மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அறிவுமதியின் மௌனம் (சிறுகதை)

முனைவர் ஆ.சந்திரன்

Mar 9, 2019

siragu arivumathi1

யாமத்து அமைதி நிலவிய பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இருவரின் உரையாடல் அவனைப் பள்ளிப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது. அந்த ஆண்டு அக்டோபர் இரண்டாம் நாள் ஞாயிற்றுக் கிழமையாக இருந்தது. நகரை நோக்கி ஆமைவேகத்தில் போய்க்கொண்டிருந்த அந்த அரசுப்பேருந்தின் நடுப்பகுதியில் அமர்ந்திருந்தான் அறிவுமதி. பள்ளி மாணவர்களுக்காகப் பிரத்தேயகமாக விடப்பட்டிருந்த அந்தப் பேருந்தில் விடுமுறை என்பதால் அவனுக்கு உட்கார இடம் கிடைத்தது.

கொண்டை ஊசி வளைவில் பேருந்து திரும்பியபோது வளர்ந்துகொண்டிருந்த புதிய கட்டிடங்கள் அவன் கண்ணில் பட்டன. நிறைமாத கர்ப்பினி விளைந்திருந்த நெல் மணிகளுக்கிடையே சுமைதாங்க முடியாமல் தள்ளாடி நடந்து போய்க்கொண்டிருந்தாள். அவற்றையெல்லம் பார்த்தவாறே இருந்தவன் எப்போது தூங்கினானோ தெரியாது.

பேருந்திலிருந்து பயணிகள் இரங்கும் அதிகப்படியான சப்தம் கேட்டு விழித்தவனுடைய மனதில் பதட்டம் தொற்றிக்கொண்டது. “அவள் வந்துவிட்டிருப்பாளோ?” என்ற பதட்டத்துடன் எழுந்து வேகமாய் ரோசினி வரச்சொன்ன இடத்திற்குப் போனான். அவள் இன்னும் வரவில்லை என்பதை உறுதிசெய்த பின்னரும் பதட்டம் அவனைவிட்டு போக மறுத்துவிட்டது.

அவளிடம் என்ன பேசுவது என்று யோசித்தவனாய் பேருந்து நிலையத்தின் மூலையில் நின்றுகொண்டிருந்தவன் கண்கள் பிரதான சாலையில் வரும் ஆட்டோக்களை ஆராயத் தொடங்கின.

10.30 மணிக்கு வருவதாக கைபேசியில் அவள் சொல்லியிருந்தாள். தன்னுடைய கைபேசியை எடுத்து பார்த்தான் மணி 10.35 ஆகியிருந்தது. இரும்பியபடி பேருந்திற்காக காத்து நின்ற முதியவர் அடிக்கடி எச்சில் துப்பிக்கொண்டிந்தார். அவரைப் பார்த்து, ‘ஏங்க கண்ட இடத்தில எச்சில் துப்பாதீங்க’ என்று பணிவுடன் சொன்னான். பொது இடத்தில் எச்சில் துப்பாதே! ரோசினி அவனுக்குச் சொன்ன அறிவுரையில் ஒன்று. கல்லூரியில் அவளுடன் சாலையில் நடந்து கொண்டிருந்த போது பல முறை அவள் அவனுக்கு அதை நினைவூட்டியிருக்கிறாள். அவள் கடந்த முறை வாங்கிகொடுத் அந்த சட்டை அவனுடைய அழகைக் கூட்டியது. அவளுக்கு நாகரிகமாக உடைய அணிவது பிடிக்கும்.

சட்டை பையில் இருந்த கை பேசியை எடுத்து மணி பார்த்த போது 11 ஆகியிருந்தது. ஆசியாவின் பெரிய மருத்துவ மனைகளில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் அந்த மருத்துவ மனையைக் கடந்துகொண்டிருந்த ஆட்டோவில் மஞ்சள்நிற சுடிதார் போட்டிருந்த ரோசினி அடம்பிடித்துக் கொண்டிருந்த தன் குழந்தையைச் சமாதானம் செய்துகொண்டிருந்தாள்.

வலப்பக்கமாய் ஆட்டோ திரும்பிய சில வினாடிகளில் அவள் மனம் கனக்கத் தொடங்கியது. அவளுடைய கண்கள் அந்தத் தூணை வெறிக்கப் பார்த்துக்கொண்டே இருந்தன. ஆட்டோ அதைக் கடந்த பின்னரும் அது தொடர்ந்தது.

நகரப் பேருந்துகள் நின்று செல்லும் பழைய பேருந்து நியைத்தில் வண்டி நின்றதும் அவளுடைய தேடலின் பரிசாய் அவள்முன் நின்றான் அறிவுமதி.

அவளுடைய குழந்தையைத் தூக்கிக் கொண்டு சாலையைக் கடக்க நின்றான். அந்நியமானவனுடைய தோளில் இருந்ததால் குழந்தை அழ ஆரம்பித்தது. குழந்தையின் அழுகையை நிறுத்த போராடிக்கொண்டிருந்தவன் கரங்களைப் பிடித்துக்கொள்ள நெருங்கிய அவளுடை கை வெட்கப்பட்டு நின்றது.

கல்லூரி நாட்களில் இந்தச் சாலையைக் கடக்கும் போது ஒருமுறை அறிவுமதி தன்னுடன் கையைப் பிடித்தபோது உதறித் தள்ளியவள், அவன் வருத்தப் படக்கூடாதென்பதற்காகக் “கல்யாணத்துக்கப்புறம் உன் கையதான பிடிச்சிட்டு நடக்கப் போறேன்” என்று சமாதானம் செய்தாள்.

ஆனால், ச்சீ… என்னதான் இருந்தாலும் நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது என்று வருந்தினாள். அதனால் அன்றைய நாள் முழுதும் பட்டினிக் கிடந்தாள்.
நானூறு ஆண்டுகால பழமையைத் தாங்கி கம்பீரமாய் நிற்கும் கோட்டையைக் காட்டியபோது குழந்தை சமாதானம் அடைவதற்கான அறிகுறியை அவனால் உணர முடிந்தது.

கோட்டையச் சுற்றியிருந்த அகழியில் கல்லெறிந்து கொண்டிருந்த சிறுவர்களைக் காட்டி “அதோ பார் அந்த அண்ணா எப்படி கல்லடிக்கிறான் பாரு!. நாமகூட கல்லெடுத்து அடிக்கலாமா? இம்…. என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தான்.
அம்மாவின் திருமண ஆல்பத்தின் பக்கங்களைப் புரட்டி அலசிக்கொண்டிருந்த குழந்தை மனம் பிரமாண்டமான அந்தக் கோட்டையைப் பார்த்து ஒருவாறு சமாதானம் அடைந்தது. அவனுக்கு நெருக்கமாகத் தொடங்கியது.

கம்பீரமாய் நிற்கும் கோட்டையின் வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்த போது சிவனுக்கு அர்ச்சனை நடந்துகொண்டிருந்த செய்தியைக் காற்றில் மிதந்து வந்த மணியோசை உணர்த்தியது.

காலணிகளைக் காப்பகத்தில் வைத்துவிட்டு அதனருகில் இருந்த குழாயில் கால்களைக் கழுவிக்கொண்டு உள்ளே நுழைந்தபோது, அவன் அவளைப் பார்த்தான்.

கல்லூரி கால நினைவுகளுடன் அவள் அவனைப் பார்த்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தாள். தரிசனம் முடித்து திரும்பியவர்கள் வலப்பக்கமிருந்த கல்யாண மண்டபத்தினுள் நுழைந்தனர். தூண்களில் இருந்த ஆளியின் உருவத்தைப் பார்த்தபோது அவனுக்கு ரோசினியைப் பார்க்கவேண்டும் போல் இருந்தது. ஆனால் அவ்வாறு செய்யாமல் குழந்தையிடம் “அதோ பார்! எவ்வளவு பெரிய சிங்கம்” என்றான்.  “அது ஆளி யாச்சே! நீ ஏன் அதைப் போய் சிங்கம்னு குழந்தைகிட்ட சொல்ற” என்று கேட்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் கேட்கவில்லை.

“கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் போது அவள் அதை முதல் முறையாகப் பார்த்த போது அவளே சிங்கம் என்றுதான் நினைத்தாள்” அறிவுமதி கூறிதான் அது ஆளி என்று தெரிந்தது. தூண்களில் இருந்த அழகிய சிற்பங்களை ஓடோடிப் போய்த் தொட்டுத் தொட்டுப் பார்த்துவிட்டு, தன்னுடைய அம்மா இருக்கிறாளா? என்று திரும்பிப் பார்த்து உறுதிபடுத்திக்கொண்டிருந்த குழந்தையின் செய்கையைப் பார்த்துக்கொண்டே இருந்த அறிவுமதி ரோசினியை உற்றுப் பார்த்தான்.
அதே பார்வை.
ஆனால் அவனுடைய கண்களில் மட்டும் ஏதோ மாற்றம்.
இருவரிடைய உரையாடல்கள் நீண்டன.
குழந்தையின் குறும்புத்தனத்தை ரசித்தவாறே.

அவன் ஏதோ சொன்னபோது, அவள் மண்டபத்தின் நடுவில் இருந்த கல்லில் வட்டவடிவில் தலைகீழாய்த் தொங்கியவாறு செதுக்கப்பட்டிருந்த கிளிகளின் சிற்பத்தை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
கொஞ்ச நேரம் கழித்து, தூண்களைத் தொட்டு ரசித்து அலுத்துப் போனதோ என்னவோ? அம்மாவிடம் ஓடோடி வந்து

“மண்டபத்தின் மேலடுக்கில் இருந்த மணமக்கள் மேடையில் உட்கார வைக்குமாறு அடம்பிடித்தது ரோசினியின் குழந்தை. அதன் பிறகு இருவரிடையே ஒரு மயான அமைதி நிலவியது. கோயில் நடைசாத்த ஆயுத்தமானதால் அங்கிருந்து கிளம்பியவர்கள் இடப்புறம் இருந்த உயரமான அந்த மதில் சுவரின் மேல் நடந்து கொண்டிருந்தார்கள்.
தன்னுடைய தோல் மீதிருந்த குழந்தையிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்த அறிவுமதி, ‘ப’ வடிவிலான அந்த இடத்தைக் கடந்தபோது “இந்த இடத்தில் நான் ஒன்று கேட்டேன் நினைவிருக்கா?” என்றான்.

அவனுக்கு முன்னர் நடந்துகொண்டிருந்தவள், அவனைத் திரும்பிப் பார்க்காமலே “ஆமாம்” என்பதாய்த் தலையாட்டினாள். வாசலில் அமர்ந்திருந்த தன்னிடம் குழந்தையைப் போகச் சொல்லிவிட்டு “நாம் இன்னும் ரெண்டு நாளைக்குப் பிரிந்திருக்க வேண்டும்” என்று வருந்திய தன்னுடை கணவனை நினைத்துக்கொண்டே நடந்துகொண்டிருந்தாள் ரோசினி.

அந்த ‘பா’ வடிவ மறைவிடத்தில் அடைக்கலமான காதலர்களை வெறித்துப் பார்த்த குழந்தை சிணுங்க ஆரம்பித்தது.
எனவே அவளது பதிலை எதிர்பாராமல் குழந்தையின் அழுகையை நிறுத்த முயன்றான் அறிவுமதி. “ரொம்ப நாளை முன்னாடி இந்த இடத்தல ஒரு ராஜா இருந்தாரு. அவருக்கு பொம்மைங்கனா ரொம்ப இஸ்டமாம். அதனால நெறைய பொம்மைங்கள வாங்கி அதோ தெரியுதே! அந்த எடத்தல வைச்சி பூட்டிட்டாரு. அதை யாரும் திருடிட கூடாதுன்னுதான் இந்த எடத்துல இவ்வளவு பெரிய சுவத்த கட்டினாரு. அதோ தெரியுதே அந்த எடத்தல இருந்து சிப்பாய்ங்க பெரிய ஈட்டியைக் கையில வைச்சிக்கிட்டு அதை யாரும் திருடிட்டுப் போய்ட கூடாதுன்னு காவலுக்கு நிப்பாங்க. அப்படி யாராவது உள்ளே வர மாதிரி தெரிஞ்சா கையில இருக்கிற பெரிய்ய… ஈட்டிய அவங்க மேல வீசி எறிவாங்க….” என்று அவன் கதை விட்டுக்கொண்டிருந்த போது ரோசினி தன்னைக் கடந்து போய்க்கொண்டிருந்த இருவரைப் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவர்களுடைய தோற்றம் கல்லூரி மாணவர்கள் என்பதை அவளுக்கு உணர்த்தியது. கோட்டையின் வடமேற்கு மூலையில் கம்பீரமாய் நின்ற புளிமரம் கொழுந்து விட்டு எரியும் கடுமையான வெயிலில் நடந்து வந்த அவர்களுக்கு இளைப்பாற இடம் தந்தது. அந்த மரத்தடியில் குழந்தை அவனுக்கு மிகவும் நெருக்கமானது.

தன்னுடைய குழந்தையுடன் குழந்தையைப் போல் விளையாடிக் கொண்டிருந்ததை ரசித்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவளுக்கு நேரமாவதை உணர்ந்தவன் தான் வழக்கமாகச் சாப்பிடும் ஓட்டலில் ரோசினிக்கும் அவளது குழந்தைக்கும் சாப்பாடு வாங்கிக்கொடுத்தான்.

அவளை வழியனுப்ப ஆட்டோ ஏதாவது காலியாக வருகிறதா? என்று பார்த்துக் கொண்டிருந்த போது தனது கையை அவள் பற்றுவதை உணர்ந்தான். திரும்பி அவளைப் பார்த்தான்.  “இந்தா! அக்காவுக்கு நல்ல புடவை வாங்கிக் கொடு” என்று பணத்தை அவனது கையில் திணித்தாள். அவனால் அதை வாங்கமறுக்க முடியவில்லை.

அவர்களருகே வந்து நின்ற ஆட்டோவில் அவள் ஏறியபோது அவனது மனம் கனக்க ஆரம்பித்தது. நன்றாக இருக்கையில் அமர்ந்தவள் தன் குழந்தையை “வா” என்று அழைத்தாள். தயக்கத்துடன் அவளிடம் சென்ற குழந்தை அவனை இரக்கத்துடன் பார்த்தது. தன்னுடைய மடியில் குழந்தையை நன்றாக அமர்த்திக்கொண்டதை உறுதிசெய்து கொண்டவள் அவனைப் பார்த்து கண்ணசைத்தாள் “வருகிறேன்” என்பதாய்.
அவனும் அவளைப் போலவே நின்றுகொண்டிருந்தான்.

அவனை விட்டு ஆட்டோ கடக்கமுயன்ற போது “பார்த்து போ….. பத்திரம் … என்று கூறியபடி நின்றுகொண்டிருந்தான் சாலையில். அவனது உருவம் மறைந்ததும் குழந்தை மாலினியிடம் “யாருமா அந்த அங்கிள்?” என்று கோட்டது அவளுக்கு மின்சாரம் தாக்கியது போல் இருந்தது. அவர் அங்கிள் இல்லமா! என்றாள்.  பிறகு யாருமா…..? என்று குழந்தை அவளை நச்சரித்தது.  அதோ பார் எவ்வளவு பெரிய தூண் என்று முன்னே தெரிந்த தூணைக் காட்டினாள்.  அந்த தூணைப் பார்த்த குழந்தை நினவில் அவன் யார்? என்ற கேள்வி மறைந்தது.

வடக்கு நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோ வலப்பக்கமாக திரும்பிய போது அவன் அங்கே கம்பீரமாய் நின்றிருந்த தூணை வெறித்துப் பார்த்தான். பிறகு அங்கிருந்து கிளம்பியவன் எதிரே இருந்த புத்தகக் கடைக்குள் நுழைந்தான்.
நெடுநாளாய் வாங்கவேண்டும் என்று ஏங்கிய புத்தகத்தைப் பற்றிய நினைவுகளுடன்.


முனைவர் ஆ.சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அறிவுமதியின் மௌனம் (சிறுகதை)”

அதிகம் படித்தது