மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆணவக் கொலை அழைப்பு மையம்

சாகுல் அமீது

Sep 3, 2016

Siragu aanavakkolai2

வணக்கம் ஆணவக்கொலை அழைப்பு மையம்.

என் பெயர் சிவப்பி. தங்களுக்கு எப்படி உதவ முடியும்?

வணக்கம் அம்மா. நான் மாடப்புரத்தில் இருந்து காசி 112 பேசுகிறேன் அம்மா.

சிவப்பி: வணக்கம் காசி 112 ஐயா. உங்கள் பெயரே காசி 112 ஆ? புதிய பெயர் முறையாக இருக்கின்றதே.

காசி 112: காசி தான் அம்மா எனது பெயர், 112 எனது சாதி. இப்பொழுது சாதி பெயரை முகநூல் மற்றும் வாட்சப்பில் வைத்தால் சில அதிகப்பிரசங்கிகள் வம்பிழுக்கின்றார்கள் என்று நாங்கள் சாதிகளை எண்களாக எழுதி வருகின்றோம். நீங்கள் கூகுளில் சாதி எண் கொடுத்தால் சாதி பெயர் மற்றும் ஆண்ட வரலாறு எல்லாம் பெரிய தகவல்கள் மூலம் ஆராய்ந்து எளிதான தகவலாகக் கிடைக்குமே.

சிவப்பி: நன்றி அய்யா. தங்களால் புதிய செய்தியை அறிந்துகொண்டேன். சொல்லுங்கள் ஐயா உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?

காசி 112: எங்க ஊர் நம்பியார் என்பவர்தான் உங்கள் எண் கொடுத்தார். ஒரு கொலை செய்ய வேண்டும் அம்மா.

சிவப்பி: ஓ மாடப்புரத்து நம்பியாரா? அவர் பல புதிய வாடிக்கையாளர்களை எங்களுக்கு தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார். மிகவும் மரியாதைக்குரிய கொலையாளி அவர். உங்களுக்கு யாரை கொலை செய்ய வேண்டும்.

காசி 112: பெயர் ஏஞ்செலீனா ஜோலி, 68.

சிவப்பி: ஏஞ்செலீனா ஜோலி ஆ? சாதி 68 ஆ? வழக்கமாக சொந்த சாதி ஆளைத்தானே கொலை செய்ய கேட்பீர்கள். இப்போ வேற சாதி எண் 68 ஆளை கொலை செய்யச்சொல்கிறீர்கள்.

காசி 112: அம்மா அந்த 68ங்கிறது வயது. சாதி எங்க சொந்தம் தான். கொலை செய்யப்பட்டபிறகு நாளிதழ் செய்தியில் எழுதுவதற்கு வசதியாக பெயருடன் வயதை சேர்த்துக்கூறினேன்.

சிவப்பி: (இடது புறம் திரும்பி) அப்பா! முருகா ஒரு இரத்த அழுத்த மாத்திரை கொடு. நீங்கள் மேலே சொல்லுங்கள் ஐயா. 68 வயது பாட்டியை எதற்கு ஆணவக்கொலை செய்யச்சொல்கிறீர்கள்?

காசி 112: இது ஆணவக் கொலை இல்லை அம்மா. சொத்தைக் கைப்பற்ற கொலை.

சிவப்பி: உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா? நாங்கள் ஆணவக் கொலை மட்டும் தான் செய்வோம் என்று தெரியாதா? நம்பியார் ஐயா உங்களிடம் எங்களைப்பற்றி தெளிவாகக் கூறவில்லையா?

காசி 112: கூறினார் அம்மா. இருந்தாலும் காசு கொடுத்தால் கொலை செய்யப் போகின்றீர்கள் என்ற எண்ணத்தில் அழைத்தேன்.

சிவப்பி: நாங்கள் என்ன பரிகாரமா செய்கிறோம் எல்லா காரணத்திற்கும் செய்வதற்கு. ஆணவக் கொலை செய்கிறோம் ஐயா. எங்களுக்கென்று ஒரு இது இருக்கின்றது. தயவு செய்து அழைப்பை துண்டியுங்கள்.

சிவப்பி: (இடதுபுறம் திரும்பி) முருகா, இரண்டு மாத்திரையா சேர்த்துக்கொடு. தினம் பத்து பேர் சொத்துக் கொலை என்று கூப்பிடுகின்றார்கள், அறுபது பேர் கள்ளத்தொடர்பு கொலை என்று கூப்பிட்டு கழுத்தை அறுக்கின்றார்கள். தெளிவாக ஆணவக்கொலை அழைப்பு மையம் என்று பெயரிலே வைத்திருக்கின்றோம். நாட்டில் ஒருத்தருக்கும் அறிவில்லை.

முருகா: மாத்திரையை சாப்பிடுங்கள் அக்கா. தெரியாமல்தான் கேட்கிறேன். நாம் ஏன் மற்ற காரணத்திற்கு கொலை செய்யக்கூடாது?

சிவப்பி: சொத்துப்பிரச்சினைக்கு கொலை செய்தால் எந்த ஊடகத்திலும் வராது. கள்ளக்காதல் கொலை சந்தையும் தொடர்ந்து சரிந்து வருகின்றது. இரண்டாவது பக்கத்தில் இருந்து தற்போது கடைசி பக்க செய்தியாகி விட்டது. தொலைக்காட்சி ஊடகங்கள் கள்ளக்காதலை, தொடர்நாடக நேரங்களில் ஒளிபரப்புவதால் செய்தி நேரத்தில் காட்டுவதில்லை.

முருகா: நாம் செய்யும் கொலைகள் ஊடகங்களில் வர வேண்டும் என்று என்ன அவசியம் அக்கா. காசு தானே நமக்கு முக்கியம்.

சிவப்பி: வியாபாரம் புரியாத ஆளாக இருக்கின்றாயே முருகா. உனக்கு பெட்டிக்கடை வைப்பதற்கும் பென்ஸ் வாகனக்கடை வைப்பதற்கும் வாய்ப்பிருந்தால் நீ என்ன செய்வாய்?

முருகா: இதிலென்ன சந்தேகம். பென்ஸ் வாகனம் விற்கும் கடைதான் வைப்பேன்.

Siragu aanavakkolai1

சிவப்பி: அதே மாதிரி தான் முருகா. எந்தக்கொலைக்கு அதிக செலவு ஆகின்றதோ அந்தக்கொலைக்குத்தான் நம்மால் நிறைய இலாபம் வைக்க முடியும். கொலைக்கு ஆகும் செலவில் முக்கால் வாசி செலவு ஊடகச் செலவு தான். உதாரணத்திற்கு சமீபத்தில் நாம் செய்த சுவேதா கொலையில் ஊடகச்’ செலவு மட்டுமே ஒன்றரை கோடி ரூபாய். முதலில் நல்லா வாட்ட சாட்டமா ஆங்கிலம் எல்லாம் பேசத் தெரிந்த காசுமீர் தீவிரவாதி கொலை செய்தால் தான் எங்கள் அந்தஸ்திற்கு சரியாக இருக்கும் என்றார்கள். சரி என்று எண்பது இலட்சம் செலவு செய்தோம். பின்னர் இல்லை எங்களுக்கு தேவாங்கு மாதிரி ஒல்லியா, கருப்பா, குள்ளமா நமக்கு எல்லா வழியிலும் அடங்கி போகின்ற மாதிரி ஆள் தான் கொலையாளியாக வேண்டும் என்றார்கள். அதற்கு தனியா நாற்பது இலட்சம் செலவு செய்தோம். வாடிக்கையாளர் பணத்தைப்பற்றி கவலைப்படாதீர்கள் என்னுடைய சின்ன வீட்டு பெயரில் உள்ள பெரிய வீட்டை உங்கள் நிறுவனத்திற்கு எழுதிக்கொடுத்து விடுகின்றேன் என்று கூறி இருக்கிறார்.

முருகா: புரிகின்றது அக்கா. ஆனால் நாம் வரும் வாய்ப்புகளைத் தவிர்த்து கொண்டே இருந்தால், மாத கடைசியில் இலக்கை அடைய முடியாது, பின்னர் தலைவர் நம்மை வறுத்தெடுப்பார்.

சிவப்பி: நாம் என்ன செய்வது முருகா. நாம் விற்கும் சேவை அப்படி.

முருகா: நாம் ஏன் அக்கா தொலைக்காட்சிகளில் விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளர்களை கவரக்கூடாது?

சிவப்பி: நாம் என்ன 60 கிலோ மீட்டர் தூரத்தை நடக்கின்ற தூரம் என்றோ, தீராத வியாதியை தீர்ப்போம் என்றோ, படிக்காமலே வெளிநாட்டில் வேலை என்றோ ஏமாற்றும் தொழிலா செய்கின்றோம் நேரடியாக விளம்பரம் கொடுப்பதற்கு. நாம் நேர்மையாக கொலை செய்து சம்பாதிக்கின்றோம். இருப்பினும் நாம் மறைமுகமாக தொலைக்காட்சி, தினசனி, தினமலம், பகடன், அமுதம், வக்கிரன் என்று அனைத்து ஊடகங்களிலும் பரப்புரை செய்து கொண்டேதான் இருக்கின்றோம். குட்டி சுட்டி சாதி தலைவர்களை வைத்து “எங்கள் வீட்டுப்பெண் ஓடிப்போயிருந்தால் இந்நேரம் ….”, “எங்கள் சமூகப் பெண்ணை கை வைத்துப் பார் … ” அப்படி இப்படி என்று தம் கட்டி பேசுகின்றதைப் பார்த்திருப்பாயே. அவை எல்லாம் நமது விளம்பரங்கள் தான். ஒரு சில திரைப்படங்கள் கூட இதற்காக எடுத்திருக்கின்றோம்.

முருகா: இருப்பினும் முழு திருப்தி இல்லை அக்கா. காவாலி படம் மாதிரி விளம்பரப்படுத்தனும் அக்கா.

சிவப்பி: பெரிய பட்ஜெட்டில் விளம்பரப்படுத்தும் அளவிற்கு நமக்கு பரவலான சந்தை கிடையாது முருகா. அனைத்துப் பொருள்களுக்கும் சென்னைதான் பெரிய சந்தை, ஆனால் நமக்கு சென்னையில் குறைந்த வாய்ப்புதான். கிழக்கு மற்றும் தென் மாவட்டங்களில் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அங்கு பரம்பரைக்கு ஒருத்தர் கொலை நுட்பம் கற்றவராக இருப்பதால், நம்மை போன்ற நிறுவனத்தை நாட அவசியம் இல்லாமல் போய்விடுகின்றது. அவர்கள் அனைவரும் படித்து வேலைக்குப்போகும் தலைமுறையாக மாறினால் நமக்கு வாய்ப்பு கூடும். தற்போது மேற்கு மாவட்டங்கள் ஓரளவிற்கு நல்ல சந்தையாக இருக்கின்றது.

முருகா: நமக்கு வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் எல்லாம் கிடைக்க மாட்டார்களா அக்கா?

சிவப்பி: மேற்கு மாவட்டங்களை விட நமக்கு அதிகமான வாய்ப்பு அமெரிக்காவில் இருந்து தான் வருகின்றது. பலர் அங்கு வந்து ஆன்சைட்டில் பணி செய்யும்படி கூறுகின்றார்கள். நம்ம ஆட்களுக்கு விசா சிக்கல் இருக்கின்றது. சிலர் நாங்கள் பெண்ணை ஊருக்கு அனுப்பி வைக்கின்றோம், அங்கு வைத்து காரியத்தை முடித்துக்கொடுங்கள் என்று கேட்டார்கள். சரி என்று தகவல்களைப்பெற்று முன்னேறினால், அனைத்துப் பிள்ளைகளும் அமெரிக்க பிரஜைகளாக இருக்கின்றார்கள். இவர்கள் கொடுக்கும் பத்தாயிரம் டாலருக்கு அமெரிக்கக் காவல் நிலையம், நீதிமன்றம் என்று எல்லாம் அலைய முடியுமா என்ன.

அடுத்த அழைப்பு மணி அடிக்கவே, சாமியே இந்த அழைப்பாவது நல்ல சாவு மணியாக இருக்கட்டும் என்று வேண்டிக் கொண்டே பேசத் தொடங்கினார் சிவப்பி “வணக்கம் ஆணவக்கொலை அழைப்பு மையம் ….”


சாகுல் அமீது

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆணவக் கொலை அழைப்பு மையம்”

அதிகம் படித்தது