மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆடைமாற்றம் ஆள் மாற்றத்திற்கான முதல் படி

பிரத்யுக்ஷா பிரஜோத்

Jun 18, 2016

Siragu- change dress article7

மானம் காக்க மனிதன் கண்டறிந்தது ஆடை. அதுவே காலப்போக்கில் ஒவ்வோர் நாட்டிற்கும், மாநிலத்திற்கும்கூட அடையாளமாக உருமாறியிருக்கிறது. நாம் உடுத்தும் உடையும், உடுத்தும் முறையும் நம் எண்ணப்போக்கை நிர்ணயிக்கும், பிரதிபலிக்கும்.

தினப்படி செய்யும் வேலை, தினப்படி போகுமிடம், தினப்படி பார்க்கும் முகங்கள் என்று சலித்துப் போகும் நேரங்களில் ஏதேனும் ஒரு மாற்றத்திற்காய் மனம் ஏங்கும். சுற்றுப்புறம் தரும் அதிருப்தி நாளடைவில் சுய தோற்றத்தின் மீதான சலிப்பைக் கூட்டும்.

சுற்றியிருக்கும் மனிதர்களையோ, சுற்றி நடக்கும் நிகழ்வுகளையோ மாற்ற விருப்பம் இல்லாததால் அல்லது மாற்ற முடியாது என்ற அவநம்பிக்கையால் தன்னில் ஏதேனும் மாற்றம் கொண்டு வர மனம் தீர்மானிக்கும்.

Siragu- change dress article3

உடனடி உருமாற்றம் வேண்டாமென்று எண்ணுவோர், தேர்வு செய்வது ஆடை மாற்றம். சிலர் தீர்மானித்தவுடன் புதிய ஆடைகள் வாங்குவதுமுண்டு. தனக்கு எது பொருந்தும் என்று ஆராய்வதுமுண்டு. ஆராய்ச்சியில் மனச்சோர்வு அடைவோர் முடிவை மாற்றிக் கொள்கின்றனர். உற்சாகம் கொள்வோர் அதிக சிரத்தையுடன் ஆடைகளை தேர்வு செய்கின்றனர்.

எப்போதும் தேர்வு செய்யும் ஆடைகளை விடுத்து, மாறுபட்ட ஒன்றை தேடும்போது முதலில் குழப்பம் தோன்றும். நீண்ட பரிசீலனைகள், பிறருடனான கலந்துரையாடல்களின் விளைவாக நேரமும் பணமும் செலவாகும்.

பல தேர்வுகளை கணக்கில் எடுத்து, இறுதியில் இதுவரை அணியாத வண்ண ஆடையைத் தேர்வு செய்து திருப்தி அடைபவர்கள் உண்டு.

சில நேரங்களில் வசதியான ஆடைகளை விடுத்து புதிதாக முயற்சித்தே ஆக வேண்டுமென்பதற்காக, பொருந்தாத ஆடைகள் அணிவது மாற்றம் வேண்டுமென்ற எண்ணத்தின் மீதே வெறுப்பை உருவாக்கும்.

Siragu- change dress article8

நாம் புதிதாக உடுத்தியிருப்பதை பிறர் கவனிக்கும்போது, உடலைக் குறித்த விழிப்புணர்வு தோன்றும். இதுவரை கண்ணில் படாத கொழுப்பு குவியல்கள் உடலில் தென்படும். உடலைப் பராமரிக்க பிரயத்தனம் எடுக்க வைக்கும்.

ஆடை, அலங்காரங்கள் நம்மை பிறர் பார்க்கும் பார்வையை மாற்றும். பிறர் பார்வையில், முகத்தில் அவர்கள் வெளிக்காட்டும் உணர்வுகள், நம்மை நாம் பார்க்கும் பார்வையை மாற்றியமைக்கும்.

மற்றவர் விசாரிப்பது, நம் மனதில் தோற்றுவிக்கும் உணர்வுக்கு ஏற்ப நம்முடைய பழக்கவழக்கங்கள் மாறுகின்றன. நாம் பிறர் கவனிக்கும் படியாக இருக்குமென்ற பூரிப்பு, கர்வம், பிறர் கவனத்தை ஈர்த்துவிட்டோமே என்ற கூச்சம். கர்வம் சில நேரங்களில் தலைக்கனமாகி உதாசீன குணத்தில் முடிவடையும்.

ஆடை மாற்றத்தின் உடனடி பாதிப்பு பேச்சு வழக்கில் தெரியும். வட்டார வழக்குகள் மறையும். ஆங்கிலப் பிரயோகம் கூடும்.

யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்தும்போது அதற்கேற்ப நட்பு வட்டம் சுருங்கியும், விரிந்தும் மாறிப் போகும்.

இவை எல்லாம் சேர்ந்து நாம் மாறிவிட்டதாக ஒரு மாயையை ஏற்படுத்தும். அதை பின் தொடர்ந்து நாமும் மாறிப் போகிறோம்.

வேறுபாடுகளின்றி சமத்துவத்தை நிலைநாட்ட சீருடைகள் அணியும் முறை கண்டறியப்பட்டது. பள்ளிகளில் மட்டுமல்லாமல், தொழில் சார்ந்த சீருடைகளும் அணியப்படுகின்றன. ஒரு நிறுவனத்தின், தொழிலின் அடையாளமாக விளங்கும் சீருடையில் சிறிய மாற்றம் கொண்டு வந்தாலும் புதுமையைப் புகுத்திவிட்டது போன்ற தோற்றத்தைத் தந்து புத்துணர்வைக் கொடுக்கும்.

புறத்தோற்றம், அகத்தோற்றத்தை பிரதிபலிக்கும் அதே சமயத்தில் புறத்தோற்ற மாற்றம் / திருத்தத்தின் விளைவு ஒரு மனிதனின் குணாதிசயங்களிலும் பிரதிபலிக்கிறது.


பிரத்யுக்ஷா பிரஜோத்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆடைமாற்றம் ஆள் மாற்றத்திற்கான முதல் படி”

அதிகம் படித்தது