவு எண்ணிக்கைகளில் அதிகரித்தாலும் நியூயார்க், டெக்சாஸ், கலிபோர்னியா மாநிலங்கள் இனக்கலப்பு உறவுகளில் முன்னணியில் உள்ளன. டெக்சாஸ் போன்ற அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் வெள்ளையின – கறுப்பினக் கலப்போ, அல்லது வெள்ளையின – மெக்சிகோ ஹிஸ்பானிய இனக் கலப்போ அதிகரித்திருக்க, அமெரிக்க மேற்கு மாநிலங்களில், குறிப்பாக கலிஃபோர்னியாவில் வெள்ளையின – ஆசிய இன கலப்பின மக்கள் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளனர்.

காலப் ஆய்வு நிறுவன ஆய்வறிக்கை:

interracial marriage 3காலப் ஆய்வு நிறுவனம் 2013 ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையொன்று 87% அமெரிக்க மக்கள் வெள்ளையின-கறுப்பின இனக்கலப்பு உறவுகளை ஆதரிப்பதாகவே காட்டுகிறது. இதே காலப் நிறுவனம் முதன்முதல் இந்த ஆய்வை முன்னெடுத்த 1958 ஆம் ஆண்டில் வெறும் 4% அமெரிக்க மக்கள்தான் வெள்ளையின-கறுப்பின இனக்கலப்பு உறவுகளை ஆதரித்திருக்கிறார்கள் என்ற தகவல், ஒரு அரைநூற்றாண்டில் அமெரிக்க மக்களின் மனப்பான்மை எந்த அளவு மாறிவிட்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இவர்களில் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களில் 96% இனக்கலப்பு உறவுகளை ஆதரிப்பதும், முதியவர்கள் இவர்கள் அளவிற்கு ஆதரவளிப்பதில்லை (65 வயதுக்கு மேற்பட்டோர் தரும் ஆதரவு 70% மட்டுமே) எனத் தெரிய வந்துள்ளது. அத்துடன், அமெரிக்க மேற்குக் கடற்கரையோர மக்கள் இனக்கலப்பு உறவுகளுக்கு அதிக ஆதரவு (93%) தரும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

பியூ ஆய்வு மையத்தின் ஆய்வறிக்கை:

interracial marriage 4‘பியூ ஆய்வு மையம்’ (Pew Research Center) தரும் தகவலின்படி இனக்கலப்பு உறவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் 11% மட்டுமே. இனக்கலப்பு உறவுகள் நல்லதே என்று கருதும் பிரிவினருக்கும் (43%), இதைப்பற்றி எந்தக் கருத்தும் அற்ற பிரிவினருக்கும் (44%) இடையே அதிக வேறுபாடில்லை. மேலும் இந்த இரு பிரிவினரின் கூட்டுத்தொகையான 87% என்பதும் காலப் ஆய்வு நிறுவன ஆய்வறிக்கையின் 87% என்ற தகவலை ஒட்டியே அமைந்துள்ளது. பியூ ஆய்வு மைய அறிக்கையின்படி 2008 ஆண்டு நிகழ்ந்த திருமணங்களில் சுமார் 15% திருமணங்கள் இனக்கலப்பு மணங்கள், அவற்றிலும் அமெரிக்க மேற்கு மாநிலங்களில் இந்த இனக்கலப்பு திருமணங்கள் 20% (அதாவது ஐந்தில் ஒரு திருமணம்) வரை நிகழ்வதும் தெரிய வருகிறது.

வெள்ளையினத்தாய் – கறுப்பின தந்தை கொண்ட ஒபாமா, மேலும் இரண்டிற்கும் மேற்பட்ட இனக்கலப்பு கொண்ட கால்ஃப் விளையாட்டு வீரர் டைகர் வுட்ஸ், வெள்ளையின-ஆசிய இனக்கலப்பு என்றாலே முதலில் நினைவிற்கு வரும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பக் அவரது மனைவி பிரிசில்லா சென் போன்றவர்கள் அமெரிக்கர்களுக்கு இக்காலத்தில் சர்வசாதாரணமாகிப் போனாலும், இந்திய அமெரிக்கர்களும் இவர்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் கிடையாது. சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளவர் எனக் கருதப்பட்ட நீதிபதி சீனிவாசன், தெற்கு கரோலினா மாநில ஆளுநர் நிக்கி ஹேலி, கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனெரலாகப் பணியாற்றும் வழக்கறிஞர் கமலா ஹாரிஸ் ஆகியோர், அதாவது புகழ் பெற்ற வகையில் அறியப்படும் சில இந்திய அமெரிக்கர்களின் வாழ்க்கைத் துணைவர்களும் வேற்றினத்தைச் சேர்ந்தவர்களே.

interracial marriage 5ஹஃபிங்க்டன் போஸ்ட் (huffingtonpost.com) செய்தியாளர், அமெரிக்க மக்களின் மனப்பான்மை இவ்வாறிருக்க இனக்கலப்பு உறவுகளை வெறுக்கும் ஒருசிலர் இவ்வாறு வெளிப்படையாக இணையச் சமூகவலைத்தளங்களின் வழி தங்கள் வெறுப்பை வெளிப்படையாகக் காட்டுவதற்கு தற்பொழுது குடியரசுக் கட்சியின் அமெரிக்க அதிபர் தேர்தலின் வேட்பாளரான டானால்ட் ட்ரம்ப் போன்ற முன்மாதிரிகள் அவ்வாறு பொறுப்பின்றி பேசுவது காரணம் என்றும், அவரது பேச்சுக்களின் தாக்கத்தின் காரணமாக இவ்வாறு வெறுப்பவர்களும் தங்கள் வெறுப்பை வெளிப்படையாகக் காட்டுவதில் தவறில்லை என்ற மனப்பான்மையில் சொல்லியிருக்கிறார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், உண்மை இதற்கு மாறானது என்றே தோன்றுகிறது. அமெரிக்க நிறுவனங்கள் கறுப்பின மக்களை விளம்பரங்களில் காட்டுவதை கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே செய்து வருகின்றன. இந்தப் போக்கைத் துவங்கி வைத்தது பெப்சி நிறுவனம். இரண்டாண்டுகளுக்கு முன்னர் இனக்கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களையும், ‘ஓரினச் சேர்க்கை’ இணைகளையும்கூட தங்கள் விளம்பரத்தில் காட்டி அமெரிக்க தற்கால மக்களின் நடைமுறையைப் பிரதிபலிக்க சில அமெரிக்க நிறுவனங்கள் முயன்று வருகின்றன.

குறிப்பாக இரண்டாண்டுகளுக்கு முன்னர் ‘ஜெனரல் மில்ஸ்’ (General Mills) நிறுவனம் தனது ‘சீரியோஸ் காலை உணவு’ (Cheerios, breakfast cereal) விளம்பரத்திற்கு இனக்கலப்பு உறவுகொண்ட இணையர்களாக வெள்ளையின அம்மா, கறுப்பின அப்பா, அவர்களது மகளாகச் சிறுமி என்று ஒரு குடும்பத்தை தனது விளம்பரங்களில் அறிமுகப்படுத்தியது. அவற்றில் ஒரு விளம்பரம் புகழ்பெற்ற தேசிய கால்பந்து ‘சூப்பர் பவுல்’ (Super Bowl) விளம்பரமாகவும் வந்து அது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. சிறுமிக்கு ஒரு சகோதரன் வரப்போவதை, தங்களுக்கு அடுத்து மகன் ஒருவன் பிறக்கப்போவதை மறைமுகமாக அந்த அப்பா சிறுமிக்கு தெரியப்படுத்த முயலும்பொழுது, விவரம் புரியாத அச்சிறுமி, அத்துடன் தனக்கு ஒரு நாய்க்குட்டியும் வேண்டும் என்று தந்தையிடம் ஒப்பந்த உடன்படிக்கை போடுவது வேடிக்கையாகவும், யாருக்கும் புன்முறுவலையும் வரச் செய்வதாகவும் இருக்கும் ஒரு காட்சி. இந்தக் காணொளி யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட பொழுது, இப்பொழுது ஓல்ட் நேவி எதிர்கொண்ட எதிர்ப்பு போலவே, வெறுப்பைக் காட்டும் கருத்துகள் குவிந்தன. வேறு வழியில்லாமல் ஜெனரல் மில்ஸ் நிறுவனம் காணொளிக்கு கருத்துரைக்கும் வாய்ப்பை முடக்கிவைக்க நேர்ந்தது. எனவே, இது ‘ட்ரம்ப் விளைவு’ அல்ல என்றே சொல்லலாம். அத்துடன் தரவுகள் தரும் தகவலின்படி இனக்கலப்பு உறவுகளுக்கு வெறுப்பைக் காட்டுபவர்களும் பெரும்பான்மை மக்கள் அல்ல என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

interracial-marriage-11இதுபோன்ற வெறுப்பை வெளிப்படுத்தும் ஒரு முகமூடிக் கூட்டம் இணையவெளி சமூக வலைத்தளங்களில் தங்கள் கைவரிசையைக் காட்டிய வண்ணம் இருப்பது இப்பொழுதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது. இவர்களை முகமூடிக் கூட்டம் என்பதே சரி. இணையம் வழியாக மறைமுகமாகச் செய்யலாம் என்ற வாய்ப்பு இவர்களுக்குக் கொடுக்கும் துணிச்சல் மட்டுமே இதற்குக் காரணம். இது போன்ற வெறுப்பை உமிழ்பவர்கள் பெரும்பாலும் தங்கள் உண்மை அடையாளத்துடனும் செய்வதில்லை. அவ்வாறு செய்தால் அவர்களுக்கு வாழும் சூழ்நிலையில் எதிர்ப்பும், சிலருக்கு வாழ்வாதாரமான வேலையும்கூட பறிபோகும் நிலை ஏற்படும். எனவே, புனைப்பெயர் முகமூடியின் பின் ஒளிந்து கொண்டு, சமூக வலைத்தளங்களில் பொய்க்கணக்கு உருவாக்கி, தங்கள் உண்மைத் தோற்றத்தை வெளிப்படுத்தாது ஏதேனும் பொய் உருவப்படத்துடன், கபட உள்ளத்துடன், தங்களது கறைபடிந்த மனத்தின் எண்ணங்களை அரங்கேற்றுவார்கள் இத்தகைய மக்கள்.

இத்தகைய மனப்பான்மை ‘start airing dirty laundry in public’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும். ஓல்ட் நேவி விளம்பரத்தை எதிர்த்தவர்களின் பெயரையும் படத்தையும் பார்த்தாலே போதும் அவர்கள் கையாளும் முறை விளங்கும். குறிப்பிடத்தக்க வகையில் கண்டனம் தெரிவித்தவர்களில் ஒரு சிலரின் அடையாளங்கள், கல்ச்சுரல் காம்பாட், ஹைட்ரா, ஓமர், எம், ட்ரம்ப் ரையோட்டர், டிஜே, நார்டிக் நேஷன் என்பது போன்ற பொதுப்படையான புனைப்பெயர்களாகவே அமைந்திருந்தன. இத்தகையோரை அணுகவேண்டிய சரியான அணுகுமுறை இவர்களைப் புறக்கணிப்பது ஒன்றுதான். எதிர்ப்பை எதிர்கொள்ளும் நிறுவனங்கள் இத்தகைய எதிர்ப்புகளைச் சரியாகக் கையாள்வதாகத்தான் தோன்றுகிறது. காலத்திற்கு ஒத்துவராத இது போன்ற ஒரு பிற்போக்கு கூட்டம் கத்தும் வரை கத்திவிட்டு ஓயட்டும் என்று விட்டுவிடத்தான் வேண்டும். இனக்கலப்பு உறவுகளை எதிர்க்கும் போக்கினைக் கொண்டவர்களைக் கண்டு அதிர்ச்சியுறும் அதே நேரத்தில், அவர்களைக் கண்டிக்க கிளம்பிய கூட்டத்தையும் நாம் கணக்கில் கொள்ளத் தவறக்கூடாது.

_____________________________________

சான்றுகள்:

(1)     Ad Sparks Anti-Miscegenation Backlash. In 2016; Walaa Chahine; 05/02/2016; http://www.huffingtonpost.com/walaa-chahine/old-navy-attacked-for-mis_1_b_9818188.html

(2)     Racist Trolls Tear Apart Macy’s Interracial Ad Less Than One Week After Old Navy Debacle; Zak Cheney-Rice; 05/03/2016; http://mic.com/articles/142482/after-old-navy-debacle-macy-s-interracial-ad-sets-off-racist-trolls-on-twitter-once-again#.1W1Id3FBY

(3)     In U.S., 87% Approve of Black-White Marriage, vs. 4% in 1958 – Ninety-six percent of blacks, 84% of whites approve; Frank Newport; 07/25/2013; Gallup-Report; http://www.gallup.com/poll/163697/approve-marriage-blacks-whites.aspx

(4)     The Rise of Intermarriage Rates, Characteristics Vary by Race and Gender; Wendy Wang; 02/16/2012; Pew Research Center Social & Demographic Trends-Report; http://www.pewsocialtrends.org/files/2012/02/SDT-Intermarriage-II.pdf

(5)     2010 Census Shows Multiple-Race Population Grew Faster Than Single-Race Population; Census-Report: CB12-182; 09/27/2012; https://www.census.gov/newsroom/releases/archives/race/cb12-182.html

(6)     Miscegenation;International Encyclopedia of the Social Sciences; 2008; http://www.encyclopedia.com/topic/Miscegenation.aspx

(7)     Interracial marriage in the United States, https://en.wikipedia.org/wiki/Interracial_marriage_in_the_United_States

(8)     Video – Cheerios’ first ever Super Bowl ad featuring interracial family Mail Online: https://youtu.be/5qkJHgkUzDA

(9)     Video – Cheerios’ Just Checking: https://youtu.be/lYHoakrH0o0


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமெரிக்கர்கள் இனக்கலப்பு உறவுகளுக்கு எதிரானவர்களா?”

அதிகம் படித்தது