மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அவர்கள் (கவிதை)

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Dec 16, 2017

Siragu fisherman1

 

கடல் அலைகள்

ஓய்வதில்லை ஆர்ப்பரித்திடும்

அதன் ஆரவாரங்கள்

முடிவதில்லை

முகிலினங்கள் பொழிந்திடும்

துளிகளை ஏந்திடும்

கடலின்  மடி

இவர்களின் கண்ணீர்த்

துளிகளையும் ஏந்துகின்றது

காலங்காலமாய்…

கடல் நீரின் கரிப்பு

அவர்களின் உவப்பற்ற

வாழ்வின் கண்ணீர்!

 

மீனும்

திமிங்கலமும் மட்டும்

கடலின் சொத்தல்ல

வலைப்பின்னும்

இவர்களின்

உயிரும்,

மன்னராட்சி மறைந்தாலும்

மக்களாட்சி மலர்ந்தாலும்

மீனவர் வாழ்வு துளிர்ப்பதில்லை

மீனவர் வாழ்வில் செழிப்பில்லை

 

பக்கத்து நாட்டு

கடற்படையின் துவக்கிகளும்

சொந்த நாட்டின்

கடற்படையின் குண்டுகளும்

எப்போதும்

துளைப்பது தமிழ்

மீனவனின் உடலைத்தான்

 

தாயின் தண்ணீர்குடம்

உடைந்து பிறக்கும்

நமக்கோ தண்ணீரின்

உயிர் உறவு

மண்ணுறவு

கொள்ளும் தருணம்

முடிவுறும்

பரதவர்களுக்கோ

பாரில் அவர் உயிர்

பிரியும் வரை தொடரும்,

 

தரையில் தவழக் கற்பதில்லை

முந்நீரில் தவழ்ந்தே வளர்கின்றனர்

காற்றின் வேகம் அறிந்தே

கலன் செலுத்துகின்றனர்,

வீசும் புயல்

தெரிந்தே ஆழ்கடலில்

உலவுகின்றனர்,

எதிர்வரும் ஆபத்தை

எச்சரிக்க அரசுகள்

மறந்தாலும்

சுழன்றடிக்கும் சூறாவளியில்

படகு கவிழ்ந்தாலும்

உடன் வந்தோர் மரித்தாலும்

எஞ்சியிருக்கும் உயிரையும்

உயிரற்ற சடலங்களையும்

ஏந்தி நீந்தி கரையடையும்

அவர்களின் கண்ணீருக்கு

மட்டும் என்றுமே

கரையில்லை;

 

குப்பங்களில் குப்பையோடு

ஊர் ஒதுக்கினாலும்

கருவாட்டின் வாசம்

அவர்கள் உடலில்

வீசினாலும்

அன்பின் வாசத்தை

மட்டுமே தந்திடும்

அவர்களின் மொழி;

நொடிக்கு நொடி

மரணிக்கும் அந்த

தொல்குடிகளின் உயிரை

அரவணைக்க நாம்

மறந்தாலும்

இயற்கை மறப்பதில்லை

துன்பத்தின் சாயலே

வாழ்வாகிப்போன

அவர்களுக்கு நீங்கா

துயில் தந்துகொண்டே

இருக்கும் ஆழியின் சீற்றம்

நெய்தல் நிலச் சூழல்

இரங்கலும்

இரங்கல் நிமித்தமும்

ஆயிரம் ஆண்டுகள்

ஆனபின்னும் மாறவில்லையே?!

 


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அவர்கள் (கவிதை)”

அதிகம் படித்தது