மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அறிஞர் மெ.சுந்தரத்தின் ஆராய்ச்சித்திறன்

முனைவர் வேல். கார்த்திகேயன்

Jan 13, 2018

Siragu naattuppurappaadal1

சங்க இலக்கியங்களில் தோய்ந்தவரும், நாட்டுப்புற இலக்கியங்களைத் தொகுப்புதில் முன்னோடியுமாக விளங்கிய பேராசிரியர் முனைவர் மெ.சுந்தரம் ஆவார். இவரின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலைச் சிவபுரிக்கு அடுத்துள்ள வேந்தன்பட்டியாகும். இவரின் தந்தையார் மெய்யப்பச் செட்டியார் ஆவார். இவர் அக்காலத்தில் அப்பகுதி சார்ந்த காங்கிரசு தலைவராக விளங்கினார்.

மெ.சுந்தரம் முதுகலை, முனைவர், எம்.லிட் போன்ற பட்டங்களைப் பெற்றவர். கோனாபட்டு சரசுவதி உயர்நிலைப்பள்ளி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை தியாகராசர் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சென்னை மாநிலக்கல்லூரி ஆகியவற்றில் பேராசிரியப் பணியாற்றியவர். இவரின் மாணவர்களுக்கு மெ.சுந்தரம் அவர்களிடம் படித்தோம் என்ற பெருமை உண்டு. அந்த அளவிற்கு ஆற்றலும் அன்பும் உடையவர்.

இவர் தமிழகம் சார்ந்த நாட்டுப்புறப்பாடல்களைத் தொகுத்து வெளியிட்ட பெருமைக்குரியவர். நாட்டுப் புறப்பாடல்கள் என்ற தலைப்பில் அந்நூல் வெளிவந்து நாட்டுப்புறவியல் துறையின் முன்னோடி நூலாக விளங்குகிறது. இதனை மறுபதிப்பு செய்வது தற்காலத் தேவையாகும். இந்நூல் தவிர ஐந்து நூல்களின் ஆசிரியராக இவர் விளங்கினார்.

இவர் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுத் தமிழ்ப்பணி ஆற்றியவர். மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் முதல் உலகத் தமிழர் மாநாடு, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொன்னூறாம் ஆண்டு நடைபெற்றது. இதில் மெ. சுந்தரம் அவர்கள் ‘சங்க காலத்தில் தொழிலும் வணிகமும்’’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில் ‘தமிழர்களின் சிறந்த வணிக வாழ்விற்குப் பெரிதும் துணையாய் அமைந்தது தமிழகத்தின் இயற்கையே ஆகும். தென்கடல் முத்து தமிழர் வாணிகத்தை உமநாடு வரை கொண்டு சென்றது. மேற்கு மலைத் தொடரில் விளைந்த மிளகும், தேக்கும் பிறநாட்டவரைத் தமிழகத்திற்கு இழுத்து வந்தன. தமிழர் வணிகத்திற்கு இயற்கை புரிந்த புன்னகை பெரிதெனினும், அவர்களது முயற்சியும், அறிவாற்றலும், வினைசெயல் வகையும் கைவினைத்திறனும் அடிப்படைக் காரணங்களாகும்” என்ற அவரின் கருத்து தமிழரின் கைவினைத் திறன் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டுவதாக உள்ளது.

சங்ககாலம் பற்றிய அவரின் கட்டுரை சங்ககாலத்தையும் சிலப்பதிகார காலத்தையும் வரையறை செய்வதாக உள்ளது. ஆய்வுக்கோவையில் அவர் எழுதியுள்ள ‘சங்க காலம்” என்ற கட்டுரை குறிக்கத்த கருத்துகளைக் கொண்டுள்ளது. சிலப்பதிகாரம் எழுந்த காலத்தைப் பின்வருமாறு பல சான்றுகள் கொண்டு மெய்ப்பிக்கிறார் மெ.சுந்தரம்.

Siragu mullai paattu1

‘‘சங்க இலக்கிய நூல்களின் கால ஆராய்ச்சி, கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. டாக்டர் கால்டுவெல் கி. பி. 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டே சங்க இலக்கிய காலம் என முடிவு கட்டினர். சங்க நூல்களும் தொல்காப்பியமும் அச்சேருதிருந்த காலத்தில் தமிழின் தொன்மையை நிலை நாட்டும் இந்நூல்களைப் பாராத நிலையில் அவர் இங்ஙனம் முடிவு கட்டினர். வான நூல் ஆராய்ச்சிக் குறிப்புக்களைக் கொண்டு திரு. L. D. சுவாமிக் கண்ணு பிள்ளே கி. பி. ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டே சங்க இலக்கிய காலமென அறுதியிடுவர். இவை தவறுடையன எனத் திரு. K. G. சேஷ அய்யர், திருவாரூர் S. சோமசுந்தர தேசிகர் ஆகிய இருவரும் மறுத்துள்ளனர். திரு. மு. இராகவ அய்யங்கார் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு தான் என்ற தம் கருத்தைச் சேரன் செங்குட்டுவன் என்ற நூலின் இரண்டாம் பதிப்பில் விலக்கிக்கொண்டார். சிலப்பதிகாரச் சான்று செங்குட்டுவன் தன் தலைநகரமாகிய வஞ்சியில் கண்ணகிக்குக் கோயில் கட்டுவித்து, கடவுள் மங்கலம் செய்வித்த அன்று, இலங்கை மன்னன் கயவாகு அங்கு இருந்தான் (சிலம்பு 160-4). அவன் தன் நாட்டிற்குச் சென்று கண்ணகிக்குக் கோயிலமைத்து வழிபாடு செய்தான். அப்படிமம் கி. பி. 1830 இல் இலண்டன் கொண்டு போகப்பட்டு, இப்போது இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இலங்கையில் முதற் கயவாகுவின் காலம் கி. பி. 171-190 வரை என்று இலங்கை மகாவம்சம் கூறுகிறது. இக்காலமே சிலப்பதிகார காலத்திற்கான பிற சான்றுகளுடன் ஒத்து வருகிறது. கண்ணகிக்குச் சிலையெடுக்கச் சேரன் செங்குட்டுவன் வட நாடு நோக்கிப் படையெடுத்துச் சென்ற போது கங்கை யாற்றைக் கடக்க நூற்றுவர் கன்னர் உதவியதாக வருகிறது. சாதவாகன மன்னர்களில் சிறந்தவராகிய பரீ யக்ஞ சதகர்ணி என்பவரே கங்கையாறு வரை சிறப்புற ஆண்டவராதலின் அவரே, செங்குட்டுவனுக்கு உதவியவராதல் வேண்டும். சதகர்ணி என்பதே நூற்றுவர் கன்னர் என்று மொழி பெயர்க்கப்பட்ட தென்று எளிதில் ஊகிக்கலாம் இந்த ரீயக்ளு சதகர்ணியின் காலம் கி. பி. 174 முதல் 203 வரையாகும். இச்சான்றும் மேற்காட்டிய சான்றுகளுடன் ஒத்து வருவதால் சிலப்பதிகார காலத்தை கி. பி. 2. ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலா மன்றோ?’’ என்ற மெ.சுந்தரம் அவர்களின் கருத்து அவரின் பரந்து பட்ட படிப்பாற்றலையும் நுணுகி ஆராயும் திறனையும் காட்டுவதாக உள்ளது.

சங்க காலத்தை நிர்ணயிக்கும் அவரின் ஆய்வுத்திறம் பின்வருமாறு. ‘‘மாமூலனர், மோரியர்களுக்கு முந்திய அரச பரம்பரையினராகிய நந்தர்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார். எனவே வம்பமோரியர் பிற்கால குப்தர்களைக் குறிக்காது தமிழகத்தில் புதிதாக வந்த மோரியர் என்றே பொருள்படும் ‘வம்பவடுகர் ’ என்ற சங்க வழக்கம் காண்க. எனவே மாமூலனார் காலம் பிந்து சாரன் காலமாகிய கி. மு. 272க்கு முன்னரும் கி. மு. 300க்குப் பின்னரும் உள்ள காலமாக இருக்கவேண்டும். இந்திய வரலாற்றுநூல் ஒவ்வொன்றிலும் அரசாட்சிப் பரம்பரையை நந்தர்களில் தொடங்கி, அடுத்து மோரியர்களைப்பற்றி எழுதுவர். இவ்விரு திறத்தாரையும் தெளிவாகக் குறிப்பிடும் மற்ற புலவர்களுள் மாமூலனர் இவர்களைப் பற்றி மிகத்தெளிவாகக் கூறுகிறர். எனவே இவரது காலம் ஏறத்தாழ கி. மு. 300 எனக் கொள்ளுதல் தவறன்று. எனவே, சங்க காலம் கி. மு. 30க்கும் முந்திய தொன்மை உடையது. இக்காலத்தே இவ்வளவு தெளிந்த கருத்துள்ள பாடல்களேத் தருமளவு மொழிவளம் பெற இதற்கு முன் எத்துணையோ நூற்றாண்டுகள் தமிழ்மொழி நடைமுறையில் வளர்ச்சி பெற்று வந்திருக்க வேண்டும்” என்ற மெ.சுந்தரம் அவர்களின் கருத்துச் சங்ககாலத்தின் வரலாற்றைத் தெளிவுபட உரைப்பதாக உள்ளது.

இவர் அறிஞர் மு.வ. அ.மு.பரமசிவானந்தம், சி. இலக்குவனார், தேவநேயப்பாவாணர் போன்றோரோடு நெருங்கிப் பழகியவர். சி. இலக்குவனாரின் தமிழ்ப்பணி பற்றி இவர் பின்வருமாறு எழுதுகிறார். மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபொழுது பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் முதன்முதலில் இளங்கலை வகுப்பில் (B.A.) தமிழ்ச்சிறப்பு வகுப்பைக் கொணர்ந்தார். இவருக்குமுன் மாநிலக் கல்லூரியில் இவ்வகுப்பு இல்லை. முதன்முதல் புலவர் விழாவை நடத்தி மாணவர்களுக்குத் தமிழ் உணர்வை ஊட்டினார். சிறந்த முறையில் சிறப்புத் தமிழ் பயிலும் மாணாக்கர் உதவித்தொகை பெற ஏற்பாடு புரிந்தார். ஆசிரியப் பெருமக்களிடையேயும், மாணாக்கரிடையேயும், ஆராய்ச்சி உணர்வும் திறனாய்வுப் புலமையும் பெருகக் கருத்தரங்குகள் நடத்தினார். இளங்கலை முதுகலை மாணாக்கர் தமிழ் உணர்வும் புலமையும் முற்றிச் சிறக்க ஆண்டு தோறும் ஆய்வுக் கட்டுரை ஏடுகள் உருவாக்கும் திட்டத்தைக் கொணர்ந்தார். துறைப்பணிகள் அனைத்தையும் தமிழிலேயே நடாத்தினார். அடிக்கடித் தமிழ் விழாக்கள் நடத்தி ஆசிரியர்களிடையேயும் மாணவர்களிடையேயும் தமிழ் இன உணர்ச்சியையும் தமிழ்மொழி உணர்வையும் உருவாக்கினார்” என்று தான் பழகிய சான்றோரைப் போற்றும் சொற்கள் இவரின் இனிமையைக் காட்டுவதாக உள்ளது.

இவ்வாறு ஆய்வில் ஒரு கருத்தினைச் சொல்ல பல்வேறு சான்றுகளை அடுக்கி பாங்குடையவராக மெ. சுந்தரம் விளங்குகிறார். இவரின் பரந்த படிப்பாற்றல், ஆங்கிலப் புலமை, தமிழ் உணர்ச்சி ஆகியன பின்வரும் தமிழ்ச்சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாகும்.

இவர் சிறந்த பேச்சாளர். ஆங்கிலத்திலும், தமிழிலும் தங்கு தடையின்றிப் பேசும் இயல்பினர். இவர் பாரதியாரின் நூறு கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். இவர் தமிழகப் புலவர் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் குமரன், செட்டிநாடு போன்ற இதழ்களின் ஆசிரியராகவும் விளங்கியுள்ளார். இவர் 1984 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றுள்ளார். இவர் 20.11.1991 இல் புகழுடம்பு எய்தினார்.


முனைவர் வேல். கார்த்திகேயன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அறிஞர் மெ.சுந்தரத்தின் ஆராய்ச்சித்திறன்”

அதிகம் படித்தது