மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அலைபேசியினால் வந்த ஆபத்து (சிறுகதை)

ஸ்ரீதரன்

Feb 10, 2018

Siragu smart phone1

“அம்மா எனக்கு இந்தப் பாடம் புரியல, சொல்லிக் கொடும்மா” என்று புத்தகத்தோடு தன் அருகில் வந்த அர்ச்சனாவிடம் லட்சுமி,”போடி அந்தாண்டே, அம்மா வேலையாயிருக்கிறது தெரியலையா?” என்று எரிந்து விழுந்தாள்.

அர்ச்சனா அம்மாவை அச்சத்துடன் பார்த்துக் கொண்டே நகர்ந்தாள். லட்சுமி படித்தவள். பெயரில் மட்டுமல்ல, அழகிலும் மகாலட்சுமியைக் கொண்டிருந்தாள்.

அலைபேசி (Smart Phone) வந்தப் பிறகு ஆறு மாசமாய் அம்மா தன்னிடமிருந்து விலகிப் போவதை அந்தச் சிறுமி உணர்ந்தாள்.

லட்சுமி அர்ச்சனாவிடமிருந்து மட்டும் விலகிப் போகவில்லை. அவள் கணவன் ஹரியிடமிருந்தும்  விலகிக் கொண்டிருந்தாள்.

எல்லாம் ஆறு மாசத்துக்கு முன்னால் ஹரிக்கு அணி தலைவராக பதவி உயர்வு கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாட லட்சுமிக்கு அலைபேசி ஒன்று வாங்கிக் கொடுத்தான். அதுதான் அவன் செய்த தவறு. லட்சுமி வாட்ஸ் செயலியைப் பார்க்க ஆரம்பித்தாள். முதல் காதல் மாதிரி அவள் மனம் அதில் ஈடுபட்டது. பழைய நண்பர்களுடன் தொடர்பு கொண்டாள். கல்லூரியில் படித்த ஆண் நண்பர்கள், பெண் நண்பர்கள் எல்லோருடன் நட்பு தொடர்ந்தது. இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலும் அவளுடன் கல்லூரியில் படித்த நண்பர்களுடன் தொடர்பு மலர்ந்தது. வாட்ஸ் அப்பில் அவள் புகைப்படத்தை அடிக்கடி மாற்றினாள். செய்திகளை போட ஆரம்பித்தாள். வாட்ஸ் அப்பில் அரட்டை(chatting) செய்ய ஆரம்பித்தாள். ஆண் நண்பர்களிடமிருந்து அவள் அழகைப் புகழ்ந்து அவளுக்கு செய்தி வரும், அதுவும் எப்படி, ”டார்லிங், அன்பே, ஆருயிரே, தங்கச்சிலை, செல்லச் சிறுக்கி …” இதைவிட மோசமாய் வரும். அவள் மறுப்புச் சொல்லாமல் அரட்டை செய்வாள். இரவு நேரத்தில் மிகவும் மோசமாய் வரம்பு மீறி அரட்டை செய்யும் ஆண் நண்பர்களும் உண்டு.

தன் அம்மாவைப்  பார்த்து அர்ச்சனாவுக்குப் கோவம் வரும்.  அம்மாவுக்கு ஏன் இப்படி புத்தி போகிறது என்று ஆதங்கப்படுவாள். ஆனால் அவளால் எதுவும் செய்ய முடியாது.

ஹரியின் பாடு இதைவிட மோசம். அவன் வேலை முடிந்து வீடு வரும்போது இரவு ஒன்பது மணி ஆகிவிட்டிருக்கும். முன்பெல்லாம் அவன் வந்தவுடன் அன்புடன் அவனுக்குப் பரிமாறுவாள். வாட்ஸ் அப்பில் அரட்டை செய்ய ஆரம்பித்ததிலிருந்து அவள் கவனம் எல்லாம் வாட்ஸ் அப்பில்தான் இருந்தது. அதனால் இரவு உணவை மேசை மீது வைத்துவிட்டு அவள் வாட்ஸ் அப்பில் முழுகியிருப்பாள். அவன் தான் எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும்.

நாள் முழுவதும் வேலை செய்த கலைப்பு வேறு. அவளுக்காகக் காத்திருந்து அவன் தூங்கிப் போய்விடுவான். அவள் அலைபேசியை தன் படுக்கைக்கு அருகிலேயே வைத்திருப்பாள். தூங்கும்போது கூட அடிக்கடி எழுந்து அலைபேசியில் வாட்ஸ் அப் செய்தியைப் பார்ப்பாள்.

ஒருநாள் இரவு சுமார் மூன்று மணி இருக்கும். ஹரிக்கு தூக்கம் கலைந்தது. தன் பக்கத்திலிருந்த லட்சுமியைக் காணவில்லை. எழுந்து வந்து பார்த்தால் லட்சுமி மேசையின் மீது அமர்ந்து வாட்ச் அப்பில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்து அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

”சனியனே வந்து படு. எப்போ பார்த்தாலும் வாட்ஸ் அப்… ” என்று கத்தினான்.

”எனக்குத் தூக்கம் வரவில்லையென்பதால்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். இதுக்குப் போய் கோவிச்சுகிறீங்களே.” என்றாள்.

அன்று அர்ச்சனாவுக்குக் கணக்குப் பாடத்தில் ஒரு சந்தேகம் வந்தது. சந்தேகத்தை அம்மாவிடம்தான் கேட்பாள். லட்சுமி பிஎஸ்சி கணித பட்டதாரி.

அலைபேசி விளையாட்டில் தன்னை இழந்திருந்த அவள் கோபத்துடன்,  ”அம்மாவை தொந்தரவு செய்யாதே என்று எத்தனை தடவை உனக்குச் சொல்லியிருக்கேன். உனக்கு அறிவு இருக்கா? உனக்குக் கணக்குச் சொல்லித் தர எனக்கு நேரம் இல்லை. உன் சிநேகிதி ரஞ்சனியிடம் கேட்டுத் தெரிஞ்சுக்கோ. இல்லாவிட்டால் உன் வகுப்பு டீச்சர் சந்திராவிடம் கேட்டுக் கத்துக்கோ” என்று கத்தினாள்.

அர்ச்சனாவுக்கு கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. ”அம்மா மாறி விட்டாள்” என்று அவளுக்குப் புரிந்தது. இதை அவள் யாரிடம் சொல்லுவாள், அப்பாவிடம்தான் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

அன்று இரவு ஹரி வந்ததும், ”அப்பா எனக்கு இந்த கணக்கைச் சொல்லி தாப்பா. அம்மாவைக் கேட்டா சொல்லித்தரமாட்டேன் என்கிறாள். எப்போவும் மொபைலைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள்” என்று வந்ததும்  வராதமாய் தந்தையிடம் புகார் செய்தாள்.

”அம்மாவை நான் கேட்கிறேன். உனக்கு கணக்குதானே வேண்டும். உன் ஃபிரண்ட் வித்யாவிடம் கற்றுக் கொள். எனக்கு கணக்கு அவ்வளவாக வராது” என்றான் ஹரி.

”சரி. நீங்கள் முதலில் சாப்பிடுங்கள்” என்றாள் அர்ச்சனா.

அர்ச்சனா தன் தோழி வித்யாவிடமும் தன் அம்மாவைப் பற்றி சொல்லி வருத்தப்பட்டாள். ஏதாவது செய்து அம்மாவின் வாட்ஸ் அப்பிலிருந்து மீட்க வேண்டுமென அவள் துடித்தாள்.

அவள் பிஞ்சு மனத்தில் ஒரு திட்டம் தோன்றியது. அவள் அம்மா குளிக்கப் போகும்போது வாட்ஸ் அப்பை எடுத்து தன் புத்தக அலமாரியில் புத்தகங்களுக்குப் பின்னால் ஒளித்து வைத்துவிட்டாள். அம்மா தேடுவாள். கிடைக்கவில்லையென்றால் அந்தப் பழக்கத்தை விட்டு விடுவாள் என்பது அவள் எண்ணம்.

அவள் நினைத்ததைப் போலவே அம்மா தேடினாள். அர்ச்சனாவையும் தேடச் சொன்னாள்.

ஆனால் தேடிக் கொண்டிருக்கும்போது மொபைல் போன் ஒலிக்க அர்ச்சனா  புத்தகப் பையின் பின்புறத்திலிருந்து அதை வெளியே எடுத்தாள். அர்ச்சனாவுக்கு நல்ல அடி விழுந்தது. ”ஏண்டி, கழுதை, என்ன தைரியமிருந்தால் என் மொபைலை எடுத்து ஒளித்து வைப்பாய். இனிமே இந்த மாதிரி செய்தே நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று முதுகில் ஓங்கி ஒரு அடி விட்டாள்.

அர்ச்சனா அழுது கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். அவள் முயற்சி தோல்வியடைந்ததும் அம்மாவை மொபைல் பிடியிலிருந்து எப்படி காப்பாற்றலாம்? என்று யோசித்தாள். அந்தச் சிறுபெண்ணுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை?

ஒரு நாள் அர்ச்சனா பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தபோது புதிதாக யாரோ ஒருவர் தன் அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்த்தைப் பார்த்தாள். அவர்கள் பேசிக்கொண்டிருந்தது வினோதமாக இருந்தது அவளுக்கு. பேசிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி இருவரும் மொபைலைப் பார்ப்பார்கள். அவர் மொபைலிருந்து ஒரு செய்தியை அவளுக்கு அவர் அனுப்புவார். அவள் மொபைலிருந்து ஒரு செய்தியை அவருக்கு அவள் அனுப்புவாள்.

லட்சுமியின் ஒண்ணுவிட்ட சித்தப்பாவின் பையன். அண்ணன் உறவு ஆக வேண்டும். சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கிறார் அவர் பெயர் மனோஜ்  என்பதை அவர்கள் பேச்சிலிருந்து அர்ச்சனா புரிந்து கொண்டாள்.

Siragu smart phone2

அன்று ஹரி இரவு எட்டு மணிக்கு அலுவலகத்திலிருந்து வீடு வந்து விட்டான். அப்போது லட்சுமி வாட்ஸ் அப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. ஹரி அவள் அருகில் போய் அவள் கையிலிருந்த மொபைலைப் பார்த்தான். வாட்ஸ் அப்பில், ”நீ அப்பவும் அழகு! இப்பவும் அழகு!, ஸ்வீட் ஹார்ட் என்று இருந்தது. அவள் ”தேங்ஸ்” என்று பதில் அனுப்பியிருந்தாள். அவனுக்குக்கோபம் வந்தது.

மொபைலை அவள் கையிலிருந்து பிடிங்கி வீசி எறிந்தான். கண்கள் சிவக்க, இது குடும்பப் பெண்களுக்கு அழகா? எவனோ கண்டபடி வர்ணிக்கிறான். நீ சும்மா இருக்கறீயே’ என்றான்.

அலைபேசியை தூக்கி எறிந்ததால் கோபமடைந்த லட்சுமி பதிலுக்கு கத்தினாள். ”என் சுதந்தரத்தில் தலையிடாதீர்கள். உங்க வேலையைப் பார்த்திட்டுப் போங்க“ பக்கத்திலிருந்த ஒரு கரண்டியை தூக்கி அவன் மேல் எறிந்தான்.

இவர்கள் சண்டை போட்டுக் கொள்வதைப் பார்த்த அர்ச்சனா பயந்து விட்டாள். என்ன செய்வதென்று யோசித்து வீட்டை விட்டு வெளியே வந்தாள். தெருக்கோடி வரை நடந்து அங்கிருந்த மகளிர் காவல் நிலையத்திற்குள் நுழைந்தாள். என்னம்மா வேண்டும் என்று அங்கிருந்த காவல்துறை அதிகாரி சிவப்பிரியா கேட்க, என் அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள். நீங்க வந்து தடுத்து நிறுத்துங்க.“ என்றாள் அழுதுகொண்டே.

”எதனாலே சண்டை?”

”அம்மா எப்போவும் வாட்ஸ் அப் பாப்பாங்க. அதனாலே சண்டை”.

சிவப்பிரியாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. நாற்காலியிலிருந்து எழுந்தவள்,

”வா போகலாம் “ என்றாள். இருவரும்  அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள்.

அதற்குள் வீட்டில் சண்டை மும்முரமாகி ”நான் உங்களை விவாகரத்து செய்யப் போறேன்.  இப்பவே எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்” என்று லட்சுமி கத்திக் கொண்டிருக்கும்போது, ”அப்படி செய்யாதீங்க.” என்று உள்ளே நுழைந்த சிவப்பிரியாவையும் அர்ச்சனாவையும் பார்த்து இருவரும் திகைத்தனர்.

“நான் மகளிர் காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரியாக இருக்கிறேன். என் பெயர் சிவப்பிரியா” என்று அறிமுகம் செய்துகொண்டவளிடம் வெறுப்புடன் பார்த்த லட்சுமி, ”ஏண்டி இது உன் வேலையா? உன்னை …”லட்சுமி  அர்ச்சனாவை அடிக்க கையை ஓங்கினாள்.

”நிறுத்துங்க? நீங்க பண்ணறது கொஞ்சங்கூட நல்லா இல்லை. குழந்தைக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்காம நீங்க நாள் முழுவதும் மொபைல் பாத்துண்டே இருந்தா குடும்பம் எப்படி உருப்படும். வீட்டுக்கு விளக்கேத்த வந்த மகராசி இப்படிச்சீரழியலாமா? . குடும்பம் என்னும் கோவில் சிதைந்துவிடுமே!” என்றார் காவல் அதிகாரி.

”அவள் சின்ன பெண். அவளுக்கென்னத் தெரியும். அவள் சொல்றதை நம்பி வந்துட்டிங்களே”.

”சில சமயம் குழந்தைகள் பெரியவர்கள் மாதிரி நடந்து கொள்கிறார்கள். பெரியவர்கள் குழந்தைகள் மாதிரி நடந்து கொள்கிறார்கள். அர்ச்சனா மாதிரி குழந்தை கிடைத்தது நீங்கள் செய்த தவம்”.

என்னைக் கேட்க நீங்க யார்? எனக்கு எதில் இன்பம் கிடைக்கிறதோ அதை நான் செய்யறேன். நீங்கள் காவல் அதிகாரியாக இருக்கலாம். ஆனால் என்னுடைய சொந்த விசயத்தில்  நுழைய  உங்களுக்கு உரிமையில்லை.

”நீங்கள் அறியாமையில் பேசுகிறீர்கள். இன்பம் கிடைக்கிறது என்பதாலே குடிக்கலாமா? நமக்கு ஆனந்தம் தருவதெல்லாம் நன்மை தராது. வாட்ஸ் அப் சாட்டிங் என்பது ஒரு போதை. குடிபோதையைவிட கொடூரமானது. அதில் மூழ்கி சீரழிந்துவிடக்கூடாது என்பதால் சொல்றேன். நிறைய பெண்கள் வாட்ஸ் அப் பைத்தியமாய் இருக்காங்க. ”தீதும் நன்றும் பிறர் தர வாரா”, என்று பெரியவங்க சொல்லி இருக்கிறதைப் போலத் தீமையை நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம். அதன் பலனையும் அனுபவிக்க நேரிடும்”.

என்னுடைய அக்கா மாலதியும் உங்களைப் போல்தான் வாட்ஸ் அப் சாட்டிங்க்கு மீளா அடிமை ஆகி  ஒரு நாள் கணவனை விட்டு வேறு ஒரு ஆணுடன் ஒடி விட்டாள். இப்போது விவாகரத்து ஆகி தான் செய்ததை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறாள். அவள்  நிலைமை உங்களுக்கும் வரக்கூடாதென்பதால் சொல்கிறேன். மாயையில் மாட்டிக் கொண்டிருக்கின்றீர்கள். அதிலிருந்து வெளியே வாங்க.. காவல் அதிகாரியாய் அறிவுரைச் சொல்லவில்லை. என் சகோதரி மாதிரி பாவித்து சொல்கிறேன். நான் சொல்வதைக் கேளுங்க.” என்றாள் கண்களில் கண்ணீர் வழிய.

அர்ச்சனாவும், ”அம்மா ஆண்டி சொல்றதைக் கேளும்மா” என்றாள்.

”நல்லா சொல்லுங்க இன்ஸ்பெக்டர். நான் சொன்னைதை இவள் கேட்கல. நீங்க சொல்றதையாவது இவள் கேட்டுத் திருந்தட்டும்“ என்றான் ஹரி.

”நான் ஒண்ணும் தப்பு பண்ணலையே இன்ஸ்பெக்டர்”

”அப்படி சொல்லாதீங்க. ஆண்களில் சில கெட்டவர்களும் உண்டு. முதலில் உங்களைப் புகழ்வார்கள். பிறகு காதலிக்கிறேன் என்பார்கள். பிறகு அந்தரங்க வாழ்வில் நுழைவார்கள். ஏன் இந்த வம்பில் நாமாகவே போய் மாட்டிக் கொள்ள வேண்டும்? இந்தப் பழக்கத்திலிருந்து மனதைரியமிருந்தால் எளிதில் விலகி விடலாம்”.

சிவப்பிரியா கூறிய வார்த்தைகள் லட்சுமியின் மனதை மாற்றின.  அவளுக்கு தான் செய்த தவறு புரிந்தது. ”சாரி, இன்ஸ்பெக்டர். எல்லாம்  இந்த மொபைல்போனால் வந்த வினை. அதனால்தான் நான் கெட்டேன்.

”ஸ்மார்ட் போனால் வந்த ஆபத்து என்று சொல்லுங்கள். அதைத் தூக்கி எறிந்துட்டு சாதாரண போனை உபயோகப்படுத்துங்கள். ஒரு பிரச்சனையும் வராது“.

”அப்படியே செய்கிறேன். இனி எனக்குச்  சதாரண மொபைல் போதும்“ என்றாள் லட்சுமி.

”நீங்கள் மனம் மாறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. உங்கள் பெண் சின்ன பெண்ணாயிருந்தாலும் பொறுப்பா இருக்கிறாள். உங்களை மாதிரி இல்லை. அவளை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். அவளுடன் அடிக்கடிப் பேசுங்கள். நான் வருகிறேன்”.

சிவப்பிரியா மனநிறைவுடன் தெருவில் இறங்கி நடந்தாள்.


ஸ்ரீதரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அலைபேசியினால் வந்த ஆபத்து (சிறுகதை)”

அதிகம் படித்தது