மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அயல் நாடுகளிலும் திணிக்கப்படும் ஆரிய திராவிடப் போர்.

இராமியா

Jan 22, 2022

 siragu piravikkadal1

மனித சமுதாயம் வர்க்கங்களாகப் பிளவுபட்ட காலத்தில் இருந்தே ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தைச் சுரண்டுவது என்பது நடைமுறை ஆகிவிட்டது. சுரண்டல் என்பது தவறு, பாவம் என்ற எண்ணமும் அப்போதே தோன்றியும் விட்டது. ஆனால் சுரண்டலுக்கு எதிரான கருத்துகளும், தீர்வுகளும் கற்பனாவாதமாகவே இருந்தன. உலக வரலாற்றில் முதன் முதலாக, கார்ல் மார்க்ஸ் தான் இதற்கு அறிவியல் வழியில் தீர்வு கண்டார். அது மட்டும் அல்லாமல் அவரது காலம் வரைக்கும் மெய்யியலாளர்கள் (தத்துவ ஞானிகள்) உலக நடப்புகளுக்கு விளக்கம் அளித்தனரே ஒழிய அவற்றை மாற்றி அமைப்பது பற்றிப் பேசவில்லை. அவர்கள் காலத்தின் அறிவியல் வளர்ச்சியில் அது முடியாமலும் இருந்தது. கார்ல் மார்க்ஸ் தான் முதன் முதலில் மெய்யியலின் முதன்மையான பணியே உலக நடப்புகளை மாற்றி அமைப்பது தான் என்று கூறினார். அதற்கு அவரது கால அறிவியல் வளர்ச்சியும் அதற்கு உகந்ததாக இருந்தது.

கார்ல் மார்க்ஸ், வரலாற்றை ஆராய்ந்த போது இந்திய வரலாறு உலகின் மற்ற பகுதிகளின் வரலாற்றில் இருந்து மாறுபட்டு இருப்பதைக் கண்டார். மற்ற பகுதியில் சுரண்டலின் வடிவம் மாறி மாறி வந்து இருப்பதையும், இந்தியாவில் மட்டும் சுரண்டலில் ஒரு நிரந்தரத் தன்மை இருப்பதைக் கண்டு அதைப் பதிவு செய்தும் இருக்கிறார். இதைப் பற்றிக் குறிப்பிடுகையில் இந்திய மக்கள் பார்ப்பனர்களையும், பசுவையும் குரங்கையும்  வணங்கும் வழக்கம் இருக்கும் வரை எந்த விதமான புரட்சிகர மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்று கூறினார்.

கார்ல் மார்க்ஸ் தன் நுண்ணறிவால் உணர்ந்து சொன்னதை, புத்தர் தன் அனுபவத்தால் கண்டு சொன்னார். பார்ப்பனர்களை, பார்ப்பன மதத்தை எதிர்த்து இந்திய மண்ணில் முதன் முதலில் குரல் கொடுத்தவர் கெளதம புத்தரே. அவருக்குப் பின் காலம் தோறும் தோன்றிய சித்தர்கள் பார்ப்பனர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். ஆனால் அவர்களை எல்லாம் பார்ப்பனர்கள் உறவாடியும், போராடியும் அழித்தனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய ஜோதிராவ் ஃபுலே பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளில் சிக்காமல் கல்வி மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் கல்வியை அளித்தார். அன்று ஆட்சியில் இருந்த ஆங்கிலேயர்களுக்கு, பார்ப்னர்களை மட்டுமே அறிவுத் தளத்தில் வாய்ப்பு அளிப்பதை விட ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கும் கல்வியும் வேலை வாய்ப்பும் அளிப்பதன் மூலம் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி அதிகம் ஆகும் என்பதைப்  புரிய வைத்தார்.

அதன் பின் பெரியாரும் அம்பேத்கரும் இந்திய சமூகத்தில் ஒளிரத் தொடங்கினர். இருவருமே பார்ப்பனர்களை, அவர்களுடைய ஆதிக்கத்தைச் சுட்டு எரிக்கும் வகையில் தாக்கினர். புத்தரும் சித்தர்களும் அறிவியல் வளராத காலத்தில்  (பார்ப்பனர்கள் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி மக்களைஅச்சுறுத்திக் கொண்டு இருந்த காலத்தில்) போராட வேண்டி இருந்தது. ஆனால் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் அறிவியல் வளர்ச்சி மிகவும் துணை புரிந்தது. பார்ப்பனர்களின் மூட நம்பிக்கை அச்சுறுத்தல்களுக்கு அறிவியல் ஒளியில் அவர்கள் விளக்கம் கொடுத்த போது அவாளால் அறிவுத் தளத்தில் நிற்க முடியாமல் ஓடி ஒளிய நேர்ந்தது. ஆகவே அவர்கள் அரசு அதிகாரத்தை முரட்டுத்தனமாகப் பயன்படுத்தும் உத்தியைக் கையாண்டு கொண்டு இருக்கின்றனர்.

காலம் காலமாக, பார்ப்பனர்கள் மட்டுமே அயல் நாடுகளில் பணி புரியும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டு இருந்தது. பெரியார் அம்பேத்கரின் தலைமையிலான போராட்டங்களின் விளைவாக உயர் கல்வி பெற்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் அண்மைக் காலமாக அயல் நாடுகளில், மேற்கொண்டு உயர் கல்வியும் வேலை வாய்ப்பும் பெறத் தொடங்கினர். பார்ப்பனர்கள் மட்டுமே அயல் நாடுகளில் வாய்ப்பு பெற்றுக் கொண்டு இருந்த காலம் வரை அங்கு சாதிய ஒடுக்கலுக்கு வேலை இல்லாமல் இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் அங்கே வாய்ப்பு பெறத் தொடங்கியதும் பார்ப்பனர்களுக்கு “கிலி” பிடித்து விட்டது. ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் பார்ப்பனர்களை விட அறிவுத் திறன் மிக்கவர்கள், திறமைசாலிகள் என்ற உண்மை உலக அரங்கில் வெளிப்பட்டு விடுமே என்று அரண்டு போனார்கள். ஆகவே இந்தியாவில் கையாளும் அதே உத்திகளைப் பார்ப்பனர்கள் அங்கும் கையாளத் தொடங்கினர். அதாவது ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் தங்கள் கீழ் பணி புரிய நேரும் போது அவர்களைச் சரியாகப் பணி செய்ய விடாமல் இடையூறு செய்வது, வாய்ப்பு கிடைத்த போது எல்லாம் அவர்களைப் பற்றி மேலதிகாரிகளிடம் கோள் சொல்வது என்ற வகையில் செயல்பட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் அந்நாட்டு அரசியல்வாதிகளிடம் முறையிட்டனர். இவர்களுடைய பரிதாபமான நிலையைப் புரிந்து கொண்ட பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், சாதிய ஒடுக்கலுக்கு எதிராக ஒரு சட்டம் கொண்டு வர முயன்றனர். அதற்கென ஒரு மசோதா வரைவையும் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து விட்டனர். ஒடுக்கப்பட்ட மக்களும் தங்களால் முடிந்த வரை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து, சாதிய ஒடுக்கல் இந்தியாவில் இருந்து பிரிட்டன் வரை நீண்டு, தங்களை வருத்துவதை விளக்கி உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது போன்ற மனிதத் தன்மைக்கு எதிரான செயல்களைத் தங்கள் நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்றும், சாதிய ஒடுக்கலை ஒழித்தே தீருவோம் என்றும் உறுதி அளித்து உள்ளனர். ஆனால் இம்மசோதா 14.3.2013 அன்று நாடாளுமன்றத்தில் வந்த போது 243 உறுப்பினர்கள் ஆதரித்தாலும் 307 உறுப்பினர்கள் எதிர்த்ததால் தோல்வி அடைந்து விட்டது.

மசோதா தோல்வி அடைந்தது எப்படி என்று ஆராய்கையில், அங்கே இயங்கிக் கொண்டு இருக்கும் பார்ப்பனர்களின் இயக்கமான இந்து அமைப்புக் கூட்டணி (Alliance of Hindu organisations – U.K.) இந்த மசோதாவுக்கு எதிராகச் சதி செய்து இருந்தது தெரிய வந்தது. அது சரி! ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் தங்கள் நலனுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடியது போல் பார்ப்பனர்களும் நாடலாம் அல்லவா? அதை ஏன் சதி என்று கூற வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அவாள் எல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் போய் தங்கள் தரப்பு நியாயத்தை முன் வைக்கவில்லை. மாறாக இந்திய அரசிடம் விவரம் சொல்லி, பிரிட்டன் அரசுக்கு அழுத்தம் தர வைத்து இருக்கிறார்கள். இந்திய அரசும் பிரிட்டிஷ் அரசிடம் பிரிட்டிஷ் முதலாளிகளில் பலர் தங்கள் மூலதனத்தை இந்தியாவில் ஈடுபடுத்தி இருப்பதை “நினைவு” படுத்தி அவர்களுடைய முதலீடு பாதுகாப்பாக இருக்க வேணடும் என்றால் இந்திய சாதிய சமூக அமைப்பைச் சிதைக்கும் வேலையில் இருந்து விலகி இருக்குமாறு  “அன்புடன்” கூறி இருக்கிறது. அதன் விளைவாகத் தங்கள் நாட்டு முதலாளிகளின் முதலீடுகள் பாதுகாப்பாகவே இருக்க வேண்டும் என்பதற்காகச் சாதாரண இந்திய மக்களின் கோரிக்கையைப் புறம் தள்ளி விட்டது.

இது போல் பார்ப்பனர்கள் எங்கு இருந்தாலும், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் சாதிய ஒடுக்கலுக்கு உள்ளாகியே இருக்க வேண்டும் என்பதில் மிக மிக … மிக உறுதியாக இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த செளந்தர்ராஜன் என்ற ஒருவருக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டில் வேலை கிடைத்து, அங்கேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவருக்கு ஒரு மகள் அங்கேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இந்தியச் சூழலை அறியாத அந்தப் பெண் தன் கல்வி நிலையங்களிலும்  பணி இடங்களிலும் இந்தியாவில் இருந்து வந்தவர்களால் அவமானப்படுத்தப்படுவதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை; செரிக்கவும் முடியவில்லை. அதிலும் அமெரிக்கர்களால் ஒரு பிரச்சினையும் இல்லாத போது இந்தியர்களால் மட்டும் ஏன் பிரச்சினை ஏற்படுகிறது என்று புரிந்து கொள்ள முடியாமல் அவர் தவித்தார். தன் பெற்றோர்களிடம் துருவித் துருவி விசாரித்த பொழுது அவர்கள் சாதிய அமைப்பைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள். அவரால் சாதிய ஒடுக்கலைப் பற்றித் தொடக்கத்தில் புரிந்து கொள்ள முடியவில்லை. பின் மெது மெதுவாகப் புரிந்து கொண்டார். இப்பொழுது அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் உரிமைகளுக்காக ஓர் இயக்கத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டு இருக்கிறார்.

இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் பார்ப்பனர்களால் இழிவு படுத்தப்படுவதைக் கண்டு வெதும்பிய சிலர் தேன்மொழி செளந்தர்ராஜனைப் போலவே ஒரு இயக்கத்தைத் தொடங்கி உள்ளனர். இவர்களுடைய எண்ணம் கொஞ்சம் வேறுபட்டது. தாங்கள் வாழும் நாட்டில் ஒடுக்கப்படும் கறுப்பின மக்களையும் தங்களுடைய அணியில் சேர்த்துக் கொள்ளும் எண்ணம் கொண்டனர். அந்நாட்டின் இன ஒடுக்கலுக்கு எதிரான மிகச் சிறந்த போராளியான மார்ட்டின் லூதர் கிங்கையும் இணைத்து அம்பேத்கர் கிங் படிப்பு வட்டம் (Ambedhkar King Study Cirlce) என்ற அமைப்பை ஏற்படுத்தி ஒடுக்குமுறைக்கு எதிரான கருத்தியலைப் பரப்பிக் கொண்டும் பார்ப்பனர் அல்லாத மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டும் இருக்கின்றனர். இப் படிப்பு வட்டம் இப்பொழுது சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இதை மற்ற நகரங்களிலும் விரிவுபடுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளனர்.

இவ்வாறு உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் பார்ப்பனியத்தின் கொடூரத் தன்மையைப புரிந்து கொண்டு அதற்கு எதிராக அணி திரண்டு கொண்டு உள்ளனர். ஆனால் பார்ப்பனர்கள் கருத்தியல் வழியில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாமல் திணறுகின்றனர். அதே சமயம் வர்ணாசிரம அதர்ம முறையை மீண்டும் வெளிப்படையாகக் கொண்டு வந்து விட வேண்டும் என்று துடியாய்த் துடித்துக் கொண்டு இருக்கின்றனர். அதற்கு அவாளிடம் அரசு அதிகாரமும் முதலாளித்துவப் பொருளாதார முறையும் தான் ஆயுதங்களாக உள்ளன.

விக்டோரியா மகாராணி காலத்தில், பார்ப்பனக் கொடுமைகளில் இருந்து 97% இந்துக்களுக்கு ஓரளவாவது நிவாரணம் கொடுத்தால் தான், மிகப் பெரும்பான்மையான மக்களை நாட்டின் வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, செல்வ வளத்தைப் பெருக்க முடியும் என்ற நோக்கத்துடன் செயல்பட்ட பொழுது, மதச் சுதந்திரம் பறி போகிறது என்று கூக்குரலிட்டு, இனி மத விவகாரங்களில் பிரிட்டன் அரசு தலையிடாது என்று சாசனம் எழுதி வாங்கிக் கொண்டு, பார்ப்பனர்கள் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டார்கள். இன்றைய சூழலில் அவாளால் அவ்வாறு செய்ய முடியவில்லை. மதச் சுதந்திரம் என்று பேச முடியவில்லை. மத நம்பிக்கை என்ற பெயரில் வர்ணாசிரம அதர்மத்தைப் பற்றி வெளியில் சொல்வது அவாளுக்கே வெட்கமாக இருக்கிறது. ஆகவே இந்தியாவில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள அந்நாட்டு முதலாளிகளின் மூலதனப் பாதுகாப்பு பற்றி அச்சுறுத்தியே தங்கள் நோக்கத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டி உள்ளது. உலகின் எந்தப் பகுதியில் சாதிய ஒடுக்கலுக்கு எதிராக அயல் நாட்டு அரசுகள் நடவடிக்கை எடுக்க முற்பட்டாலும் முதலீட்டுப் பாதுகாப்பு என்ற பூச்சாண்டியைக் காட்டும் அவலத்தில் தான் இந்திய அரசு உள்ளது.

இந்நிகழ்வுகள் நமக்கு உணர்த்தும் படிப்பினை என்ன? பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கும் இடையே மோதல்கள் நிகழும் போது இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறதே ஒழிய அதற்குத் தீர்வு கிடைக்க வேண்டும் என்று அக்கறை கொள்வது இல்லை. ஆனால் பார்ப்பனர்களுக்கு ஒரு சிறு கீறல் ஏற்பட்டு விடுமோ என்ற ஐயம் ஏற்பட்டாலே துடியாய்த் துடித்து எழுந்து தன்னை விட வலிமை பொருந்திய வல்லரசையும் மிரட்டும் அளவுக்குத் துணிகிறதே; ஏன்?

இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் சாதிய அமைப்பின் / சாதியக் கொடுமைகளின் அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆயிரம், பத்தாயிரம் சாதிகள் இருந்தாலும், இந்த சாதிய அமைப்பைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்ற தீவிர உணர்வு பார்ப்பனர்களுக்கு மட்டுமே உள்ளது. ஏனெனில் அவாள் மட்டுமே தங்கள் மக்கள் தொகை விகிதத்தைக் காட்டிலும் மிக மிக … மிக அதிகமாக அதிகார மையத்தில் உள்ளனர். அது மட்டும் அல்ல; அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடல் உழைப்பு தேவைப் படும் வேலைகளில் இருந்து, திறமைக் குறைவான பார்ப்பனர்களும் எளிதாகத் தப்பி விட முடிகிறது. இதைத் தவிர்த்து அவாளால் அதிகார மையங்களிலும், உயர் நிலை வேலைகளிலும் 3%க்கு மேல் இருக்க முடியாத படியும், அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளில் குறைந்தபட்சம் 3% இருந்தே தீர வேண்டும் என்ற நிலையையும் ஏற்படுத்தி விட்டால், சாதிய அமைப்பின் / சாதியக் கொடுமைகளின் அடிப்படை நொறுங்கி விடும். இந்த ஏற்பாட்டில் பார்ப்பனர்களைத் தவிர வேறு எந்த சாதியினருக்கும் பாதிப்பு ஏற்படாது. ஏனெனில் பார்ப்பனர்களைத் தவிர வேறு எந்த ஒரு சாதியினரும் தங்கள் மக்கள் தொகை விகிதத்தை விட மிக மிக … மிகக் குறைவாகவே அதிகார மையங்களில் உள்ளனர்; அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளில் மிக மிக … மிக அதிகமாக உள்ளனர்.

இந்தத் திட்டத்தைத் தான், அதாவது அனைத்து சாதி மக்களும் அவரவர் திறமைக்கு ஏற்ப அரசியல், கல்வி, பொருளாதார, சமூக நடவடிக்கைகளில் வாய்ப்பு / பங்கு பெறுவதை, அதாவது விகிதாச்சாரப் பங்கீடு முறையை மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி வலியறுத்திக் கொண்டு உள்ளது.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அயல் நாடுகளிலும் திணிக்கப்படும் ஆரிய திராவிடப் போர்.”

அதிகம் படித்தது