மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அறிவுக்கு வேலை கொடு

தேமொழி

Aug 21, 2021

siragu kirumigal6

வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு

விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க – உந்தன்

வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க

வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை

வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே – நீ

வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே

நீ வெம்பி விடாதே

[...]

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா – நான்

சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா

ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி

உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி

—பாடல்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (அரசிளங்குமரி-1961)

இது போன்ற பகுத்தறிவு அறிவுரைகள் பாடலாக மக்களிடையே, வளரும் இளைய தலைமுறையிடையே இன்று இல்லாமல் போனது மிகவும் கவலைக்குரிய நடைமுறை.

உலகம் முழுவதும் மக்களிடையே மூட நம்பிக்கைகள், தன்னையே அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் நடைமுறைகள் இருந்தாலும் இந்தியாவில் அது உச்ச நிலையில் இருப்பதை மறுப்பதற்கில்லை. பலமுறை உலகமே நகைக்கும் அளவிற்கு மாட்டின் சிறுநீர் கொடுத்து மருத்துவம் என்ற நிலையில் இந்தியா இந்த நூற்றாண்டில் சென்றுள்ளது. கிடைக்கும் தொழில் நுட்ப வளர்ச்சி அறிவியலைக் கொண்டு மேலும் சிந்தனை செய்யாமல், ஆராயாமல் அந்தத் தொழில் நுட்ப வளர்ச்சியைக் கொண்டே மூடநம்பிக்கை வளர்ப்பு இந்த நூற்றாண்டில் மேலும் அதிகரித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கடவுளர்களும் தங்களையே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாது கோவில்கள் பூட்டப்பட்ட பொழுதாவது, கடவுள் என்ற கருத்தாக்கத்தை மக்கள் மீள்பார்வை செய்வார்கள் என்ற நம்பிக்கையும் இப்பொழுது பொய்த்துப் போனது.

பகுத்தறிவு பிறந்ததெல்லாம்

கேள்விகள் கேட்டதனாலே

உரிமைகளைப் பெறுவதெல்லாம்

உணர்ச்சிகள் உள்ளதனாலே

ஏன் என்ற கேள்வி

இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை

—பாடல்: வாலி (ஆயிரத்தில் ஒருவன்-1965)

என்று அறிவுறுத்தப்பட்டாலும் ஏன் என்ற கேள்வி கேட்கும் வழக்கம் இன்றித்தான் மக்கள் இன்றும் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள்.

பகுத்தறிவாளரும் மானுடவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வாளருமான பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் அவர்கள் கூறிய “கடவுள் இல்லைனு சொல்லல.. இருந்தா நல்லா இருக்கும்” என்ற புகழ்பெற்ற வரிகளை கமல்ஹாசன் திரைப்படத்தில் கையாண்டு அக்கருத்து மக்களிடம் பரவலாகவே கைபேசிகள் வழி மீம்ஸ் நகைச்சுவைக் கருத்துரைகளாகச் சென்று சேர்ந்தது. இருப்பினும் சான்றுகளற்ற கொரோனா மருத்துவ முறைகளும் அதைவிட அதிக அளவில் பரப்பிவிடப்பட்டன. கொரோனாவை எதிர்க்கும் உணவு முறைகளுக்கு, அதற்கான மருத்துவ முறைகளுக்கு ஏதேனும் அடிப்படை சான்றுகள் உள்ளனவா என்றும் எவரும் ஆராயவில்லை. ‘கோ கொரோனா கோ’ ‘கோ கொரோனா கோ’ என்று தாம்பாளத்தைக் கரண்டியால் தட்டி கொரோனாவை விரட்ட முயன்று தங்கள் உச்ச அளவு அறிவியல் அறிவை வெளிப்படுத்தினார்கள். முகமூடி இன்றி கும்பமேளா வரை சென்று கடவுளை வழிபட்டதால், கட்டுக்கடங்காத தொற்றுப் பரவல், அதிர்ச்சி அளிக்கும் அளவிற்கு மரணச் செய்திகள் தலைப்புச் செய்திகளாக ஒரு வாரத்திற்கு மேல் ஊடகங்களை ஆக்கிரமித்தன. இன்று அந்த மூடத்தனத்தின் உச்ச நிலையாக ‘கொரோனா தேவி’ என்ற ஒரு கடவுளை வேறு உருவாக்கி அந்தக் கடவுளிடம் காப்பாற்றச் சொல்லி வழிபாடு செய்வது வெறுப்படையச் செய்கிறது.

கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்து மக்களை நல்வழிப்படுத்தும் என்ற நம்பிக்கையும் இல்லை. அவர்களும் தங்கள் பங்கிற்கு அறிவியல் சான்றுகள் தொல்லியல் சான்றுகள் எதுவுமின்றி வரலாற்றைத் திரிக்கும் வேலையில் களமிறங்கி கல்வியையும் சீர்குலைக்கும் நிலைதான் நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே எல்லாவற்றையும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பெயருடன் இணைத்தால் போதும் அது அறிவியல் தகுதி பெற்றுவிடும் என்ற எண்ணம் மக்களிடையே புழக்கத்தில் இருப்பதைக் காணமுடிகிறது. சிதம்பரம் கோயிலில் புவியின் காந்தப்புல மையமுள்ளது. அமெரிக்க செயற்கைக் கோள் திருநள்ளாறு கோயிலின் ஆற்றலால் வானில் செயலிழந்து தடுமாறுகிறது என்ற புரட்டுகள் தொழில் நுட்ப வளர்ச்சியின் உதவியுடனே விரைவில் எல்லோரிடமும் சென்று சேர்ப்பிக்கப்படுகிறது. இதில் கொடுமை என்ன வென்றால் திருநள்ளாறு சனீஸ்வரனின் ஆற்றல் அறிவியல் பாடங்களிலும் இடப் பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியதுதான்.

ஏற்கனவே வேதியியல் அறிவியல் துறையில் நோபல் பரிசு பெற்ற, இந்தியப் பின்னணி கொண்ட ஆய்வாளர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் இந்தியாவில் நடந்த ‘இந்தியன் சயின்ஸ் காங்கிரஸ்’ கருத்தரங்கில் அறிவியல் ஆய்வுரைகள் என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட, ஆனால் அறிவியலுக்கு முற்றும் புறம்பான ஆய்வுக் கட்டுரைகளைக் கண்டு அதிர்ந்து போய் இந்தியன் சயின்ஸ் காங்கிரஸ் என்பது ஒரு சர்க்கஸ், இதில் இனி நான் கலந்து கொள்ளவே விரும்பவில்லை என்று கண்டனம் செய்து வெளியேறினார். நாட்டில் எந்த ஓர் அறிவியல் விழிப்புணர்வு மாற்றமும் இல்லாமல் அரசியல்வாதிகள், அறிவியலாளர்கள், நீதியரசர்கள் என எல்லோரும் தங்கள் கருத்துரை என்ற நோக்கில் அறிவியலைப் பதம் பார்த்துக் கொண்டே இருப்பது ஒரு தொடர்கதையாக இருப்பதைக் காணும்பொழுது, மக்களிடம் உண்மை அறிவியல் நோக்கமும் நடைமுறையும் என்றுதான் நிலைபெறும் என்ற ஏக்கம்தான் எழுகிறது.

புரட்டு அறிவியல் செய்திகளை ஆராயாமல் உடனடியாகப் பரப்புவதைக் கைவிட்டு, தகவல் குறித்து ஆய்வு செய்து உண்மை என்றால் மற்றவருக்கு அது உதவக்கூடும் என்றால் மட்டுமே முன் செலுத்தும் பண்பு மக்களிடம் வர வேண்டும். உண்மை செய்திகளாக இருந்தாலும், அவை மக்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கக்கூடிய செய்திகளை நாம் நம் அளவில் நிறுத்த வேண்டும். நமக்கு நாமே தணிக்கை அதிகாரி என்ற பொறுப்பை ஏற்க வேண்டும். நமது குழந்தைகளின் வாழ்க்கையில் அக்கறை உள்ள நாம் இச்செய்தியை அவர்களுக்கு அனுப்புவோமா என்ற கேள்வி அளவீட்டை வேண்டுமானால் ஓர் அடிப்படை அளவுகோலாகக் கொள்ளலாம்.

அவ்வப்பொழுது பகுத்தறிவாளர்கள் உரத்த குரலெடுத்துக் கண்டிக்கும் பொழுது அவர்களைக் கொலை செய்யவும் வலதுசாரிகள் தயங்குவதில்லை. மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராடிய கௌரி லங்கேஷ், கோவிந்த் பன்சாரே, எம் எம் கல்புர்கி, நரேந்திர தபோல்கர் போன்ற பகுத்தறிவாளர்கள் இதுவரை பலியாகியுள்ளனர். நரேந்திர தபோல்கர் ஆகஸ்ட் 20 , 2013 அன்று அவரது சீர்திருத்தப் போராட்டத்தை நிறுத்தும் நோக்கில் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவர் மறைந்த நாளை ‘அறிவியல் இயல்பை’ (scientific temper) மக்களிடம் வளர்க்கும் விழிப்புணர்வு நாளாக அறிவியல் ஆதரவாளர்கள் கடைபிடித்து வருகிறார்கள்.

இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு, நாட்டை அறிவியல் பாதையில் கொண்டு செல்ல பல முயற்சிகளை மேற்கொண்டவர். தனது ‘டிஸ்கவரி ஆப் இந்தியா’ நூலில் “scientific temper” என்ற கருத்தாக்கத்தை முன்னிறுத்திக் கூறிய விளக்கம் இன்றும் மக்களால் மேற்கோளாகக் காட்டப்படுகிறது. நேரு கூறியதன் மையக் கருத்து; அறிவியல் இயல்பை, எதையும் ஆராயும் மனப்பான்மையை, கேள்வி எழுப்பி மெய்ப்பொருள் காணும் முறையை மக்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது. வாழ்க்கைக்கு அறிவியல் அணுகுமுறை தேவை. அறிவியல் கோணத்தில் சிந்திக்கும் ஆராயும் முறை மக்களிடையே வளர வேண்டும், இது மக்களின் வாழ்க்கைமுறையாகவே இருக்கவேண்டும் என்று நேரு எண்ணினார்.

அறிவியல் கோணத்தில் அணுகும், ஆராயும் மனப்பான்மையை மக்களிடம் கொண்டு செல்ல பயிற்சிப் பட்டறைகள் பயிலரங்கங்கள் போன்றன, கல்வி நிலையங்களில் பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை செயலாக்கம் பெறவேண்டும். கற்கும் கல்வி வெறும் பட்டத்திற்கும் பதவிக்கும் வேலைக்காகவும் பணம் சம்பாதிக்கவும் என்ற மனநிலை மக்களிடம் இருந்து மாறவேண்டும்.

அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது குடிமக்களின் அடிப்படைக் கடமை ஆகும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 51-ஏ(எச்) உணர்த்துகிறது. மூடநம்பிக்கைகளால் மக்கள் ஏமாறாமல் இருக்க போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தத் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மனித நேயமற்ற கொடுமையான பழக்கங்களுக்கு எதிராக, சமுதாயத்துக்குத் தீங்கு விளைவிக்கும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

“தனிமனிதர்களை மேம்படுத்தாமல் ஒரு சிறந்த உலகத்தைக் கட்டமைக்க இயலாது. அதனை நிகழ்த்திக் காட்ட முதலில் நாம் ஒவ்வொருவரும் நமது சொந்த முன்னேற்றத்திற்காகப் பாடுபடவேண்டும் … ” என்பது இரண்டு நோபல் பரிசுகளை வென்ற முதல் அறிவியலாளர் மேரி கியூரி அவர்களின் கூற்று.

மூடநம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டம் ஒன்றைத் தமிழ்நாடு அரசும் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான மசோதாவை மகாராஷ்டிர அரசு கடந்த 2013-ஆம் ஆண்டும், கர்நாடக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டும் நிறைவேற்றியுள்ளன. தமிழ்நாட்டில் அண்மையில் பேயோட்டுகிறேன் என்று பெண்ணை சாட்டையால் அடிக்கும் நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் காணொளி வழியாகப் பரவியது. அதைப் பார்க்கும் பொழுது, முன்னேறிய 21 ஆம் நூற்றாண்டில்தான் நாம் வாழ்கிறோமா என்ற வேதனையும் எழுந்தது. தமிழ்நாடு அரசும் மற்ற மாநிலங்கள் போல மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும். இந்திய நாட்டுக்கே ஒரு முன் மாதிரியாக பகுத்தறிவுப் பகலவன் பெரியார் அவர்கள் மூடநம்பிக்கையை ஒழிக்கப் போராடிய தமிழ்நாடு மாநிலத்தில் இன்னமும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வராமல் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. தமிழ்நாடு அரசு மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறுதியாகமூடநம்பிக்கை மக்களிடம் நீக்கவேண்டி திரைப்படத்திற்காக கவிஞர் வாலி அவர்களால் எழுதப்பட்ட பாடல் வரிகள் மேற்கொண்டு சிந்தனைக்காகவும் …. செயல்பாட்டிற்காகவும் ….

ஆகாத பழக்கமெல்லாம்

மனதுக்குப் பொருந்தாத வழக்கமெல்லாம்

ஆக்கத்தைக் கெடுத்துவிடும்

மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும்

[...]

அறிவுக்கு வேலைகொடு

பகுத்தறிவுக்கு வேலை கொடு

மூடப் பழக்கத்தை விட்டுவிடு

காலம் மாறுது கருத்தும் மாறுது

நாமும் மாற வேண்டும்

நம்மால் நாடும் மாற வேண்டும்

—பாடல்: வாலி (தலைவன்-1970)


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அறிவுக்கு வேலை கொடு”

அதிகம் படித்தது