மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அறிவியலின் தத்துவம் – ஓர் எளிய தொடக்கம் – பகுதி-2

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Aug 9, 2014

கார்ல் பாப்பர் (Carl Popper)

ariviyalin thaththuvam2“அறிவியல் முறை ஆராய்பவனின் மனத்திலுள்ள முன்கருத்துகளைச் சார்ந்தது” என்று ஹ்யூம் கூறியதைப் பார்த்தோம். இதனை ஏற்பவர் கார்ல் பாப்பர் (Carl Popper). எனினும் அறிவியலில் மாறாத தர்க்க அமைப்புமுறை உண்டு என்றும், அறிவியல் முற்போக்கானதே என்றும் கருதுபவர். எனவே நேர்க்காட்சிவாதத்தை இவர் முற்றிலும் மறுப்பவர் அல்ல. அதேசமயம், உற்றுநோக்கலும், அதன் விளைவான தரவுகளும் முன்கொள்கைச் சார்புடையவையே என்றும் கூறுகிறார்.

உற்றுநோக்கல் எவ்விதம் முன்முடிவு சார்ந்தது?

1. உற்றுநோக்கலில் ஈடுபடும் அறிவியல் ஆய்வாளன், முன் அனுபவமின்றி அதில் ஈடுபடுவதில்லை. உற்றுநோக்கம் என்பது ஒரு செயலூக்கமற்ற (passive)செய்கை அல்ல. செயல்தீவிரம் வாய்ந்தது. முன்புரிந்துகொள்ளலை வேண்டுவது. எனவே அது முன் முடிவு சார்ந்தது.

2. உற்றுநோக்கல், குறித்த இலக்கு நோக்கிச் செய்யப்படுவது. எனவே இலக்குச் சார்ந்த தரவுகள் மட்டுமே திரட்டப்படுகின்றன. அந்தக் குறிப்பிட்ட இலக்கைச் சாராத, அதற்குத் தேவையற்றது என்று கருதப்படுகின்ற தரவுகள் புறக்கணிக்கப்படுகின்றன.

3. எல்லா உற்றுநோக்கல் தரவுகளும் எழுதிக் குறிக்கப்படுகின்றன. எழுதிக் குறித்தல் என்பது வருணித்தல் என்ற வகையில் அடங்கும். உற்றுநோக்கல்கூட, மனத்திற்குள் செய்யப்படும் வருணனைதான். வருணிப்பதில்லை என்றால் அது பயனற்றது. வருணித்தல் என்பது மொழியின் செயல்பாடு. கையாளப்படும் மொழியோ, அக்கால, இட, ஆதிக்கக் கோட்பாட்டை/கருத்தியலைச் சார்ந்தது.

4. உற்றுநோக்குவதற்குக் கருவிகள் (மைக்ராஸ்கோப் போன்றவை) கையாளப் படுகின்றன. கருவிகளே சில கொள்கைகளின் அடிப்படையில் உருவமைக்கப்பட்டவைதான். எனவே ஒரு கருவியை ஒருவர் கையாளும்போது அக்கருவிக்குள் பொதிந்துள்ள அல்லது அமைந்துள்ள கோட்பாட்டையும் ஏற்பவர் ஆகிறார்.

5. எல்லா உற்றுநோக்கல்களும் கொள்கையின் அங்கீகாரத்தை எதிர்நோக்கியே செய்யப்படுகின்றன. (சான்று, கலிலியோவின் வாழ்க்கை).

6. எல்லா உற்றுநோக்கல்களும் சில தேர்வுகளை/தேர்வுக்கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே செய்யப்படுகின்றன. தேர்வு என்பது முன்யூகங்கள், முன்னறிவு சார்ந்த ஒன்று. எந்தெந்த உற்றுநோக்கல்களை, எங்கே, எவ்வாறு செய்யலாம் என்பது முன்கோட்பாடு சார்ந்ததாகிறது. ஒரு கொள்கையில் நம்பிக்கை, சில எதிர்பார்ப்புகளைத் தருகிறது. எதிர்பார்ப்புகள் அடிப்படையில்தான் ஆய்வுப் பிரச்சினையும் அதற்கேற்ற தரவுகளும் உருவாகின்றன.

மேற்கண்டவற்றால், பாசிடிவிசத்தின் அடிப்படையான “சார்பற்ற உற்றுநோக்கல்” என்பதும் அதிலிருந்து “தானாகவே திரளும் கொள்கை” என்பதும் தகர்ந்து போகின்றன.

நேர்க்காட்சிவாதிகள் உற்றுநோக்கல் தரவுகளிலிருந்துதான் கோட்பாடுகள் பெறப்படுகின்றன என்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. எவற்றை உற்றுநோக்க வேண்டும் என்பதிலிருந்தே நம் மனத்தின் முன்முடிவுகள் தாக்கத் தொடங்கிவிடுகின்றன. எனவே உற்றுநோக்கல் சார்பற்ற செய்கை அல்ல, அதுவும் கருத்தியல் சார்ந்ததாகிறது. கருத்தியலும் உற்றுநோக்கலைச் சார்ந்தது. குறித்த நோக்கம், ஒரு துறையில் ஏற்கெனவே பெற்றிருக்கும் முன்னறிவு, எதிர்நோக்கும் இலட்சியம் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படு அமைவதுதான் உற்றுநோக்கல் என்ற செயல். உற்றுநோக்கல் என்பது நம்மால் செய்யப்படுவதே ஒழிய, தரப்படுவது, தானாக வருவது அல்ல.

மேற்கண்ட நேர்க்காட்சிவாதக் கொள்கைகளைத் தாக்கிய கார்ல் பாப்பர், வேறொரு மாற்றுப் படிமத்தை அறிவியலுக்கு அளித்தார். அறிவியலிலும், தத்துவத்திலும் அவரைப் பாராட்டுவோர் பலரை உருவாக்கியது, அவரது அறிவியல் செயல்முறைக் கோட்பாடு. நேர்க்காட்சிவாதிகள், விதிவருமுறை அல்லது வருவித்தல் முறை (இண்டக் டிவிசம்) யை முழுமுதலாக முன்வைத்தனர். இதற்கு எதிரான ஹைபோதீசம் (கற்பிதங்களை உருவாக்கிக்கொண்டு நிறுவ முனைவது) என்பதை மாற்றாக முன்வைத்தார் பாப்பர்.

ariviyalin thaththuvam4நாம் கண்ணில் காணும் இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், அதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்பதே தத்துவத்தின் அடிப்படையாக இருக்கிறது. உலகை அறிந்துகொள்ளும் பிரச்சினை, நாம் உட்பட்ட உலகின் ஒரு பகுதியான நமது அறிவு உள்ளிட்ட இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ளுவது என்னும் பிரச்சினை ஆகும். இக் கேள்விக்கான பதிலை அளிப்பதற்கு இயலும் தன்மையிலிருந்தே அறிவியல் தனது சிறப்பிடத்தைப் பெறுகிறது.

அறிவியல் கொள்கைகள் எவ்விதம் மதிப்பிடப்படுகின்றன, ஏற்றுக்கொள்ளப்படுகின்றன அல்லது ஒதுக்கப்படுகின்றன, என்பதைப் பற்றி மட்டுமே அறிவியல் முறையின் இயல்பு பற்றி தத்துவம் ஆராய முனையும்போது கவனம் செலுத்தினால் போதும் என்றார் பாப்பர். எப்படி இந்தக் கொள்கைகள் உருவாயின என்பதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. ஒரு கொள்கை உருவான சூழல் பற்றி நமக்கு அக்கறை தேவையில்லை. அது எவ்விதம் நியாயப்படுத்தப்படுகிறது என்பதுதான் முக்கியம். அறிவியல் கொள்கைகூட, படைப்பு மனோநிலையின் வெளிப்பாடுதான். எனவே அது எப்படி உருவாயிற்று என்ற ஆராய்ச்சி தேவையற்றது.

இரண்டாவதாக, அறிவியல்- அறிவியல் அல்லாதது என்பதற்கான வித்தியாசத்தை அறிவியல் வழங்கவேண்டும். உதாரணமாக, மூட்டுவலிக்கு ஒரு அலோபதி மருத்துவர் தாம் செய்கின்ற மருத்துவம் அறிவியல் சார்ந்தது என்று கருதினால், அதே மூட்டு வலிக்கு ஒரு சித்தமருத்துவர் செய்யும் மருத்துவம் எவ்விதம் அறிவியல் அற்றது என்பதை வேறுபடுத்திக் காட்டவேண்டும்.

அறிவுத்தேடலில், புறவுலகில், அறிவியலே முதன்மை வாய்ந்தது என்று நேர்க்காட்சி வாதிகளைப் போன்றே பாப்பரும் கருதினார். ஆனால் நேர்க்காட்சிவாதிகள், அறிவியல் கோட்பாடுகளின் சிறப்பு, அவற்றை யார் வேண்டுமானாலும் நிரூபித்துப் பார்த்துக்கொள்ளலாம் (வெரிஃபையபிலிடி) என்பதில்தான் இருக்கிறது என்றனர். பாப்பர் சொல்கிறார்: “மற்றத் துறை அறிவுகளிலிருந்து அறிவியல் எப்படி வேறுபடுகிறது என்றால், அறிவியல் கொள்கைகளை யார் வேண்டுமானாலும் மெய் என நிரூபித்துக்காட்ட முடியும் என்பதனால் அல்ல; யார் வேண்டுமானாலும் தவறு என்று என்று நிரூபித்துக் காட்டலாம் (ஃபால்ஸிஃபையபிலிடி) என்பதில்தான் இருக்கிறது.”

எந்தச் சூழ்நிலையில் அவற்றைப் புறக்கணித்துவிடலாம் என்று அறிவியல் கொள்கைகள் வெளிப்படையாகவே தெரிவித்துவிடுவதனால், அவை தவறு எனக் காட்டப்படக் கூடியவை. ஓர் அறிவியல் கொள்கை வெளிப்படுத்தப்படும்பொழுதே, அது எந்தச் சூழலில், எந்த ஆய்வுச்சாலை நிபந்தனைகளின்படி, நிரூபிக்கப்பட்டது என்ற தகவலும் சேர்ந்த வெளியிடப்படுகிறது. (வெளியிடப்பட வேண்டும்.) ஆகவே ஒரு நல்ல அறிவியல் கொள்கை, தன்னைத் தவறு என்று காட்டுவதற்கான சாத்தியப் பாடுகளைத் தன்னகத்தே கொண்டுதான் வருகிறது.

மேலும், ஓர் அறிவியல் கொள்கை, தான் தவறு என்று நிரூபிக்கப்படாதவரை மட்டுமே உண்மையானது. அக்கொள்கையை ஆயிரம் அறிவியல் அறிஞர்கள், ஆயிரம் முறை சரியாக இருக்கிறதா என்று ஆய்வகங்களில் நிரூபித்துப் பார்த்திருக்கலாம். ஆயினும் அது சரியான கொள்கை ஆகிவிடாது. ஒரே ஓர் அறிஞர், அது இன்ன இன்ன சூழ்நிலைகளில், அது தவறாகிவிட்டது என்று நிரூபித்துவிட்டால், அந்தக் கொள்கை தவறாகிவிடும். அதாவது, எந்த அறிவியல் விதியும் தனக்குரிய சோதிப்புக் குறிப்புகளைத் (டெஸ்ட் இம்ப்ளிகேஷன்ஸ்) தரவேண்டும். சோதிப்புக் குறிப்புகளைத் தந்தால்தான் அது அறிவியலாகும். அப்படித் தராவிட்டால் அது அறிவியல் ஆகாது.

இதைப் பற்றிப் பேசும்போதுதான் கார்ல் பாப்பர், மார்க்சியத்தை ஒரு போலி அறிவியல் என்று தாக்குகிறார். ஏனென்றால் மார்க்சியம், தன்னைச் சோதித்துக் கொள்ள-எந்தச் சூழலில் தவறாகலாம் என்று அறிவதற்குரிய சோதிப்புக் குறிப்புகளைத் தருவதில்லை.

இன்னும் கொஞ்சம் தெளிவாகவே பார்க்கலாம். நமது பாடப்புத்தகங்களில், அறிவியல் நேரியது, முறையானது என்ற படிமம் உருவாக்கப்பட்டிருக்கிறது. எப்படி உருவாயிற்று அது?

உற்றுநோக்கல் தரவுகள் > பொதுமைப்படுத்தல் > கருதுகோள் உருவாக்கல் > சரிபார்த்தல், உறுதிப்படுத்தல் > விதி > கோட்பாடு (உண்மை) என்பது அறிவியல் முறை என்றும், இந்த முறைதான் அறிவியலில் பின்பற்றப்படுகிறது என்றும் ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அப்படி அல்ல என்றார் பாப்பர்.

ஒரு பிரச்சினை > தற்காலிகத் தீர்வு > அதைத் தவறாக்குதல் > வேறு சான்றுகளால் உறுதிப்படுத்துதல் > உண்மை போன்ற தோற்றம் (வெரிசிமிலிடியூட்).

இதைத் தர்க்கப்பாணியில் சொன்னால், ஆ-வில் இ அடக்கம் என்று வைத்துக்கொள் வோம். ஆ-இல்லை அல்லது தவறு என்றால், இ-யும் இல்லை அல்லது தவறு. ஆனால் ஆ-இருக்கிறது என்றால், இ-இருக்கிறது என்று அர்த்தம் அல்ல. ஓர் உதாரணத்தினால் இதைப் பார்ப்போம். இரண்டு கால் கொண்டவை என்பதில் மனிதன் அடக்கம். இரண்டுகால் கொண்டவை அல்ல என்றால் மனிதனும் அந்தப் பகுப்பில் இல்லை. ஆனால் இரண்டுகால் கொண்டவைதான் என்றால் மனிதன்தான் என்று கூறிவிட முடியாது. (பறவையாகவும் இருக்கலாம் அல்லவா?)

இதன் விளைவு என்ன என்றால், எந்த அறிவியல் கொள்கையுமே தற்காலிகமானது தான். தவறென்று நிரூபிக்கப்படாத வரையில் அது உண்மை என ஏற்றுக்கொள்ளப்பட்டுவருகிறது. அதைத் தவறென நிரூபிக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் அது தவறாகி விடுகிறது. எனவே எந்த அறிவியல் உண்மையும் தவறாக நிரூபிக்கப்படாத வரையில் தான் உண்மை. அல்லது மாற்றிச் சொன்னால், ஒன்றை நாம் அறிவியல் உண்மை என இதுவரை ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்றால், இதுவரை அது தவறானது என நிரூபிக்கும் வாய்ப்பினைப் பெறவில்லை என்பதுதான் அர்த்தம். ஒருவேளை இனிமேல் அது தவறாக்கப்படலாம்.

பாப்பர் மார்க்சியத்தின்மீது வைக்கும் விமரிசனத்தை இடையில் பார்த்துவிடுவோம். முதலாளித்துவ சமுதாயத்தைப் பற்றி மார்க்ஸ் தமது கொள்கையை முன்வைத்தபோது அது அறிவியல் கொள்கையாகத்தான்-அதாவது தவறாக்கப்படக் கூடியதாகத்தான் இருந்தது. அதைச் சோதிக்கும் குறிப்புகளாக அமைந்தவை:

1. மத்தியதர வர்க்கத்தின் மறைவு

2. முன்னேறிய தொழிற் சமூகங்களிலேயே புரட்சி ஏற்படுதல்

இந்தக் குறிப்புகள் தவறாகிவிட்டன. எனவே மார்க்சியமும் தவறென நிரூபிக்கப்பட்டு விட்டது.

ஆனால் மார்க்சியத்தைப் பின்பற்றுபவர்கள், அவ்வப்போதைய நிகழ்வுகளை எடுத்துக்காட்டி, அந்த மாறிய நிலைமைகள் காரணமாகவே மார்க்ஸ் கூறியவை நடைபெற வில்லை என்று நிரூபிக்க முன்வந்தார்கள். இப்படி மாறிவரும் நடைமுறைகளைக் காரணம் காட்டி மாற்றிக்கொண்டே செல்லும்போது, ஒரு கோட்பாடு, நிறையத் தற்காப்புக் கேடயங்களைப் பெற்று, தவறாக்கவே முடியாதது ஆகிவிடுகிறது. அதாவது தனது அறிவியல் தன்மையை இழந்துவிடுகிறது.

ariviyalin thaththuvam6தவறாக்கப்படக் கூடிய ஒன்றே அறிவியல் கொள்கையாக முடியும். சமயக் கொள்கைகள் தவறாக்கப்பட முடியாதவை. எனவே அவை அறிவியல் கொள்கைகள் அல்ல. கடவுள் இத்தனை நாளில் உலகத்தைப் படைத்தார் என்ற கூற்றையோ, அடுத்த பிறவி எனக்கு இதுவாகத்தான் இருக்கும் என்ற கூற்றையோ எப்படி ஒருவர் தவறாக்க முடியும்? ஆகவே அவை அறிவியல் பூர்வமானவை அல்ல. ஆனால் பாப்பர் சொல்கிறார்: மதவாதிகள் யாரும் தங்கள் கோட்பாடுகள் அறிவியல்பூர்வமானவை என்று சொல்லவில்லை. ஆனால் மார்க்சியர்கள் உணர்வுபூர்வமாகத் தங்கள் கொள்கை அறிவியல் சார்ந்தது என்கிறார்கள். தவறாக்கப்பட முடியாததால் மார்க்சியம் அறிவியல் கொள்கை அல்ல. (மதம் என்று கூறலாம்). ஆனால் அது அறிவியல் கொள்கை என வேடமிடுவதால், போலிஅறிவியல் ஆகிறது.

அறிவியல் முறை இண்டக்டிவ் (விதி வருவிப்புமுறை) அல்ல. கருதுகோளினின்றும் வருமுறை (ஹைபோதெடிகோ டிடக்டிவ்) என்றார் பாப்பர். இதனைச் சற்று விளக்கலாம்.

இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

வருவிப்பு (இண்டக்டிவ்) முறைதான் அறிவியலினுடையது என்பவர்கள், உற்று நோக்கல் தரவுகள், கொள்கை சார்ந்தவை அல்ல என்கிறார்கள். எனவே அறிவியல் என்றும் மாறாதது, அசைக்கப்பட முடியாதது என்று ஆகிறது. அப்படியானால் அவற்றை மீண்டும் சோதித்துப் பார்க்கவேண்டிய அவசியம் ஏன் அல்லது எப்படி வருகிறது?

ஆகவே பாப்பர் சொல்கிறார்:

நாம் முதலில் கருதுகோள்களை உருவாக்குகிறோம். அவை கற்பனைகள். அவை எந்தெந்த சந்தர்ப்பங்களில் உண்மையாகின்றன என்பதை மட்டும் வைத்துக்கொண்டு அவற்றை உண்மைகள் என்கிறோம். இதற்கும் புராணத்திற்கும் வேற்றுமை இல்லை.

ஏனெனில் தன் குழந்தைக்குக் கருமாரி நோய் வந்ததைப் பார்த்த ஒருவன், அது மாரியம்மன் கோபத்தால் வந்தது என்று ஒரு கருதுகோளை உருவாக்குகிறான். அவள் சிலைக்கு அபிஷேகம் செய்தும், கூழ் ஊற்றியும் குளிர்ச்சிப்படுத்துகிறான். தற்செயலாகத் தன் குழந்தையின் நோய் இறங்கிவிட்டதைப் பார்க்கிறான்.

இதுபோல இரண்டு மூன்று சந்தர்ப்பங்களை அவன் பார்க்க நேர்ந்தால், கருமாரி நோய் மாரியாத்தாளால் வந்தது என்ற அறிவியல்கூற்றை (!) உருவாக்குகிறான். இந்தப் புராணிக முறைக்கும் அறிவியலுக்கும் வேற்றுமை இல்லை. எனவே எந்த அறிவியல் கொள்கையாயினும் அதன் நிகழ்வுக்கூறு (Probability)பூச்சியம்தான் என்கிறார் பாப்பர். ஒரு சோதனை நேர்முக (உடன்பாட்டு) முடிவைத் தந்தவுடனே, நேர்க்காட்சிவாதிகள் அந்தக் கொள்கை உண்மை என்று சொல்லிவிடுகிறார்கள். அப்படி அல்ல, அந்தக் கொள்கை இன்னும் தவறாக்கப்படவில்லை என்பதுதான் நாம் அறியக்கூடியது என்கி றார் பாப்பர்.

நிரூபிக்கப்படல் கொள்கை, தவறாக்கப்படல் கொள்கை ஆகிய இரண்டிற்கும் உள்ள வேற்றுமையை கிரிமினல் சட்ட உதாரணம் ஒன்றின் மூலமாகப் பார்க்கலாம்.

ஒரு கிரிமினல் சட்ட அமைப்பில், சான்று கிடைக்கும்வரை, குற்றவாளியை தவறு செய்யாதவன் என்றே கருதவேண்டும். ஆகவே கூண்டில் நிறுத்தப்பட்டவனைக் குற்றவாளி ஆக்க வேண்டும் என்றால் அவன்தான் தவறிழைத்தான் என்று காட்டியாக வேண்டும்.

இன்னொருவித சட்ட அமைப்பு இருப்பதாகக் கொள்வோம். இதில் கூண்டில் நிறுததப்பட்டவன் குற்றவாளி (தவறிழைத்தவன்) என்றே நினைக்கவேண்டும். அவனுக்கு எதிரான சாட்சியம் எதுவும் வராதவரை நிரபராதி என ஏற்கப்படுவான். ஒரே ஒரு சாட்சி அவனுக்கு எதிராக வாய்த்தாலும் அவன் குற்றமிழைத்தவன் ஆகிவிடுவான். இவற்றில்,

முதலாவது அமைப்பு, நேர்க்காட்சிவாதம்.

இரண்டாவது அமைப்பு பாப்பருடைய கொள்கை.

தமது தவறாக்கல் முறை அல்லது கருதுகோள் தருமுறை என்பது, வருவித்தல் முறையைவிட மேம்பட்டது என்று கருதுகிறார் பாப்பர். அதற்குக் காரணங்கள்:

1. பாப்பருடைய முறை, விஞ்ஞான மனப்பான்மை அல்லது விமரிசன மனப்பான்மை என்பதற்கு ஏற்றதாக இருக்கிறது. அறிவியல் சோதனையின் நோக்கம், ஒரு கொள்கையைத் தவறு எனக் காட்டுதல் என்பதன் மூலம், நாம் எப்போதுமே எந்தக் கொள்கையுமே தற்காலிகமானதுதான், எவ்வளவு உறுதிப்படுத்தப்பட்டாலும் நிரந்தரமானது அல்ல என்று சொல்கிறோம். எந்தக் கொள்கையுமே தன் தலைமீது கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் குற்றவாளிதான். நேர்க்காட்சிவாதிகள் அறிவியலை நிலைத்த உண்மை கொண்டதென அறுதியிட்டு விடுகிறார்கள். ஆனால் அறிவியல் நோக்கு என்பது எப்போதும் திறந்த மனத்தோடு இருப்பது, இறுகிவிடாமல் இருப்பது என்கிறார் பாப்பர்.

2. வருவிப்புமுறையை (இண்டக்டிவ் மெதாட்) அறிவியல் பின்பற்றியிருந்தால், இப்போதுள்ள அளவு அது வளர்ந்திருக்காது என்கிறார் பாப்பர். ஓர் அறிவியலாளர் இண்டக்டிவ் முறையைப் பின்பற்றுவதாக வைத்துக்கொள்வோம். அவர் என்ன செய்வார்?

தமது துறையில் தம்க்குக் கிடைக்கும் சான்றுகளைத் திரட்டிக்கொண்டே செல்வார். ஒருவேளை அவரது கருதுகோளைப் பொய்யாக்கக்கூடிய சான்று ஒன்று கிடைத்தால் என்ன செய்வார்? தமது கருதுகோளைத் திருத்துவார். அல்லது அதற்கு வரையறைகள் விதிப்பார். இன்னின்ன சந்தர்ப்பம் நேரிடாவிட்டால் இந்தக் கொள்கை உண்மை என் பார். இப்படியே இரண்டு மூன்று எதிர்ச்சான்றுகள் கிடைத்துவிட்டால் அந்த வரையறை மேலும் மேலும் குறுகிப் போய்க்கொண்டே இருக்கும். இன்னும் சில எதிர்ச் சான்றுகள் கிடைத்தால் அது பயனற்ற நிலையையே அடைந்துவிடும்.

பாப்பருடைய கருதுகோள் முறையைப் பின்பற்றும் விஞ்ஞானி என்ன செய்வார்?

எதிர்ச்சான்று கிடைக்கும்போது தமது கருதுகோளைத் தூக்கி எறிந்துவிடுவார். தைத்த சட்டையை சந்தர்ப்பத்திற்கேற்ப எல்லாம் மாற்றித் தைத்துக் கொண்டிருப்பதை விட, புதிய சந்தர்ப்பத்திற்குப் புதியதொரு கொள்கையை உருவாக்குவது மேலானதுதானே?

ஆகவே ஏற்கெனவே கிட்டிய சான்றுகளையும், இந்தப் புதிய சான்றையும் ஒன்றாகப் பொருத்தக்கூடிய வலிய கருதுகோள் ஒன்றை உருவாக்குவதில் இந்த விஞ்ஞானி ஈடுபடுவார். ஆகவேதான் அறிவியல் இந்த அளவு முன்னேறியிருக்கிறது. இல்லாவிட்டால் அது வெறும் தற்காப்புவாதமாகப் போயிருக்கும்.

(பாப்பர், கூன், பெயரபெண்ட் ஆகியோருடைய கொள்கைகள் பற்றி மேலும் தொடரும்.)


பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அறிவியலின் தத்துவம் – ஓர் எளிய தொடக்கம் – பகுதி-2”

அதிகம் படித்தது