மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அம்ருதா!! (கவிதை)

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Sep 22, 2018

 

siragu amrutha2

 

வயிற்றில் உந்தன் இதயத் துடிப்பின்

வளரும் ஒலி கேட்க நேரமில்லையோ?

வாழ்க்கை முடித்தே வைத்தர் சாதியின்

வல்லூறுகள்; வாட்டும் உன் நினைவுகளை

வஞ்சனை கொண்டோர் எந்தன் உளத்திலிருந்து

வாரிச் சுருட்டி எறிந்திடவும் முடியுமோ?

 

வெட்டிய அரிவாளில் தொய்ந்த குருதியும்

வீழ்ந்த நொடியும் நெஞ்சத்தில் எரியூட்ட

வளரும் உன் கருவிற்காய் உயிர் சுமந்து

வலிவுடன் போராட உறுதி பூண்டுள்ளேன்

வளிபோல் என்னுள் விரவிய உன்மூச்சின்

வெப்பம் தீ மூட்டும் எனக்கென்றும்!

 

கொலைக்கஞ்சா உதிரச் சொந்தங்கள் உனை

கனப்பொழுதில் கொன்றிட்ட சாதிய அநீதி

களையெடுக்கும் வரை சுணங்காது சுழல்வேன்

கள்ளினும் கொடிய வெறியேற்றும் சாதி

காதலை பிரித்திடும் கொடுநஞ்சு சாதி

குடிஞையோடு அலரும் காரிருள் சாதி

 

நீர்க் குமிழியாய் குமறுகின்ற நெஞ்சத்தலைகள்

நிறுத்தாது அலைப்ப,  மனம் கனக்க

நின்னோடு வாழ்ந்த நொடிகள் நினைக்க

நீந்துதல் எளிதில்லை இத்துன்பயாற்றை என்றாலும்

நீந்துவேன் உனக்கான நீதி பெறும்வரை

நெகிழ்க்கும் உளத்தை நெகிழாது பயணிப்பேன்

 

மனுநீதி அறுக்கும் போராட்டத்தில் உன்னன்பு

மலர்க்கும் எனை ; மறைந்தாய் என

மறுப்பேன் உன்னுயிர் உண்ட சாதித்தீ

மண்ணிலிருந்து அணையும் வரை ஓயேன்

மாற்றாரை கருவறுக்கும் வரை ஓயேன்

மன்னவன் உன் மேல் ஆணை!!

 

- வழக்கறிஞர் ம. வீ. கனிமொழி

 


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அம்ருதா!! (கவிதை)”

அதிகம் படித்தது