மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அறிவியலின் தத்துவம் ஓர் எளிய தொடக்கம் –பகுதி- 3

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Aug 16, 2014

இந்த விசயத்தைத்தான் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஹ்யூம் சொன்னார். “எந்தப் பொதுமைக்கூற்றையும் எத்தனை ஆயிரக்கணக்கான சான்றுகளாலும் நிரூபித்துவிட முடியாது.” (அறிவியலில், எல்லா விதிகளும் கோட்பாடுகளும் பொதுமைக் கூற்றுகளே.) அறிவியல் விமரிசனபூர்வச் சிந்தனை கொண்டது. விமரிசனபூர்வச் சிந்தனை என்பதே, நமது கூற்றுகளை எப்படி எப்படியெல்லாம் தவறாக்க முடியும் என்று சிந்திப்பதுதான்.

ariviyalin thaththuvam2இப்படியிருக்க, அறிவியல் முற்போக்கானது, முன்னேறிவருவது என்று கார்ல் பாப்பரால் எவ்விதம் சிந்திக்க முடிகிறது? அறிவியல் முன்னேற்றத்தை எப்படி அளக்க முடியும்? அறிவியல் கொள்கைகள், மேலும் சிறந்த கொள்கைகள் ஆகின்றன என்கிறார் பாப்பர்.

மேலும் சிறந்த கொள்கை என்பது என்ன?

அறிவியலில் உண்மை என்று எதுவும் கிடையாது. உண்மை போன்றது (verisimilitude) என்பதுதான் உண்டு. உண்மையை இது நெருங்குவது என்றும் சொல்லலாம். அறிவியல், உண்மையாக இல்லாவிட்டாலும், உண்மையை மேலும் மேலும் நெருங்கிச் செல்லக்கூடும். இதுதான் அறிவியல் முன்னேற்றம். புராணங்கள் போலன்றி, அறிவியல் விமரிசனத்திற்கு உட்படக்கூடியது என்பதுதான் அதற்கு ஓர் அறிவார்ந்த தன்மையை அளிக்கிறது.

உண்மைபோன்றது என்பதை எப்படி அறிவது?

எந்தக் கோட்பாட்டிலும் சில சோதனைக் குறிப்புகள் உண்டு. அவற்றைச் சோதித்தால் சில உடன்பாட்டு முடிவுகளைத் தரலாம், சில எதிர்மறை முடிவுகளைத் தரலாம். உடன்பாட்டு முடிவுகளைத் தருவனவற்றை உண்மை அல்லது நேர்முக உள்ளடக்கம் என்றும், எதிர் முடிவுகளைத் தருவனவற்றை எதிர் உள்ளடக்கம் என்றும் சொல்லலாம். நாம் மேலும் மேலும் “அதிக உண்மை போன்றதற்கு” நெருங்கிச் செல்கிறோம். அதாவது மேலும் மேலும் சிறந்த கொள்கைகளை உருவாக்குகிறோம். அதாவது அறிவியல் முன்னேறுகிறது.

உண்மையில், ஒரு கொள்கை, அதைவிட நல்ல கொள்கை கிடைக்கும் என்ற நிலையில்தான் தவறானதாக ஆகிறது. அதாவது, தன்னிடம் ஏராளமான சோதிப்புக் குறிப்புகளையும் சான்றுகளையும் கொள்ளும் நிலையில் இன்னொரு பொதுமைக் கூற்று வராவிட்டால், இருக்கும் பழைய கொள்கையே இருந்துகொண்டிருக்கிறது. புதிய கொள்கை வரும்போது பழைய கொள்கை அதன் உபகணமாக (சப்செட்), உட்பிரிவாக மாறிவிடுகிறது. இப்படிப் பழைய கொள்கைகள், புதிய கொள்கைகளின் பகுதிகளாக ஆவதன்மூலம், அறிவியல் தொடர்ந்து முன்னேறுகிறது.

அறிவியல் கொள்கைகள், நாம் உற்றுநோக்க முடியாத கருத்துலகத்தை, அருவ உலகத்தைச் சார்ந்தவை என்கிறார் பாப்பர். இதனால் அவர் ஒரு ரியலிஸ்ட் (யதார்த்தவாதி) ஆகிறார். (அறிவியல் யதார்த்தவாதம் வேறு, இலக்கியத்தில் பேசப்படும் யதார்த்தவாதம் வேறு.) மேலும் மேலும் கோட்பாடுகள் மூலமாக இந்த உலகம் நமக்கு மேலும் மேலும் பிடிபடுகிறது. உற்றுநோக்கக்கூடியவைகளால் மட்டும் அல்ல.

நேர்க்காட்சிவாதிகள், கொள்கைகள், உற்றுநோக்கல் தரவுகளால் உருவாகுபவை என்றனர். உற்றுநோக்கல்களில் தற்சார்பானது (சப்ஜெக்டிவ்) எதுவுமில்லை. ஆகவே அறிவியல் பொதுநோக்குடையது (அப்ஜெக்டிவ்) என்றனர். பாப்பர் அறிவியல் பொது நோக்குடையது என்று சொல்வது, தரவுகள் பொதுவானவை என்பதனால் அல்ல; அறிவியல் கொள்கைகள் பொதுவானவை என்பதால். மேலும் பிற துறையினரும் சோதித்துப் பார்க்கக்கூடியவை என்பதனால் பொதுமை அடைகின்றன.

அறிவியல் கண்டுபிடிப்புகள் எவ்விதம் நிகழ்கின்றன என்பதில் நாம் அக்கறை காட்டக் கூடாது என்ற பாப்பரின் கருத்து, கேள்விக்குள்ளாகியிருக்கிறது. உள்ளுணர்வு மூலமாகக் கண்டுபிடிப்புகள் நிகழ்வதாக அவர் கருதுகிறார். பென்சீன் கட்டமைப்புப் பற்றி கெக்யூலே என்ற விஞ்ஞானி கண்ட கனவை அவர் உதாரணமாகத் தருகிறார். இதனை நாம் ஒரு பொதுவிதியாக்க முடியாது. ஏதோ சில நனவிலி நிகழ்வுகள், கருதுகோள்களைக் கண்டடைவதில் துணைநிற்கின்றன. ஆயினும் அதற்கு முன்னாலும் பிறகு அந்தக் கருதுகோள் உண்மைதானா என்று சரிபார்த்தல்/தவறாக்கல் மூலமாக நிரூபிக்கப்படுவதற்கு முன்னாலும், தொடர்ந்த தர்க்கம் ஆட்சிபுரிகிறது.

எவ்வளவு உற்றுநோக்கல் தரவுகள் கிடைத்தாலும், ஒரு கொள்கையை உருவாக்க அவை துணைபுரியா என்று அவர் சொல்வது உண்மை. ஆனால் கண்டுபிடித்தலைப் பற்றிய அறிவார்த்தமான கொள்கை ஒன்று சாத்தியமேயில்லை என்று அவர் சொல்வது சரியன்று. ஹான்சன் என்பார் தமது புகழ்பெற்ற படைப்பான “பேட்டர்ன்ஸ் அவ் டிஸ்கவரி” என்ற நூலில், பாப்பரது கோட்பாடு தவறானது என்று காட்டுவதோடு, பேர்ஸின் பணி அடிப்படையில், கண்டுபிடிப்புகளுக்கான ஒரு பொதுக்கோட்பாட்டை உருவாக்கவும் முயன்றுளளார்.

தாமஸ் கூன்

ariviyalin thaththuvam11962இல் தாமஸ் எஸ், கூன் எழுதிய “அறிவியல் புரட்சிகளின் அமைப்பு” (Structure of Scientific Revolutions) என்ற நூல் வெளியானது. நேர்க்காட்சி வாதத்திற்கு முற்றிலும் மூடுவிழா நடத்திய நூல் என்று இதனை வருணிப்பர். முற்றுப்பெற்ற அறிவியல் சாதனைகள் செவ்வியல் நூல்களிலும், பாடப்புத்தகங்களிலும் இடம் பெறுகின்றன. இவற்றிலிருந்துதான் அறிவியல் பற்றிய படிமம் உருவாக்கப்படுகிறது. மாறாக, அறிவியல் ஆராய்ச்சிகளின் வாயிலாக வெளிப்படும் வரலாற்றுப்படிமம் ஒன்றினை அறிவியலுக்குத் தரவேண்டும் என்பது கூனின் கருத்து. அவருக்கு முன்பு, அறிவு வளர்ச்சியியல் (எபிஸ்டிமாலஜி) என்பது ஒரு கலை என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் அது இயற்கைவாதத்தின் பாற்பட்ட ஓர் அறிவியலே என்று முதலில் நிரூபிக்கிறார் கூன். அறிவியல் அறிவினைப் புரிந்துகொள்ள அவர்

சட்டகம் (பேரடைம்)

இயல்பு அறிவியல்

பிறழ்ச்சி

அறிவியல் புரட்சி

பொதுத் தரஅடிப்படையின்மை

ஆகிய கருத்துகளை முன்வைத்தார்.

அறிவியல் கருதுகோள்கள், கொள்கைகள் ஆகியவை ஒரு சட்டக அமைப்பிற்குள் உருவாகின்றன. அன்றிருக்கும் அறிவியல் கொள்கைகள், சரியான முறைகள் எவை என்பது பற்றிய கருத்துகள், விவாத முறைகள், அறிவுஅடிப்படை மதிப்புகள் ஆகிய வற்றிலிருந்து ஒரு சட்டகம் அல்லது கருத்தமைப்பு உருவாகிறது. எவ்விதம் விஞ்ஞானப் பிரச்சினைகள் உருவமைக்கப்படுகின்றன, அவற்றிற்குத் தீர்வு காணும் முறைகள் எவ்விதம் அமைக்கப்படுகின்றன என்பதும் இதில் அடங்கும்.

சட்டகம் என்பதற்குக் கருத்தியல் என்பதுபோலக் கூன் பலவித அர்த்தங்களைத் தருகிறார். ஒருபுறம், ஒரு சமூகத்தின் நம்பிக்கைகள், மதிப்புகள், அறிவுநுட்பங்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்தஅமைப்பினையும் அது குறிக்கும். மறுபுறம், அதன் ஒரு பகுதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல்களையும் குறிக்கும்.

வரலாற்றில் பல்விதமான கொள்கைச் சட்டகங்கள் உருவாகி வருகின்றன. அறிவியல் ஒரே ஒரு சட்டகத்திற்குக் கட்டுப்பட்டது என்று நேர்க்காட்சிவாதம் நினைக்கிறது. உதாரணமாக, இன்றைய அலோபதி மருத்துவம் மட்டுமே அறிவியல் பூர்வமானது, அறிவியல் முறைகளின் அடிப்படையிலானது என்று நேர்க்காட்சிவாதம் நினைக்கிறது. ஆனால், பழைய கால சீன மருத்துவ முறை, தமிழ்நாட்டின் சித்த மருத்துவ முறை, இந்தியாவின் ஆயுர்வேதம், ஹோமியோபதி, அரேபிய யூனானி மருத்துவ முறை போன்றவை மாற்றுச் சட்டகங்களாக உள்ளன. இவை வரலாற்றில் ஒவ்வொரு கட்டத்தில் உருவாகி வந்தவை. இவையும் அறிவியலின் பாற்படும் என்பது கூனின் கருத்து. ஒரு புதுச் சட்டகம் ஏற்கப்படுகின்ற நிலை, ஏற்கெனவே இருக்கும் அறிவியலை மறுவரையறைக்கு உள்ளாக்குகிறது.

மருத்துவத்தில் மாற்றுச் சட்டகங்கள் உள்ளன என்பது இப்போது ஓரளவுக்கு எல்லோருக்குமே புரிகிறது, அவற்றை ஏற்பதனால் மாற்று மருத்துவங்களிலும் மக்கள் ஈடுபடுகிறார்கள். மேற்கத்திய மருத்துவத்தின் சட்டக அடிப்படைகள் வேறு, சித்த மருத்துவத்தின் சட்டக அடிப்படைகள் வேறு. ஒரு நோய் வாத பித்த சிலேத்துமக்கூறுகளின் பல்வேறு அமைவுகள் காரணமாக உருவாகிறது என்பதையோ நாடித்துடிப்பு இவற்றின் தன்மைகளை உணர்த்தும் என்பதையோ மேற்கத்திய மருத்துவச் சட்டகம் ஏற்காது. ஆனால் மக்கள் சித்த மருத்துவச் சட்டகத்தையும் ஏற்கவே செய்கிறார்கள்.

ஆனால் இதேபோல இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பிற அறிவியல்களுக்கும் மாற்றுச் சட்டகங்கள் இருக்கக்கூடும் என்பது எவருக்கும் புரிவதில்லை. அதனால் ஒரேவித இயற்பியல்தான் இருக்கிறது, அல்லது ஒரேவித வேதியியல் மட்டுமே உள்ளது என்று நினைக்கிறார்கள்.

ஆனால் ஒரு சட்டகத்திற்கும் மற்றொரு சட்டகத்திற்கும் பிரச்சினைகளின் அடிப்படைகள், தீர்வுகாண் முறைகள் யாவுமே மாறுபடுகின்றன.

ஒவ்வொரு சட்டகமும் தனக்கான பிரச்சினைகாண் முறைகள், தீர்வுமுறைகள் ஆகியவற்றிற்கான அடிப்படைகளை வைத்துள்ளது. ஆனால் மற்றொரு சட்டகத்தின் பிரச்சினைகாண் முறைகள், தீர்வுமுறைகளின் அடிப்படைகளை அது முற்றிலும் திருப்திசெய்ய இயலாது.

சட்டகங்கள் மாறுபடுவதற்கு முக்கியக் காரணம், உற்றுநோக்கல்களே கொள்கை அடிப்படையில் அமைவதுதான் என்றார் கூன்.

அறிவியல் ஆராய்ச்சியும் மரபுசார்ந்ததும் மரபுக்குக் கட்டுப்பட்டதாகவுமே உள்ளது. பாப்பர் கருதியதுபோல அறிவியலாளர்களும் திறந்த மனதுள்ளவர்களாகவும், விமரிசன மனப்பான்மை உடையவர்களாகவும் இல்லை. இதுவரை உள்ள அறிவியல் சட்டகமும், புதிர்களுக்கு விடைகாணல் என்ற மரபுச்சட்டகத்தின் பாற்பட்டதாகவே உள்ளது. ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கின்ற கருத்தாக்க, தொழில்நுட்ப உத்திகளைச் சார்ந்து புதிய சில பிரச்சினைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்குத் தீர்வு காண்பதிலேயே இயல்பு அறிவியல் ஆய்வின் வெற்றி அடங்கியிருக்கிறது.

ஒரு சட்டகத்திற்குக் கட்டுப்படாமல், இயல்பு (விதிமுறைசார்) அறிவியல் என்பது இருக்கவே இயலாது என்கிறார் கூன்.

சீட்டு விளையாட்டின்போது எதிர்பாரா நிலைமையினால் உருவாகும் தடை, இடையூறு, அவற்றை ஏதாவதொரு முறையினால் தீர்வுகண்டுவிடலாம் என்ற எதிர்பார்ப்பு இவற்றினால் புதுமை விளைகிறது. இது அறிவியலுக்கும் பொருந்தும். ஒரு சட்டகத்தின் பின்னணி ஏற்படுத்தும் எதிர்பாரா ஒன்றுதான் பிறழ்ச்சி.

இன்று பலரும் கருதுவதுபோல, அறிவியல் என்பது காலங்காலமாகத் திரட்டப்பட்டு வரும் அறிவுத்திரள் அல்ல. இயல்பு அறிவியலின் மரபுசார்ந்த செயல்முறைகளுக்கு மாறாக, மரபை உடைக்கின்ற விதமாக ஏற்படும் புதுச் சேர்க்கைகள் அறிவியல் புரட்சிகள் எனப்படுகின்றன. இவற்றால்தான் அறிவியல் வளர்ச்சி ஏற்படுகிறது. இயல்பு அறிவியலினால் அல்ல.

உதாரணமாக, பிளேட்டோனிய உலகமைப்பு முறை நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை அறிவியல் சட்டகமாக ஏற்கப்பட்டுவந்தது. அதன்படி உலகமே பிரபஞ்சத்தின் மையம். பிற கோள்கள் யாவும் உலகத்தைச் சுற்றுவன. சூரியனும் ஒரு கோளாகவே கருதப்பட்டது. இந்த முறை அடிப்படையிலான கணக்கீட்டின்படிதான் கிரகணம் போன்ற நிகழ்வுகள் யாவும் கணிக்கப்பட்டன. அவை சரியாகவும் இருந்தன.

ஆனால் கலிலியோ உருவாக்கிய தொலைநோக்கியும், அவர் உருவாக்கிய சூரியமையக் கோள் அமைப்பு முறையும் ஓர் அறிவியல் புரட்சியை உருவாக்கின. அடுத்தநிலையிலான அறிவியல் வளர்ச்சியை இதுதான் சாத்தியப்படுத்தியது.

இவ்வாறே இன்றுவரையிலும், நியூட்டனின் இயங்கியல் விதிகள்தான் சாதாரண நிலையில் பயன்படுகின்றன. அவை சரியாகவும் இருக்கின்றன. ஆனால் ஐன்ஸ்டீனின் இயங்கியல் கொள்கை, அடுத்தநிலையில் விண்ணியல் சார்ந்த இராக்கெட் போன்றவற்றின் இயக்கங்களுக்கு உதவக் கூடியதாக அமைந்தது.

ஏற்கெனவே திரட்டப்பட்டு வந்திருக்கின்ற அறிவமைப்புகளிலிருந்து விலகி, பழைய சட்டகத்திற்கு முற்றிலுமோ, பகுதியளவிலோ மாறுபட்ட அல்லது பொருந்தாத கருத்தமைப்புகளைக் கொண்டு உருவாகுவது புதிய சட்டகம். அதுதான் அறிவியல் புரட்சிக்கு அடிப்படை.

அறிவியல் புரட்சி நிகழும்போது அறிவியலாளர்கள் உலகினை நோக்கும் கருத்துப்பார்வை முற்றிலுமாக இடம்பெயர்ந்து, புதியதொரு நோக்கிற்கு இடமளிக்கிறது.

இவ்வாறு நிகழும்போது பழைய சட்டகம், புதிய சட்டகம் இரண்டிற்கும் பொதுவானதொரு தரஅடிப்படை அளவுகோல் கிடையாது. இதனைத்தான் பொதுத் தர அடிப்படையின்மை (Incommensurability) என்றார் கூன். ஒன்றுக்கொன்று போட்டி யிடும் இரு சட்டகங்களுக்கிடையிலான மாற்றம் ஒன்று, நடைபெறுவதேயில்லை, அல்லது, தர்க்கரீதியாகப் படிப்படியாக முழுமையாக நிகழ்கிறது. இந்த மாற்றத்தை யாரும் நிர்ப்பந்திக்க இயலாது.

அரசியல் சட்டகங்களும் இவ்வாறே மாறுபட்ட சமூகநிலைமைகளால் உருவாகின்றன. இவை ஒன்றுக்கொன்று முற்றிலுமோ, ஒருபகுதியோ பொருந்தாதவையாக இருக்கும். சான்றாக, ஜனநாயக அமைப்பும், ஒற்றைத் தனியாட்சி (சர்வாதிகார) முறையும் இரண்டு வெவ்வேறு சட்டகங்கள். ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு முற்றிலும் மாறியாக வேண்டும், அல்லது மாற்றமே இன்றி அப்படியே இருக்கவேண்டும். ஆனால் அரசியல் புரட்சியோ, அறிவியல் புரட்சியோ எதுவாயினும் குறிப்பிட்ட சமூகத்தின் கருத்தேற்பின்றி நிகழ்வது கிடையாது.

ஆனால் இரண்டினையும் ஒரே தராசில் வைத்து அளக்கக்கூடிய பொதுத்தர அடிப்படை என்பது கிடையாது. வெவ்வேறு சட்டகங்கள் உலகினைப் பார்க்கும் பார்வையும், உலகில் காணும் பிரச்சினைகளும், அவை அறிவியல் என்பதை வரையறுக்கும் முறையும் என எல்லாமே மாறுபடுவதால் பொதுத்தர அடிப்படை யின்மை ஏற்படுகிறது.

அதாவது இதற்கு அர்த்தம் எளிய சொற்களில் கூறினால், சித்த மருத்துவத்தையும், சீன அக்குபங்ச்சர் முறையையும், அலோபதி முறையையும் ஒரே தராசில் வைத்து எடைபோட்டு, இது சரி, இது தவறு என்றெல்லாம் கூறமுடியாது.

சமூக வாழ்க்கையில் காணும் கொள்கைகளுக்கும் இது பொருந்தும். உதாரணமாக, முதலாளித்துவம் உலகத்தில் காணும் பிரச்சினைகளும், அதற்கு அது முன்வைக்கும் தீர்வுகளும் வேறு. பொதுவுடைமை அல்லது மார்க்சியம் காணும் பிரச்சினைகளும் அது முன்வைக்கும் தீர்வுகளும் வேறு. ஆகவே அது அறிவியல், இது போலி அறிவியல் என்றெல்லாம் கூறமுடியாது. இரண்டும் வெவ்வேறு கொள்கைச் சட்டகங்கள். ஆனால் நீங்கள் ஒன்று முதலாளித்துவவாதியாக இருக்கலாம், அல்லது மார்க்சியவாதியாக இருக்கலாம். இரண்டுமாக இருக்க இயலாது.

சமூக அறிவியல்கள் பலவற்றில் ஒரேவிதமான கொள்கைச் சட்டகங்கள் உள்ளன. ஒன்றிற்கொன்று தொடர்பும் உள்ளது. அறிவியலாளர்கள் இப்படிப்பட்ட பொதுச் சட்டகங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளனர். உதாரணமாக, வெப்பஇயங்கியல் என்ற சட்டகம், இயற்பியல், வேதியியல், உயிர்த்தொழில் நுட்பம் போன்ற பல அறிவியல்களுக்குப் பொதுவானது.

கூன் முன்வைத்த புரட்சிகரமான கருத்துகளைத் தொகுத்தால்,

1. அறிவியல், உண்மை போன்ற நிலையான ஒன்றை நோக்கித் தேடலில் இயங்கும் அமைப்பு என்று கூற இயலாது.

2. தங்கள் முன்னோர் வகுத்த வழியில்தான் அறிவியலாளர்கள் செல்கின்றனர். முன்னோர்கள் வகுத்த நிர்ணய மரபுகளைப் பின்பற்றி, அவர்கள் கொண்ட கொள்கைகள், தொழில்திறன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தித்தான் ஆய்வு செய்கின்றனர். கொள்கைகளை ஒப்பிடுவது ஒப்பியலானது. நிச்சயமானது அல்ல.

3. அறிவியல் மேலும் மேலும் பல பிரிவுகளாகப் பிரிந்து, தனித்திறன்களை நோக்கி வளர்ச்சியடைகிறது (உதாரணமாக, பொதுவாக மருத்துவர் என்றிருந்த நிலை மாறி, கண்ணுக்குத் திறனாளர் ஒருவர், பல்லுக்கு ஒருவர், சிறுநீரகத்திற்கு ஒருவர், இதயத்திற்கு ஒருவர்…. எனத் தனித்திறனாளர்கள் தோன்றுகின்றனர்). இது அறிவியல் மாற்றத்தின் ஒரு படிநிலை அல்ல. மாறாக, அறிவியலாளர்கள் தங்கள் அறிவுசார் இலக்குகளை அடைகின்ற வழிமுறை இதுதான்.

4. அறிவியல் வளர்ச்சி, ஒரு தனித்த அறிவியலாளரால் ஏற்படுவது அல்ல. ஒரு அறிவியல் சமூகத்தின் செயலினால் நிகழ்வது. அறிவியல் என்பது சமூகமுன்னேற் றத்தை அல்லது வளர்ச்சியை நோக்கியதாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆகவே அறிவியல் விதிமுறை சார்ந்த அல்லது இயல்பு நெறிமுறை ஒன்றை ஏற்கவேண்டும் என்கிறார் கூன்.

(அடுத்து பெயரபெண்டின் கொள்கைகளை நோக்கி இக்கட்டுரையை நிறைவு செய்யலாம்.)


பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அறிவியலின் தத்துவம் ஓர் எளிய தொடக்கம் –பகுதி- 3”

அதிகம் படித்தது