மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அரசும் தனியாரும்

இராமியா

Sep 18, 2021

அரசுத் துறை திறமைக் குறைவின் புகலிடம் என்றும், தனியார்த் துறைகள் திறமை வெளிப்பாட்டின் இருப்பிடம் என்றும் முதலாளிகளும், முதலாளித்துவ அறிஞர்களும் சளைக்காமல் பரப்புரை செய்து கொண்டு இருக்கின்றனர். இதை முழுமையாக ஆய்வு செய்து பார்க்காமல் பலர் அப்படியே திரும்பக் கூறுகின்றனர். இதைச் சங்கிகள் கூறும் போது அதற்கு விடை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் விடை சொன்னாலும் அதை அவர்கள் படித்து உள்வாங்கப் போவது இல்லை. இயந்திரத்தனமாகச் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லுவார்கள். அது மட்டும் அல்ல; அவர்களுக்குக் கேட்க மட்டுமே தெரியும். விடை சொல்லியே ஆக வேண்டும் என்று அவர்களை முட்டுச் சந்தில் கொண்டு போய் நிறுத்தி விட்டால் வேறு “நல்ல” வேலைகள் இருப்பதாகச் சொல்லி ஓடி விடுவார்கள். அப்புறமும் அவர்களுக்கு இருப்பும் கொள்ளாது. மீண்டும் கேள்வி கேட்க (மட்டுமே) வந்து விடுவார்கள். ஆகவே அவர்களைப் புறம் தள்ளி விடலாம்.

ஆனால் சில சிந்தனையாளர்கள் அப்படிப்பட்ட பரப்புரையில் மயங்கிக் கட்டுண்டு கிடக்கும் போது, அவர்களைத் தெளிய வைப்பது அவசியம் ஆகிறது. அதனால் தான் முதலாளிகளின், முதலாளித்துவ அறிஞர்களின் பரப்புரைகளுக்கு விடைகளை அளிக்கும் விதத்தில் இக்கட்டுரையை எழுதுகிறேன். அவர்கள் எழுப்பும் பிரச்சினைகள் / வினாக்கள் சிலவற்றை ஆராய்ந்து பார்ப்போம்.

மருத்துவ மனைகள்:

siragu-hospitals1

அரசு மருத்துவ மனைகளையும் தனியார் மருத்துவ மனைகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அரசு மருத்துவ மனைகளுக்குச் சென்றால் இல்லாத நோய்களும் தொற்றி விடும் போல் இல்லையா? தனியார் மருத்துவ மனைகள் சுத்தமாக, சுகாதாரமாக உள்ளனவே? அரசு மருத்துவ மனைகளில் ஊழியர்களுக்குக் கையூட்டு வழங்காவிடில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, ஏற்கனவே நரக வேதனையை அனுபவிக்கும் போது, ஊழியர்களின் வெறுப்பு கலந்த நடவடிக்கைகள் வேறு நம் துயரத்தை மேலும் கூட்டுமே?

உண்மை தான். ஆனால் இந்நிலை எப்போது இருந்து என்று யோசித்துப் பாருங்கள். தனியார் மருத்துவ மனைகள் வளராத காலத்தில், அரசு மருத்துவ மனைகளில் இது போன்ற சீர்கேடுகள் முற்றிலும் இல்லை என்று சொல்ல முடியாவிட்டாலும், பெரும் அளவு கட்டுக்குள் இருந்தனவே? அதெப்படி தனியார் மருத்துவ மனைகள் வளர்ச்சி பெறப் பெற, அரசு மருத்துவ மனைகள் சீர்கேடு அடைகின்றன? இதற்கு முதலாளிகளின், முதலாளித்துவ அறிஞர்களின் சதி வேலைகள் தான் காரணமாக இருக்க முடியும் என்று யூகிக்க முடியவில்லையா? அது ஒரு புறம் இருக்கட்டும். கொரோனா நோய் உச்ச நிலையில் தலை விரித்து ஆடிக் கொண்டு இருந்த போது, உச்ச நிலை உள் கட்டமைப்பு வசதிகளைக் கொண்டு இருந்த / இருக்கும்  தனியார் மருத்துவ மனைகளின் “பணி” எப்படி இருந்தது? இட வசதி இன்மை, உள் கட்டமைப்பு வசதி இன்மை, பணியாளர்களின் அக்கறையின்மை, கையூட்டுக் கலாச்சாரம் இன்னும் பல குற்றச்சாட்டுகளைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவ மனைகள் அல்லவோ மக்களின் புகலிடமாக இருந்தன?

சரி! இந்தியாவை / தமிழ் நாட்டை விட்டு விட்டு, உலக அளவில் பார்ப்போம். இரண்டாம் உலகப் போர் முடிந்த உடன் பொதுவுடைமைத் தத்துவத்தின் வளர்ச்சியைக் கண்டு, அரண்டு போன ஐரோப்பிய முதலாளிகள் அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியே தீர வேண்டும் என்று நினைத்து, இலவச மருத்துவச் சிகிச்சையைப் பல நாடுகளில் அறிமுகப்படுத்தினர். இன்றளவும் அது நன்றாகத் தானே நடந்து கொண்டு இருக்கிறது? இந்தியாவில் மிக அதிகமான செலவில் கிடைக்கும் மருத்துவச் சிகிச்சையின் தரத்தை விட, அங்கு கிடைக்கும் அரசின் இலவச மருத்துவச் சிகிச்சையின் தரம் மிக உயர்வாக உள்ளதே? இதில் இருந்து மருத்துவச் சிகிச்சையின் தரத்திற்கு, அந்த மருத்துவமனை அரசினுடையதா தனியாரினுடையதா என்பது அடிப்படைக் காரணம் அல்ல; வேறு உள் குத்துகள் தான் காரணங்களாக இருக்க முடியும் என்று யூகிக்க முடியவில்லையா? இதற்குத் தீர்வு அந்த உள் குத்துகளைக் கண்டறிந்து அவற்றைக் களைய வேண்டுமே ஒழிய தனியார்களிடம் விடுவதே தீர்வு என்ற முடிவுக்கு வரக் கூடாது அல்லவா?

அரசுப் பள்ளிகள்:

siragu-schools

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மிக அதிகமாக ஊதியம் பெற்றுக் கொண்டு, குறைந்த நேரமே பணி புரிகின்றனர். தனியார் பள்ளிகளிலோ குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டு அதிக நேரம் பணி புரிகின்றனர். ஆனால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் “கொழுப்பு எடுத்து” ஊதியம் போதவில்லை என்று போராடுகின்றனர். தனியார்ப் பள்ளி ஆசிரியர்களோ கூடுதல் வேலை கொடுத்தாலும் “மறுக்காமல்” செய்கின்றனர். ஆகவே பள்ளிகள் அனைத்தையும் தனியார்களிடம் ஒப்படைத்து விட்டால் ஆசிரியப் பணி சிறந்து விளங்கும்

 இது மிக மிக … மிக வெளிப்படையான, சுரண்டலுக்கு ஆதரவான வாதம். அரசு ஊழியர்களின் ஊதியம், பணியின் தன்மை, வாழ்க்கைக்குத் தேவையான பண்டங்களின் விலைவாசி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. விலைவாசி ஏறினால் ஊதியமும் உயர்த்தப்பட வேண்டும். அவ்வாறு உயர்த்தப்படவில்லை என்றால் அதற்காகப் போராடுவது ஜனநாயக உரிமை. அது கூடாது என நினைப்பது கொடுங்கோன்மை. தனியார்ப் பள்ளிகளில் குறைந்த ஊதியத்தில் வேலை செய்கிறார்களே என்றால், அது மக்கள் மீது திணிக்கப்படும் சமூகக் குற்றம். அதை அனுமதிக்கும் அரசு கொடுங்கோல் அரசு. இப்படி அனுமதிக்காமல் சரியான ஊதியம் அளிக்கும் படி, தனியாரை அரசு வற்புறுத்தினால் கல்வியை வணிகமாக நினைக்கும் யாரும் பள்ளிகளை நடத்த முடியாது. ஏனெனில் அப்படி நடத்துவதில்  இலாபம் கிடைக்காது. முதலாளிகள் தங்களிடம் உள்ள மூலதனத்தை இலாபகரமாக ஈடுபடுத்துவதற்கு வேறு தொழில்கள் கிடைக்காத நிலையில் தான் கல்வி, மருத்துவம், சாலை அமைத்தல் போன்ற அரசு மட்டுமே செய்ய வேண்டிய பணிகளில் மூக்கை நுழைக்கின்றனர். தங்கள் சுரண்டல் கொள்ளையை மறைக்க அரசுப் பள்ளிகளின் மீது வீண் பழியைச் சுமத்துகின்றனர்.

(மிகப் பலவீனமான பின் புலத்தைக் கொண்டு இருந்த போதும்) அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் பலர், (மிக வலுவான பின் புலத்தைக் கொண்ட) தனியார்ப் பள்ளி மாணவ மாணவிகளை விட மிகச் சிறப்பான சாதனைகளைச் செய்த செய்திகள் வருகின்றனவே? அவை எதைக் காட்டுகின்றன? அரசுப் பள்ளிகளின் தரம் நன்றாகத் தான் இருக்கிறது; ஆனால் சுரண்டல் சமூக உளவியல் தான் அதை மறைக்கிறது என்று தானே காட்டுகிறது? சுரண்டல் சமூக உளவியலுக்கு எதிராகப் போராடுவதை விட்டு விட்டு, முதலாளிகளின், முதலாளித்துவ அறிஞர்களின் பொய்ப் பிரச்சாரத்திற்குப் பலியாவது சரியா?

போக்குவரத்து:

siragu-busses

அரசு சார்பில் இயங்கும் பேருந்துகள் வசதியாக இருப்பது இல்லை; நிற்க வேண்டிய இடங்களில் நிற்பது இல்லை; ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் பிடித்த இடங்களில் உணவு இடை வேளைக்காக நிறுத்தி அங்கு தான் சாப்பிட வேண்டும் என்று பயணிகளை வற்புறுத்துவது போன்ற புகார்கள் வலுவாக உண்டு. தனியார்ப் பேருந்துகளில் இப்படிப் பட்ட புகார்கள் எழுவது இல்லை; எழுந்தாலும் உடனடியாக முதலாளி அதைத் தீர்த்து வைத்து விடுவார்.

இது போன்ற பிரச்சினைகளை மக்கள் பெரிதாக (சீரியசாக) எடுத்தக் கொள்ளாதது தான், அது நிலை பெறுவதற்கும், வலுப் பெறுவதற்கும் காரணம். ஆனால் தனியார்ப் பேருந்துகளில் செய்யப்படும் கட்டணக் கொள்ளையையும், அங்கு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தையும் அரசு நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். கட்டணக் கொள்ளை மூலமும், குறைந்த ஊதியம் மட்டுமே அளிப்பதன் மூலமும் முதலாளிகள் பெறும் இலாபப் பணம் மக்களுக்குத் தேவை இல்லாத சுற்றுச் சூழலை மாசு படுத்தும் ஆடம்பரமான பண்டங்களை உற்பத்தி செய்யவே செலவழிக்கப் படுகிறது. இப்போக்கைத் தொடர விடுவது மனித இனத்திற்கு மட்டும் அல்லாமல் உயிரினங்கள் அனைத்துக்கும் கேடு விளைவிக்கும்.

 மக்கள் தங்களுடைய அக்கறையற்ற மன நிலையை மாற்றிக் கொண்டு போராடினால் எளிதாகத் தீர்வு காண முடியும்; இன்று தனியார் அளிக்கும் வசதிகளை விட அதிக வசதிகளுடன் கூடிய பேருந்துகளில் மிகக் குறைவான கட்டணத்தில் பயணம் செய்ய முடியும். (போராடும் போது / தீர்வு காணும் போது அதற்கு எதிராகச் செயல் படும் மக்களின் எதிரிகளையும் அடையாளம் காண முடியும்.)

வேலை வாய்ப்பில் அரசின் பங்கு:

சில கள்ளம் கபடம் அற்ற நண்பர்கள், இவற்றை எல்லாம் அரசின் கீழ் கொண்டு வந்து விட்டாலும் பொருளாதார வளர்ச்சியில், வேலை வாய்ப்பு அளிப்பதில் அரசின் பங்கு 5% அளவில் கூட இருக்காதே? அதில் மனம் குவித்து வேலை செய்வதில் பலன் இல்லையே என்று கேட்கிறார்கள்.

அப்படி எல்லாம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் முடிவு செய்தால் தனியார்த் துறைகளை முற்றிலும் ஒழித்து விட்டு 100% வளர்ச்சியையும், வேலை வாய்ப்பையும் அரசிடமே இருக்குமாறு பார்த்துக் கொள்ள முடியும். ஆகவே நண்பர்களே! நம்மைச் சுரண்டிக் கொழுப்பதோடு மட்டும் அல்லாமல், அனைத்து உயிரினங்களும் அழிந்து போவதைப் பற்றிக் கவலைப்படாத நிலை கெட்டுப் போன முதலாளித்துவச் சிந்தனையில் முழுகிப் போகாமல் விடுதலை உணர்வுடன் சிந்தனை செய்யுங்கள்.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அரசும் தனியாரும்”

அதிகம் படித்தது