மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அலைபேசியை அறிவை வளர்க்கப் பயன்படுத்துங்கள்

சௌமியன் தர்மலிங்கம்

Jan 17, 2015

ஏறக்குறைய தமிழக மக்களில் 90 சதவிகிதம் பேர் பயன்படுத்தும் தொழில் நுட்ப சாதனம் என்ன என்று வினா எழுப்பினால் அதன் விடை அலைபேசி என்பதாகவே இருக்கும். கடந்த பத்தாண்டுகளில் அலைபேசிகளின் உற்பத்தி, பயன்பாடு, விற்பனை அலைபேசி சார்ந்த சேவைகள் பயன்பாடு அவற்றால் ஏற்படும் வேலைவாய்ப்புகள் போன்றவை விண்ணளவு உயர்ந்துள்ளன. பதின் வயது இளைஞர்களில் தொடங்கி மூத்த குடிமக்கள் வரை அலைபேசி இல்லாமல் இன்று எவரும் வாழ்வதில்லை. நமது உடலின் ஓர் அங்கம் போல் ஆகிவிட்ட அலைபேசியை நாம் நமது அறிவை மேம்படுத்திக் கொள்ள பயன்படுத்துகிறோமா என்றால், இல்லை என்பதே விடை.

பெரும்பாலும் அலைபேசிகள் பேசுவதற்கும் குறுஞ்செய்தி அனுப்புவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த ஐந்தாண்டுகளாக smart phone வகை அலைபேசிகள் அனைவரது கைகளிலும் தவழ்கின்றன. இத்தகைய அலைபேசிகள் ஒரு சிறிய கணிணியைப்போல் செயல்பட வல்லவை. ஏராளமான வசதிகளையும் செயலிகளையும்(Apps) உள்ளடக்கியவை. தகவல் தொழில் நுட்பத் துறையில் பல்லாயிரம் பேர் இத்தகைய அலைபேசிகளுக்கான மென்பொருட்களையும் செயலிகளையும் (Apps) தயாரித்து விற்பனை செய்கின்றனர். வங்கிகள் அரசு நிறுவனங்கள் போன்றவை இந்த அலைபேசிகள் மூலம் தங்களது சேவைகளை வாடிக்கையாளர்களுக்கிடையே கொண்டு சேர்க்கின்றன.

இத்தகைய ஆற்றல் வாய்ந்த சாதனத்தை நமது மக்கள் எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தால் பாடல்களை கேட்கவும், காணொளிகளை பார்ப்பதற்கும் முகநூல் பார்ப்பதற்கும் காணொளி விளையாட்டுகளை விளையாடுவதற்கும் பயன்படுத்துகின்றனர். அறிவை வளர்க்கும் விதமாக பயன்படுத்துவோர் பத்து சதவிகிதம் கூட இருப்பதில்லை.

அலைபெசியைக் (Smart Phone) கொண்டு நாம் எவ்வாறு அறிவை வளர்த்துக் கொள்ள முடியும்? நாம் அழுத்தமாக புரிந்துகொள்ளவேண்டிய ஒன்று என்னவென்றால் இவ்வகை அலைபேசிகள் நம் கைகளில் தவழும் நூலகங்கள் ஆகும். மின் புத்தகங்கள் எனப்படும் அறிவுப் புதையல்கள் இவற்றில் கொட்டிக்கிடக்கின்றன. நல்ல ஒரு நினைவுத் திறன் (Memory Card) கொண்ட அலைபேசி நூற்றுக்கணக்கான நூல்களை தனக்குள் சேமித்து வைத்துக்கொள்ள இயலும்.

அத்தகைய புத்தகங்களை வாசிக்க ஏராளமான செயலிகள் (Apps) இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. எண்ணிலடங்காத மின் புத்தகங்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. அவற்றை தரவிறக்கம் செய்து படித்தால் நமது அறிவு வளரும் என்பதில் ஐயமில்லை.

மின் புத்தகங்கள் epub, mobi, pdf போன்ற வடிவங்களில் அமைகின்றன. android, ios வகை அலைபேசிகளில் ஏரளமான செயலிகள் இந்த வகை புத்தகங்களை படிக்க உருவாக்கப்பட்டுள்ளன. kindle எனப்படும் அமேசான் நிறுவனத்தின் மென்பொருளும் புத்தகங்கள் படிப்பதை மிக எளிமையாக்குகிறது.

வசதிகள் ஏராளமாக இருந்தாலும் தொழில் நுட்பம் வளர்ந்தாலும் நமது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே சாதனைகள் நிகழும். நெடுந்தூர தொடர்வண்டிப் பயணங்களின் போது தமிழ் நாட்டில் புத்தகம் படிப்பவர்களையே காண முடியாது. தூங்குவது, அலைபேசியில் பேசுவது, சும்மா இருப்பது போன்ற செயல்களிலேயே நாம் பொழுதை வீணடிக்கிறோம். அந்த நேரத்தில் மின் புத்தகங்களை வாங்கி அலைபேசியில் சேமித்து, படித்து வந்தால் கிடைக்கும் பலன் அளப்பரியது. அதுமட்டுமின்றி பேருந்து, தொடர்வண்டி, மருத்துவமனை, பள்ளிக்கூடம், அரசு நிறுவனங்கள் போன்ற இடங்களில் காத்திருக்கும் போது அலைபேசியின் மூலம் புத்தகம் படித்ததால் பலன் உண்டாகும். அலைபேசி என்பது எப்பொழுதும் நம்முடன் இருக்கும் சாதனம் என்பதால் புத்தகத்தை தூக்கிச்செல்லும் தொல்லையும் நமக்கு இல்லை. எனவே அறிவை வளர்க்க அலைபேசியை பயன்படுத்துவோம், ஏற்றம் பெறுவோம்.

 


சௌமியன் தர்மலிங்கம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அலைபேசியை அறிவை வளர்க்கப் பயன்படுத்துங்கள்”

அதிகம் படித்தது