மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆசிய பண்பாட்டிற்குச் சமய இலக்கியங்கள் அளித்த சமய நடைமுறைகள் மற்றும் பண்பாட்டுக் கொடைகள் – (பகுதி -2))

சு. தொண்டியம்மாள்

Feb 15, 2020

siragu pattinapaalai1பண்டமாற்று

 தம்மிடம் உள்ள பொருள்களைக் கொடுத்து அவற்றிற்குப் பதிலாக வேறு பொருட்களைப் பெற்றுச் செல்லும் முறையாகிய பண்டமாற்று முறை அக்காலத்தில் வழக்கிலிருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது.

பரதவர்கள் மீன் குவியல்களை இடையர்களுக்குக் கொடுத்துவிட்டு, அவற்றிற்குப் பதிலாக அவர்களிடமிருந்து சீவல், கௌதாரி போன்றவற்றைப் பெற்றுச் சென்றமையையம். நெய்தல் நிலச் சிறுமியர் இடைச்சியர்களிடமிருந்து அவரைக்கு ஈடாகப் பவளத்தைப் பெற்றுச் சென்றமையையும்,

கவரும்மீன் குவைகழியவர் கானவர்க் களித்துச்

சிவலும்சே வலும்மாறியும் சிறுகழிச் சியர்கள்

அவரைஞ னலுக்கெயிற்றியர் பவளமுத் தளித்தும்

உவரிநெய் தலும் கானமும் கலந்துள ஒழுக்கம்.

என்ற பாடல் மூலம் அறியமுடிகிறது.

 சமய வழக்கங்கள்

 சமுதாயத்திலுள்ள நிறுவனங்களில் ஒன்றாகிய சமயம் தொடர்பான வழக்கங்களைத் திருமுறைகள் மூலம் அறியமுடிகின்றது.

விழாக்கள் எடுத்தல்:

siragu pakthi ilakkiyam3

மக்களிடையே இறைவனுக்கு விழாக்கள் எடுத்து வழிபட்டு மகிழும் வழக்கம் காணப்பட்டமையைத் திருமுறைகள் மூலம் அறிய முடிகின்றது. இறைவன் எழுந்தருளியுள்ள தலங்களை வருணிக்கும் திருமுறை ஆசிரியர்கள் இறைவனுக்கு விழாக்கள் எடுத்து மகிழும் நிகழ்ச்சிகளையும் குறிப்பிடுகின்றனர்.

சித்திரை அட்டமி விழா, வைகாசிப் பென்னூசல் விழா, ஆனி, ஆடி, ஆவணி ஆகிய மாதங்களில் நிகழ்த்தப் பெறும் புரட்டாசி மகா நவமி விழா, கார்த்திகைநாள் விழா, தைப்பூச விழா, பங்குனி உத்திர விழா, திருவாதிரை நாள்விழா போன்ற விழாக்கள் பற்றிய குறிப்புகள் அறியமுடிகின்றன.

விழாக்களின்போது இறைவன் திருவீதியில் எழுந்தருளுவான் என்பதை (புருடோத்தம நம்பி)

1.         கோயில் வாரணி

வாரணி நறுமலர் வண்டு கிண்டு

பஞ்சமம் செண்பக மாலை மாலை

வாரணி வனமுலை மெலியும் வண்ணம்

வந்துவற் திவைநம்மை மயக்கு மாலோ

சீரணி மணிநிகழ் மாடம் ஓங்கு

தில்லையம் பலத்தெங்கள் செல்வன் வாரான்       257

என்ற திருவிசைப்பாப் பாடலால் அறியலாம்.

வழிப்பாட்டிற்குரிய பூக்களும் அவற்றைப் பறிக்கும் முறையும்

தாமரை, கருங்குவளை, செங்கழுநீர், நெய்தல், மாதவி, மந்தாரை, தும்பை, மகிழ், சுரபுன்னை, மல்லிகை, செண்பகம், பாதிரி, செவ்வந்தி முதலிய மலர்களை மக்கள் இறைவழிபாடுகளுக்காகப் பயன்படுத்தியுள்ளனர். வழிபாட்டிற்குரிய மலர்களை அதிகாலையில் எழுந்து நீராடிய பின்னர் வாயைக் கட்டிக்கொண்டு நந்தவனம் சென்று பறிப்பர் என்பதையும் அறியமுடிகின்றது.

எறிபத்த நாயனார் புராணம்

            வைகளை உணர்ந்து போந்து புனல்மூழ்கி வாயுங் கட்டி

            மொய்ம்மலர் தெருங்கு வாச நந்த வனத்து முன்னிக்

            கையினில் தெரிந்து நல்ல கமழ்முகை அலரும் வேலைத்

            தெய்வ நாயகர்க்குச் சாத்தும் திருப்பள்ளித் தாமம் கொய்து (பாடல் -9)

என்ற பாடல் உணர்த்துகிறது.

இறைவனை வணங்கும் முறைகள்

siragu pakthi ilakkiyam2மக்கள் இறைவனை வணங்குவதிலும் சில வழக்கங்களைக் கடைபிடித்துள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.

இறைவனை இன்னின்னவாறு வணங்கி வேண்டும் என அறிவுறுத்துமிடங்களிலும், இன்னின்னவாறு வணங்கவில்லையே என மனம் வருந்திக் கூறும் இடங்களிலும் இறைவனை வணங்குதல் பற்றிய வழக்கங்களை அறிய முடிகின்றது.

அலறுதல், அழுதல், ஆடுதல், பாடுதல், இடித்த மாவினால் பலிபீடம் அமைத்து வணங்கல், உடல்நலம் பொருந்த வணங்கல், உருகுதல், எட்டுஉறுப்புகளால் வணங்கல், ஐந்து உறுப்புகளால் வணங்கல், காமுற்று அரற்றுதல், காலையிலும் மாலையிலும் தவம் செய்தல், கோயில் திருவாயிலை முதலில் வணங்கிவிட்டுப் பின் கோயிலுக்குள் செல்லல், கோயிலை அலகிடல், திருமெழுக்கிடல், தலையாரக் கும்பிடல், தீபம் காட்டித் தொழுதல், வட்டமிட்டு ஆடுதல் போன்ற இறைவழிபாடு தொடர்பான வழக்கங்களை அறியமுடிகின்றது.

மேலும், குறிப்பிட்ட காலங்களிலேயே இறைவனை வணங்கும் வழக்கமும் காணப்பட்டது.

நம்பியாரூரார் பெருமைகளைக் கூறுமிடத்துத் திருமால், பிரம்மன் போன்றோர் காலமல்லாக் காலததில் சென்று தில்லை இறைவனை வணங்க உள்ளே செல்லாமல் நிற்க ஆரூரார் உள்ளே சென்று இறைவனை வணங்கியதாகக் கூறப்படுகிறது.

            மாலயன் சதமகன் பெருந்தேவர் மற்றும்

            உள்ளவர்கள் முற்றும் நெருங்கிச்

            சீலமா முனிவர் சென்று முன்துன்னித்

            திரப்பிரம்பின் அடிகொண்டு திளைத்துக்

            காலம் நேர்படுதல் பார்த்து அயல்நிற்பக்

            காதல் அன்பர் கணநாதர் புகும்பொன்

            கோல நீடுதிரு வாயி லிறைஞ்சிக்

            குவித்த செங்கை தலைமேற்கொடு புக்கார்.

என்பதால் காலமல்லாக் காலத்தில் இறைவனை வணங்குதல் வழக்கமன்று என்பது புலனாகின்றது.

நம்பிக்கைகள்

சமுதாயத்தில் மக்களிடையே காணப்படும் நம்பிக்கைகளும் பண்பாட்டின் கூறுகளுள் ஒன்றாகக் கருதப்பெறுகின்றன. எல்லாச் செயல்களும் இறைவனின் திருவருள் ஆணையாலே நடைபெறும் என நம்பினார். திருஞானசம்பந்தரிடம் சமணரை வாதில் வென்று, பாண்டியரின் வெப்பு நோயைத் தீர்க்க வேண்டும் என வேண்ட, அவர் இறைவனின் திருவருளாணையால் செய்வேன் என்கிறார். இது,

            என்றவர் உரைத்த போதில் எழில்கொள் பூம்புகலி வேந்தர்

            ஒன்றுநீர் அஞ்ச வேண்டா உணர்விலா அமணர் தம்மை

            இன்றுநீர் உவகை யெய்த யாவரும் காண வாதில்

            வென்று னேவனை வெண்ணீ றணிவிப்பன் விதியால் என்றார்

            நோக்கிட விதியி லாரை நோக்கி நான்வாது சைய்யத்

            தீக்கனல் மேனியானே திருவுளமே||

எவரும் பாடல் அடிகளால் புலப்படுகின்றது.

இவ்வாறு பண்பாட்டைப் பறைசாற்றும் பண்பாட்டு இலக்கியமாகவும், சமுதாய இலக்கியமாகவும் பக்தி இலக்கியங்கள் திழ்வதை காணலாம்.


சு. தொண்டியம்மாள்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆசிய பண்பாட்டிற்குச் சமய இலக்கியங்கள் அளித்த சமய நடைமுறைகள் மற்றும் பண்பாட்டுக் கொடைகள் – (பகுதி -2))”

அதிகம் படித்தது