மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அலோபதி மருந்து சாப்பிடும்போது சித்த மருந்து சாப்பிடலாமா?

சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D

Aug 22, 2015

siddha1

Dr.Jerome -FI

அலோபதி மருந்து சாப்பிடும்போது சித்த மருந்து சாப்பிடலாமா? அல்லது சித்த மருந்து சாப்பிடும்போது அலோபதி மருந்து சாப்பிடலாமா? என்ற கேள்விகள் பலர் மனதில் இருக்கிறது.

கிட்டத்தட்ட எல்லா நோயாளிகளும் இந்தக் கேள்வியைக் கேட்டுவிடுவார்கள்.

ஏதேனும் ஒரு பிரச்சனைக்கு சித்த மருத்துவமே நல்லது என தெரிந்ததும் சித்த மருத்துவம் எடுக்க முடிவெடுப்பர். ஆனால் அவர்கள் ஏற்கனவே வேறு ஏதேனும் ஒரு பிரச்சனைக்காக அலோபதி மருத்துவம் சாப்பிட்டுக் கொண்டிருப்பர். அப்படிப்பட்ட நிலையில் இதோடு அதையும் சேர்த்து சாப்பிடலாமா என்ற குழப்பம் சிலருக்கு வருகிறது. இருவேறு மருத்துவ முறைகளை ஒரே நேரத்தில் சாப்பிடலாமா? அதனால் எதுவும் பிரச்சனைகள் வருமா என்பது இவர்கள் சந்தேகம்.

அதேபோல என்னிடம் சித்த மருத்துவம் எடுத்துக் கொள்ளும் நோயாளிகளும் “டாக்டர் இந்த மருந்து சாப்பிடும் போது திடீரென அவசரத்திற்கு அலோபதி மருந்து ஏதேனும் சாப்பிட வேண்டியதிருந்தால் சாப்பிடலாமா?” என கேட்பார்கள்.

-  இது நியாயமான சந்தேகம்தான்.

siddha2ஆனால் இது மிகவும் பொத்தாம் பொதுவான ஒரு கேள்வி. இந்த பொதுவான கேள்விக்குத்தான் இந்த கட்டுரையில் விளக்கம் கூறுகிறேன்.

இதற்கு ‘ஆம்’ என்றோ ‘இல்லை’ என்றோ நேரடியாக பதில் கூறக்கூடாது.

என்ன மருந்தோடு என்ன மருந்தை சேர்த்து சாப்பிடலாமா என கேட்கிறீர்கள் என்பதைத் தெரிந்து, அந்த இரண்டு மருந்துகளின் செயல்பாடுகள் என்ன மற்றும் அந்த இரண்டு மருந்துகளுக்கும் உடல் கொடுக்கும் வினை என்ன என்பவைகளைத் தெரிந்தே பதில் கூற முடியும்.

siddha3எனவே இந்தப் பொதுவான கேள்விக்கு பொதுவான இரண்டு பதில்களைக் கூற விரும்புகிறேன்.

முதல் பதில்:

இரு வேறு மருத்துவ முறைகளை ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்வதாலேயே எந்த விபரீத பாதிப்பும் உடலில் வந்து விடாது. மருந்து உடலில் செயல்படும் விதம் என்பது எல்லா மருந்துகளுக்கும் ஒன்றுதான். எனவே இருவேறு மருத்துவ முறைகளை ஒரே நேரத்தில் எடுப்பதாலேயே உடலுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற சந்தேகமே தவறானது. இரண்டு மருந்துகளையும் ஒரே நேரத்தில் சாப்பிடலாம்.

இரண்டாவது பதில்:

முதல் பதிலில் கூறப்பட்டது ஒரு பொதுவான விளக்கம். ஆனால் இரண்டு மருந்துகளின் செயல்களும் என்ன என்பதை மருத்துவர் தெரிந்து கொண்ட பிறகுதான் அவைகளை சேர்த்து சாப்பிடலாமா என முடிவு செய்ய வேண்டும்.

இரண்டு மருந்துகளுடைய செயல்பாடுகளும் வெவ்வேறாக இருந்தால் சாப்பிடலாம். ஒரே மாதிரியான செயல்பாடுகள் கொண்ட மருந்துகளாக இருந்தால் சாப்பிடக்கூடாது. இதை சித்த மருத்துவரால் மட்டுமே முடிவு செய்ய முடியும்.

siddha4மேலும் எந்த மருந்தாக இருந்தாலும் சரி, மருந்து சாப்பிடுபவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு பொதுவான விசயம் என்னவென்றால் மருந்தின் செயல்பாட்டை மாற்றக்கூடிய காரணிகள் நிறை உண்டு. (Factors Modifying Drug Action)

அதில் மருந்து சாப்பிடும்போது அதோடு சேர்த்து என்ன சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமான ஒன்று. அதைப் பொறுத்தும் மருந்தின் செயல்பாடு மாறுபடும். அது உணவாக இருந்தாலும் சரி. எந்த மருந்தானாலும் அதை சாப்பிட்ட பிறகு, மாவுப்பொருட்கள், பழங்கள், புளிப்பு சுவையுள்ள பொருட்கள், உப்பு சுவையுள்ள பொருட்கள் போன்றவற்றை உண்பதால் மருந்தின் செயல்பாடு மாறுபடும் அல்லது குறையும்.

அப்படி இருக்கும்போது மருந்து சாப்பிட்ட பிறகு, வேறு மருந்துகளையும் அதோடு சேர்த்து சாப்பிடுவதால் நிச்சயம் ஒரு குறைந்த அளவாவது அந்த மருந்துகளின் செயல்பாடுகளில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. எனவே ஒரு மருந்து சாப்பிட்ட பிறகு 1 மணி நேரம் கழித்து இன்னொரு மருந்தை எடுத்துக் கொள்வது பொதுவாக நல்லது.

மிகவும் பொதுவான ஒரு புரிதலுக்காகத்தான் இந்த கட்டுரையே தவிர, எந்த மருந்தை எந்த மருந்தோடு சேர்த்து சாப்பிட போகிறீர்கள் என்பதை முறையாக படித்த சித்த மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்வதே நல்லது.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

மருந்துகளைப் பற்றி படிக்கும் பாடத்திற்கு ‘மருந்தியல்’ அதாவது Pharmacology என்று பெயர்.

siddha5M.B.B.S படிக்கும் மருத்துவர்கள் அலோபதி மருந்துகளைப் பற்றி மட்டுமே படிக்கின்றனர். அவர்களுக்கு சித்த மருந்துகளைப் பற்றிய அடிப்படை அறிவுகூட கிடையாது.

ஆனால் B.S.M.S படிக்கும் சித்த மருத்துவர்கள் சித்த மருந்துகளைப் பற்றி படிப்பதுடன் அவர்களது பட்ட மேற்படிப்பில் (M.D) அலோபதி மருந்துகளைப் பற்றியும் படிக்கிறார்கள்.

எனவே அலோபதி மருந்து சாப்பிடும்போது சித்த மருந்து சாப்பிடலாமா? அல்லது சித்தமருந்து சாப்பிடும்போது அலோபதி மருந்து சாப்பிடலாமா? என்ற கேள்விக்கு இரண்டு மருந்துகளையும் பற்றி படித்த ஒரு சித்த மருத்துவராலேயே பதில் கூற முடியும். ஒரு அலோபதி மருத்துவருக்கு இரண்டு மருந்துகளையும் பற்றிய போதிய அறிவு இல்லாததால் அவர்களால் இதற்கு பதிலளிக்க முடியாது.

சித்த மருந்துகளையும் பற்றிய அடிப்படை பாடத்தை (Basic Science) அலோபதி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கருத்து வெகுநாளாக உள்ளது. அப்படி சேர்க்கப்பட்டால் அதன் பின் அவர்களுக்கும் இந்த தெளிவு கிடைக்கும்.

மருத்துவ ஆலோசனைக்கு:

Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D

சித்தமருத்துவ மையம்,

டாக்டர்ஸ் பிளாசா,

சரவணா ஸ்டோர் எதிரில்,

வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,

வேளச்சேரி, சென்னை.

அலைபேசி எண்: 9444317293


சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அலோபதி மருந்து சாப்பிடும்போது சித்த மருந்து சாப்பிடலாமா?”

அதிகம் படித்தது