மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆட்டம் காணும் அமெரிக்க ஆன்மிகம்

தேமொழி

Dec 20, 2014

அமெரிக்கத் தலைவர்கள் யாவரும் பொதுக்கூட்டங்களில் பேசும் பொழுது “காட் ப்ளஸ் அமெரிக்கா” (God Bless America) என்று கூறாமல் தங்கள் உரையை முடிப்பதில்லை.

அமெரிக்காவின் மதக்கொள்கை:

aattam kaanum america2அமெரிக்காவின் பணங்களிலும் காசுகளிலும் “In God We Trust” என்ற வாசகம் கடவுள் மீது அமெரிக்கர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த நம்பிக்கையைப் பறைசாற்றும்.காசுகளில் இந்த சொற்றொடர் 1864 ஆம் ஆண்டிலிருந்தே அச்சிடப்படும் வழக்கம் இருந்தாலும், “நாம் கடவுளை நம்புவோம்” என்பது 1956 ஆம் ஆண்டுதான் அமெரிக்க நாட்டை அடையாளப்படுத்தும் கொள்கையாகவும் அரசால் அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் இருந்து சுதந்திரம் பெற்ற அமெரிக்காவின் கொள்கை முதலில் “E pluribus unum” என்பதாகத்தான் இருந்தது. இந்த இலத்தீன் மொழிச் சொற்றொடர் “பலரில் ஒருவர்” (Out of many, one) என்ற ‘இறையாண்மையுடன் தொடர்பு அற்ற’ ஒரு சொற்றொடர். பொதுவாக இது பல மாநிலங்கள் இணைந்து அமெரிக்கா என்ற ஒரு நாடாக உருவெடுத்ததைத்தான் குறித்தது. ஆனால் காலப்போக்கில், உலகின் பற்பல இடங்களில் இருந்து குடிபெயர்ந்த பல்வேறுபட்ட பின்னணியைக் கொண்ட மக்களும் தங்கள் வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையாக அமெரிக்காவின் குடிமக்களாக மாறுவதைக் குறிப்பதாக அறியப்பட்டது.   அமெரிக்கர்கள் “மெல்டிங் பாட்”(melting pot) என்று தங்கள் “வேற்றுமையில் ஒற்றுமை” கொண்ட அமெரிக்கக் கலாச்சாரத்தைப் பெருமையுடன் நினைப்பதைக் குறிப்பதாகவும்தான் புரிந்து கொள்ளப்பட்டது. E pluribus unum என்பதை மாற்றி, அமெரிக்கர்களின் கடவுள் நம்பிக்கையைப் பறைசாற்றும் புதிய சொற்றொடர் சென்ற நூற்றாண்டு முதல்தான் வழக்கத்தில் வந்திருக்கிறது.

மதசுதந்திரம் வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்த மக்களால், புதுஉலகம் என்று அழைக்கப்பட்ட அமெரிக்க மண்ணில் மதச்சார்பற்ற நாடாக உருவாக்கபட்டது அமெரிக்கா என்னும் நாடு. நாட்டின் அரசியலமைப்புச் சட்டமும் (constitution) அதையே வலியுறுத்தவும் செய்கிறது.   ஆனால் மதசார்பற்ற என்பதை குறிப்பிட்டுக் கொண்டாலும், In God We Trust என்ற சொற்றொடர் மத நம்பிக்கை அற்றவர்களை புண்படுத்தும் என்று அமெரிக்க மக்கள் இப்பொழுது கருதுவதில்லை. மேலும், ‘இன் காட் வீ டிரஸ்ட்’ என்பதும் பெரும்பாலும் கிறிஸ்துவ மதம் என்பதற்கானது என்ற புரிதல்தான் மக்களிடம் அதிகம்.

aattam kaanum america5குடியரசுத் தலைவர் ஒபாமா மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் அவர் பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் இந்த ஆண்டின் (2014) முற்பகுதியில் ஒரு வதந்தியையும் கிளப்பிவிட்டார்கள். அந்த வதந்தியின்படி ‘இன் காட் வீ டிரஸ்ட்’ என்பது அமெரிக்க அரசியலமைப்பிற்கு எதிரான தவறான ஒரு கொள்கை என்றும், அதனால் இனி அந்த வாசகம் பணம் காசுகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று ஒபாமா உத்தரவிட்டதாகவும் பொய்யுரை பரவியது. அதை உண்மை என்று நம்பி சூடான விவாதங்களிலும் சிலர் இறங்கினர். ஒபாமா கிறிஸ்துவர்களுக்கு எதிரானவர், அவர் கிறிஸ்துவர் அல்ல, இஸ்லாம் அவரது பின்புலம் என்பது போன்றக் கருத்துக்களைப் பரவவிட்டுக் கொண்டிருக்கும் அவரது அரசியல் எதிரிகளின் பல செயல்களில் இதுவும் ஒன்று. அந்த அளவிற்கு அமெரிக்கா என்பது ஒரு கிறிஸ்துவ நாடு என்ற எண்ணமே மக்களிடம் குடி கொண்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் உரைப்பதைப் பற்றிய சிந்தனைகள் மக்களிடம் தோன்றுவதில்லை.

அமெரிக்க கொடிவணக்கம்:

aattam kaanum america6“தி ப்லெட்ஜ் ஆஃப் அல்லீஜென்ஸ்” (The Pledge of Allegiance) என்றழைக்கப்படும் கொடிவணக்க உறுதிமொழியும் கடவுள் நம்பிக்கையைக் குறிப்பிடும். “one nation under God, indivisible, with liberty and justice for all” என்று கடவுளின் கீழ், ஒன்றுபட்ட நாடாக, பிரிக்கமுடியாத நாடாக, குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திரமும் நீதியும்வழங்கும் நாடான அமெரிக்காவின் கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுவதாக அந்த உறுதி மொழி குறிக்கும்.

“ஃபிரான்சிஸ் பெல்லாமே” (Francis Bellamy, 1855-1931) என்பவர் எழுதிய இந்த உறுதிமொழியின் மூலப்பதிவு கடவுள் பற்றி எதையுமே குறிப்பிடவில்லை.

“I pledge allegiance to my Flag and the Republic for which it stands, one nation, indivisible, with liberty and justice for all” என்றே அவரால் எழுதப்பட்டது.

“அமெரிக்காவின் கொடி” (the Flag of the United States of America) என்ற சொற்றொடர் 1923 ஆம் ஆண்டு உறுதி மொழியில் இணைக்கப்பட்டு கீழ் வருமாறு மாற்றப்பட்டது.

“I pledge allegiance to the Flag of the United States of America and to the Republic for which it stands, one nation, indivisible, with liberty and justice for all.”

குடியரசுத் தலைவர் ஐசன்ஹோவேர் காலத்தில், அமெரிக்காவிற்கும், கம்யூனிசக் கொள்கைகள் கொண்ட ரஷ்யாவிற்கும் ஏற்பட்ட பனிப்போரின் விளைவால், அவர் அமெரிக்க காங்கிரசை “அண்டர் காட்” (under God) என்பதையும் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் உறுதிமொழியை உருவாக்கிய ஃபிரான்சிஸ் பெல்லாமேயின் மகள் இந்த மாற்றத்தை எதிர்த்தார்.அந்த எதிர்ப்பு பொருட்படுத்தப்படவில்லை, 1954 ஆம் ஆண்டு கடவுள் பெயரும் இணைக்கப்பட்டு பின்வருமாறு கொடிவணக்க உறுதிமொழி மாற்றப்பட்டது.

“I pledge allegiance to the flag of the United States of America, and to the republic for which it stands, one nation under God, indivisible, with liberty and justice for all.”

aattam kaanum america4அரசாங்கமும், மதமும் இணையக் கூடாதவை (Separation of church and state) என்ற அமெரிக்காவின் மதச் சார்பற்றக் சட்ட அமைப்புக் கொள்கைக்குப் புறம்பானது ‘இன் காட் வீ டிரஸ்ட்’, ‘ஒன் நேஷன் அண்டர் காட்’ போன்ற சொற்றொடர்கள் என்று பலமுறை நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டு, அந்த வழக்குகளும் தோல்வியைத் தழுவியே வந்திருக்கிறது. மக்கள் சடங்குகள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை மதிக்கும் பொருட்டு அவற்றை அனுமதிப்பதில் தவறில்லை என்று நீதிமன்றங்கள்வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில், அமெரிக்காவின் கொள்கையில் இருந்து இவ்வாறான மாறுபட்ட நடவடிக்கைகளை அரசு அனுமதித்து வருகிறது.

எனக்குக் கடவுள் மதம் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லை, எனக்கு எந்த மதமும் சம்மதம், நான் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதில்லை என்று கூறும் எவரும் அமெரிக்கத் தலைவர் ஆக முடியாது என்பதுதான் கடவுள் நம்பிக்கையைப் பொறுத்தவரை தற்கால அமெரிக்காவின் மதநம்பிக்கையின் நிலை. ஆனாலும் இந்த நிலை வெகு வேகமாக, விரைவாக மாறுவதையும் ஒரு புதிய ஆய்வறிக்கையை முன் வைக்கிறது.

“பார்னா க்ரூப்” (Barna Group) என்ற நிறுவனம் கடந்த இருபது ஆண்டுகளாக 1994 முதல் அமெரிக்கர்களின் மதநம்பிக்கையைப் பற்றி மக்களிடம் நேர்காணல்கள், பிற தரவுகள் ஆகியவற்றை சேகரித்து மக்களின் கடவுள் நம்பிக்கையைப் பற்றியக் கருத்துக்கணிப்பை செய்து வருகிறது. இந்த மாதம் (டிசம்பர் 10, 2014 அன்று) பார்னா க்ரூப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்கர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தாலும் தற்காலத்தில் மதநம்பிக்கை கொண்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதையும்; இளைய தலைமுறையினர் முந்தைய தலைமுறையினரைப் போன்று ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை கொள்ளாமலும், மதப்பற்று அற்றவர்களாகவும் இருப்பதைக் காட்டுகிறது. தேவாலயம் செல்வது, விவிலியம் படிப்பது போன்ற பழக்கங்கள் குறைந்து வருவதையும் தெரிவிக்கிறது.

கடந்த இருபது ஆண்டுகளுக்குள் மூவரில் ஒரு அமெரிக்கர் கடவுள் நம்பிக்கை அற்றவர் என்ற அளவில் இருந்த நிலை மாறி, இப்பொழுது இருவரில் ஒருவர் கடவுள் நம்பிக்கை அற்றவர் என்ற நிலையை நெருங்கும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டதை இந்த அறிக்கை காட்டுகிறது.

இருபதாண்டுகளுக்கும் முன்னர், 1990 களில் 30% மக்கள் தேவாலயம் செல்வதில்லை என்ற நிலை இருந்தது. அடுத்து வந்த பத்தாண்டுகளில், அதாவது 2000 ஆண்டுகளின் முற்பகுதியில் இந்த விழுக்காடு 33% என உயர்ந்தது. அடுத்து வந்த பத்தாண்டுகளில், இன்றைய நிலையில் அது 43% என்ற நிலையை வெகு வேகமாக எட்டி இருக்கிறது.

என்றுமே தேவாலயம் சென்றதில்லை என்போர் 10%

ஒருகாலத்தில் கடவுள் நம்பிக்கை இருந்ததுண்டு, ஆனால் இப்பொழுது மதம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்போர் 33%

அவ்வப்பொழுது, எப்பொழுதாவது தேவாலயம் செல்வதுண்டு என்போர் 8%

மாதம் ஒருமுறை தேவாலயம் செல்வதுண்டு என்போர் 49%

என்பது அந்த ஆய்வில் பங்கு பெற்றோரின் கூற்று.

இவ்வாறு மதம், கடவுள் நம்பிக்கையைக் கைவிட்ட அமெரிக்கர்களை மட்டும் தனியே பிரித்து ஒரு நாடாக உருவாக்குவோமானால், தர வரிசையில் அது உலகில் மக்கட்தொகை அளவில் எட்டாம் இடத்தை பிடிக்கும் அளவிற்கு மக்கட்தொகை உள்ளவர்கள் தற்காலத்தில் தேவாலயங்களில் நாட்டமின்றி இருப்பது தெரிகிறது. கனடா, தென் கொரியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளை ஒட்டு மொத்தமாக சேர்த்தாலும் அதற்கும் மேல் அதிக எண்ணிகையில் உள்ளது ஆன்மிக நாட்டமற்ற அமெரிக்கர்கள் எண்ணிக்கை. அதாவது 156 மில்லியன் வயதுவந்த பெரியவர்கள் இந்தப்பிரிவில் அடங்குகிறார்கள்.

சிலசமயம் தேவாலயங்களில் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போன்ற தோற்றம் உருவாவதும் மத நம்பிக்கையுள்ளோர் ஒரு தேவாலயத்தில் இருந்து மற்றொரு தேவாலயத்திற்கு மாறுவதால் தோன்றும் தோற்றப்பிழை, எனவே எண்ணிக்கை உயர்வு போல் தரும் தோற்றம் வேறு மதத்தினர் கிறிஸ்துவர்களாக மாறுவதால் ஏற்படுவதில்லை.

இவ்வாறு ஆன்மிகவழியைப் புறக்கணிக்கும் மக்கள் யாவர் என்று பார்க்கும் பொழுது அவர்கள் பெரும்பாலும் ஆணாக, வெள்ளையர் இனத்தவராக, திருமணமாகாதவராக, உயர்நிலைப்பள்ளிப் படிப்பையும் முடிக்காதவராக, நாட்டின் மேற்கே பசிபிக் கடலோரம் வசிப்பவராகவே இருக்கிறார்கள். இவர்களின் வயது 13 இல் இருந்து 49 வயது வரை (அல்லது 50 வயதிற்கும் குறைவான) வயதுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். குறிப்பாக இளைய தலைமுறையினர் மாறிவருவதும், ஆன்மிக நாட்டமின்றி இருப்பதையும் இதனால் அறிந்து கொள்ளலாம். முப்பது வயதிற்குபட்டோரில் 50% நாத்திகராகவோ, ஏதோ ஒரு கடவுள் அதற்கென்ன? என்பது போன்ற விட்டேத்தியான எண்ணப்போக்குடன் கிறிஸ்துவமதத்தின் மீது நாட்டமற்றவராகவும் இருக்கிறார்கள். அத்துடன் ஆன்மிக நாட்டமற்ற பெண்களின் எண்ணிக்கையும் தற்பொழுது அதிகரித்து வருகிறது.

aattam kaanum america7இவ்வாறு ஆன்மிகத்தில் நாட்டமில்லாதவர்களிலும் ஒரு சிலர் விவிலியம் நூலை வைத்திருப்பதும், தேவாலயம் செல்வதில்லை என்போரிலும் கூட ஒரு சிலர் வாரத்தில் ஒருமுறை கடவுளை நினைத்து பிரார்த்திப்பதுண்டு என்று சொல்வதும், சில சமயம் குடும்பத்துடன் அமர்ந்து தொலைக்கட்சியில் வரும் மதத்தொடர்பான சில நிகழ்ச்சிகளை முடிந்தால் பார்ப்பதுண்டு, மதம் மீது ஆர்வம் இல்லையே ஒழிய மதம் மீது வெறுப்பொன்றும் கிடையாது என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளதால் இவர்களை கிறிஸ்துவமதத்தில் நாட்டம் கொள்ள வைத்து, தேவாலயத்திற்கு வருமாறு செய்யலாம், கடவுள் நம்பிக்கையை துளிர்க்கச் செய்ய தகுந்த நடவடிக்கை மேற்கொண்டால் இவர்களை ஆன்மிகர்களாக மாற்ற முடியலாம் என்று இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஜார்ஜ் பார்னா, டேவிட் கின்மன் (George Barna & David Kinnaman) ஆகியோர் தாங்கள் எழுதிய “சர்ச்லெஸ்: (Churchless) என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள். ஆனாலும் தேவாலயத்தைப் புறக்கணிப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தேவாலயத்திற்கு வந்து வழிபடுவதினால் என்ன பெரிய பலன் என்ற நோக்கைக் கொண்டிருப்பது கவலை தருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

தகவல்கள் தந்த கட்டுரைகள்:

Churchless: Understanding Today’s Unchurched and How to Connect with Them

by George Barna & David Kinnaman

https://www.barna.org/component/virtuemart/books/886-detail?Itemid=0

10 Facts About America’s Churchless

https://www.barna.org/barna-update/culture/698-10-facts-about-america-s-churchless#.VIvf2SvF9IM

Obama To Remove “In God We Trust” From All Currency Beginning October 1st

http://nationalreport.net/obama-to-remove-in-god-we-trust-from-all-currency/#sthash.hBJmS9at.dpuf

In God we trust

http://en.wikipedia.org/wiki/In_God_we_trust

The Pledge of Allegiance

http://www.ushistory.org/documents/pledge.html


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆட்டம் காணும் அமெரிக்க ஆன்மிகம்”

அதிகம் படித்தது