மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அரசியல் அறக் கோட்பாடுகள் (பாகம் – 2)

முனைவர் மு.பழனியப்பன்

Jul 11, 2020

siragu silappadhikaaram1

ஐம்பெருங்குழு

மேற்காட்டியன தவிர புகார் நகரில் சோழ அரசனுக்கு நெறிகள் புகட்ட பல அவையங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று ஐம்பெருங்குழு. இதனுள் ஐவர் குழுவாக இருந்தனர். அமைச்சர், புரோகிதர், சேனாதிபதியர், தவாத் தொழில் தூதுவர், சாரணர் என்ற ஐவர் ஐம்பெருங்குழுவில் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் அமைந்த கூட்டமே பஞ்சாயம் எனப்படுகிறது. தற்போது பஞ்சாயத்து என்ற அடிப்படையில் ஐம்பெருங்குழு என்ற அமைப்பின் எச்சமாக ஊரின் நிர்வாகம் செய்யப்பெற்று வரப்பெறுவது குறிக்கத்தக்கது. இவர்கள் அரசனுக்கு உரிய சுற்றமாக விளங்கி நன்மைகள் நடைபெற உதவினர்.

எண்பேராயம்

அரசனுக்கு ஆட்சி முறையில் உதவி செய்ய எண்பேராயம் என்ற  அமைப்பில் எட்டுப்பேர் கொண்ட குழு அமைக்கப்பெற்றிருந்தது. கரணத்தியலவர், கருமகாரர், கனகச் சுற்றம், கடைக்காப்பாளர், நகர மாந்தர், நளிபடைத்தலைவர், யானை வீரர், இவுளி மறவர் ஆகிய எட்டுப்பேரைக் கொண்டதாக எண்பேராயம் விளங்குகின்றது.

இவர்கள் அரசனுக்கு அரசு அலுவல்கள், அரச நடைமுறைகளில் தக்க நிலையில் ஆலோசனை கூறுவர். இவர்கள் மன்னனுக்கு அறம் சொல்லும் செவியறிவுறுத்தும் சான்றோராக விளங்கினர்.

இதன் காரணமாக சோழ நாடு அறத்தின் நிலைக்களமாக அமைந்திருந்தது.

பாண்டிய நாட்டு அரசியல் சுற்றம்

பாண்டிய நாட்டின அரசியல் சுற்றம் அரச வீதி, அதனைத் தொடர்ந்து வணிக வீதிகள், அவற்றைத் தொடர்ந்து நால்வகை மக்கள், மற்றையோர் வாழும் பகுதிகள் போன்றன அமைந்திருந்தன.

அரச வீதி

பாண்டிய நாட்டின் அரசவீதியில் வாழ்ந்த ஆண்கள் தன் உரிமைமகளிருடன் காலையில்  புனலில் விளையாடி, பகலில் பொழிலில் விளையாடி, சூரியன் மறையும் பொழுதில், நிலா முற்றத்தில் சேர்க்கை மீதிருந்து இன்பம் தூய்த்து மகிழ்ந்து இருந்தனர். இவர்களின் வாழ்க்கை இன்பம் தழுவிய வாழ்க்கையாக இருந்துள்ளது. மதுரை நகர அரச மக்கள் வேத்தியல் நடனத்தையும், பொதுமக்கள் பொதுவியல் சார்ந்த நடனத்தையும் கண்டு களித்து வந்தனர். பாண்டிய நாட்டு மக்கள் கலையும் இன்பமும் பெருக வாழ்ந்து வந்தனர் என்பது இதன்வழி தெரிகிறது.  இன்ப விழைச்சியே அரச வீதியில் அதிகம் காணப்பெற்றது.

வணிக வீதிகள்

மணிகள், தங்கம் விற்பனைக் கடைகள்

பாண்டிய நாட்டின் தலைநகரமாகிய மதுரை அரசவீதியையும், அதனைத் n;தாடர்ந்து மற்ற பல வீதிகளையும் பெற்று அழகான வடிவமைப்பினைப் பெற்றிருந்துள்ளது. அரசவீதியைத் தொடர்ந்து உயர்ந்த மணிகள் விற்கும் கடைகளைக் கொண்ட தெரு விளங்கியது. இதனைத் தொடர்ந்து சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என்ற நான்கு சாதிகளை உடைய பொன்னின் தன்மை அறியும் பொன்வணிகர்களின் இருப்பிடம் இருந்தது. மேலும் இப்பொன் கடைகளின் மீது இப்பொன் இங்குக் கிடைக்கும் என்ற நிலையில் கொடிகள் நிறுவப்பெற்றிருந்தன.

புடவைக் கடைகள்

மணிகள், தங்கம் விற்கும் கடைகளை அடுத்தாக அ;மைந்தது புடவைக் கடைகளாகும். நூல், மயிர், நுழை நூற்பட்டு போன்றவற்றால் நெய்யப்பெற்று, ஒவ்வொன்றும் நூறு அளவினாதாக அடுக்கப்பெற்ற புடவைக் கடைகள் நெருங்கிய வீதி அடுத்து அமைந்திருந்தது.

கூல வணிகக் கடைகள்

புடவைக் கடைகளை அடுத்து பருப்பு போன்ற பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் விளங்கின. இங்கு வாணிபம் செய்பவர்கள் துலாக்கோலை உடையவர்களாவும், இரும்பால் செய்யப்பெற்றுத் தோலினால் மூடப்பெற்ற பறையினை உடையவர்களாகவும், மரக்காலை உடையவர்களாகவும் விளங்கினர். மேலும் பொருள்களை இடைநின்று விற்கும் தரகர்கள் குறுக்கும் நெடுக்குமாக திரிந்து பொருள்களை விற்பனைக்கு உட்படுத்துபவர்களாக விளங்கினர்.

நால்வகை வீதி

நால்வகைப் பிரிவினரான அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் இக்கடைவீதிகளை அடுத்து அடுத்து இல்லங்கள் அமைத்து வாழ்ந்து வந்தனர். இல்லங்கள் முச்சந்தி வரிசைகளாகவும், நாற்சந்தி வரிசைகளாகவும் விளங்கின. கோயில்கள், மன்றங்கள், பல நெறிகள் கூடும் இடங்கள், குறுக்குத் தெருக்கள், பந்தல்கள் போன்றன மதுரை நகரத்தில் காணப்பெற்றன.

பாண்டிய நாட்டில் மன்னனுக்கு அறநெறிகள் கூற, அவனை நெறிப்படுத்த தக்க அமைப்புகள் இருந்ததாக இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் காட்டவில்லை. இதன் காரணமாக அரசன் தக்கவழிப் படுத்தப்படா நிலையில் கூறுவார் பேச்சினை உண்மை என நம்பும் பாங்கில் இருந்துள்ளான்.

பொற்கொல்லன் கொண்டு வந்த சிலம்பின் உண்மைத் தன்மையை அறியாமல் பாண்டியன் உடனடியாக முடிவுவெடுத்துவிடும் நிகழ்வே அவனுக்கு அறவுரை கூறுவார் யாருமில்லை என்பதைக் காட்டிநிற்கிறது.

“வினை விளை காலம் ஆதலின் யாவதும்

சினை அலர் வேம்பன் தேரானாகி”

என்னும்படி அரசன் சிறிதும் மற்றவர்களைக் கலந்து ஆலோசிக்காமல் அவனே எடுத்த முடிவால் கோவலன் கள்வனாகின்றான். அறம் கொண்டு ஆராயாது கள்வன் எனக் கூறிய நெடுஞ்செழியன் வானம் ஆளப் போக வேண்டியவனாகின்றான்.

இந்நிலையில் அறந்தலைப்பட்ட கட்டமைப்பினை, சோழ நாட்டில் கண்ட கண்ணகிக்குத் தன் கணவன் விசாரிக்கப்படாமல் கண்டதும் வெட்டுண்ட நிலை மிகப் பெரிய வருத்தத்தைத் தருகின்றது. அதனால் அவள் அரசனிடம் நீதி கேட்பதற்கு முன் அரசின் சபையில் அங்கம் வகிக்க வேண்டிய மக்களை, சான்றோர்களை, கடவுளைப், பெண்களைப் பார்த்து நீதி கேட்கிறாள்.

‘‘பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்

கொண்ட கொழுந ருறுகுறை தாங்குறூஉம்

பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்

சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்

ஈன்ற குழுவி எடுத்து வளர்க்குறூஉம்

சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்

தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்

வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்

தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்”

என்ற கண்ணகியின் சொற்களில் அரசனுக்கு நீதி கூற சான்றோர் சபை இல்லை என்பதைக் காட்டுகின்றது. மேலும் கற்புடைமகளிர் இவளின் கணவனுக்கு ஏற்பட்ட துன்பத்தை ஒரு பொருட்டாக கருதவில்லை என்பதும் தெரியவருகிறது. இதன் காரணமாக மதுரை அறமெலிவு பெற்ற நிலையில் இருந்துள்ளது என்பது தெரியவருகிறது.

சேர நாட்டு அரசியல் சுற்றம்

வெள்ளி மாடம்

சேரன் செங்குட்டுவன், அரசு செய்துவரும் மலை நாடும் அரசியல் சுற்றத்தைக் கெர்ண்டிருந்தது. அவன் மலைவளம் காணப் புறப்பட்டபோதும் அரச சுற்றம் அவனுடன் வந்துள்ளது. அவன் பேரியாற்றின் கரையில் வெள்ளி மாடத்தில் தன் துணையாள் வேண்மாளுடன் தங்கி இருந்தான்.

அரசனும் அரசனைக் காணும் முறைமையும், அரசனுடன் இருந்தோரும்

வெள்ளி மாடத்தில் இருந்து சேர அரசனைக் குன்றக் குரவர்கள் “வாழ்க நின் கொற்றம்” என்று சொல்லிக் காண வந்தனர்.  வந்தவர்கள் கண்ணகி வானம் ஏறிய காட்சியைச் சொல்லலாயினர். அந்நேரத்தில் தமிழ் ஆசிரியனாகிய கூல வாணிகன் சீத்தலைச் சாத்தன் சேர அரசனுடன் இருந்துள்ளார். மேலும் அந்தப் பொழுதில், வில்லவன் கோதை, அழும்பில் வேள் போன்ற படைத்தளபதிகளும் சேர மன்னனுடன் இருந்துள்ளனர். சிலப்பதிகார ஆசான் இளங்கோவடிகளும் உடன் இருந்தார்.

சேரன் தனக்குச் சொல்லப்பட்ட செய்தியை நன்கு கேட்டுணர்ந்து, அதன் உண்மையைத் தன்மையைப் பலரும் சொல்ல உணர்ந்து அதன் பின் கண்ணகிக்குச் சிலை எடுக்க முடிவு செய்துள்ளான். சேரனின் தனிப்பட்ட முடிவாக கங்கைக்குச் சென்று கல் கொண்டு வரும் முடிவு அமையவில்லை. பாண்டிய நாட்டில் இல்லாத பிறரிடம் கலந்து செய்யும் அறமுறைமை,  சேர நாட்டில் இருந்துள்ளது.

சேரன் காட்டும் அறக் கோட்பாடு 

சேரன் கண்ணகி, கோவலன் வாழ்வு நிலையை தமிழாசிரியர் சீத்தலைச் சாத்தன் வழி கேட்டபின் அது குறித்துச் சில செய்திகளைக் குறிப்பிடுகிறான். இச்செய்திகள் சேர நாட்டின் அரசியல் சார்ந்த அறக்கோட்பாடுகள் என்பதில் ஐயமில்லை.

‘‘தென்னர் கோமான் தீத்திறங் கேட்ட

மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்

எம்மோ ரன்ன வேந்தற் குற்ற

செம்மையின் இகந்தசொற் செவிப்புலம் படாமுன்

உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென

வல்வினை வளைத்த கோலை மன்னவன்

செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது

மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்

பிழையுயிர் எய்திற் பெரும்பே ரச்சம்

குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி

மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்

துன்ப மல்லது தொழுதக வில்லெனத்

துன்னிய துன்பம் துணிந்துவந் துரைத்த

நன்னூற் புலவற்கு நன்கனம் உரைத்தாங்கு”

என்று சேரன் கூறும் அறம் சிலப்பதிகாரம் காட்டும் அ;;ரசியல் அறமாகின்றது.

ஒரு மன்னனுக்குத் தான் மன்னனுக்கு ஏற்படும் நெருக்கடி, சிக்கல்கள், பெருமைகள், சிறப்புகள் முழுவதும் தெரியவரும். அவ்வகையில் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு ஏற்பட்ட துயரை முழுவதும் உணர்ந்தவனாகச் சேரன் விளங்குகிறான்.

வழி தவறிப் பழி ஏற்றேன் என்ற சொல் செவிக்கருகில் வந்துவிடுவதற்கு முன்பே உயிர் துறந்த அரசனின் திறம் பெரிதாய்ப்படுகிறது சேரன் செங்குட்டுவனுக்கு. மேலும் வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோலாக்கியது என்ற நிலையில் உயிர் துறந்து தன் கொடுங்கோலைச் செங்கோல் ஆக்கினான் பாண்டியன் என்ற கருத்தும் இங்குக் கருதத்தக்கது. அரைசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்ற சிலப்பதிகாரத்தின் உயிர்க்கருத்து சேர நாட்டிலும் சேரன் மனதிலும் ஆழப் பதிந்துள்ளது.

மேலும் இந்நிகழ்வின் வழி தான் சில அறங்களை உணர்;ந்ததாகச் சேரன் தெரிவிக்கிறான்.

  1. மழையாகிய வளம் பெய்யாது மறையின் மிகப் n;பரிய அச்சம்
  2. யாதானும் ஒன்றான் உயிர்கள் வருத்தமுறின் அதனானும் மிகப் பெரிய அச்சம்

ஆகிய இரு அச்சங்கள் அரசனுக்கு அறந்தவறுவதால் ஏற்படுவதாகும். இதன் காரணமாக, குடிகளைக் காக்கும் அரச பொறுப்பில் இருப்பது, பிறப்பது மிக்க துயரம் தருவதாகும் என்று சேரன் அரசியல் நெறிகளைச் சீத்தலைச் சாத்தனாரிடம் கூறுகிறான்.

இதன்வழி ஓர் உயிருக்குக் கூட துன்பம் தராமல் அரசன் தன் அரசாட்சியை நடத்திட வேண்டும் என்பது தெரியவருகிறது. அறம் தவறினால் இதன் காரணமாக மழை வளம் குன்றும் என்பதும் தெரியவருகிறது.

கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்னும் அரசியல் சுற்றம்

குன்றக் குரவர்கள் சேர மன்னனைச் சந்திக்க வந்தபோது, அவனுடன் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரும் இருந்துள்ளார். அவரே கோவலன் கண்ணகி வாழ்வினை முழுவதும் அறிந்தவர். அவரே சேரனுக்கு சிலப்பதிகார வரலாற்றை எடுத்துரைக்கிறார். இதனை அருகில் இருந்துக் கேட்டவர் இளங்கோவடிகள். இதன்வழி அரசன் தன் அருகே தன் சுற்றமாக தமிழாசிரியர்களை வைத்திருந்தான் என்பதை அறிய முடிகிறது.

சேர மாதேவி என்னும் பெண் பிரதிநிதி

கண்ணகி, பாண்டி மாதேவி இவர்களில் யார் சிறந்தவர்கள?, என்ற சேரன் செங்குட்டுவனின் கேள்விக்குப் பெண் என்ற முறையில் ஆய்ந்த முடிவு அறிவிக்கிறாள் சேரன் மாதேவி.  பாண்டிய அரச சுற்றத்தில் பாண்டிமாதேவியின் கோபம் அரசியலில் பாதிப்புகளை உண்டாக்கியது. சேர மாதேவியின் அறிவு சார்ந்த முடிவெடுக்கும் திறம் சேரனுக்குப் பெருமை சேர்த்தது. எனவே அரசனின் சுற்றத்தில் அவனின் மனைவி இராசமாதேவி முக்கிய இடம் வகிக்கிறாள் என்பதை உணரமுடிகின்றது.

‘‘உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும்

செயிருடன் வந்தவிச் சேயிழை தன்னினும்

நன்னுதல் வியக்கும் நலத்தோ ரியாரென

மன்னவன் உரைப்ப”

என்பது சேர மன்னின் வினா. இவ்வினாவில் கணவன் உயிருடன் உடன் சென்றவள் முன்னவளாகவும், கோபத்துடன் சேர நாடு வந்நதவள் பின்னவளாகவும் உரைக்கப்பெற்று இவர்களுள் யார் சிறந்தவர்கள் என்று பெண்கள் முடிவு செய்வர் என்பதை ஒரு பெண்ணிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறான் சேரன். இதற்கு

 ‘‘மாபெருந் தேவி

காதலன் துன்பம் காணாது கழிந்த

மாதரோ பெருந்திரு வுறுக வானகத்து

அத்திறம் நிற்கநம் அகல்நா டடைந்தவிப்

பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டுமென”

எனத் தெளிவான பதிலைத் தருகிறாள். தன் கணவன் இறந்ததும் தானும் இறந்தவள் பாண்டிமாதேவி. அவளுக்குக் கணவன் இறந்த பின்பு உயிர் வாழவேண்டியத் தேவையும் இல்லை, உயிர் வாழ்வதால் துன்பம் ஏற்படலாம் என்ற வசதி குறைவான நிலையும் இல்லை. எனவே பாண்டிமாதேவி இறப்பு என்பது சிறப்பு ஆயினும் அது கணவனுக்குப் பின்பு வாழ இயலாது என்ற இயலாமையின் வெளிப்பாடே ஆகும்.

ஆனால் தன் கணவன் இறந்த பின் அவனைக் குற்றமற்றவன் எனக் காட்டி, அத்துடன் நில்லாமல் அவன் இல்லாத வாழ்வின் துயரத்தை அனுபவித்து சேரநாடு அடைந்த கண்ணகிதான்  பத்தினிக் கடவுளாக வணங்கப்பட வேண்டியவள் என்கிறாள் சேரமாதேவி.

அறம் தவறியதால் ஏற்பட்ட இழிவை நீக்கயதால் கண்ணகி கற்புடை தெய்வமாகிறாள். எனவே அறத்தின் வயப்பட்டே பத்தினித்தன்மையைப் போற்றல் என்ற சிலப்பதிகாரத்தின் இரண்டாம் அடிக்கருத்தும் அமைந்துள்ளது என்பது உணரத்தக்கது.

வில்லவன் கோதையும், அழும்பில் வேளும்

பத்தினிக் கடவுளைப் பரைசல் வேண்டும் என்று முடிவு எடுத்தபின் அக்கடவுளுக்குப் பொதிகைக் கல் சிறப்பளிக்காது, கங்கைக் கரைக் கல்லே சிறப்பாகும் என்ற முடிவிற்கு சேரனின் அ;ர்ச சுற்றம் முடிவிற்கு வருகிறது.

இதற்காக சேர அரசன் வட நாடு நோக்கிப் படையெடுக்க உள்ள முறைமை அறிவிக்கப்பெறுகிறது. அப்போது அங்கு வில்லவன் கோதையும், அழும்பில் வேளும் படைத்தளபதிகளாக இருந்தனர். வில்லவன் கோதை கங்கைக்குச் செல்லும் அரசனின் முடிவை வரவேற்கிறான்.

முதுநீ ருலகில் முழுவது மில்லை

இமய மால்வரைக்கு எங்கோன் செல்வது

கடவு ளெழுதவோர் கற்கே யாதலின்

வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம்

தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி

மண்டலை யேற்ற வரைக வீங்கென”

என்று வடநாடு செல்லும் படைமுறை ஓலை மூலம் தெரிவிக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பெறுகின்றன.

இதன்வழி அரசன் மலை வளம் காண வந்தாலும் அவனுடம் முழு அரச சுற்றமும் வந்து அவனுக்கு உதவிகள் பல செய்துள்ளது என்பதை உணர முடிகின்றது.

மேலும் அழும்பில் வேள்  என்பவன் ஓலைகள் அனுப்ப வேண்டாம், இங்கு பறையறிவித்தாலே போதும், அதனை ஒற்றர்கள் மற்ற நாடுகளுக்குச் சொல்லிவிடுவர் என்று குறிப்பிடுகிறான். இதன்வழி சேரனின்  அரசியல் சுற்றத்தின் இயல்பினை உணரந்து கொள்ளமுடிகின்றது.

எனவே அரசியல் சுற்றம் என்பது ஓர் அரசனின் இணை பிரியாத ஒன்று. அதன் தேவை எக்காலத்தும் மன்னனுக்குத் தேவையாகும். இதனைப் பிரிந்து அரசன் தனியனாக நின்று முடிவெடுக்கும் நிலையில் அவனின் முடிவு எதிர்பார்த்த  வெற்றியைத் தராது என்பதை உணர முடிகின்றது.

அரசியலில் அறத்தைக் காக்க வேண்டிய நிலையையே சிலப்பதிகாரக் காப்பியம் முழுமைக்கும் காணமுடிகின்றது. இதனுள் வரிகள் அதிகம் வாங்காமை, தன்னலமின்மை, கொடுங்கோன்மை இன்மை,  போன்ற கூறுகளும் எடுத்துரைக்கப்பெற்றுள்ளன.  இவற்றை அரசியல் தூய்மை என்று குறிக்கலாம்.

அரசியலில் தூய்மையைத் தரும் அறக் கோட்பாடுகள்

வரிச்சுமை

மக்களிடத்தில் அதிக வரிகளைப் பெறும் அரசு நல்லரசாக அமையாது. மக்களை வருத்தி வரி வாங்கும் அரசு தீமையைச் செய்யும் அரசே ஆகும்.

            ‘கறைகெழு குடிகள் கைதலை வைப்ப

            அறைபோகு குடிகளொடு ஒரு திறம் பற்றி

            வலம்படு தானை மன்னர் இல்வழி

            புலம்பட இறுத்த விருந்தின் மன்னர்”

என்ற பாடலடிகளில் மன்னன் துன்புறுத்தி வரிகள் வாங்கும் நிலையின் கொடுiமையை இளங்கோவடிகள் காட்டியுள்ளார்.

மன்னன் வரிகளை அதிகம் விதிக்கும் நிலையில் குடிமக்கள் தன் தலைகளில் கை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று கவலை கொள்வர். வருத்தமடைவர். வரி கொடுக்க முடியாதவர்கள், ஆட்சி மாற வேண்டும் என்று விரும்புவர். மேலும் இவ்வாட்சி அகற்றப்பட என்ன செய்யலாம் என்று எண்ணுவர். இவர்களின் துணையோடு வேற்று நாட்டு அரசர்கள் அந்த நாட்டைக் கைப்பற்றும் சூழலும் அமைந்துவிடலாம். இதனால் மன்னன் வரிச்சுமையை மக்களிடம் அதிகம் செலுத்த வேண்டாம் என்று அரசியல் அறம் பேசுகிறது சிலப்பதிகாரம்.

தன்னலமின்மை

பொதுமக்களின் பொது நன்மை கருதியது அரசியல். தன்னலம் துறந்து பொது நலம் காக்கும் நிலையில் அரசியல்வாதிகள் விளங்கவேண்டும். இதனை ஓர் உவமை வாயிலாகக் காட்டுகின்றார் இளங்கோவடிகள்

            ‘‘கோத்தொழிலாளரொடு கொற்றவன் கோடி

            வேத்தியல் இழந்த வியனிலம் போல

            வேனலங் கிழவனோடு வெங்கதிர் வேந்தன்

            தானலந் திருகத் தன்மையிற் குன்றி

            முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

            நல்லியல்பிழந்து நடுங்கு துயருறுத்துப்

            பாலை என்பதோர் படிமம் கொள்ளும்”

என்று பாலை நிலத்திற்கான முதற்பொருள் இலக்கணத்தை வகுக்கின்ற காலத்தில் அரச சுற்றம் தன்னலமின்றி இருக்கவேண்டும் என்கிறார்.

கோத்தொழிலாளர் என்பது அரசியல் சுற்றத்தைக் குறிப்பது. இவ்வரசியல் சுற்றத்துடன் அரசன் முறையற்ற செயல்களைச் செய்வான் ஆனால் குடிகள் அவனை வெறுப்பர். இது போன்று முல்லை நிலமும், குறிஞ்சி நிலமும் திரிந்து சூரியனின் வெம்மையால் பாலை நிலமாகின என்று இளங்கோவடிகள் காட்டுகின்றார். இதன்வழி அரசன் மற்றும் அரசியல் சுற்றம் ஆகியன தன்னலமின்றி இயங்கவேண்டும் என்ற அறப்பண்பு வெளிப்பட்டு நிற்கிறது.

பாலை நிலத்திற்கு ஓர் உவமை சொல்லப்பட வேண்டிய நிலையில் இளங்கோவடிகளுக்கு அரசியல் சார்ந்த உவமையே நினைவிற்கு வந்துள்ளது எனில் அவரின் அரசியல் திறம் நோக்கத்தக்கதாகும்.

பாலைக்கு முதன் முதலாக நிலம் காட்டும் இலக்கணப் புலவராக இளங்கோவடிகள் விளங்கினாலும், அந்நிலத்தின் இயல்பிற்கு அரசனின் கொடுங்கோன்மைப் பங்கினைக் காட்டியிருப்பது அவருக்குள் பாலையும் உருவாகக் கூடாது, மன்னிரன் கொடுங்கோல் ஓர் அரசம் ஆளப்படக் கூடாது என்ற எண்ணம் இருந்துள்ளமையைக் காட்டுகின்றது.

கொடுங்கோன்மை

அரசனின் செவ்விய பண்புகளில் ஒன்று செங்கோன்மை. முறை செய்து காக்கும் மன்னவன் மக்களின் கடவுளாகக் கருதப்படுவான். அவனின் ஆட்சி செங்கோல் ஆட்சி ஆக நடைபெறும். ‘‘அறநெறி செங்கோல், மறநெறி நெடுவாள்”  என்பதே மன்னனின் அடையாளம் என்கிறார் இளங்கோவடிகள். அதாவது அரசன் தன் கரங்களில் இரண்டினைக் கொள்ள வேண்டும். ஒன்று செங்கோல் மற்றொன்று வாள். செங்கோல் என்பது அறத்தின்  அடையாளம். வாள் என்பது மறத்தின் அடையாளம். செங்கோலானது அறத்தின் வழி செல்ல, வாளாது அந்த அறத்தைக் காக்கும் மறத்தின் வழி செல்லும். இவ்வழி செல்லும் அரசே நல்ல அரசாகின்றது. ஆனால் வாள்வழி செங்கோல் செலுத்தப்பட்டால் அவ்வரசு கொடுங்கோல் அரசாகிவிடும்.

‘‘மறனொடு திரியுங் கோல் மன்னவன் தவறிழைப்ப,

அறனெனும் மடவோய்யான் அவலங் கொண்டழிவலோ”

என்று கண்ணகியும் பாண்டியன் அறம் பிறழ்ந்த தன்மைக்கு மறனொடு திரியும்  கோலாக அவனின் செங்கோல் விளங்கியது என்று குறிப்பிடுகிறாள். அறத்தின் வழிப்பட்டு  பாண்டியன் இயங்கவில்லை. மறத்தின் வழிப்பட்டு நடந்து, அதையே அறத்தின் வழி கொண்டுவரப் பார்க்கின்றது பாண்டியனின் அரசு என்கிறாள் கண்ணகி.

சிலப்பதிகாரத்தில் உணர்த்தப்படும் தலையாய அறம் அறத்தின் வழியல் மறம் செல்லல் வேண்டும், மறத்தின் வழி அறம் செல்ல வேண்டாம் என்பதாகும்.

செங்கோல் தன்மையுடன் அரசு நடத்தப்பட வேண்டும் என்பதைக் காட்டுவதற்கு சிபிச் சக்கரவர்த்தியின் வரலாற்றை இரண்டு இடங்களில் எடுத்துரைக்கின்றார் இளங்கோவடிகள்.

            ‘‘எள்ளறு சிறப்பின் இமயவர் வியப்பப்

            புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்”

என்று கண்ணகியால் சிபிச் சக்கரவர்த்தி வரலாறு செங்கோல் அரசிற்குச் சான்றாகக் காட்டப்பெறுகிறது. இதே வரிசையில் கண்ணகியின் சொற்களில் மனுநீதிச் சோழனும் இடம்பெறுகிறார்.

கண்ணகியின் சொல்லடுக்கில் அவளின் நெருக்கடியில் செங்கோன்மை சார்ந்த அரசுகளின் பெயர்களை மட்டுமே உச்சரிக்க முடிந்தது. கண்ணகி பேசிய காலத்தின் நெருக்கடிச் சூழல் அது. மனுநீதிச் சோழனின் வரலாற்றை அறம் சார்ந்த செங்கோன்மை வரலாறாக மற்றொரு இடத்தில் விரித்துரைக்கினார் இளங்கோவடிகள்.

சேரமன்னன் வெற்றிக் களிப்பில் இருந்தபோது அதாவது கங்கைக் கரையில் இருந்து கல் கொண்டு வந்து நிறைந்த நாளில் மாடல மறையோன் சிபிச் சக்கரவர்த்தியின் வரலாற்றின் செங்கோல் தன்மையை அற நிலைப்பட்டு அவன் மனங் கொள்ளும்படி எடுத்துரைக்கிறான்.

            ‘‘குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர

            எறிதரு பருந்தின் இடும்பை நீங்க

            அரிந்துடம் பிட்டோன் அறந்தரு கோலும்”

என்று இந்த வரலாறு அறந்தருகோல் வயப்பட்டு நடந்துள்ளமையை அறியமுடிகின்றது.  சிபிச்சக்கரவர்த்தி புறா உற்ற துயரத்தை மட்டும் தீர்க்கவில்லை. அந்தப் புறாவை இழப்பதால் பருந்துக்கு ஏற்படும் பசி வருத்தத்தையும் அவன் தன் உடல் கொண்டு தீர்த்துள்ளான். அல்லல் பட்டு வரும் உயிர்களைக் காப்பதும், அதனை வருத்த முனையும் உயிர்களை அமைதிப் படுத்துவதும் மன்னன் கடமை. அதுவே அறத்தின்பால் நிற்கும் அரசின் நடைமுறை என்பதை அறிந்து தன்னை அழித்து மற்ற உயிர்களைக் காக்கும் தன்மை பெற்றவனாக சிபிச் சக்கரவர்த்தி இருந்துள்ளார். இதுவே அறத்தின் வழிப்பட்ட செங்கோன்மை அரசாகும். சிபிச் சக்கரவத்தியின் கரம் ஒன்று செங்கோலைப் பற்றி நிற்கிறது. மற்றொரு கரம் அச்செங்கோல் சொல்லும் அறத்தைக் காக்க கையில் வாளுடன் தன் உடல் அறுக்கிறது. இவ்வகையில் ஆளப்படும் அரசே சிறந்த அரசாகும். இதில் மாறுபடும் அரசு கொடுங்கோன்மை அரசாகும்.

பாண்டியன் மரபும் செங்கோன்மை சார்ந்தே நின்றுள்ளது. இதனையும் சிலப்பதிகாரம் காட்டுகின்றது.

            பாண்டிய மன்னனின் நாட்டில்

            ‘‘காதின்

            மறைநாவோசை யல்ல தியாவதும்

            மணிநாவோசை கேட்டதும் இலனே

            அடிதொழு திறைஞ்சா மன்ன ரல்லது

            குடிபழி தூற்றும் கோலனுமல்லன்”

என்று பாண்டியன் நீதி தவறாலமல்தான் ஆட்சி செய்துவந்தான். அவனது நாட்டில் மறையோசைகள் கேட்கும். அதுவல்லது ஆராய்ச்சிமணியின் ஒசை கேட்கவே கேட்காது. பாண்டியனின் அடிதொழாத மன்னர்கள் பாண்டியனின் வீரம் கருதி அவனைத் தூற்றுவது அல்லாது குடிகள் பழிக்கும் கொடுங்கோலனாக அவன் விளங்கவில்லை என்று மதுராபதி தெய்வம் பாண்டியனின் அறத்தின் திறத்தைக் காட்டிநிற்கிறது.

            கொடுங்கோன்மை இன்னும் சில குறிப்புகள் இளங்கோவடிகளால் வழங்கப்பெறுகின்றன.

            ‘‘கொடுங்கோல் வேந்தன் குடிகள் போல

            படுகதிர் அமையம் பார்த்து இருந்தோர்க்கு”

என்ற நிலையில் கதிரவனின் மாலை நேர மறைவைக் காட்டும் நிலையிலும் இளங்கோவடிகளுக்கு அரசியல் சார்ந்த உவமை பயன்பட்டுள்ளது.

கொடுங்கோன்மையை உடைய வேந்தனின் கீழ் வாழும் குடிகள் அலைப்புறுவார்கள். துன்பப்படுவார்கள். இவர்களின் துன்பம் அளவிடற்கரியதாக இருக்கும். இக்காலத்தில் இம்மன்னன் எப்போது நீங்குவான் என்று குடிகள் ஏங்கி நிற்பர். அதுபோன்று கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் ஆகியோர் எப்போது வெயிலின் சீற்றம் குறைந்து இரவு வரும் என்று காத்திருந்தனராம்.

இவ்வாறு கொடுங்கோன்மை ஒரு நாட்டில் நிலவக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டுக் காப்பியம் படைத்துள்ளார் இளங்கோவடிகள்.

            ‘‘செறிகழல் புனைந்த செருவெம் கோலத்துப்

            பகை அரசு நடுக்காது பயம் கெழு வைப்பின்

            குடி அரசு நடுக்கு றூஉம் கோலேன்  ஆகுக”

என்று சேரன் வஞ்சினம் உரைக்கின்றான்.

வடதிசை சென்று வடதிசை மன்னர்களை வென்று அவர்களின் தலையில் கல்லை வைத்துக் கொணராது என்னுடைய வாள் தோல்வி பெற்று திரும்புமானால்

நான் நல்லாட்சியில் அமைதியுடன் வாழ்ந்து வரும் குடிமக்களை நடுங்கச் செய்யும் கொடுங்கோலை உடையவன் ஆவேன் என்று வஞ்சினம் பேசுகின்றான் சேரமன்னன்.

இவ்வாறு ஓர் அரசு என்பது செங்கோன்மையுடன் ஆட்சி செய்யவேண்டும் என்ற கோட்பாட்டினை வலியுறுத்தும் நிலையில் சிலப்பதிகாரத்தில் அரசியல் கோட்பாடு அமைந்துள்ளது.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அரசியல் அறக் கோட்பாடுகள் (பாகம் – 2)”

அதிகம் படித்தது