மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அம்பேத்கர் பார்ப்பனப் பெயரா?

இராமியா

Jun 29, 2019

siragu-ambedkar1

“அம்பேத்கர் என்ற பார்ப்பன ஆசிரியர், பீமாராவ் ராம்ஜி என்ற மாணவன் கல்வியில் மிக உயர்ந்த நிலை அடைவதற்கு மிகப்பெரிய உதவிகளைச் செய்தார். அவருடைய உதவிகள் இல்லாமல் போய் இருந்தால் பீமாராவ் ராம்ஜி உயர்ந்த நிலைக்கு வரவே முடிந்து இருக்காது. அந்த நன்றியின் வெளிப்பாடாகத்தான் அந்தப் பார்ப்பன ஆசிரியரின் பெயரை தன் குடும்பப் பெயராக பீமாராவ் ராம்ஜி இணைத்துக் கொண்டார்” என்ற ஒரு கருத்து மக்களிடையே வலுவாகப் பரவி உள்ளது. இக்கருத்தைப் பார்ப்பனர்கள்தான் உருவாக்கி, பரப்பி நிலைபெறச் செய்து இருக்கிறார்களே ஒழிய இதில் இம்மி அளவும் உண்மை இல்லை.

இதில் உச்சபட்சக் கொடுமை என்னவென்றால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களேகூட இதை வலுவாக நம்புகிறார்கள். எவ்வளவு வலுவாக நம்புகிறார்கள் என்றால் பார்ப்பனர்களின் இதைப் பற்றிக் கூறினால் “பார்ப்பன எதிர்ப்பு என்ற பெயரில் உண்மைச் செய்திகளைக்கூட மறுப்பது / எதிர்ப்பது சரி அல்ல” என்று வலுவாக எதிர்வாதம் செய்யும் அளவுக்கு நம்புகிறார்கள்.

இப்படிப்பட்ட பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் “பார்ப்பனர்கள் அம்பேத்கர் போன்ற திறமைசாலிகளை மதிக்கவும் வளர்க்கவும் தவறுவதே இல்லை. பார்ப்பனர்களின் கருணையினால்தான் அம்பேத்கர் இவ்வளவு உயர்ந்த நிலைக்குச் செல்ல முடிந்து இருக்கிறது. ஆகவே பார்ப்பன எதிர்ப்பு என்பது தவறான / நன்றி கொன்ற செயலாகும்” என்ற கருத்தைப் பரப்பி சாதியக் கொடுமைகளை நிரந்தரப்படுத்த அவாள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

உண்மையில் அண்ணலின் குடும்பப்பெயர் (Surname) சக்பால் (Sakpal) என்பது ஆகும். அவருடைய சொந்த ஊர் (பிறந்த ஊர் அல்ல) மகராட்டிர மாநிலத்தில், இரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள அம்பாதவே (Ambadawe) என்ற கிராமம் ஆகும்.இதை அம்பேத் (Ambed) என்று சுருக்கியும் சொல்வார்கள்.அண்ணலின் தந்தை அண்ணலைப் பள்ளியில் சேர்க்கும்போது, குடும்பப் பெயரைக் கூறவேண்டிய இடத்தில் தன் சொந்த ஊரின் பெயரைக்கூறி இருக்கிறார். பள்ளி நிர்வாகத்தினரோ அம்பாதவே என்று பதிவு செய்வதற்குப் பதிலாக அம்பேத்கர் என்று பதிவு செய்து விட்டனர். இவ்வாறுதான் அம்பேத்கர் என்ற பெயர் அண்ணலுக்கு ஏற்பட்டது,நிலைபெற்றது. ஆனால் அம்பேத்கர் மிக உயர்ந்த நிலையை அடைந்த உடன், அவருடைய அத்தனைப் புகழுக்கும் பார்ப்பனர்கள்தான் மூல காரணம் என்று பார்ப்பனர்கள் கொஞ்சம்கூடக் கூசாமல் இரண்டு விதக் கதைகளைக் கட்டிவிட்டு உள்ளனர்.

முதல் கதை அண்ணலின் அத்தனை முன்னேற்றத்திற்கும் அம்பேத்கர் என்ற பார்ப்பனர்தான் காரணம் என்றும், அந்த நன்றிக் கட.னுக்காகத்தான், அவருடைய பெயரை தன் குடும்பப் பெயராக அண்ணல் ஏற்றுக்கொண்டார் என்பது. இது நகைப்புக்கு உரிய கற்பனை. அண்ணல் தன் முன்னேற்றத்திற்கு உதவிய “அந்தப்” பார்ப்பன ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்க அப்பெயரை தன் குடும்பப் பெயராக ஏற்றுக்கொண்டு இருந்தால், அது அவர் வளர்ந்து நிலைபெற்றபிறகு அல்லவா நடைபெற்று இருக்கும்? ஆனால் அம்பேத்கர் என்ற பெயர் தொடக்கப்பள்ளிப் பதிவேடுகளிலேயே உள்ளதே? அப்படி இருக்கையில் தன் முன்னேற்றங்களுக்குக் காரணமான பார்ப்பன ஆசிரியரின் பெயரை தன் பெயராக ஏற்றுக்கொண்டார் என்று கூறுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்?

இரண்டாவது கதை என்னவென்றால் கிருஷ்ண கேசவ் அம்பேத்கர்  (Krishna Keshav Ambedkar) என்ற பார்ப்பன ஆசிரியர் அண்ணலின் அறிவாற்றலைக் கண்டு, மெச்சி, அன்பின் உச்சத்தில் இருந்துகொண்டு, தன் குடும்பப்பெயரை அண்ணலின் குடும்பப் பெயராக இணைத்தார் என்பது தான். ஒரு மாணவனைப் பள்ளியில் சேர்க்கும்போதே தன் குடும்பப் பெயரைக் “கொடையாக” அளிக்கவேண்டும் என்று தோன்றும் அளவுக்கு அவனுடைய அறிவின் ஆழத்தைப் புரிந்துகொண்டுவிட முடியுமா? நம்மைப்போன்ற சூத்திரர்களுக்கு அப்படிப்பட்ட நுண்ணறிவு இல்லாமல் இருக்கலாம். ஆனால் “தெய்வீக அருள்” கொண்ட பார்ப்பனர்களால் அது முடியும் என்றும் அவாள் வாதிடலாம். “அப்படியா? பார்த்துவிடலாம்” என்று ஆராய்ந்து பார்த்தால், மகராட்டிர மாநிலத்தில் உள்ள குடும்பப் பெயர்களில் அம்பேத்கர் என்ற குடும்பப் பெயரே இல்லை என்று தெரியவருகிறது. இல்லாத குடும்பப் பெயரை எப்படி ஒருவர் வைத்துக்கொண்டு இருந்தார் என்ற புதிருக்கு விடை காணவே முடியவில்லை.

ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் அறிவுத்திறன் பார்ப்பனர்களின் அறிவுத்திறனுக்குச் சற்றும் குறைந்தது அல்ல. சொல்லப்போனால் மக்களுக்குத் தேவையான தொழிலைச் செய்வதில் பட்டறிவு இல்லாததால் பார்ப்பனர்களின் அறிவுத்திறன், உழைக்கும் வகுப்பு மக்களின் அறிவுத்திறனுக்கு அருகில் நெருங்கி வரவும் முடியாது. ஆகவே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் அறிவுத்திறன்தான் உயர்ந்ததாக இருக்கும். பார்ப்பனர்களின் அறிவுத்திறன் என்பது வெறும் ஏமாற்று வித்தையே. இந்த ஏமாற்று வித்தையின் வெளிப்பாடுதான் அம்பேத்கர் என்பது பார்ப்பனக் குடும்பப்பெயர் என்று கதைகட்டி இருப்பது.

இராமியா.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அம்பேத்கர் பார்ப்பனப் பெயரா?”

அதிகம் படித்தது