மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அர்த்தம் அற்ற பிழை (சிறுகதை)

அனோஜன் பாலகிருஷ்ணன்

Apr 4, 2015

kayal1கயல்விழியை திருமணம் செய்து ஓராண்டுக்குள் அம்மாவாகிவிட்டாள். நண்பர்கள் ஆச்சரியமாக வாயைப் பிளந்தார்கள். சந்தைக்கு செல்லும் போது உறவினர்கள் வழக்கத்துக்கு மாறாக புன்னகைத்தார்கள்.

அம்மாதான் பெண்பார்த்து செய்துவைத்தாள்.கயலை முதன்முதலில் கோயிலில் காட்டினார்கள். இவளா என் மனைவி? எத்தனையோ பெண்களை வேலைபார்க்கும் இடதிலும்,யுனிவேர்சிட்டிளும்,ஃபேஸ்புக்கிலும் பழகி சில்மிஷம் புரிந்திருந்தாலும் இவள்தான் உன் மனைவியாகப் போகின்றவள் என்று சொல்லி அவளைக் காட்டும்போது நிச்சயம் ஒரு ஆண் தடுமாறுவான். அது எனக்கும் நடத்து, அடிவயிற்றில் ஒருவினோத உணர்வு, நெஞ்சில் எதோ சுரப்பது போன்று ஒரு உணர்வு. முதன்முதலில் நானம் ஒரு ஆணின்கண்களில் ஜில்லிடுவது அப்போதுதான்.

நிச்சயதார்த்தம் முடித்தபிற்பாடு அம்மா போனில் கதைக்கச் சொன்னாள். நானும் ஆர்வமாக போன்நம்பரை குறித்துக் கொண்டேன். அவளுக்கு டயல் செய்யும் போதுதான் நான் மீண்டும் தடுமாறினேன். கயல் அம்மாதான் எடுத்தாள்.

“ஹலோ. . . . . . . . ”

“ஹலோ. . . . . . அன்ட்டி. . . . . நா. . . நா. . . ”

“ஹோ. . . . . மாபிளையா?”

“. . . . . ஆமா. . . ”

“என்ன விஷயம். . . ஹிஹி. . . கதைக்கப் போறீங்களா?. . . . ஒரு நிமிஷம் பொறுங்க. . . ”

கயல் கயல் அப்படின்னு கூப்பிடும் சத்தம் கேட்டது. . . . . . ஐந்து நிமிஷம் ஆச்சு. . . ஹும். . ஒரு சத்ததையும் காணவில்லை. ரிசிவருடன் நடு நடுங்கிக் கொண்டு பில்லிபோல் இருந்தேன். ச்சே. . . . . ஒரு பொண்ணுடன் கதைக்க இப்படியா வியர்க்கும்? சில விஷேச ஹோர்மோன்கள் புதுசாகச் சுரந்தது, துன்புற வைத்தது.

“ஹல்லோ. . . . . . . . . . . ” ரொம்ப மெல்லிய பெண்குரல் ரிசீவர் முனையில் இனித்தது.

என் இதயம் சூடேறி மூச்சுக் குழாயை சிக்கல்படுத்தியது.

“ஹேலோ. . . . . . ” என்றேன் நலிந்த குரலில்

“ம்ம். . . . . . . . . . . . . . . . . . ”

“என்ன ம்ம்?”

“சொல்லுங்கோ. . . . ”

“அம்மா. . . பக்கதுல நிக்குறாங்களா?”

“இச்ச்ஸ். . . . . . . . . . . . ” காத்துச் சத்தம் கேட்டது

“ஹலோலோலோ. . . . . . . . . . . ”

“இல்ல இல்ல. . . . மீன் வாங்க போயிட்டாங்க. . . . . . நான் ரூம்லதான் இருக்கன். ”

முதன் முதலாக வரப்போகின்ற மனைவியுடன் கதைத்தஉன்னத தருணத்தை யாரும் மறக்கமாட்டார்கள். எழுபது வயதிலும் இனிக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

கல்யாணம் ஊரில்தான் நடந்தது. தங்கை கொழும்பில் இருந்து புருஷனுடன் வந்துதிருந்தாள். கயலுக்கும் ஒரு தங்கைதான். அடுத்தவருடம் அவளுக்கும் காலியாணமாம். அப்படின்னு அப்போ சொன்னார்கள். அவளின் கலியாணத்துக்கு ஒருமாத கைக்குழந்தையோட போவன் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால் போனது அப்படித்தான்.

என் கல்யாணத்துக்கு நிறைய உறவிணர்கள் மினுங்க மினுங்க வந்திருந்தார்கள். முன்வரிசையில் இருந்த என் அம்மாவின் கனடா அண்ணாமார்கள் அதாவது என் மாமாமார்கள் ஊரில் தலைநரைத்த பெரியவர்களுடன் கதைத்துக்கொண்டு இருந்தார்கள்.

“பொடியன் டெலிக்கம்ணிக்கேஷன் என்ஜினியாராமே எவ்வளவு மாசச் சம்பளம்?”

“நல்ல சம்பளம். . . . ட்ரின்கோல வேலை. . . . . ” என்றார் சூரிமுமாமா

“ஓ. . . . நமது கோகுலா. . . புருசனும் அங்கதான் வேலை. . . . . . ”

“யாரு கோகுலா?”

“அட. . . நமது. . . . . . விக்னேஸ்வரன் தம்பி. . . . மகன் முடிச்சான். . . ”

“அடடே. . . அப்படியா? . . . சரி. சரி. . ”

“கனடா போனபிறகு எல்லாம் மறந்துட்டீயா?”

ஆளாளுக்கு ஓவ்வன்று பேசிக்கொண்டார்கள்.  ஐயர் ஓமம் போட்டு என்னை துன்பமற்று விநோதமாக அழவைத்துக் கொண்டிருந்தார். தாலிகட்டி முடிக்கும்வரை அந்த வினோத சம்பிரதாய சித்திரவதைகள் பாராபட்சம் இன்றி தொடர்ந்தது. சகஜ நிலைக்கு கீழிறங்கிவர ஒருவாரம் சென்றது தனிக்கதை.

முதன்முதலில் கயலை தொடும்போது அவளின்கை லேசாக நடுகியது இன்னும் நிணைவுள்ளது. அவள் உயர்தரம் வரைதான் வணிகத்துறையில் படித்து இருந்தாள். வவுனியாவளாகத்தில் படிக்க இடம் கிடைத்ததாம். ஆனால் அப்பா தங்கிப்படிக்க விடவில்லையாம்.

மூன்றுமாத குழந்தையை மேய்ப்பது ரொம்ப சுவாரஸ்யமான விடயமாக இருந்தாலும் கயல்தான் ரொம்பவும் மிணக்கிடுவாள். கயலின் அப்பா ஒரு தமிழ்வாத்தியார். மேகலை என்று பெயர்வைத்தார்.

“மேகலை. . . அப்பாவை பாரு. . . . . . . . ”

“க்ளுக். . . . ” என்று சிரித்து கண்ணடித்தது.

“அடி கள்ளி அப்பவை பார்த்து கண் அடிகுறீயா??” என்றாள் கயல்

யாழ்ப்பாணதில்தான் என் சொந்தபந்தமும் அவளின் சொந்தபந்தமும் இருந்தது. திருக்கோணாமலை புது இடம். கல்யாணம் முடிய திருக்கோணாமலை வாடகை வீட்டுக்கு வந்ததுவிட்டோம். இலங்கை ஒலிபரப்புக் கூடுத்தாபனத்தில் எனக்கு வேலை. ஜேர்மன்காரன் கட்டி வேலை செய்து அப்புறம் இலக்கை அரசுக்கு இலவசமாக கொடுத்தது.

சனி,ஞாயிறு ரொம்ப ப்ரீயா இருப்போம். மேகலையோட விளையாட எனக்கு நேரம் கிடைக்கும்.

என் சாம்சன்கலக்ஷி சிணுங்கியது. புது நம்பராக இருந்தது.

“ஹலோ?”

“திஸ் இஸ் ராதேயன்??”

“யெஸ். . . மே ஐ நொவ் ஹு இஸ் திஸ்???”

“டேய். . . . . நான்தாண்டா ரங்கு. . . . . ”

“ரங்கு வா??? எந்த ரங்கு??”

“சரியா போச்சு. . . . . ரங்கராஜன்டா. . . . ”

“டேய். . . . . . . . . நீயா? எப்படி இருக்க? கலியாணத்துக்குகூட வரல. . . . . நீ யு. ஸ் இல்லோ??”

“மெயில் செக் பன்ணலையாடா ஐசே?”

“இல்லைடா. . . . . . . ஏன்டா?”

“படுபாவி. . . . . . நான் ட்ரின்கோதாண்டா வத்துட்டு இருக்கேன். . . . சயாப்ளூல டூ டேஸ்நிப்பன். “

“அட. . . . வாடாவா. . . . ரொம்பநாள் அப்புறம் ஸ்ரீலங்கா வார. . . . வாவா ஜப்ணா போகலையா???”

“ரெண்டு நாள் இங்க நின்டுட்டு அப்புறம் போரேண்டா”

“ஓகேடா. . . . . . பேரன்ஸ் எப்படி இருக்காங்க???”

“எல்லாம் நலம். . . டேய் டுடே என்னோட டின்னெர், உன் மிஸ்சஸ் ஓட வாடா. . . ”

ரங்கராஜன் என்கூட ஒரே ஸ்கூல்ல படிச்சவன். ஒன்னாதான் சயின்ஸ்ஹால் தனியார் வகுப்புகளுக்கு போவோம். சைக்கிளில் நானும் அவனும் சுத்தாத இடம் இல்லை. அவனுக்கு களனி யுனிவேர்சிட்டில் பௌதிகவிஞ்ஞானம் கிடைத்தது. படித்தான் எம். எஸ். சியும் செய்தான். பி. எச். டியும் செய்யப்போறன் என்று போனவன். அப்புறம் மெல்ல மெல்ல அவன் தொடர்பு நீர்குவளை ஆவிபோல் காணாமல்போனது. ஃபேஸ்புக்கிலும் அவனை நான்காணவில்லை. மின்னஞ்சலில் ஒருமுறை நம்பர் கொடுத்து இருந்தேன். ஒருமுறை கூட நானோ அல்லது அவனோ தப்பித்தவறி கதைக்கவில்லை. இப்பபோதுதான் அவன் தரிசனம் கிடைத்தது.

நான் சாயாப்ளூ செல்ல மணி ஏழைத் தாண்டியிருந்தது. கயல் காரில் மெலிதான சிரமத்துடன் குழந்தையோடு இருந்தாள். ரிசப்ஷனில் இருந்து அவனை அழைக்க வெளியில் வந்தான். டிஸ்கவரியில் பாம்பு பிடிக்கபோகின்றவன் மாதியிருந்தது அவன் உடை. தலையில் முடி அடர்த்தி குறைத்து இருந்தது. தொப்பை இருந்து. சினேகமாக கட்டிப்பிடிக்க வயிறு இடித்து.

“ரொம்ப மாறிட்ட” என்று புன்னகைத்தேன்

“நீ அப்படியே இருக்குறடா. . . . ”

பெயர் இலகுவில் நினைவுபடுத்த முடியாத ஒரு ரெஸ்டாரெண்டுக்கு போனோம். என் குழந்தையை ஒரு விசித்திர ஜந்துவாகப் பார்த்தான்.

“டேய். . . உன் மகனா?”

“மகன் இல்லை மகள். . . . . . . . . மாமாக்கு ஹாய் சொல்லு” என்றாள் கயல்

“கிளுக். . . . கியகுக்லோ. . . . ” என்று சிரித்து.

“எதோ. . . . பயோலாஜிக் நேம் சொல்லுது. . . ஹாஹா. . . . உமக்குத்குதான் பயோ நல்லா வருமே ராதே. . . . . ”என்று கண் அடித்தான்.

அந்த ரெஸ்டாரெண்டில் நம்மைத்தவிர யாரும் இல்லை. மெலிதான வெறுமை குடிகொண்டிருந்தது. மெல்லிய வைக்கோலினால் வேயப்பட்டு குறைந்த வெளிச்சத்தில் மின்குமிழ்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் பிடித்ததை மெனுக்கார்ட்டில் கடினப்பட்டு தேடி ஓடர்பண்ணிக் கொண்டோம். நான் எடுத்த நூடில்ஸையே கயலும் ஓடர் பண்ணிக்கொண்டாள். குழந்தையுடன் வந்ததால் நாம் வேகமாக வீடு செல்ல ஏற்கனவே தீர்மானித்திருந்தோம்.

“சங்கீதாவை கண்டனான்டா. . . ”

நிமிர்ந்து பார்த்தேன். ஒருகனம் எனக்கு தூக்குவாரிப்போட்டது. கயல் குழத்தையைமடியில் தாங்கியவாறு சாப்பிடுவதற்கு கடினப்பட்டாள்.

“ஓஒ. . . . . . . . . . ”

“உன்னோட கதைகுரவளாம்”

“அது ஒருக்கா ஃபேஸ்புக்லடா. . . . ”

“அப்பிடியா? ஹிஹி. . . . போன டிசம்பர் சொன்னாள், தான் உன்னோட போன்ல கதைச்சனான் என்று. . . ”

“. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ” என்னால் பேச முடியவில்லை. இவன் ஏன் இப்ப இந்த பேச்சை எடுக்கின்றான்

“யாரு சங்கீதா?” என்றாள் கயல்

என்னால் சரியாக விழுங்கமுடியவில்லை. நூடில்ஸ் தொண்டைக்குள் விசித்திரமாக சிக்கியது.

“அட இவன் ஏல் படிக்கக்கே லவ்பண்ணின பொண்ணுங்க, அது ஒரு காலம் இவனை சைக்கிள் பார்ல ஏதிக்கிட்டு நான்தாங்க சுத்தினான், நாங்க மக்ஸ், சங்கீதா பயோ, அவள இம்ப்ரெஸ் பண்ண இவன் பயோ கிளாஸ் கூட போனவன். போய் அவள் பெஞ்சுக்கு பின்னால இருப்பான். . . பயோ சேர் திவாசேர்ட பிடிபட்டு பேச்செல்லாம் வேண்டி இருக்கான். . . இப்ப நினைச்சா சிரிப்பா இருக்கும் கோல்டன் மெமரிஸ் அப்புறம் அதேல்லாம் இல்லாமப் போச்சு. இப்ப நினைச்சா சிரிப்பாகவிருக்கும். . ”

நான் சுதாகரிக்க முதல் சொல்லிமுடித்தான். அலவாங்கால் பிரடியில் சாத்தியதுபோல் நினைவு பிஸரியது. கயலின் பார்வையைத் தவிர்த்தேன். வீடுவரும்வரை அவள் எதும் பேசவில்லை, நானும் மௌனமாக இருந்தேன். என்னால் அந்த போலி அமைதியை ஜீரணிக்க முடியவில்லை.

வீட்டைத்திறந்து லைட்டைப் போடும்போது பகத்துவீட்டு பூனை மேசையில் இருந்து துள்ளிக்குதித்து ஓடியது. அந்த சாம்பல்நிறப் பூனையைக் கண்டாள் கயல் அடிபின்னியேடுத்துவிடுவாள். அவள் அப்படி ஒன்றும் செய்யாது செயற்கையாகக் கடந்து போனாள். நாளை ஞயிற்றுக்கிழமை.

எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை, எழும்பும்போது மணி ஏழைத்தாண்டி இருந்தது. மேகலை அழுது கொண்டிருந்தது. தலை சாதுவாக வலித்தது.

கயல் தோசை சுட்டிருந்தாள். ரெண்டாவது தோசையை விழுங்கும் போது அவள் கேட்டாள்.

“யாரு சங்கீதா???”

“என்கூட படிச்சா. . . . ”

“லவ் பண்ணீங்கள???”

“. . . . . . அ. . அ. . . அது சின்ன வயசுல”

“அப்புறம் ஏன் அவளை கலியாணம் பண்ணலை?”

“அது ஜஸ்ட் லவ். . . அப்போ இருந்தீச்சு இப்போ இல்லை”

“அப்படினா?”

“லுக். . . அது ரொம்ப சின்ன வயசுல டீன்ஏஜ்ல நடந்த ஒரு அற்பமானவிபத்து”

அவள் கண்கள் பனித்தி இருந்தது. ஏதும் பேசவில்லை. எனக்குள் இருந்த ராதேயன் ஒரு மூலையில் சரிந்து கொண்ட்டிருந்தான். மேலும் தொடர்ந்தேன் “ நான் படிச்ச கெமிஸ்ட்ரி கிளாஸ்ல அவள் படிச்சாள் குரூப் கிளாஸ் நாளுபொண்ணுக நான் ஒரு பொடியன். ஒருசமயத்துல நான் அவளை காரணம் இல்லாமல் விரும்பினேன். அந்த விருப்ப இச்சையை தோற்றுவித்தவள் அவள். அவள் என்னை விறும்பினதும் நிஜம். ஒருவரிடம் நிலையில்லாமல் இருந்தேன். திடடீரென்று அவள் சம்மதம் இல்லாமல் பேசினாள். ரொம்ப வலித்து. காரணம் சொன்னாள். அவங்க குடும்பத்தில காஸ்ட் பாப்பாகலாம். அவளை நான் கேவலமாக பார்த்தது அப்போதுதான். அவங்க அம்மா ஒருபோதும் ஓம் சொல்ல மாட்டாங்களாம் என்று ஏதோ சாக்குபோக்குச் சொன்னாள். அதோட நானும் மறந்துட்டேன். அப்புறம் எனக்கே சிரிப்பாக இருந்திச்சு. . . . போயும்போயும் இவள் பின்னுக்கு அந்த வயசில் திரிந்தோமே என்று. . ”

நான் சொல்லிமுடிக்க அவள் அழுதாள்.

“இப்ப ஏன் அழுறடி???”

“இதபத்தி நீங்க சொல்லவே இல்ல. ”

“இது ஒரு விஷயமும் இல்லை நான் என்ன அவளோட குடும்பமா நடத்தினேன். அவள் விரலகூட நான் தொட்டது கிடையாது”

“அப்ப ஏன் இப்போ அவளுடன் கதைக்குறியல்???”

“யாரு சொன்னா?”

“உங்க பிரண்ட்தானே என் முன்னால் சொன்னார். ” என்றாள் மூக்கை சிந்தியவண்ணம். ச்சே இந்தப் பெண்கள் சில சமயத்தில் எவ்ளவு புத்திசாலிகள்.

“அ. . அ. . அ. . . அதுவந்தது ஃபேஸ்புக்ல என்நம்பர் இருக்கு. . . . . . அத வச்சு ஒருக்க கால் எடுத்தாள்”

“ஒ. . . . . . . . அப்ப அவளுடன் ராவு ராவா சட் வேற பண்ணுரியலோ, இப்பத்தானே புரிது ஏன் இந்த லட்டாப்ல ராவுராவா மினக்கடுரியல் என்று”

“அடி மூதேவி, அவள் கலியாணம் முடிச்சு ஸ்டேட்ல இருக்காள், அவள்தேடி எனக்கு ரிக்குவஸ்ட் கொடுத்திருந்தாள். அவள்மேல் எனக்கு காதலோ கத்தரிக்காய்யோ இல்லை அடிமட்டக் குரங்கு. . ” குரலை உயர்த்தி கத்தினேன். அவள் விம்மி விம்மி இன்னும் அழத்தொடங்கினாள். அம்மா அழுவதைப் பார்த்து குழந்தை “விர்ர். . . . கேகேகே. . . . . . . . ”என்று சம்பந்தம் இல்லாமல் அழுதது.

கயலின் தோலைத்தொட்டேன். விருட் என்று தட்டிவிட்டாள். அவளை முதன்முதலாக தொட்டபோது அவள் இப்படித்தான் தட்டிவிட்டாள். அதில் ஒரு நானம் கலந்த காமம் இருந்தது. இப்போது கோபம் கலந்த வெருப்பு இருந்தது. பேசாமல் எழுந்து சென்றாள். குழந்தையை மார்புடன் அணைத்துத் தூக்கினாள். குழத்தை அழுகையை மெல்லமெல்ல குறைத்து நிறுத்தியது.

வெருப்புடன் ஜன்னலை நோக்கினேன். காலை வெயில் சுட்டது. வீட்டை விட்டு வெளியே வந்தேன். போன் சிணுங்கியது. அத்த ரங்கு பயல்தான். இவன் என் இப்படிச் செய்தான் பரதேசி? கதைக்க வேறு கதையா இல்லை. அவனை நினைக்க ரொம்ப கடுப்பு தலைக்கேறி நரம்பு மண்டலங்களை சூடாக்கியது.

“ஹலோ. . . . . . ”

“என்ன ஒய். . . . . . . ஒரு சத்தத்தையும் காணம் அப்புறம்??”

“டேய் நீ செய்தது உனக்கே நியாயமா இருக்காடா? இப்ப அந்தகதை அவசியமா? உன்னை யாரு இப்ப கேட்டா சங்கீதாவைப் பத்தி?” பொறிந்து தள்ளினேன்.

“ஏன்டா எதுக்கு இப்ப கத்துறடா?”

“எத்துக்கா நீ சங்கீதாவைப் பத்தி சொன்னது இப்ப ரொம்ப பிரச்சனையாப் போச்சு. . . உன்னையாருடா. . . ”

“சாரி, சாரி . . . . ஹேய் கம் கூழ் டோவ்ன். . . . . தென் டெல் அச்சுவலி வாட் ஹப்பேன்???”

“அப்பறம் கதைக்குறேன் வைடா போனை” சடக் என்று கட் பன்ணினேன். போனை ஆப் செய்துவிட்டு தூக்கியெறிந்தேன். சுழன்று போய் கட்டிலுக்கு அடியில் விழுந்தது. திரும்பினேன் கயல் தலைகளைந்து நின்றுகொண்டிருந்தாள்.

“ஏன் இப்போ அவருக்கு பேசுரியல். . . . . அவர் என்ன செய்தாறு??”

அமைதியாக அவளைப் பார்தேன். “இங்க பாரு நான் அவளை ஒன்றும் சினிமாத்தனமா காதலிக்கவில்லை நீ நினைக்குற மாதிரி, அவதான் என்கூட லவ்வாகதைச்சா தொடக்கத்துல அப்புறம் அதெல்லாம் காணாமப்போச்சு. . இது எல்லாருக்கும் வார இளமை சில்மிஷம் இதை எல்லாம் பெரிசு படுத்தாத. . ”

“என் பின்னாலையும்தான் பொருளியள் கல்லூரில நாளு,அஞ்சு பேரு வந்தாங்க. . அதுக்கு”

“இப்ப எதுக்கு சம்பந்தம் இல்லாம கதைக்குற?”

“யாரு நானா நீங்கதான் அவளோட. . . . . கதைக்குறீயல். . . . ”

“இங்கபாரு அவள் இப்ப கதைச்சது பிரண்ட்லியா. . . . . ”

“கலியாணம் முடிச்சு குழந்தை இருக்கு. . . பழைய காதலியோட கதைக்குறது மனைவிக்கு தெரியாம பிரண்ட்லியா?”

“எடியே. . . . என்ன லூசுத்தனமா கதைகுற?” குரலை உயர்தினேன்

“யாருநானா?. . . . . . . நீங்க போன்ல கூத்து அடிப்பீங்க கேட்டா லூசா??”

“ஏய்ய். . . . . . . . . . அவள் என்கூட அப்படி ஒன்றும் கதைக்கல, ஜஸ்ட் எப்படி இருக்கிற என்று சும்மா கதைச்சா, நானும் சரி என்று சும்மா கதைச்சேன், ஒரு ரெண்டு நிமிஷம் கூட இருக்காது. . . . ”

“ஓஒ. . . . . . சேட்ல எல்லாம் கதச்சு முடிச்சா. . . போன்ல கதைக்க என்ன இருக்கும்? அவள் சொல்லி முடிக்கும் முன் அவள் கன்னம் “பளார்” என்று மின்னியது. கயலை இதுக்குமுன் நான் அடித்ததே இல்லை. அவள் இதை எதிர் பார்க்கவில்லை. வெண்மையான கன்னம் இன்னும் சிவந்து இருந்தது. விர்கித்துபோய் சுவரோடு சாய்ந்து கொண்டாள். கண்ணீர் தாரையாக வழிந்தது.

விருட் என்று ஹங்கரில் இருந்த ஷர்ட் ஐ கொழுவிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தேன். பைக்கை எடுத்துக்கொண்டு இலக்கு இல்லாமல் சென்றேன், மனம் முழுவதும் சம்பந்தம் இல்லாத வெறுப்பு இருந்தது. சுவாரசியம் இல்லாமல் நிமிஷம் செல்ல தயக்கப்பட்டது. சரஸ்வதி தியேட்டர் கண்ணில் பட்டது. கூட்டம் இல்லை. டிக்கட் எடுத்து உள்ளே போனேன். ஐந்தாறு நபர்கள் இருந்தார்கள். ஒரு இளம்ஜோடி ஒரு மூளையில் இருந்தது. லைட் அனைத்தபின்பு அவர்கள் கார்னர் சீட் போனார்கள். படம் ஓடிக்கொண்டிருந்தது என்னால் எதுவும் ரசிக்கமுடியவில்லை. படமும் புரியவில்லை கார்னர் சீட்ல என்ன நடக்கிறதென்று கற்பனையும் செய்யமுடியவில்லை. மனம் ரொம்பசிக்கலில் மெலிதாகத்துடித்தது.

படம்முடித்து வெளியேவர கொடூரமாகப் பசித்தது. மதியமும் சாப்பிடவில்லை. பக்கத்து கடையில் பரோட்டா சாப்பிட்டேன். மனம் எளிமை இசை இயக்கம் ஆற்றியது. நிலையில்லாமல் தவித்தது. என் மீது ரொம்ப ஆச்சரியப்பட்டேன். கயல் கோபப்பட்டதில் என்ன அர்த்தம் அற்ற பிழை? நான் கோபப்பட்டது ஏன்? கோட்பாடுகளுக்குள் அடங்காத இந்த மூர்க்கத்தனம் ஏன்? நான் ஏன் அறைந்தேன்? புதிதாக தாய்மை அடைந்தவள் மீது மென்மையில்லாமல் நடந்து கொண்டது சரியா? வலித்தது ரொம்ப வலித்தது.

வீடு பூட்டியிருந்து. பைக் சாவியில் இருந்த வீட்டுத் துறப்பை எடுத்து உள்ளே ஓடினேன். கயலை காணவில்லை. குழத்தையையும் காணவில்லை. நிசப்தமாக வீடு இருந்தது. பக்கத்து வீட்டையும் கேட்டுப் பார்த்தேன். எந்த அறிகுறியும் இல்லை. அவளுக்கு யாரைத்தெரியும்? எங்கே போனாள்? பயம் அடிவயிற்றில் மெலிதாக எட்டிப் பார்த்து. கயலின் அப்பாக்கு போன் செய்தேன்.

“கயல் ஏதும் சொன்னாளா?”

“இல்லையே மாப்பிளை. . . . ஏன் என்ன ஆச்சு???”

“ஒன்னும் இல்லை சின்ன வாக்குவாதம் அவளை காணவில்லை. . . . . . . ”

“என்ன. . . . என்ன. . சொல்றீங்க? என்ன பிரச்சனை?”

“ஒன்றும் இல்லை மாமா. . . சும்மா சின்ன வாய்தகராறு. . . . . . . . எங்க போய் இருப்பாள் என்று தெரியலை. . ”

“எங்க கூடையும் எதும் சண்டையென்றால் கதைக்காம கொல்லாம கோயில் பக்கம் எங்கேயும் போயிடுவாள். . . அப்படி எங்கேயும் போயிருப்பாள். . . . . . ”

“சரி மாமா. . . . . . . . ”என்று பைக்கை கோயில்பக்கம் செல்ல எடுத்தேன். எந்தக் கோயில்? கொஞ்சம் பக்கத்துல இருக்குற கோயில் திருகோணமலை பஸ்டிப்போ முன்னால இருக்குற காளி கோயில். அங்கேசென்றேன். அவள் இல்லை. உள்ளே சென்று பார்த்தேன். ஹும் காணவில்லை. ரொம்ப பழக்கப்பட்ட குழந்தை அழுகுரல் கேட்டது. மேகலையை மடியில் தாங்கி சோர்வுடன் அவள் இறுந்தாள். வீடு வந்தபிறகு அவளை நான் எதும் கேக்கவில்லை. அவளும் எதுவும் பேசவில்லை. சோர்வுதான் உடலில் மனதில் வடுவாக எஞ்சியிருந்து.

இரவு தூக்கம் கலைந்தது. கயல் அயர்ந்துதூங்கிக் கொண்டிருந்தாள். எழுந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். மேகலை நெட்டி முறித்துக்கொண்டு இருந்தது. என் மீது அதுக்கும் கோபம் இருந்து போல் என்பார்வையைத் தவிர்த்தது. என்ன நினைத்ததோ தெரியவில்லை அழத்தொடக்கியது. கயல் திடுக்கிட்டு எழுந்து என்னையும் பார்த்தாள் குழந்தையையும் பார்த்தாள். குழந்தையைத் தூக்கி தோலில் போட்டாள். என்ன மாயமோ மர்மமோ உடனே அழுகையை நிறுத்தியது. என் லேப்டாப்பை கயல்முன் வைத்தேன்.

“இங்கபாரு கயல். . . . . . . என் மனதுல நீ மட்டும் தான் எப்பவும் இறுக்குற. . . . . நீயே என் ஃபேஸ்புக்ல இருக்குற எல்லாத்தையும் எல்லா மெசேசையும்பாரு. . . . . ”

“. . . . . . . . . . . . . . . . . . . . ”அவள் ஏதும் பேசவில்லை. அவளின் மௌனம் என்னை சிரியாவில் நடந்த ரசாயன தாக்குதல் போல் சிதறடித்தது.

“உன்னை அடித்தது என் மடத்தனம். . . . ப்ளீஸ். . . உன்னை கேஞ்சி கேக்குறன். . . என்கூடப் பேசு. . . . ”

என்னயே உற்றுப் பார்த்தாள். “இந்த ஃபேஸ்புக்காலதானே பிரச்சனை. . . இது இருந்தாதானே. . ”கையில் இருந்த லப்டாப்பை தூக்கி விஷுக் என்று தூக்கி எறிந்தேன். மார்பிள் தரையில் பட்டு சல் என்று நொறுங்கியது. டிஸ்பிலே நொறுங்கியிறுந்தது. மேகலை ஆர்வமாக நொறுங்கிய லேப்டாப்பை பார்த்து சிரித்தது.

“ச்சே ச்சே. . . . அப்படி ஒன்றும். . இல்லை. . . . நீங்க நினைக்குறமாதி ஒன்றும் இல்லை. . நான்தான் உணர்ச்சிவசப்பட்டு உங்களை. . கஸ்டப்படுத்திட்டேன். ”அவள் கண்கள் பனித்திருந்து.

“இல்லடி. . . . நான் சேட் பன்ணி இருக்கக் கூடாது. . . . . . இத முதலே உன்கிட்ட சொல்லியிருக்கனும், என் முன்கோபம் உன்னை அடிச்சுட்டேன். . . சாரிடி ரொம்ப வலிக்குதா????” அவள் கன்னத்தைத் தடவினேன். அவள் தட்டிவிட்டாள்.

“ஆமா. . . . இப்பதான் இவருக்கு. . . . ”என்று சினுங்கினாள்.

தன்னை ஒன்றும் கவனிக்காமல் இவர்கள் என்ன செய்யுறார்கள் என்று நினைத்ததோ என்னமோ “வீர்ர்ர்ரர்” என்று மேகலை அழுதது. “அச்சச்சோ. . . உன்னை கவனிக்க வில்லை என்று கோவமாடி. . . ”என்று இருவரும் சிரித்து அவளை என்தோழில் போட்டுக் கொண்டேன்.

ஒருவாரம் ரொம்ப பொறுமையாக நடத்து கொண்டேன். ரொம்ப நிதானம் கடைபிடித்தேன். ரொம்ப பொறுமையாக டிஸ்கவரியில் மேன் வெர்சஸ் வைல்ட் பார்த்துக்கொண்டு இருந்தேன். கயல் வந்தாள்.

“இந்தாங்க. . . . உங்க. . . ”என்று என் லேப்டாப்பை நீட்டினாள்,அவளை நிமிர்ந்து பார்தேன். அவள் முகத்தில் கவனிக்கமறந்த புன்னைகை ஒன்றிருந்தது.

“என்னடி இது???”

“உங்க லேப்டாப். . . . . நான்தான் பக்கத்து வீட்டு குணபால் அங்கிள்கிட்ட கொடுத்து ரிப்பியர் செய்யச் சொன்னேன். ”

“ஏன்டி என்னத்துக்கு. . . இது. . . ”

“நீங்க என்னதான் சிரிச்சு கதச்சாலும். . . முந்தியமாதியில்லை. . . . . . ஏதோ ஒன்று குறையுது. . . முகத்துல போலித்தனம் இருக்கு. . . எனக்கு பழைய ராதேயன் வேணும்ங்க. . . என்கூட குறும்புத்தனமா. . . செல்லமா சண்டை போடுற. . அந்தராதேயன் வேணும்ங்க. . . . . . நீங்க யாருகூட வேண்டும் என்றாலும் சேட் பண்ணுங்க. எனக்கு ஒன்றும் இல்லைங்க. கலியாணம் முடிச்ச புதுசுல இருந்து எப்படி கதச்சியலோ. . அப்படி கதையுங்க. . . . . ”

என் கண்கள் சாதுவாகக் கலங்கியது. இத்தனை நாட்களுக்குள் இவளை நான் முழுமையாக புரிந்து கொண்டது பூரணமாகவில்லை. அவளின் பெண்மையின் மென்மையை நான் துன்பப்படுத்திவிட்டேன். ஒரு சின்ன வெக்கம் என்னை அடிவயிற்றில் சில்மிஷம் செய்து. கையில் இருந்த மொபைல்போனை பார்த்தேன். சங்கீதா அனுப்பியிருந்த “ஹாய் ரங்கராஜன் சொன்னான் எதோ என்னால ப்ராப்ளம் என்று? வாட் ஹப்பன்?”என்ற இரண்டு மெசேஜ்க்கு மொபைலில் பேஸ்பூக்கை ஆன் செய்து திருட்டுத்தனமாக “நத்திங். . ” என்று பதில் அனுப்பியிருந்தேன்.

லேப்டாப்பை ஒன்பண்ணினேன் ஃபேஸ்புக்கை பார்த்தேன். இன்பாக்சில் சங்கிதாவின் புதிய இண்டு மெசேஜ் இருந்தது.

அவள் நட்பாகத்தான் என்னிடம் பழகினாள். அவளின் குற்றஉணர்ச்சி என் மீது நட்பாக கதைக்கத் தூண்டியிருக்கலாம். அவளின் கணவனிடம் அவள் என்னைப் பற்றி என்ன சொன்னாள் என்று தெரியவில்லை. நான் கேக்கவும் விரும்பவில்லை. இதுவரை இல்லாத ஒரு விநோத உணர்வு இருந்தது. அவளுடன் வெறும் நட்பாகத்தான் இப்போதும் பழகினேன். இவை நிச்சயம் கயலை துன்பப்படுத்தும். சில புரிதல்கள் புரியாமல் இருக்கும்போது விலகிவிடுவது நல்லது.

தொட்டிலில் இருந்த என் வாரிசு என்னைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்தது. தனக்குள் ஏதோ சொல்லி விளையாடியது. அப்போதுதான் கவனித்தேன் கயலின் சாயல் மேகலையில் இருந்தது. அந்தக் கன்னம், மேவாய் சின்ன கட்டை விரல் எல்லாம் அப்படியே இருந்தது. இதுவரை தெரியாதது எல்லாம் இப்போது தெரிந்தது. நான் கடைசியாக ஃபேஸ்புக் பார்த்தது அன்றுதான். அந்த மெசேசை நான் படிக்கவும் இல்லை நான் பதில் அனுப்பவுமில்லை. ஏனோ அதுக்கு அப்புறம் பார்க்கவுமில்லை.


அனோஜன் பாலகிருஷ்ணன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அர்த்தம் அற்ற பிழை (சிறுகதை)”

அதிகம் படித்தது