மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அல்கட்ராஸ் தீவில் . . .

தேமொழி

Oct 7, 2017

Siragu alkatras1

அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையை ஒட்டி, கலிபோர்னியா மாநிலத்தின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு வடக்கே, வளைகுடாவில் உள்ள பாறையிலான ஒரு சிறிய தீவான “அல்கட்ராஸ் தீவு” என்ற இடம் மிகவும் புகழ்பெறக் காரணமாக இருந்தது அங்கிருந்த அமெரிக்க மத்திய சிறைச்சாலை. மிகவும் கொடுமையான கொள்ளைக்காரர்களும், கொலைகாரர்களும், கடத்தல்காரர்களும் அங்கு அடைக்கப்பட்டிருந்ததுடன் அல்லாமல், யாரும் தப்பவே வழியில்லை என்றிருந்த நம்பிக்கையையும் முறியடித்து சிறைக்கைதிகள் சிலர் அங்கிருந்து தப்பிவிட்டதும் சாதாரண ஒரு சிறைச்சாலைக்கு இந்தப் புகழ் வரக் காரணமாக இருந்தது. சிறை மூடப்பட்ட பின்னர், இன்று அல்கட்ராஸ் தீவு அமெரிக்க வனத்துறையின் (U.S. National Park Service) கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்ட பின்னர் ஆண்டொன்றுக்கு சுமார் ஒன்றரை மில்லியன் மக்கள் உலகிலேயே கடுமையான சிறைச்சாலை எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் இத்தீவைப் பார்வையிட வருகிறார்கள். இத்தீவின் பாறைத் தன்மையால் இது ‘தி ராக்’ (“The Rock”) என்றும் அழைக்கப்படுகிறது.

I. பாறையின் வரலாறு:

அல்கட்ராஸ் தீவின் வரலாற்றைப் பொதுவாக பழங்குடியினர் குடியிருப்புக் காலம் (1769 ஆண்டுக்கு முன்னர்), ஸ்பானிஷ் ஆட்சியர் காலம் (1770-1848), அமெரிக்க இராணுவத்தின் காலம் (1849 – 1933), அமெரிக்க மத்திய சிறைச்சாலைக் காலம் (1934-1963), பழங்குடியினர் உரிமைப் போராட்டக் காலம் (1969-1971), அமெரிக்க வனத்துறையின் வரலாற்றுச் சுற்றுலாத்தலம் காலம் (1973 –) எனப் பல பிரிவுகளாக நிகழ்வுகளின் வரலாற்று முக்கியத்துவத்தின் அடிப்படையில் பிரித்துக் கூறினாலும், இன்றென்னவோ அனைவரையும் கவரும் வண்ணம் நிலைத்து விட்டது அது சிறைச்சாலையாக இருந்த காலம் மட்டும்தான்.

அல்கட்ராஸ் தீவின் வரலாற்றின் தொடக்கம் எது என்பது அமெரிக்கப் பழங்குடியினர் (Native American) காலத்தில் சரிவர அறிவதற்கானச் சான்றுகள் கிடைக்கவில்லை. அமெரிக்கப் பழங்குடியினர் 10,000 ஆண்டுகளாக கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ பகுதியில் வசித்து வருகின்றனர் எனக் கூறப்படுகிறது. தீவில் தங்கும் பறவைகளின் முட்டைகளைச் சேகரிக்கவும், தங்கள் இனத்தில் குற்றம் இழைத்தவர்களைத் தண்டிக்கும் நோக்கில் தீவில் ஒதுக்கி வைக்கவும் அல்கட்ராஸ் தீவை அவர்கள் பயன் படுத்தியிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. அவர்களிடம் இருந்த வாய்வழியாக அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படும் மரபுக் கதைகள் பல அவர்களால் மறக்கப்பட்டுவிட்டன. ஆகவே, தீவின் வரலாறு என்றால் ஸ்பெயின் மக்கள் அல்லது ஸ்பானிஷ்காரர்கள் கலிபோர்னியா பகுதிக்கு குடியேறத் துவங்கிய 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கடந்த 250 ஆண்டுகளில் இருந்து துவங்கலாம். அவர்கள் வந்த காலத்தில், வளைகுடாவின் வடபகுதியில் ‘மிவோக்’ மற்றும் தென்பகுதியில் ‘ஒலோனே’ (Miwok and Ohlone) என்ற இரு பழங்குடி பிரிவுகளைச் சேர்ந்த 10,000 பழங்குடி மக்கள் சான் பிரான்சிஸ்கோ பகுதியில் வாழ்ந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

ஸ்பானிஷ் இராணுவத் தளபதி யுவான் மேனுவல் (Spanish Lt. Juan Manuel de Ayala) 1775 ஆம் ஆண்டு தனது கப்பலில் வந்து இறங்கிய பொழுது, சான் பிரான்சிஸ்கோ துறைமுகப் பகுதியை விரிவாக ஆராய்ந்து பதிவு செய்தார். அப்பொழுது இன்றைய அல்கட்ராஸ் பாறைத்தீவில் நிறைய ‘அல்கட்ராஸ்’ (பெலிக்கன் வகை) பறவைகளைக் காண நேர்ந்ததால் “லா ஐலா டி லாஸ் அல்கட்ராசெஸ்” (“La Isla de Los Alcatraces” – Island of Pelicans) என்று பதிவு செய்தார். அவர் குறிப்பிட்டது இன்றைய அல்கட்ராஸ் தீவைத்தானா என வரலாற்று ஆய்வாளர்களிடம் சில மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், காலப்போக்கில் அல்கட்ராஸ் தீவு என்ற பெயர் இந்தத் தீவுக்கு நிலைத்துவிட்டது. தமிழில் நாம் இதனை ‘நாரைத்தீவு’ எனவும் இந்தப் பாறைத்தீவைக் குறிப்பிடலாம். சான் பிரான்சிஸ்கோவில் மட்டுமல்ல கலிபோர்னியாவின் பல இடங்களுக்கும் ஸ்பானிஷ் மொழியில் உள்ள பெயர்களே வழக்கத்தில் உள்ளன. சான் டியாகோ, லாஸ் ஏஞ்சலஸ் ஆகியனவும் ஸ்பானிஷ் மொழியில் உள்ள பெயர்கள்தாம்.

மெக்சிகோவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்த போர் முடிவுக்கு வந்த பின்னர் ஏற்பட்ட உடன்படிக்கை ஒப்பந்தத்தின் விளைவாக 1848 ஆம் ஆண்டு அல்கட்ராஸ் தீவு அமெரிக்க நாட்டின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அல்கட்ராஸ் தீவு குறித்து பலர் அறியாத சிறப்பு ஒன்று, அமெரிக்காவின் மேற்குக்கடற்கரையில் கட்டப்பட்ட முதல் கலங்கரைவிளக்கம் 22 ஏக்கர் பரப்பளவுள்ள அல்கட்ராஸ் தீவில்தான் என்பது. மேற்குக் கடற்கரை நகரில் தங்கம் தேடி 1849 இல் பலர் இங்கு குழுமத் தொடங்கிய பொழுது ஏற்பட்ட தேவையால் திட்டமிடப்பட்டு, முதல் கலங்கரை விளக்கம் 1854 இல் கட்டி முடிக்கப்பட்டது. இப்பொழுது உள்ள கலங்கரை விளக்கம், முன்னிருந்த கலங்கரை விளக்கம் புவியதிர்ச்சியில் சேதமடைந்த பின்னர் மீண்டும் எழுப்பப்பட்டது.

இராணுவத்தின் கோட்டை ஒன்றும் இத்தீவில் 1859 இல் கட்டப்பட்டது. தீவைச் சுற்றியும் 100 பீரங்கிகள் பொருத்தப்பட்டு காவல் பலப்படுத்தப்பட்டது. பின்னர், அமெரிக்க உள்நாட்டுப் போர் காலத்தில் இராணுவத்தின் தளமாக இருந்தது, மேற்குக் கடற்கரைப் பகுதியின் மிகப் பெரிய இராணுவக் கோட்டையாகவும் இருந்தது. அப்பொழுது இது 1868 இல் இருந்து இராணுவத்தின் சிறைக்கூடமாகவும் இயங்கியது. தொடர்ந்து தீவில் ஒரு மருத்துவமனையும் கட்டப்பட்டது. தொழில் நுட்பம் வளர்ந்த பிறகு இத்தளத்தின் போர்த்தளவாடங்கள் காலத்திற்கேற்ற வகையில் மாற்றியமைக்கப்படாத பொழுது இராணுவம் இதனை ஒரு இராணுவத் தளமாகப் பயன் கொள்வதை நிறுத்திவிட்டு, 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து வெறும் இராணுவச் சிறைக்கூடமாக மட்டுமே பயன்படுத்தியது. இராணுவத் தளமாக இருந்து வந்தாலும் போரின் காரணமாக ஒருமுறைகூட குண்டு முழங்கத் தேவையின்றி இருந்த காரணத்தினால் இராணுவத்தை அப்பகுதியில் இருத்தவேண்டிய தேவை இல்லாமல் போனது. உலகம் முழுவதும் தங்கள் இராணுவத்தை நிறுத்தி வைத்திருக்கும் அமெரிக்காவிற்கு தங்கள் நாட்டின் எல்லையில் இராணுவத்தை நிறுத்தி வைக்கும் தேவை இல்லாது போனதன் காரணத்தை அவரவர் விருப்பம் போல புரிந்து கொள்ளலாம். அல்கட்ராஸ் தீவில் இருக்கும் பல கட்டிடங்களும் இராணுவத்தின் சிறைக்கைதிகளால் கட்டப்பட்டவையே. பழைய இராணுவக்கோட்டை தரைமட்டமாக்கப்பட்டு, அங்கு இப்பொழுது இருக்கும் சிறைக்கூடத்தைக் கட்டியவர்களும் (இராணுவத்தின்) சிறைக்கைதிகளே. ஆகவே சிறைக்கைதிகள் கட்டிய சிறைச்சாலை என்பது இச்சிறையின் சிறப்புகளில் ஒன்று.

இராணுவம் தனது சிறையை 1933 இல் கைவிட்டு தீவில் இருந்து வெளியேறியதும், 1934 இல் அல்கட்ராஸ் தீவின் சிறைச்சாலை அமெரிக்க அரசின் மத்திய சிறைச்சாலையாக (Alcatraz Federal Penitentiary) மாற்றியமைக்கப்பட்டது. கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு, காவல்கள் பலப்படுத்தப்பட்டு, சிறையில் இருந்து தப்பிக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் தப்புவதைக் கண்டால் உடனே சுட்டுக் கொன்றுவிடும் கட்டளைகளும் கொடுக்கப்பட்டன. தப்பிக்க விரும்பும் கைதிகளுக்கு சிறையின் தீவிர கண்காணிப்பும், இரும்புக் கம்பிகளும், உயர்ந்த மதில்களும், முள்வேலிகளும் பெரும் தடையாக இருந்ததுடன் அல்லாமல்; சிறை ஒருதீவில் அமைந்து இருந்ததும், தீவில் இருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள கரையை அடைய கடல் பகுதியை நீந்திக் கடக்கும் தேவையும், கடலின் நீரின் (50-55 ஃபாரன்ஹீட்) குளிர் தன்மையும், ஆபத்தான அலைகளும், நீரோட்டங்களும், மூடுபனி சூழ்வதும் என மேலும் பல தடைகள் இருந்தன.

போதாக்குறைக்குக் கடலில் மனிதர்களை உண்ணும் சுறாக்கள் இருக்கின்றன என்ற பொய்ப்புரளியும் பரப்பிவிடப்பட்டது. ஆனால் சான் பிரான்சிஸ்கோ பகுதிக் கடலில் உள்ள சிறிய சுறாக்கள் மனிதர்களை உண்ணும் வகையைச் சேர்ந்தவையல்ல. கைதிகளின் உடல் குளிர் நீருக்கு தகவமைக்கப்படக்கூடாது என்ற நோக்கில் குளிக்கும் நீரின் வெப்பநிலையையும் உயர்த்தி வைத்திருந்தார்கள் சிறை அதிகாரிகள். அனுமதியற்ற எந்த ஒரு படகும் தீவின் 600 அடி எல்லைக்குள் நுழைய அனுமதியும் கிடையாது. தப்பிக்க விரும்பிய கைதிகள் இவற்றைப் பெரிதுபடுத்தியதில்லை. தப்புவதற்கு இத்தனை தடைகள் இருந்தாலும், தப்பும் முயற்சியில் உயிர் போனாலும் போகட்டும், ஆனால் தப்பித்துவிட வேண்டும் என்று தொடர்ந்து திட்டங்களும் தீட்டப்பட்டுத்தான் வந்தது. சிறை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பொழுதும், பிறகு அமெரிக்க மத்திய சிறைச்சாலையாக இருந்தபொழுதும் தப்பும் முயற்சிகள் பலவும் அரங்கேறின என்பது சிறையின் வரலாறு.

அல்கட்ராஸ் சிறையில் கைதிகளைப் பராமரிக்க ஆகும் செலவு மிக அதிகம் என்றும், பிற மத்திய சிறைச்சாலைகளில் ஒரு கைதிக்கு நாளொன்றுக்கு ஆகும் 3 டாலர் செலவுடன் ஒப்பிடும் பொழுது, அல்கட்ராஸ் மத்திய சிறைச்சாலையில் ஒரு கைதிக்கு நாளொன்றுக்கு 10 டாலருக்கு மேல் செலவாகிறது என்றும், எனவே வேறு சிறையைக் கட்டிப் பராமரிப்பது இதைவிடச் சிறந்த முறை எனக் காரணம் காட்டி அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் ராபர்ட் கென்னடி (United States Attorney General Robert F. Kennedy) அவர்களின் உத்தரவின் பேரில் இச்சிறைச்சாலை 1963இல் இழுத்து மூடப்பட்டது. கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். அல்கட்ராஸ் சிறைக்குப் பதிலாக இல்லினாய்ஸ் (Marion, Illinois) மாநிலத்தில் ஒரு அதிக கண்காணிப்புச் சிறை கட்டப்பட்டது. இன்றைய நாட்களில் அல்கட்ராஸ் போன்ற அதிக கண்காணிப்புச் சிறை என்ற பெருமை ‘ராக்கி மலைத்தொடரின் அல்கட்ராஸ்’ என அழைக்கப்படும் கொலராடோவின் ஃபுளோரென்ஸ் (Florence, Colorado-“Alcatraz of the Rockies”) நகர் சிறைச்சாலைக்குச் சென்றுள்ளது.

Siragu alkatras2

தப்பவே முடியாத சிறை என்ற பெயர் பெற்ற அல்கட்ராஸ் தீவுச்சிறையில் இருந்து ‘தி கிரேட் எஸ்கேப்’ (The Great Escape) என்று அழைக்கும் வகையில் ஜூன் 11, 1962 நள்ளிரவில் மோரிஸ் மற்றும் ஆங்க்லின் சகோதரர்கள் இருவர் (Morris and the Anglins) என மூன்று கைதிகள் தப்பிச் சென்று சிறையின் பெருமைக்குக் களங்கம் ஏற்படுத்தியதே அரசின் இந்த முடிவிற்குக் காரணம் எனக் கூறப்படுவதும் வழக்கம். ஆனால், சிறையை மூடும் திட்டம் அதற்கும் முன்னரே தொடங்கிவிட்டது என்பது அரசு கூறும் விளக்கம். சிறை பராமரிப்பில் அதிக செலவுக்கு இச்சிறை ஒரு தீவில் அமைந்துவிட்டதே காரணம். அதிகப்படியான காவல் தேவை என்பதால் மூன்று சிறைக் கைதிகளுக்கு ஒரு காவலாளி என்ற விகிதத்தில் கண்காணிப்பு இருந்தது. ஒவ்வொரு பொழுதுக்கும் சுமாராக ஒரு 30 காவலாளிகள் என மூன்று பொழுதுகள் கண்காணிப்பிற்கு 90 காவலாளிகளின் தேவை என்ற நிலை பராமரிப்புச் செலவையும் அதிகப்படுத்தியது. மேலும் சிறை தீவில் இருந்ததால் தினசரி வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் தீவுக்குள் கொண்டு செல்ல அதிகச் செலவானது. தீவில் குடிநீரும் கிடையாது, அதையும் தீவுக்குள் கொண்டு செல்ல வேண்டும். கழிவறை சாக்கடை ஆகியவற்றை வெளியேற்றவும் வழியில்லாது இருந்தது. கைதிகள் சற்றொப்ப 250 பேர், அங்குத் தங்கியிருந்த சிறை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் யாவரும் உருவாக்கிய கழிவுகள் கடலில் வெளியேற்றப்பட்டு கடல்நீர் மாசடைவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததும் மற்றொரு காரணம்.

Siragu alkatras3

சிறைச்சாலை செயலற்றுப்போன பிறகு, அந்த அத்துவானத் தீவு கவனிப்பாரற்று ஒரு ஆறு ஆண்டுகள் கழிந்தது. பின்னர் அமெரிக்கப் பழங்குடியினர் சிலர் தீவில் குடியேறி தங்கள் கலாச்சாரத்தைச் சீர் குலைக்கும் அரசின் சட்டங்களை நீக்க வேண்டும் என்றும் அல்கட்ராஸ் தீவு அவர்களுக்குரிய நிலம் என்றும் அறிவித்து, 1969 ஆம் ஆண்டில் தொடங்கி தொடர்ந்து ஒரு 18 மாதங்களுக்கு மேலாக அரசுக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பினர். ‘மொஹவ்க்’ (Mohawk) என்னும் பழங்குடி இனத்தைச் சார்ந்த ‘ரிச்சர்ட் ஓக்ஸ்’ (Richard Oakes) என்பவரின் தலைமையில் போராடினார்கள் (Occupation of Alcatraz). செய்தியாளர்கள் இவரை ‘அல்கட்ராஸ்ஸின் மேயர்’ என்றெல்லாம் அழைத்தனர். இந்தப் போராட்டத்தினால் அமெரிக்கப் பழங்குடியினர் உரிமைகளைக் காக்கும் நடவடிக்கைகள் சில அரசால் மேற்கொள்ளப்பட்டது. இப்போராட்டக் காலத்தில் ஸ்பானிஷ் கட்டிடக்கலையில் கட்டப் பட்டிருந்த, சிறையின் தலைமைக் காவல் அதிகாரி தங்கியிருந்த மூன்றடுக்கு மாளிகையும், மேலும் சில கட்டிடங்களும் தீயால் சேதமடைந்தன. தனிப்பட்ட வகையில், விபத்தில் மகளை இழந்த தலைவர் துயரத்துடன் போராட்டத்தைக் கைவிட்டு தீவில் இருந்து வெளியேறிவிட, நாளடைவில் போராட்டம் பிசுபிசுத்து. அவர்களில் ஒரு சிலரே எஞ்சியிருந்த பொழுது அமெரிக்க அதிபர் நிக்சனின் உத்தரவின் பேரில் யு.எஸ். ஃபெடரல் மார்ஷல் அவர்களை 1971 ஆம் ஆண்டு தீவிலிருந்து வெளியேற்றினர்.

இதன் பிறகு இத்தீவை எவ்வாறு மாற்றியமைத்து பயன்பாட்டிற்குக் கொண்டுவரலாம் எனப் பல யோசனைகளும் திட்டங்களும் முன் மொழியப்பட்டன. அமெரிக்கக் கிழக்கு கடற்கரைக்குச் சிறப்பு சேர்க்கும் நியூயார்க் லிபர்ட்டி தீவில் உள்ள புகழ் பெற்ற சுதந்திரதேவி (Statue of Liberty) சிலை போல, அல்கட்ராஸ் தீவில் நீதிதேவதை சிலை (Statue of Lady Justice) ஒன்றை வைக்கலாம் என்றும், தங்கும் விடுதிகள் அமைக்கலாம் என்றும், குடியிருப்புகள் அமைக்கலாம் என்றும், ஐக்கிய நாடுகள் சபையை சிறப்பிக்கும் வகையில் காட்சியகம் அமைக்கலாம் எனவும் பற்பல யோசனைகள் கொடுக்கப்பட்டது. இருப்பினும், வரலாற்றுச் சிறப்புகள் நிறைந்த அல்கட்ராஸ் தீவை சுற்றுலாத் தளமாக மாற்றும் முயற்சி 1972 இல் மேற்கொள்ளப்பட்டது. தீவில் சேதமடைந்திருந்த கட்டிடங்கள் சிலவும், சிறைக்காவலர் குடும்பங்கள் குடியிருந்த தொடர் குடியிருப்புகளும் இடித்துத் தள்ளப்பட்டு தீவு சீரமைக்கப்பட்டு அமெரிக்க வனத்துறையின் மேற்பார்வையின் கீழ் சுற்றுலாத் தளமாக மாற்றப்பட்டது. தொடர்ந்து வரலாற்றை நினைவுகூரும் இடமாகவும் அல்கட்ராஸ் தீவு அறிவிக்கப்பட்டு, நாட்டின் வரலாற்றுச் சிறப்பிடம் (National Historic Landmark) என்ற தகுதியை 1986 ஆண்டு பெற்றது. சுற்றுலாத் தலமாக மாற்றிய முதல் ஆண்டிலேயே 50,000 பேர் ஆர்வத்துடன் தீவின் சிறைச்சாலையைப் பார்வையிட்டார்கள். அதற்கு முன்வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படாத ஓர் இடம் என்பது பலருக்கு இத்தகைய ஆவலைத் தூண்டிவிட்டிருந்தது. தீவின் வரலாற்றின் அதுநாள் வரை தீவில் நுழைந்தவர் எண்ணிக்கையை, தீவு சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்ட பின்னர் வந்த முதல் ஆண்டு பார்வையாளர்கள் எண்ணிக்கை மிஞ்சிவிட்டது என்பது ஆய்வாளர்கள் கணிப்பு.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அல்கட்ராஸ் தீவில் . . .”

அதிகம் படித்தது