மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அழகாய்ப் பளிச்சிடும் பிம்பம்(சிறுகதை)

முனைவர் ஆ.சந்திரன்

Jan 12, 2019

siragu bimbam1

அண்ணே “இவள் என்னுடைய பிரண்டு” என்று அறிமுகப்படுத்தியபோது போது கதிரவனின் மனம் உறைந்து போனது. அதை வெளிக்காட்டாமல் வலிய முயற்சித்து வரவைத்த சிரிப்புடன் சங்கீதா பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

இல்லை!  கேட்பது போல் பாவனை செய்துகொண்டிருந்தான்.

கல்லூரி காலத்தின்அழகிய காட்சிகள் அவன் வெற்றுத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன. அதைத் தவிர்க்கப் போராடிக்கொண்டிருந்தான். அதற்குள் சங்கீதா அகஸ்டியாவைப் பற்றி அனைத்தையும் கூறி முடித்திருந்தாள்.

“சரிண்ணே! அகஸ்டியாவைப் பத்திரமாய்ப் பாத்துக்குங்க” என்று கூறிவிட்டு, அவளை உடன் அழைத்துக் கொண்டு அவளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை நோக்கி நகர்ந்தாள்.

“வர்ரேன் சார்” என்று கையாட்டிச் சென்றாள் அகஸ்டியா, சங்கீதாவின் பின்னால் துள்ளி குதித்து வேகமாக!

அவளது பார்வை மறையும் வரை அப்படியே நின்ற கதிரவனுக்குத் தன்நெஞ்சில் மறைந்திருந்த பிரைசியின் நினைவுகள் பீரிட்டு வெளிப்பட்டன.

“அவளைக் கடைசியாக எப்போது பார்த்தேன்” என்ற விவரத்தைத் தேடிக்கொண்டிருந்தான் அவன்.

நேரம் ஆவதாக உணர்ந்ததால் ஒதுக்கப்பட்ட வேலைகள் முடிந்திருக்கிறதா என்று பார்க்க புறப்பட்டான். அழகழகாய்ப் பூத்து நின்ற மலர்கள் அவனைப் பார்த்துத் தலையசைத்தன. அவற்றை அவன் கடந்து போனான்.

இரண்டு நாள் முன்னா் வாடி இருந்த மல்லிகைச் செடி இன்று மலர்ந்திருந்தது. அதை மெல்ல தன்னுடைய விரல்களால் வருடிவிட்டவன் பார்வை புல்வெளிகளைச் செப்பனிட்டுக் கொண்டிருந்தவர்களை நோக்கித் திரும்பியது.

அவனுடைய செல்போன் சினுங்கியது.

“யாரா இருக்கும்?“ என்று பார்த்தான்.

“கே. ஏ” என்ற ஆங்கில எழுத்துக்கள் நான்கு அங்குல திரையில் பிரகாசமாய் ஒளிர்ந்தது ஓசையுடன்.

“அலோ சொல்லுமா”  – இது கதிரவன்

“ஒன்னுமில்லிங்க சும்மாதான்” மறு முனையில் பெண் குரல்.

“…..ம்மா! போஸ்ட் மேன் வந்தானா?

“இல்லிங்க….”

“வர்லியா….! சார் முந்த நாளே அனுப்பரேன்னு சொன்னாரே! சரி நாளைக்கு வருதான்னு பார்ப்போம். சரி நீ சாப்டியா? பாப்பா என்ன பண்றா?

“இப்பத்தான் பால் கொடுத்தேன். யானையில் தூங்குறா! இனிமே தான் சாப்பிடனும்”.

“சரி வேற ஏதாவது விசயம்…….”

“கமலேஷக்கு வரும் போது பெண்சில், எரைசர் வாங்கிட்டு வாங்க”

“சரிம்மா”

“டைம் ஆவுது சாப்பிடுங்க”

“சரி….”

“சரிங்க….“

அழைப்பைத் துண்டித்து செல்போனை, பாக்கெட்டில் வைத்தவன் சாப்பிட கேண்டீனுக்குப் போனான்.

மாலை வேலை முடிந்து ஸ்கூட்டரில் வீட்டிற்குப் போய்க்கொண்டிருந்தபோது பிரைசியின் நினைவுகள் மீண்டும் அவனை அலைக்கழித்தன அகஸ்டியாவின் ரூபத்தில். எப்போதாவது எட்டிப்பார்க்கும் அந்த சோகம் அகஸ்டியாவைப் பார்த்ததுமுதல் அவனை உடும்பாய்ப் பிடித்துக்கொண்டது. அதனால் வழக்கமான உற்சாகமின்றி ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டிருந்தான். பாலத்தைக் கடந்து திரும்பிய அவனுடைய பார்வைப் புதிதாய்க் கட்டியிருந்த வீட்டின் அழகைக் கண்டு வியப்பில் விரிந்தது. வீட்டைப் பார்த்தவாறே போனவனின் பார்வையில் வீட்டின் முற்றத்தில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணும் பதிந்திருந்தாள்.

வீட்டை அடைந்தவுடன் வழக்கமாக எழுப்பும் ஆரன் ஒலியை எழுப்பினான்.

ஓடி வந்த கமலேஷ் அப்பாவின் பையை ஆராயத் தொடங்கினான்.

பையை வாசலில் போட்டுவிட்டு வெற்றிக் களிப்புடன் தன்னுடைய அறைக்குள் ஓடி மறைந்தான். “பார்த்தியா உன் மகன! வேலையான உடனே பையத் தூக்கிப் போட்டுட்டுப் போய்ட்டான்” என்று அவன் முடிப்பதற்குள் இடுப்பில் இருந்த லட்சுமியைக் கதிரவனிடம் கொடுத்துவிட்டு பையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்ற அஸ்வினி.

“காபி போடவா” என்றாள்.

“வேண்டாம்” என்றவன், குழந்தையுடன் கொஞ்ச ஆரம்பித்தான்.

அன்றுடன் பயிற்சி முடிந்தது அகஸ்டியாவுக்கு. பயிற்சியின் நிறைவு விழாவிற்குப் பிறகு எல்லாரையும் போலவே கதிரவனிடமும் பிரியா விடைபெற்றுச் சென்றாள் அவள்.

அவளைப் பார்த்து ஒரு வரட்டுப்புன்னகையை உதிர்த்தவன் “சில நாட்களாய் இருந்த பரபரப்பு இனி நாளை முதல் இருக்காது“ என்று தன் மனதிற்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தான்.

அவனுக்கு மனதில் சங்கிதா அவளை அறிமுகம் செய்துவைத்த பிறகு நடந்த அடுத்தடுத்த சந்திப்புகள், அவளுக்குத் தெரியாமல் அவளைப் பார்த்த நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாய் அவனுள் நான் நீ என முண்டியத்துக்கொண்டன.

அந்நினைவுளுடன் போரடியவாறே வீட்டிற்குப் புறப்பட்டான்.

“இனி சீக்கிரமாகவே அலுவலகத்திற்கு வந்து காத்துக்கிடக்க வேண்டிய அவசியம் இருக்காது“ என்று என்ற சமாதானத்தை அவன் மனம் ஏற்கத் தயாராகிக் கொண்டிருந்தது.

வீட்டிற்குப் போகும் வழியில் வழக்கமாக வாங்கும் பேக்கரி அருகே வண்டியை நிறுத்தினான்.

கண்ணாடி ரேக்கினுள் தெரிந்த பொருட்களை ஆராய்ந்தான்.

 “எல்லாமே இன்னைக்குப் போட்ட சரக்குதான் சார்” என்றான் கடையில் இருந்த பையன். கதிரவனின் பார்வையைப் புரிந்தவனாய்.

“அது இன்னைக்குப் போட்டதா? ப்ரஷ்ஷா  இருக்கா? “ இது கதிரவன்.

ஒரு துண்டு சீரக பிஸ்கெட்டை நீட்டி  “பாருங்க இன்னும் சூடாகவே இருக்கு” என்றான் கடையில் இருந்த பையன்.

பிஸ்கெட் புதிதாக இருப்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் “கால் கிலோ கொடுங்க” என்றவனின் கண்கள் “வேறென்ன வாங்கலாம்” என்ற ஆய்வில் மூழ்கியது.

அதற்குள் கவரில் கட்டி வைத்துவிட்டு “அப்புறம் சார்“ என்று அடுத்த ஆடருக்காக நின்றவனிடம்,  “ரெண்டு முட்டை பப்ஸ்” அவ்வளவுதான்” என்றான்.

பணத்தைக் கொடுத்துவிட்டு சில்லறையை வாங்கி சட்டைப் பையில் போட்டுக் கொண்டு கிளம்பியவன் “வேற என்ன சொன்னா” என்ற யோசனையுடன்  சாவியை எடுத்து ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தான்.

அப்போது, மல்லிகைப் பூ வாங்கி வரச்சொல்லி மனைவி சொன்னது அவன் நினைவுக்கு வந்தது.

வீட்டை நெருங்கிய போது அஸ்வினி வாசலில் நின்றிருந்தாள். அழுதுகொண்டிருந்த குழந்தையைச் சமாதானம் செய்தவாறே கதிரவனைப் பார்த்தாள்.

அவன் கண்கள் வெளிப்படுத்திய செய்கையை அவளுடைய பார்வைக்கான பதிலாக அர்த்தப்படுத்திக்கொண்டாள். அதை அவனும் உணர்ந்தவனாய்ப் புன்னகைத்தான்.

அவர்களின் அந்த நளினங்களுக்கிடையே உள்ளே டிவி பார்த்துக்கொண்டிருந்து கமலேஷ் ஓடி வந்து பையிலிருந்த  பொருட்கள் ஒவ்வென்றாய் ஆராய்ந்தான். முட்டை பப்ஸை கட்டுபிடித்த மகிழ்ச்சியில்  மற்றவற்றைத் தரையில் அப்படியே போட்டுவிட்டு ஓடிவிட்டான் வந்தவேகத்தில்.

குழந்தையை வாங்கிகொண்டான் கதிரவன்.

அழுது ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தவள் அவனிடம் போனதும் பொக்கை வாயத் திறந்து சிரிக்க ஆரம்பித்து அவளுக்கு வழக்கம் போல சின்ன மன வருத்தத்தை ஏற்படுத்தியது.

“எல்லாம் ஆளைக் கண்டு ஏமாத்துங்க” என்று முணுமுணுத்தவாறே வீட்டைப் பெருக்க ஆரம்பித்தாள்.

இரவு குழந்தைகள் உறங்கியதும் மல்லிகைப் பூவைத் தலையில் வைத்துக் கொண்டு பெட்ரூமுக்குள் நுழைந்தாள். படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி எடுத்து வைத்தான் கதிரவன்.

டியூப்லைட்  தன் ஒளியை இழந்தது.

குழந்தைகள் உறங்கியதை மீண்டும் ஒரு முறை உறுதி படுத்திக்கொண்டு கதவைத் தாளிட்டாள். குழந்தைகள் உறங்கிய அறைகளில் மட்டுமே இப்போது விளக்கின் ஒளி படர்ந்திருந்தது.

சிறிது நேரத்தில் க்கீ… க்கீ… என்ற சப்தம்.

குழந்தையின் அந்த அழுகை பெட்ரூமின் கதவைத் திறக்கச் செய்தது.

“இல்லடா செல்லம்! அம்மா இங்கே தாண்டா இருக்கேன்!” என்று அவசர கதியில் குழந்தையை அரவணைத்தாள் அஸ்வினி. அவளுடை கண்கள் அழுதடங்கிய குழந்தையின் முகத்தை ரசித்துக் கொண்டிருந்தன.

கட்டிலில் உறக்கமின்றிப் புரண்டு தவித்துக்கொண்டிருந்தான் கதிரவன். கண்களை மூடும் வேளையில் அகஸ்டியாவின் பிம்பம் விஷ்வரூபம் கொண்டாள். பதட்டத்துடன் கண்களைத் திறந்தான்.

அடர் இருளிலும் அவள் முகம் பளிச்சென்று அழகாய்த் தெரிந்தது.

வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்….


முனைவர் ஆ.சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அழகாய்ப் பளிச்சிடும் பிம்பம்(சிறுகதை)”

அதிகம் படித்தது