மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அல்கட்ராஸ் தீவில் . . . (பகுதி-4)

தேமொழி

Oct 28, 2017

IV. தி கிரேட் எஸ்கேப்:

எந்த ஒரு சிறைக்கைதியும் தப்பவே வழியில்லை என்ற பெயர் பெற்றிருந்த அமெரிக்காவின் அல்கட்ராஸ் தீவு சிறைச்சாலையின் பெருமையைக் குலைக்கும் வண்ணம் பலமுறை தப்பும் முயற்சிகள் நடந்தன. ஒருவரே இரண்டுமுறை தப்பிக்க முயன்றதும் உண்டு. ஆனால் தப்புவது என்பது எப்படி வரையறுக்கப்படுகிறது என்பதில்தான் உண்மையாகவே கைதிகள் தப்பினார்களா இல்லையா என்பது முடிவு செய்யப்படுகிறது.

Siragu alkatras4-1

சிறையில் இருந்து தப்பி தீவின் கரைவரை வந்து பிடிபட்டவர்களும் உண்டு, தப்பி கடலில் குதித்து நீந்தும்பொழுது சுடப்பட்டு இறந்தவர்களும் உண்டு, நீரின் குளிர் தாளாமல் விறைத்துப்போய் இறந்த உடலாக மிதந்து மீட்கப்பட்டவர்களும் உண்டு, தீவின் பாறைகளுக்கிடையில் மறைந்து கொண்டாலும் குளிர் தாங்காமல் தானே சிறைக்குத் திரும்ப வந்துவிட்டவர்களும் உண்டு, கரையேறித் தப்பினாலும் கைது செய்யப்பட்டு திரும்பியும் கொண்டுவரப்பட்டவர்களும் உண்டு, இல்லை ஹைப்போதெர்மியாவில் விறைத்துப்போய்க் கரையில் ஒதுங்கிக் கிடந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உயிரைக் காப்பாற்றி திரும்பவும் சிறையில் அடைக்கப்பட்டவர்களும் உண்டு. எனவே, அல்கட்ராஸ் சிறை அதிகாரிகளும், எஃப்.பி.ஐ. அதிகாரிகளும் தப்பியவர்கள் யாவரும் உயிருடனோ, உயிரற்ற உடலாகவோ கிடைத்துவிட்டால் அவர்கள் தப்பிக்கவில்லை என்றும், அவ்வாறு உயிருடனோ, உயிரற்ற உடலாகவோ கிடைக்காவிட்டாலும் கூட அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற வரையறையை வகுத்துக் கொண்டு இதுவரை யாருமே அல்கட்ராஸ் சிறையில் இருந்து தப்பியதில்லை என்று சொல்லி வந்தார்கள்.

தப்பிக்க முயன்றவர்களில் உயிரற்ற உடலாகவும்கூட கிடைக்காதவர்கள் இதுவரை ஐவர். இவர்களில் இருவர் மிகவும் மோசமான புயல் வீசும் நாளில் சிறையில் இருந்து தப்பி கடலில் குதித்து காணாமல் போனவர்கள். சான் பிரான்சிஸ்கோ வளைகுடா தட்பவெப்பநிலை, கடலின் ஆபத்தான அலைகள், கடலின் நீரோட்டம் பற்றி அறிந்திருந்தவர்கள் இவர்கள் மூழ்கி இறந்து, பசிபிக் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்கள் என்று சொல்லப்பட்ட பொழுது மறுப்பின்றி ஏற்கும் மனநிலையில் இருந்தார்கள். ஆனால் 1962 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி இரவு சிறையில் இருந்து தப்பி, தாங்கள் தயாரித்த மிதவையைப் பயன்படுத்தி ‘ஃபிரான்க் மோரிஸ்’ மற்றும் ‘ஜான் ஆங்க்லின்’, ‘கிலாரென்ஸ் ஆங்க்லின்’ சகோதரர்கள் (Frank Lee Morris and brothers Clarence and John Anglin) தப்பிய பொழுது, அவர்கள் உயிருடனோ இறந்தோ கிடைக்காத பிறகு அவர்களும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அமெரிக்க உளவுத் துறையினர் கதையை முடித்த பொழுது பெரும்பாலோர் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

அவ்வளவு ஏன், எஃப்.பி.ஐ. அதிகாரிகளுமே பல விசாரணைகள், துப்பு துலக்குதல்கள் செய்த பின்னரும், அவர்களும் அந்த தப்பிவிட்ட கைதிகளின் கோப்பை மூடி வைக்கவில்லை. பிறகு 1979 ஆம் ஆண்டின் இறுதியில் தப்பியோடிய கைதிகளைத் தேடும் பொறுப்பை யு. எஸ். மார்ஷலிடம் ஒப்படைத்தனர். எஃப்.பி.ஐ. அவ்வாறு பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்த பொழுது அதுவரை விசாரணை செய்த அனைத்தையும் சேகரித்து அனுப்பி வைக்கவே இரண்டு ஆண்டுகள் பிடித்ததாம். இறந்துவிட்டார்கள் என அறிவித்த பின்னரும் உளவுத்துறையினர் நிறையவே வேலை செய்திருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. அவர்கள் ஒப்படைத்தவற்றை எண்ணிம வடிவில் மாற்றிப் படம் பிடித்து, இன்றும் கணினி வழி துப்பு துலக்கிக் கொண்டிருக்கிறார்கள் யு. எஸ். மார்ஷல் அதிகாரிகள்.   ‘ஆர்ட் ராட்ரிக்’ (Art Roderick) என்ற எஃப்.பி.ஐ. அதிகாரியிடம் இருந்து இந்த வழக்கின் பொறுப்பு ‘மைக்கேல் டைக்’ (U.S. Marshal Michael Dyke) என்ற யு. எஸ். மார்ஷல் அதிகாரியிடம் சென்றுள்ளது.

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பேசப்படும் மறைந்து போன மனிதர்களைத் தேடும் படலம் இந்தச் சிறை தப்புதல்தான். தேடப்படுபவர்கள் உயிராகவோ உடலாகவோ கிடைத்து, ஐயமின்றி இவர்கள்தான் தப்பியவர்கள் என்று உறுதியாகும் வரை தேடுவார்கள். தப்பிய குற்றவாளிகளின் வயது 100 ஐத் தாண்டினால் மட்டுமே தேடல் கைவிடப்படும். அமெரிக்க உளவுத் துறைக்கு இந்நாளின் எஃப்.பி.ஐ. என்ற பெயர் சூட்டப்படுவதற்கும் முன்னிருந்தே தொடர்ந்து 48 ஆண்டுகள் எஃப்.பி.ஐ. தலைவராக இருந்த ஜே. எட்கர் ஹூவர் (J.Edgar Hoover) என்பவரை மிகவும் வருத்தியதும், அவருக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியதும் உலகப் புகழ் பெற்ற எஃப்.பி.ஐ. உளவுத்துறையாலும் இம்மூவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே. இந்த தப்புதல் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதே பலகாலமாக சாதாரண மக்களின் ஆர்வத்தைத் தூண்டி வருகிறது. ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர்களையும் கவர்ந்திழுத்தது. அல்கட்ராஸ் குறித்து வெளிவந்த பல படங்களில் ‘எஸ்கேப் ஃபிரொம் அல்கட்ராஸ் ‘( “Escape from Alcatraz” – 1979) என்ற, கிளின்ட் ஈஸ்ட் வுட் நடித்த படம் இந்த தப்பியோட்டத்தைக் குறித்த படம். மேலும் பல ஆவணப்படம் படங்கள் (documentary), நூல்கள், பல்கலைக்கழக ஆய்வு மாதிரிகள் (escape model), தொலைக்காட்சித் தொடர்கள் என ஊடக வெளியீடு பட்டியலும் நீளும். எனவே இது “தி கிரேட் எஸ்கேப்” (The Great Escape) என்ற பெயர் பெற்றதில் வியப்பொன்றுமில்லை. இவ்வாறு துப்பறியும் துறையைக் கலங்கடித்து, மக்களின் கவனத்தைக் கவர்ந்த குற்றவாளிகள் எத்தகையவர்களாக இருப்பார்கள்.

ஃபுளோரிடா மாநிலத்தின் ரஸ்கின் (Ruskin, Florida) என்ற சிற்றூரில் வாழ்ந்தவர்கள் ஆங்க்லின் சகோதரர்கள். மிகப் பெரிய குடும்பம், குற்றச் செயல்களைச் செய்யத் தயங்காதவர்களாக இருந்தார்கள் இவர்களில் மூவர். சகோதரர்கள் ஆல்ஃபிரட் ஆங்க்லின், ஜான் ஆங்க்லின், கிலாரென்ஸ் ஆங்க்லின் ஆகியோர், 1958 ஆம் ஆண்டு, அலபாமா மாநிலத்தின் கொலம்பியா நகரின்(Columbia, Alabama)வங்கி ஒன்றைப் பொம்மைத் துப்பாக்கிகளைக் கொண்டு அச்சுறுத்திக் கொள்ளையடித்தனர். பிடிபட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். அச்சிறைகளில் இருந்து தப்பிக்க முயன்றனர். அதனால் பிறகு வேறு சில மத்திய சிறைகளுக்கு மாற்றப்பட்டும் தங்களது தப்பிக்கும் முயற்சிகளை அவர்கள் நிறுத்தவில்லை. தொடர்ந்து தப்ப முயல்பவர்களை அல்கட்ராஸ் சிறைக்கு மாற்றுவது வழக்கமாக இருந்ததால், ஜான் (அல்கட்ராஸ் கைதி எண்-1476) 1960 லும், கிலாரென்ஸ் (அல்கட்ராஸ் கைதி எண்-1485) 1961 லும் ஒவ்வொருவராக அல்கட்ராஸ் சிறைக்கு வந்து சேர்ந்தார்கள். இவர்களை அனுப்பி வைத்த சிறை அதிகாரிகள் இவர்களைக் குறித்து தனிப்பட்ட எச்சரிக்கைகள் விடுத்தும், அல்கட்ராஸ் சிறையின் அதிகாரிகள் தங்கள் சிறையின் கண்காணிப்பில் கொண்டிருந்த அதிகப்படியான நம்பிக்கையால் கிலாரென்ஸை ஜான் இருந்த அறைக்கு அடுத்த அறையிலேயே அடைத்து வைத்தனர்.

தப்பிய மூவரில் மற்றொருவரான ஃபிரான்க் மோரிஸ் என்பவருக்குக் குடும்பம் என்று எவருமில்லை, சிறு வயதிலிருந்தே அனாதையாகப் பல குடும்பங்களில் மாறி மாறி வளர்ந்த சூழ்நிலையைக் கொண்டது இவரது இளமைப் பருவம். பதின்மூன்றாம் வயதிலியே சட்டத்துடன் இவரது சச்சரவு தொடக்கம். சீர்திருத்தப் பள்ளிகளில் சில ஆண்டுகள் வாசம். வங்கிக் கொள்ளைக்காக கைது செய்யப்பட்டார். மிகவும் புத்திசாலி என அடையாளம் காணப்பட்ட இவர் அறிவுத்திறன் சோதனை மதிப்பீட்டில் 133 மதிப்பெண் பெற்று மேலான அறிவுத்திறனைக் கொண்டோர் வரிசையில் இடம் பிடித்தார். சிறை வாழ்வும் தப்பும் முயற்சிகளும் இவருக்கும் வழக்கம். அட்லாண்டா மத்தியசிறையில் இருந்து தப்பியோட முயன்றதால் இவரும் அல்கட்ராஸ் சிறைக்கு (அல்கட்ராஸ் கைதி எண்-1441) ஆங்க்லின் சகோதரர்களுக்கு முன்னரே 1960 இல் வந்து சேர்ந்திருந்தார். இந்த தப்பியோடிய மூவர் குறித்து மட்டுமே முதலில் அனைவரும் அறிந்திருந்தனர். ஆனால்இவர்களுடன், இருமுறை அல்கட்ராஸ் சிறையில் தண்டனைப் பெற்றவரும் (அல்கட்ராஸ் கைதி எண்-1335), 1958 இல் இம்மூவருக்கும் முன்னரே அல்கட்ராஸ் சிறைக்கு வந்தவருமான ‘ஆலன் வெஸ்ட்’ (Allen West) என்பவரும் அதே நாளில் தப்பிவிட இருந்தது பின்னரே தெரிய வந்தது. கடைசி நேரத்தில் இம்மூவருடனும் இணைந்து கொள்ள முடியாத சோதனை அவருக்கு ஏற்பட்டது. மற்ற மூவரும் எவ்வாறு தப்பினார்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக இவரிடம் இருந்து துப்பறியும் அதிகாரிகள் தகவல் பெற்றார்கள். ஆனாலும் இவர் முற்றிலும் உண்மை சொன்னார் என அவர்கள் நம்பவில்லை.

Siragu alkatras4-2

ஆலன் வெஸ்ட் தப்பியோடுவதைத் திட்டமிட்டதில் தனக்கே பெரும் பங்கு இருப்பதாகக் கூறினார். பலர் ஃபிரான்க் மோரிஸ்தான் திட்டமிட்டு கைதிகளை ஒருங்கிணைத்ததாகக் கருதினர். அவரது வியக்கவைக்கும் அறிவுத்திறன் அதற்குக் காரணமாக இருந்தது. சிறையின் பராமரிப்புப் பணியில் சிறையின் மேல்தளத்தைச் சுத்தம் செய்யச் சென்ற ஆலன் வெஸ்ட், சிறையின் மேற்கூரை வரை செல்லும் ஒரு காற்றுப்போக்கி ஒன்று பலமான கம்பிகளால் பாதுகாக்கப் படாமல் இருப்பதைக் கண்டிருக்கிறார். இவருடன் ஃபிரான்க் மோரிஸ் மற்றும் ஆங்க்லின் சகோதரர்களும் ஒரு குழுவாக இணைந்தவுடன், திட்டம் முழுமையாக உருபெறத் தொடங்கியது. இவர்கள் எல்லோரையும் போல சிறைக் கம்பியை அறுப்பதிலும், பின்னர் கடலில் குதித்து நீந்துவதிலும் ஆர்வம் காட்டவில்லை. மாறுபட்ட திட்டம் ஒன்றைத் தீட்டினர். சிறையில் ஒரு நாளுக்கு 13 முறைக்கும் மேல் கைதிகளைக் கணக்கிடுவதால், இரு கணக்கிடும் இடைவெளிக்குள் அவர்கள் செயல்பட வேண்டும். அதற்கு இரவு நேரம்தான் சரி. முதல் வேலையாக ஒவ்வொருவரும் அவரவர் சிறையின் பின்புறச் சுவரில் தரையை ஒட்டி இருக்கும், காற்றுப்போக்கி வழியின் மீது இருக்கும் இரும்புக் கம்பிவலையை நெம்பி எடுத்து, அந்த ஓட்டையைத் தங்கள் உடல் நுழையும் அளவிற்குப் பெரிது செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் சுவருக்குப் பின்புறம் பயன்பாட்டிற்காக உள்ள இடைகழிக்குச் சென்று விடலாம். பிறகு இரவு நேரத்தில் இடைகழிப் பகுதியில் உள்ள குழாய்களைப் பற்றி ஏறி, சிறையின் மேற்கூரை வரை செல்லும் காற்றுப்போக்கி வழியே வெளியேறிவிட வேண்டும், பிறகு கீழிறங்கி ஒரு மிதவையின் துணை கொண்டு கரை சேர வேண்டும் என்பது இவர்கள் போட்ட திட்டம்.

Siragu alkatras4-3

சிறையில் கிடைக்கும் கரண்டி, ஆணி, திருகு, மின்விசிறியின் சிறு மோட்டார், இசைக்கருவிகளின் பாகங்கள், மின்சார வயர்கள் எனக் கிடைத்தவற்றை எல்லாம் சேகரித்து காவலர்கள் கவனத்தைக் கவராவண்ணம் சிறைக்குக் கடத்திச் சென்றார்கள். அவர்கள் தொழிற்கூடத்தில் பணியாற்றியதும் நல்ல வாய்ப்பாக அமைந்தது. இவர்கள் தப்ப திட்டமிடுவதும் கைதிகள் பலருக்கும் தெரிந்திருந்தது. அவர்களும் தங்களுக்கு கிடைப்பவற்றைக் கொடுத்து உதவினார்கள். உணவறையிலும், பொழுதுபோக்கு திடலிலும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டனர். பல பொருட்கள் சிறையில் இருந்து களவாடப்பட்டன. பல கொடுத்து உதவப்பட்டன. மெட்டல் டிடக்டர் போன்றவற்றின் வழியாகத் தொழிற்கூடத்தில் இருந்து வரும்பொழுது கூட, சோதனையில் ஏமாற்றி உலோகக் கருவிகளைக் கொண்டுவருவது பெரும் கலையாகவே இருந்தது. சிறையில் அனுமதிக்கப்படாத பொருட்கள், அறையில் நடத்தப்படும் திடீர் சோதனையில் அகப்பட்டால் பிறகு டி-பகுதியின் தனிமைச் சிறையில் அடைபட வேண்டியிருக்கும் என்று தெரிந்தும் யாவரும் துணிவுடன் செய்தார்கள்.

உணவறையில் இருந்து திருடிய கரண்டி போன்ற கருவிகளைக் கூராக்கி, சுவரில் காற்றுப்போக்கியைச் சுற்றியுள்ள சிமெண்ட் காரையைச் சுரண்டி பெரிதாக்கி, துளையின் கம்பி வலையை நெம்பி எடுத்து ஓட்டையைப் பெரிது செய்த பின்னர், மீண்டும் அந்த ஓட்டையை மறைக்க அட்டையைக் கொண்டு பொய்ச்சுவர் செய்து, அதில் கம்பி வலையைப் பொருத்தி, மேலே வண்ணம் பூசி அது வெளியே தெரியாதவாறு மறைத்துவிட்டார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் பழைமை அடைந்திருந்த சுவரின் சிமெண்ட் சுவர், தொடர்ந்த உப்புநீர் கடற்காற்றின் பாதிப்பால் சுரண்டியே கன்னம் வைக்கும் அளவிற்கு உறுதியிழந்திருந்தது. தங்களுக்கு வேண்டிய வண்ணங்களைப் பெறுவதற்காக ஓவியம் வரையும் பொழுதுபோக்கு என்று கூறி படம் வரைந்து கொண்டிருந்தார்கள். தங்கள் காதலி, தோழி ஆகியோர் முகங்களை வரைந்தார்கள். அதற்கு அவர்களுக்குத் தோலின் நிறம் தேவைப்பட்டதால் அதுவும் கிடைத்தது.

Siragu alkatras4-4

அடுத்ததாக பொய்ச்சுவரை நீக்கிவிட்டு, வேண்டும் பொழுது இடைகழியில் நுழைந்து சிறையின் மேல்தளத்தில் ஏறி தங்களுக்குத் தேவையான இரப்பர் மிதவை (Raft), லைஃப் ஜாக்கெட் ( Life Jackets), மரத்துடுப்புபோன்றவை தயாரிக்கவும், காற்றுப்போக்கியின் கம்பிகளை வளைக்கவும் சிறையின் மேற்புறம் செல்ல வேண்டும். அப்பொழுது சிறை காலியாக இருப்பதைக் காவலாளிகள் கவனிக்காமல் இருக்க தாங்கள் உறங்குவது போலக் காட்ட, பேப்பர் மெஷ் கொண்டு ஒரு போலி முகம் தயாரிக்க வேண்டி இருந்தது. கிடைக்கும் சோப், பத்திரிக்கையின் தாள், கழிவறைக் காகிதம், சுரண்டிய சிமெண்ட் தூள் ஆகியவற்றைக் கொண்டு தங்களது பொம்மைத் தலைகளைச் செய்து, அவற்றுக்குத் தோலின் நிறம் பூசி, சிறையின் முடிதிருத்தும் நிலையத்தில் இருந்து முடிகளைக் கடத்திக் கொண்டுவந்து ஒட்டினார்கள். கிலாரென்ஸ் ஆங்க்லின் சிறையின் முடி திருத்தும் நிலையத்தின் பணியில் இருந்ததும் இதற்கு உதவியது.

சிறையின் பராமரிப்பு பணியில் இருந்தஆலன் வெஸ்ட் கூட்டும் பொழுது மேல்தளத்தின் தூசி சிறையின் நடைபாதையில் விழாமல் இருக்க அங்கு ஒரு போர்வை போட்டு மறைக்கலாம் எனக் காவலாளிகளிடம் சொல்லி மேல்தளத்தில் கம்பிகள் மீது போர்வைகளைத் தொங்கவிட்டு மறைப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ஒருவர் வேலை செய்யும் பொழுது மற்றவர் காவல் காப்பது, சிறையில் இசைப்பயிற்சி நடக்கும் பொழுது அந்த ஓசையுடன் கலந்துவிடும்படி வேலை செய்வது என ஐயத்தை ஏற்படுத்தும் ஓசைகளின்றி யார் கவனத்தையும் கவராமல் வேலை செய்தார்கள். மழை அங்கிகளைச் (raincoats)சேகரித்துத் தைத்து, பசை ஒட்டி மிதவைகளையும், மிதக்க உதவும் மேலங்கியையும் தயாரித்தார்கள். தப்ப முயன்ற மற்றவர்களைப்போல நீந்தி கரைக்குச் செல்வதையும், குளிரில் நீரில் மூழ்குவதையும் அவர்கள் தவிர்க்க விரும்பினார்கள். சிறையில் இருந்து 52 மழை அங்கிகள் காணாமல் போனதாக ஒரு கணக்கு காண்பிக்கிறது. ஃபிரான்க் மோரிஸ் வரவழைத்துப் படித்த ‘பாப்புலர் மெக்கானிக்ஸ்’ (Popular Mechanics) என்ற இதழ்களில் மிதவை செய்யும் முறையும்,   படகுகள் பற்றிய தகவல் கொண்ட ‘ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட்’ (Sports Illustrated)போன்ற இதழ்கள் அவரது அறையில் கிடைத்தன.   மிதவை, துடுப்பு, மிதக்க உதவும் மேலங்கி ஆகியவற்றைத் தயாரிப்பது,மேற்கூரைக்குச் செல்லும் காற்றுப்போக்கிக் குழாய் கம்பிகளை வளைப்பது ஆகியவை நிறைவுற்ற பின்னர், ஜூன் 11, 1962 தப்பத் திட்டமிட்டனர்.

அன்று இரவு கடைசி எண்ணிக்கைக்குப் பிறகு, 9:30 மணிக்குச் சிறையின் விளக்குகளை அணைத்த பின்னர் அனைவரும் உறங்கச் செல்லும் நேரத்தில் இறுதியாக ஒருமுறை தங்கள் தலைப் பொம்மையைப் படுக்க வைத்து போர்வை போட்டு மூடிவிட்டு இடைகழி வழியே வெளியேறி குழாய்களைப் பிடித்து மேலேறினார்கள். ஆனால் ஆலன் வெஸ்ட்டால் அவர்களுடன் வெளியேற முடியவில்லை. அவரது அறையின் காற்றுப்போக்கி கம்பிவலை வைத்த பொய்ச்சுவர் நழுவி நழுவி விழுந்த வண்ணம் இருந்ததால் காண்டாக்ட் சிமெண்ட் பூசி அதை விழாமல் செய்திருந்தார். சிறையின் திடீர் சோதனைகள் நடக்கும் பொழுது அது காட்டிக்கொடுக்காமல் இருக்க அவர் செய்த அந்த முயற்சி, வெளியேறும் பொழுது தடையாகிப் போனது. அனைவரும் மேலேறிச் சென்றுவிட இவர் மட்டும் சுவரை மீண்டும் இடித்துக் கொண்டிருந்தார். மேலேறிப்போனவர்கள் காற்றுப் போக்கிக் குழாய் வழியே வெளியேறி கூரைக்கு வந்த பிறகு அவர் இல்லாமலே தொடர்ந்து செல்ல முடிவெடுத்து அவரது துடுப்பு, மிதக்க உதவும் மேலங்கி போன்றவற்றை விட்டுவிட்டு மிதவையை மட்டும் எடுத்துச் சென்றார்கள். பிறகு தாமதமாக வந்தால் அவரும் வந்து சேர்ந்து கொள்ளட்டும் என்பது அவர்களது எண்ணம்.

Siragu alkatras4-5சிறையின் சுழலும் விளக்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து கூரை மீது வடக்கு நோக்கி ஓடி, அடுத்து வரும் மருத்துவமனை பகுதியின் கூரையைத்தாண்டி, 300 அடிகளை ஓடி க் கடந்து, குழாய்களைப் பிடித்து ஐந்து மாடி அடுக்குகளின் சுவரின் வழியே இறங்கி, மதில் சுவர், இரண்டு 8 அடி உயர வலைக்கம்பி வேலிகளில் ஏறிக் குதித்து, தீவின் கரைப்பகுதியில் மிதவையை விரித்து, அதற்குள் காற்றை ஊதி உப்ப வைத்து நீரில் இறக்கி துடுப்பு செலுத்திப் போனவர்கள் போனவர்களே, பிறகு இன்றுவரை அவர்கள் என்ன ஆனார்கள் என யாரும் அறிந்திருக்கவில்லை. மிகவும் தாமதமாக மேல் தளத்திற்கு வந்து சேர்ந்த ஆலன் வெஸ்ட் மற்றவர் தன்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டதை அறிந்து நொந்துகொண்டே அறைக்குத் திரும்பினார்.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அல்கட்ராஸ் தீவில் . . . (பகுதி-4)”

அதிகம் படித்தது