மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! (பகுதி- 10)

முனைவர். ந. அரவிந்த்

Jun 11, 2021

siragu thiruvasagam1

பிணி என்பது நோய். உடலில் நோய் வருவதற்கு காரணம் பாவம் எனும் மலம். பாவம் செய்யாத மனிதன் இந்த புவியில் ஒருவனுமில்லை. இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு மனிதனும் பாவத்தில்தான் பிறக்கிறான். பிறவி எனும் இப்பிணியை அறுக்கவும், இறைவனின் திருவடியை அடையவும், எல்லை இல்லா நிலைத்த இன்பத்தில் திளைக்கவும் வழிகாட்டுபவை செந்தமிழ்ச் சிவ ஆகமங்கள். இச்சிவ ஆகமங்களை அருளியவன் சிவபெருமானே என்று மணிவாசகர் சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார்.

ஆகமங்களில் இருக்கின்ற நெறியின்படி வாழ்ந்தால், கற்பனைக்கும் அப்பாற்பட்டு இருக்கின்ற அப்பரம்பொருள் நம்மை நெருங்கி வருவான் என்பதனை, “ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்” என்றும் மணிவாசகர் மேலும் குறிப்பிடுகின்றார். ஆகமம் ஆகி நின்றான் என்பதற்கு ஆகம வடிவாகவே இறைவன் உள்ளான் என்று மாணிக்க வாசகர் கூறுவது, வேறு எங்கும் காணப்படாத புதுமையாகும். இதன் விளக்கம் யாதெனில், இறைவன் ஆகம விதிகள் மற்றும் வார்த்தைகளின் மூலம் மனிதனுக்கு அருள் புரிகிறான் என்பதாகும்.

இறை அருளால் ஒன்பது சிவ ஆகமங்கள் பெறப் பெற்றத் திருமூலர் அவற்றை ஒன்பது தந்திரங்களாக அமைத்துத் தீந்தமிழில் மூவாயிரம் மந்திரங்கள் என திருமந்திரமாக அருளினார். இறைவனின் அருளே தம்மைச் செந்தமிழ் சிவ ஆகமங்களை மூவாயிரம் திருமந்திரப் பாடல்களாகப் பாடச் செய்தது என்பதனை கீழே குறிப்பிடப்பட்டுள்ள தன் பாடல் மூலம் விளக்கியுள்ளார்.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே 

திருமூலர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தன்னுடைய பாயிரம் 7, பாடல் 99மூலம் ஆகமங்கள் இறைவனால்தான் வழங்கப்பட்டது என பாடியுள்ளார்.

மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்

ஞாலம் அறியவே நந்தி அருளது

காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்

ஞாலத் தலைவனை நண்ணுல ரன்றே

இதன் விளக்கம் யாதெனில், ஆகமங்கள் அனைத்தும் இறைவன் வழங்கியவைகளே. இந்த ஆகமங்களை, நான் பெற்ற இன்பம் இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் பெறவேண்டும் என்று தனக்கு தன் அன்பினால் இறைவன் அருள் புரிந்து வழங்கினான் என்று திருமூலர் பாடல் மூலம் கூறியுள்ளார். இந்த ஆகம மந்திரங்களை காலையில் எழுந்து படித்து அவற்றின் பொருளை உணர்ந்து அதிலுள்ள கருத்துக்களை கடைபிடித்து வந்தால் உலகங்கள் அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனை அடைந்து நான் பெற்ற பேரின்பத்தை அனைவரும் பெறலாம் என்பது திருமூலர் மூலம் நமக்கு கிடைத்த வாக்கு..

ஆகமங்கள் உண்மையை விளக்கும் மெய் நூல்களாம். இவை மெய்யாகிய இறையிடம் இருந்து வந்தவை. ஆகமங்கள் மூலம், திருக்கோயில் கட்டுதல், வழிபாடு முறைகள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றை மனிதனுக்கு இறைவன் அருளினான். சிவபெருமான் மகேந்திர மலையில் வைத்து ஆகமங்களை மனிதனுக்கு அருளினார் என்று மாணிக்க வாசகர் தன் கீர்த்தித் திரு அகவல் பாடலில் ‘மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்’ என குறிப்பிட்டுள்ளார்.

உலக பிரசித்தி பெற்ற பத்து கட்டளைகளை இறைவன் மோசேக்கு சீனாய் மலைமேல் வைத்து அருளினான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! (பகுதி- 10)”

அதிகம் படித்தது