மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அமெரிக்க அதிபர் பதவி, பெண்களுக்கு ஒரு தகர்க்கவியலாத கண்ணாடிக்கூரை

தேமொழி

Nov 12, 2016

siragu-american-election1

நடந்து முடிந்த (நவம்பர் 8, 2016) அமெரிக்கத் தேர்தலில், அதிபர் பதவிக்கு ஹில்லாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டு, அவரது வெற்றியின் மூலம் ஆண்களே 240 ஆண்டுகளாகத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் பொறுப்பை ஏற்று வந்த நடைமுறையில் ஒரு மாறுதல் வரும் என மிகவும் எதிர் பார்க்கப்பட்டது. அமெரிக்க வரலாற்றிலும் இந்த அதிபர் தேர்தலில்தான் ஒரு பெண்மணி பெரிய கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பும் முதல் முறையாகக் கிடைத்தது. பற்பல திடீர் திருப்பங்கள், ஒவ்வொரு நாளும் வேட்பாளர்கள் குறித்து மாறி மாறிக் கிளம்பிய அவதூறுகள் என்று பரபரப்பாக நகர்ந்தது தேர்தல் பிரச்சாரம். வாக்கு எண்ணிக்கை நடந்த நாளிலும் குறைந்த வாக்குவித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கும் போகலாம் என்ற நிலையில் ஒரு நீண்ட இரவாக அந்நாள் அலைக்கழித்தது. இறுதியில் அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக, மீண்டும் ஒரு ஆணையே மக்கள் வெற்றிபெறச் செய்ததால் ‘டானல்ட் டிரம்ப்’ அவர்கள் அடுத்த அதிபராக அறிவிக்கப்பட்டதும், இந்த முறை ‘மேடம் பிரசிடெண்ட்’ என்ற மாற்றம் வரும் என்று கொண்டிருந்த நம்பிக்கைக்கு முடிவு கட்டப்பட்டது.

siragu-america-election7

தனது போட்டியாளர், குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டானல்ட் டிரம்ப்பை விட சுமார் மூன்று இலட்சம் (3,37,636 – செய்தி கிடைத்த நேரம் வரை) வாக்குகளை அதிகம் பெற்றார் ஹில்லாரி கிளிண்டன். அவருக்கு ஆதரவாக வாக்களித்த இந்த அதிகப்படி வாக்குகளை மக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுக்காட்ட விரும்பினால், இது புளோரிடா மாநிலத்தின் டாம்ப்பா நகரில் (Tampa, Florida) வாழும் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஹில்லாரி கிளிண்டனுக்கு வாக்களிப்பது போன்றது. முன்னர் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட்ட அல் கோர் எதிர்கொண்டது போலவே, நாட்டுமக்களால் அதிகளவிலான பெரும்பான்மை மக்கள் வாக்குகளைப் (popular votes) பெற்றாலும், தேவையான அளவு தேர்தல் குழு வாக்குகளை (electoral votes) பெறாது போனதால் ஹில்லாரி கிளிண்டனின் வெற்றி வாய்ப்பு கைநழுவிப் போனது ஓர் இரங்கத்தக்க நிலையே.

உலகின் மாபெரும் மக்களாட்சி நாடு என்ற பெருமைக்குரியது அமெரிக்கா. பிற நாடுகளின் மக்களாட்சிக்கு ஒரு முன்னுதாரணமாகவும் இருப்பது அமெரிக்கத் தேர்தல் முறையும், தேர்வு செய்யப்பட்டவர்களின் அரசியல் பங்களிப்பும். ஆனால், உலகின் அனைத்துப் பகுதியுடன், 193 நாடுகளின் நிலையுடன் ஒப்பிடும்பொழுது, ஒரு பெண்ணை நாட்டின் அதிபராக்குவதில் அமெரிக்கா மிகவும் பின்தங்கியுள்ளது. ஆசிய ஐரோப்பிய நாடுகளில் நாட்டின் தலைமை பதவியில் பெண்தலைவர்கள் என்பது நடைமுறையாகி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. அது போலவே சட்டசபைகளில், மக்கள் பிரதிநிதிகளாக பல உள்ளநாட்டு அரசுப் பதவிகளைப் பெண்கள் வகிப்பதிலும் அமெரிக்கா மிகவும் பின்தங்கியுள்ளது.

அதிபராக மட்டுமல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எந்த அரசு பதவிகளிலுமே அமெரிக்காவின் நிலை பெருமைப்படும்படி அமையவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. கீழுள்ள புள்ளிவிவரங்கள் அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த எண்கள் “இந்த ஆண்டு” பதவியில் இருப்பவர்கள் குறித்த தகவல்.

(குறிப்பு: இந்த எண்கள் நவம்பர் 2016 இல் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.   ஆதாரப்பூர்வமாக நடுவண் மற்றும் மாநில அரசு நிறுவனங்களோ,   பல்கலைக்கழகம் அல்லது பிற ஆய்வு அமைப்புகளோ, அல்லது செய்தி நிறுவனங்களோ இப்புள்ளிவிவரங்களைச் சேகரித்து, அதிகாரப்பூர்வமாகத் தொகுத்து வெளியிடச் சற்றே காலம் பிடிக்கக்கூடும்)

siragu-america-election5

(I) 2016 – “அமெரிக்க நடுவண் அரசில்” பெண்களின் பிரதிநிதித்துவம்:

அமெரிக்க மக்களவையில் (US-Congress)

19.4% (535 உறுப்பினர்களில் – 104 பெண்கள்)

அமெரிக்க சட்டமன்ற மேலவையில் (US-Senate)

20% (100 உறுப்பினர்களில் – 20 பெண்கள்)

அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் கீழவையில் (US-House of Representatives)

19.3% (435 உறுப்பினர்களில் – 84 பெண்கள்)

மாநிலங்கள் அளவில் ஆளுநர் மற்றும் துணை ஆளுநர்கள் போன்ற அரசின் உயர்பதவிகளில் (Statewide Executives)

24% (312 உறுப்பினர்களில் – 75 பெண்கள்)

***

(II) 2016 – “அமெரிக்க மாநில அரசுகளில்” பெண்களின் பிரதிநிதித்துவம்:

மாநில சட்ட மன்றம் (State Legislature)

24.4% (7383 சட்டமன்ற உறுப்பினர்களில் – 1,805 பெண்கள்)

மாநில சட்டமன்ற மேலவையில் (State Senate)

22.5% (1972 சட்டமன்ற உறுப்பினர்களில் – 443 பெண்கள்)

மாநில சட்ட மன்ற கீழவையில் (State House/Assembly)

25.2% (5411 சட்டமன்ற உறுப்பினர்களில் – 1,362 பெண்கள்)

உள்ளூர் நகராட்சி /மாநகராட்சி தலைவர்கள் (Mayors of Cities and Largest Cities)

30,000க்கும் மேல் மக்கள்தொகை கொண்ட சிறுநகர்களின் நகராட்சி தலைவர்கள்

18.8% (1391 நகராட்சி தலைவர்களில் – 262 பெண்கள்)

100 பெருநகர்களின் மாநகராட்சி தலைவர்கள்

19% (100 மாநகராட்சி தலைவர்களில் – 19 பெண்கள்)

***

siragu-america-election3

நாட்டின் மக்கள்தொகையில் சரிபாதி அளவு பெண்கள் இருப்பினும், மேலுள்ள புள்ளிவிவரங்களின்படி அமெரிக்க அளவில் அனைத்து அரசு பதவிகளுக்குத் தேர்வு செய்யப்படும் பெண்கள் பிரதிநிதிகளைக் கணக்கிட்டால் அவர்கள் பங்களிப்பு 25% கீழாகவே உள்ளது. சரியாக நூறாண்டுகளுக்கு முன்னர் (1917 இல்) முதல் பெண்மணி அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் கீழவையின் உறுப்பினராக (First woman House of representative)தேர்ந்தெடுக்கப்பட்டார். நூறாண்டுகள் கடந்த பின்னரும் அமெரிக்க நடுவண் அரசில் பெண்களின் பிரதிநிதித்துவம் சுமார் 20% ஆகவே உள்ளது என்பதைக் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரம் காட்டுகிறது. அதாவது தேர்ந்தெடுக்கப்படும் ஐவரில் ஒருவரே பெண். அத்துடன், சிறுபான்மை மகளிரின் பங்களிப்பு இன்னமும் கவலை தருவது. சிறுபான்மையினர் எண்ணிக்கை அமெரிக்க மக்கள்தொகையில் 20%.   இருப்பினும், 6% சிறுபான்மை மகளிரே மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர்.

உலகின் பிறநாடுகளுடன் ஒப்பிடும்பொழுது, தரவரிசையில் அமெரிக்கா இருக்கும் இடம் கிட்டத்தட்ட 100 வது இடம் போல (ஒட்டுமொத்தமாக 19% பெண்கள் பங்களிப்புடன்) 97 ஆம் இடத்திற்குத் தாழ்ந்துவிட்டது. மூன்றாவது உலகநாடுகள் எனக் கூறப்படும் உலகநாடுகள் நிலையில் உள்ளது. கென்யா (Kenya – 96 ஆவது இடம்),கிரைகஸ்தான் (Kyrgyzstan – 98 ஆவது இடம்) போன்ற நாடுகளுக்கு இடையே இடம் பிடித்துள்ளது (Inter-Parliamentary Union, 2016). நவீன உலகில், மக்களாட்சி என்பதில் பிறநாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் அமெரிக்காவின் இந்த நிலை, மிகவும் கேவலமான ஒரு நிலை என்பதைப் பார்ப்பவர் யாவருமே புரிந்து கொள்வர்.

மக்களாட்சி அரசில் பெண்களின் பிரதிநிதித்துவத்தின் தேவை மிகவும் முக்கியமானது. ஏனெனில், நாட்டின் சட்டக் கொள்கைகளை வரையறுக்கும் இன்றியமையாத முடிவுகளைப் பெண்கள் அணுகும் முறை வேறுவிதமாக இருப்பதையும், அது ஆண்களின் அணுகுமுறையில் இருந்து மாறுபட்டிருப்பதையும் வரலாறு காட்டுகிறது. கடந்த 1992 இன் அமெரிக்க அரசமைப்பில் மேலவை கீழவை இரு பிரிவுகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் இருமடங்காக மாறிய பொழுது, பெண்களின்சுகாதார மருத்துவத்திட்டங்களுக்கும், பெண்களைப் பாதிக்கும் மார்பகப்புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற ஆய்வுகளுக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டது. பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழிக்க சட்டவரையறை உருவாக்கப்பட்டது. கொலைகளை, குற்றங்களைக் குறைக்கும் நோக்கில் ஆயுதங்களின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கும் விதிகள் உருவாக்கப்பட்டன.

நாட்டின் மிக முக்கியமான குற்றவியல் குறித்தான சட்டங்களில், படைகளில் ஓரின உறவைக் கடைப்பிடிக்கும் மக்களுக்குச் சமத்துவம் அளிப்பதில், துப்பாக்கி கட்டுப்பாட்டில், பணியிடங்களில் பெற்றோருக்கான குடும்ப விடுப்பு முறை திட்டங்களுக்கு பெண் உறுப்பினர்கள் வாக்களித்த முறைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, பெரும்பாலும் இடதுசாரிக் கொள்கைகள் கொண்ட ‘மக்கள்கட்சி’ (democratic party)யின் பெண் உறுப்பினர்கள் வாக்களிக்கும் முறை மக்கள்கட்சியின் ஆண் உறுப்பினர்கள் வாக்களிக்கும் முறையில் இருந்தும் மிகவும் வேறுபட்டிருந்தது.   இந்தப் பாலின வேறுபாட்டு இடைவெளி வலதுசாரிக் கொள்கைகளின் ஆதரவாளர்களான ‘குடியரசு’ (republican party) கட்சியின் ஆண் பெண் உறுப்பினர்களுக்கிடையில் மிகவும் அதிகமாகவும் இருந்தது.

மக்கள்கட்சியின் பெண் உறுப்பினர்கள் மிகவும் முற்போக்கான முறையில் இத்திட்டங்களுக்கு ஆதரவு அளித்திருந்தனர். குடியரசுக் கட்சியின் மகளிர் ஆதரவு தரும் நிலையும் மக்கள்கட்சியின் ஆண்களுக்கு இணையாக இருந்தது. மக்கள்கட்சியின் பெண் உறுப்பினர்களில் 75% மேல் ஆதரவு தரும் திட்டங்களுடன் ஒப்பிடும்பொழுது, அதே திட்டங்களுக்கு மக்கள்கட்சியின் ஆண்கள் மற்றும் குடியரசுக் கட்சியின் மகளிர் 50% க்கு மேல் ஆதரவளிக்கும் நிலை இருந்தது. ஆனால் அதே திட்டங்களுக்கு 50% கீழ்தான் குடியரசுக் கட்சியின் ஆண்கள் ஆதரவு அளிக்கும் நிலை இருந்து. இவ்வாறாகப் பெண் பிரதிநிதிகள் முற்போக்கான நிலையில் கொடுத்த ஆதரவின் காரணத்தினால் மக்களுக்குப் பயன்படும் நல்ல பல திட்டங்களையும் கொள்கைகளையும் கொண்டுவர முடிந்தது. மாறாக வலதுசாரி பழமைவாதி ஆண்கள் அதிகமிருக்கும் குடியரசுக் கட்சியின் கட்சிப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை சட்டமன்றங்களில் அதிகமிருந்திருந்தால் பல முற்போக்கு நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல வாய்ப்பில்லை.

நெடுங்காலமாகத் தொழில் நுட்ப வளர்ச்சியிலும் அறிவியலிலும் உலக அளவில் முன்னணியில் இருப்பது அமெரிக்கா. ஆனால் உலக நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது, அமெரிக்க அரசியலில் பெண்கள் பங்களிப்பு குறைவு என்ற இந்த அவலநிலை ஏன்?

இத்தடைகளுக்கான மூன்று காரணங்களை நாம் அடையாளம் காணலாம் என்கின்றனர் அரசியலில் மகளிர் பங்களிப்பு குறித்து ஆய்வு செய்யும் ‘ரட்கெர்ஸ் பல்கலைக் கழகத்தின் அரசியல் ஆய்வாளர்கள்’ (Rutgers University’s Center for American Women and Politics).

(1) அரசியலில் மக்கள் பிரதிநிதிகளுக்கு தகுந்த ஆதரவு அளித்து அவர்களைத் தேர்தலில் பங்கேற்பதற்கும், பதவிகளை அடைவதற்கும் உருவாக்கும் ஆற்றுப்படுத்தும் முறை (mentorship) பெரும்பாலும் இன்றும் ஆண்களின் கட்டுப்பாட்டில் இருப்பது ஒரு காரணம் என்பது அரசியல்துறையை ஆய்பவர்களின் கணிப்பு.

(2) அமெரிக்க பெண்களிடமும் வாக்களிப்பதைத் தவிர, நேரே அரசியலில் இறங்கி தேர்தல் களத்தில் போட்டியிடும் ஆர்வமும் குறைவு என்பது மற்றொரு உண்மை.

(3) அவ்வாறு அவர்கள் களமிறங்கினாலும் ஊடகங்களால் (ஆண் வேட்பாளர்களுடன்) ஒப்பிடும்பொழுது பெண்களின் நடவடிக்கைகள் (அவர்கள் தோற்றம், உடல்நலம், குடும்ப வாழ்க்கை உட்பட) மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு, பெண் வேட்பாளர்கள் மிகவும் தீவிரமான விமர்சனங்களையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆண் வேட்பாளர்களின் அநாகரிகச் செய்கைகள் கூட மக்களால் பெரிதாகப் பொருட்படுத்தப்படுவதில்லை. எழுதப்படாத இந்த இரட்டை நீதிமுறையால் பெண்களின் ஆர்வம் தகர்க்கப்படுகிறது.

ஆனால், இந்த தடைகளைக் கடந்து பெண்கள் அரசியலில் இறங்கினால், தேர்தலில் போட்டியிட்டால் அவர்களில் பலர் வெற்றிபெறவும் தவறுவதில்லை. ஆண்கள் வெற்றிபெறும் விகிதத்துடன் பெண்களின் வெற்றி பெற்ற விகிதத்தை ஒப்பிடும்பொழுது பெரிய வேறுபாடும் இல்லை. குறிப்பாக குடியரசுக் கட்சியுடன் ஒப்பிடும்பொழுது, மக்கள்கட்சியின் வேட்பாளர்களில் பாலின வேறுபாடு பெண்களின் வெற்றி வாய்ப்பைக் குறைப்பதுமில்லை.   பொதுமக்களிலும், சென்ற நூற்றாண்டில் பெண்களுக்கு வாக்களிக்க முன்வந்தவர்களுடன் (1937 இல் 33%) ஒப்பிடும்பொழுது, இந்த நூற்றாண்டில் (2012இல் 95%) பெண்களுக்கு வாக்களிக்க முன்வருபவர்களின் எண்ணிக்கையும் பலமடங்கு உயர்ந்துவிட்டது, பாலின வேறுபாட்டைப் பொருட்படுத்தாத நிலை என்றே கூறலாம்.

எனவே இதுபோன்ற நடைமுறைத் தடைகளையும், பெண்களே கொண்டிருக்கும் மனத்தடைகளையும் உடைக்கப் பெண்களின் முயற்சியும், அவர்களை அரசியலில் இறங்க ஊக்கப்படுத்தி ஆதரவு தருவோர் மனப்பாங்கு மாறவும் நல்ல முன்னுதாரணங்கள் தேவை. அவ்வகையில் ஹில்லாரி கிளிண்டன் வெற்றி பெற்றிருந்தால் அவரது நிலை உதவியிருக்கும். ஆனால், தேர்தல் முடிவைப் பார்த்துவிட்டு பெண்களில் சிலர் “ஹில்லாரியாலேயே முடியவில்லை என்றால் பிறகு எந்தப் பெண்ணால்தான் முடியும்?” (“If she can’t do it, what woman can?”) என்பது போன்ற அவநம்பிக்கை தொனிக்கும் கருத்தை வெளியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

siragu-america-election1

ஹில்லாரி கிளிண்டன் அமெரிக்க அதிபரானாலும், அமெரிக்க அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பதை அது உடனே மாற்றிவிடாது. மாறாக அவரது வெற்றி பெண்களுக்கு, குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு நல்லதொரு முன்னுதாரணமாக அமையும் வாய்ப்பு அமைந்திருக்கும். விளையாட்டுப் பந்தயங்களில், இந்த உச்ச எல்லையை யாரும் அடையமுடியாது என்ற கருத்தை யாரவது ஒருவர் உடைத்து அந்தத் தடையைக் கடந்து சாதனைச் செய்த பிறகு, விளையாட்டு வீரர்கள் கொண்டிருந்த மனத்தடை நீக்கப்பட்டுத் தொடர்ந்து பலரும் அந்த எல்லைகளைக் கடந்து சாதிக்கத் தொடக்கி விடுவதை ஒலிம்பிக் பந்தயங்கள் போன்றவற்றில் நாம் பார்த்து வருகிறோம்.

இந்தியாவில் 1960-களுக்குப் பிறகு பிறந்து வளர்ந்தவர்களில், குறிப்பாகப் பெண்களிடம் தாங்கள் விரும்பினால் அரசியலில் பங்கு பெறலாம், அதற்குத் தடையில்லை என்ற எண்ணத்துடன் வளர்ந்த மனநிலை இருக்கும். அதுபோலவே, பெண்கள் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதைப் பார்த்து பழகிப் போன இந்திய ஆண்களின் மனநிலைக்கும் காரணத்தைப் பார்த்தோமானால், சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியப் பிரதமராக இந்திராகாந்தி, குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டில், மற்றும் பல மாநில முதல்வர்கள் போன்ற தலைமைப் பதவிகளில் பெண்கள் பலர் இருந்ததும், இருப்பதும் காரணம்.

siragu-america-election6

இந்த அமெரிக்கத் தேர்தலில்; அகதியாகக் குடியேறிய சோமாலி-அமெரிக்கன் பெண்மணியான இலான் ஓமர் (Ilhan Omar) மின்னசோட்டா மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். போரில் தனது விமானத்திற்கு ஏற்பட்ட விபத்தால் தன்னுடைய இரு கால்களின் செயலையும் இழந்த தாய்லாந்து நாட்டின் பின்புலம் கொண்ட ‘டாமி டக்வர்த்’ (Tammy Duckworth) என்ற பெண்மணி இல்லினாயிஸ் மாநிலத்தின் பிரதிநிதியாக நடுவண் அரசின் மேலவைக்குத் தேர்வாகியுள்ளார். இதே வரிசையில், கலிபோர்னியா அரசின் தலைமை வழக்கறிஞர் (attorney general) பதவி வகித்த, இந்தியப் பின்புலம் கொண்ட ‘கமலா ஹாரிஸ்’ (Kamala Harris) கலிபோர்னியா மாநிலத்தின் பிரதிநிதியாக நடுவண் அரசின் மேலவைக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பெண்மணிகள் சிறுபான்மை வகுப்பினர், மாற்றுத்திறனாளி போன்ற தடைக்கற்களையும்   கடந்து காட்டியுள்ளார்கள். அமெரிக்க நடுவண் அரசின் மேலவையில் இடம் பெரும் முதல் இந்திய-அமெரிக்கன் என்பது கமலா ஹாரிஸ் பெற்றுள்ள சிறப்பு. இவர்களது வெற்றி பல சிறுபான்மை   பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்பது உறுதி.

மக்களின் பிரதிநிதித்துவத்திற்காக அமைக்கப்பட்ட அரசியலமைப்பில், மக்களின் வாழ்வைத் தீர்மானிக்கும் கொள்கைகளில், கொள்கையின் வேறு பரிணாமங்களைக் காட்டக்கூடிய பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவு என்பது கவலைக்குரிய நிலை. இந்நிலையைசரி செய்ய பெண்களில் பலர் அரசியலிலும் உயர்பதவிகளிலும் இருக்கும் முன்னுதாரணம் நாட்டு மக்களுக்குத் தேவை.

அந்தவகையில் ஹில்லாரி கிளிண்டன் அமெரிக்காவின் முதல் ‘மேடம் பிரசிடெண்ட்’ என்ற நிலையை அடைந்திருந்தால் அமெரிக்க அரசியலில் பெண்களின் வரலாற்றை முன்னேற்றப்பாதையில் திருப்ப அவரது நிலை உதவியிருக்கும். தேர்தல் காலத்தில் அவர் மக்கள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு, மக்கள்கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் லில்லி என்ற ஏழுவயது சிறுமி, தனது பெயரை ‘லில்லாரி’ என மாற்றிக் கொள்ள விரும்புவதாக அவரது அன்னையிடம் கூறினாள். சிறுமியின் அன்னை அவளது விருப்பத்தின் காரணத்தைக் கேட்டபொழுது, ‘லில்லாரி’ என்றால் வளர்ந்தவுடன் தானும் அமெரிக்க அதிபராகலாம் என்று கூறினாள். இந்தச் செய்தியை அறிந்த ஹில்லாரி கிளிண்டன் அந்தச் சிறுமிக்கு ஊக்கமளிக்கும் வகையில் தனிப்பட்ட முறையில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார்.

siragu-america-election

அக்கடிதத்தில், “அன்பு லில்லி, நீ உன் பெயரை லில்லாரி என்று மாற்றிக் கொள்ள விரும்புவதாகவும், வளர்ந்த பிறகு அமெரிக்க அதிபராக வர விரும்புவதாகவும் உன் அன்னை தெரிவித்தார். லில்லி என்பது அருமையான பெயர், வருங்கால அமெரிக்க அதிபராக ஆவதற்கு நீ உன் பெயரை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. பெரிய கனவாக காண்பதையும், கடின உழைப்பையும், நீ விரும்புவதில் ஆழ்ந்த அக்கறையும் கொண்டால் நீ சாதிப்பதற்கு எந்த எல்லையும் கிடையாது. இப்பொழுது நான் குறிப்பிடுவது உன் வயதிற்கு அதிகப்படியானதாகத் தெரியலாம். வளர்ந்த பிறகு உலகில் உனக்கென ஓரிடத்தை அடையும்பொழுது உன் குரலை வெளிப்படுத்து. வகுப்புகளிலும், பணியிடங்களிலும் உன் சிந்தனையில் தோன்றுவதைத் தயக்கமின்றி சொல். உனது எண்ணங்களுக்குப் பெருமையுடன் உரிமை கொண்டாடு. உனது பங்களிப்புகளில் நம்பிக்கை கொள். உன் எண்ணத்தைப் பிறர் ஏற்றுக்கொள்ளாத நிலையை எதிர்கொண்டால், உனக்கென உலகில் ஓரிடத்தை உருவாக்கவும் தயக்கம் கொள்ளாதே. உன்னிடத்திலோ, உனது கனவுகளிலோ, உன் எதிர்காலம் குறித்தோ நீ கொண்ட நம்பிக்கையை இழக்காதே. தயங்காதே, முயற்சியைக் கைவிடாதே. உலகில் அடைய நினைக்கும் எதையும் நீ அடையலாம். நான் அமெரிக்காவின் முதல் பெண் அதிபராகவும் ஆகவும் கூடும். அடுத்த அதிபராக நீயும் கூட ஆகலாம்” என்று எழுதி உற்சாகமூட்டினார். தொடர்ந்து பல சிறுமிகளும் அவருக்குக் கடிதம் எழுதியதாகவும் செய்திகளுண்டு (https://a.hrc.onl/imageman/feed-gifs/littlegirlsgif1.gif).

“நாம் இன்னமும் (பெண்கள் உயர்பதவிகளுக்கு முன்னேறுவதைத் தடை செய்யும்) அந்த உயர்ந்த மற்றும் கடினமான கண்ணாடிக் கூரையை உடைக்கவில்லை என்பது எனக்குப் புரிகிறது. ஆனால், என்றாவது ஒரு நாள், யாராவது அதனை நாம் இப்பொழுது எதிர்பார்க்கும் காலத்திற்கும் முன்னரே விரைவாகவே செய்வார்கள் என்பதை நம்பலாம்” (I know we have still not shattered that highest and hardest glass ceiling, but someday, someone will, and hopefully sooner than we might think right now) என்று தேர்தல் முடிவுகள் தெரிந்த பிறகு, டிரம்ப்பின் வெற்றியை ஏற்றுக்கொண்டு ஹில்லாரி கிளிண்டன் உரையாற்றியபொழுது குறிப்பிட்டார்.

ஆம், அமெரிக்க மண்ணில் ஒரு பெண் அதிபர் நாடாளும் வாய்ப்பு அடுத்து வரும் தேர்தலில் கிடைக்கும் என நாமும் எதிர்பார்க்கலாம். முன்மாதிரிகள் தரும் ஊக்கத்தின் மூலம் நாட்டின் சட்டமியற்றும் நிலையில் பெண்கள் பலரின் பங்களிப்பும் அதைத் தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.

____________________________________________________

References:

(1) Rutgers University’s Center for American Women and Politics (CAWP)[http://www.cawp.rutgers.edu/women-us-congress-2016]

(2) Rutgers University’s Center for American Women and Politics (CAWP)[http://www.cawp.rutgers.edu/current-numbers]

(3) Madam President, by Christine Laskowski; FiveThirtyEight with collaboration Rutgers University’s Center for American Women and Politics (CAWP) [https://vimeo.com/176508773]

(4) Women in the United States Senate [https://en.wikipedia.org/wiki/Women_in_the_United_States_Senate]

(5) Women in the United States House of Representatives [https://en.wikipedia.org/wiki/Women_in_the_United_States_House_of_Representatives]

(6) Inter-Parliamentary Union, Women in Parliaments: World Classification[http://www.ipu.org/wmn-e/classif.htm]

(7) The women who won: Down-ballot candidates make history [http://www.cnn.com/2016/11/10/politics/us-election-women-who-won/]

(8) Many women thought Clinton would shatter the glass ceiling, not run into a concrete wall [http://www.latimes.com/politics/la-na-pol-trump-women-20161109-story.html]

(9) Hillary Clinton offers this inspiring advice to a 7-year-old who wanted to be called ‘Lillary’

[https://www.washingtonpost.com/news/inspired-life/wp/2016/09/27/hillary-clintons-offers-inspiring-advice-to-a-7-year-old-who-wanted-to-be-called-lillary/]

Picture of Hillary Clinton’s Dear Lilly letter to Lilly:

https://scontent.xx.fbcdn.net/v/t1.0-9/14355665_10209812498164149_597827060494385062_n.jpg?oh=3da3cdeec13d491fdbe69f4c588124a8&oe=58C9A116


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமெரிக்க அதிபர் பதவி, பெண்களுக்கு ஒரு தகர்க்கவியலாத கண்ணாடிக்கூரை”

அதிகம் படித்தது