மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆண்களே நுழையத் தயங்கும் சதுப்புநிலம் மற்றும் கடல் ஆராய்ச்சிகளில் அசத்திக் கொண்டிருக்கிறார் ஒரு தமிழ்ப்பெண்!

சா.சின்னதுரை

Sep 12, 2015

sadhuppu nilam4சுற்றுச்சூழலியல் மற்றும் உயிரியல் மேம்பாட்டுத்துறை நிபுணர்; குஜராத் மாநில அரசின் சூழலியல் ஆணையத்தில் சதுப்புநில மேலாளர் என்ற பொறுப்பில் அமர்ந்து 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்தி மரக்கன்றுகள் நடுவது மற்றும் மேம்பாட்டு பணிகளை கவனிப்பது; தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் இயற்கை வள மேம்பாடு மற்றும் கடலோர பாதுகாப்பு போன்ற துறைகளில் ஈடுபாடு; குஜராத் பாலைவன சூழலியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘அரிய மற்றும் சுருங்கி வரும் உயிரினங்கள்’ மற்றும் சதுப்புநில காடுகள் ஆராய்ச்சி; சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆராய்ச்சி; Eco Balance Consultancy நிறுவனர்..

அத்தனை பொறுப்புகளுக்கும் பின்னால் அடக்கமாகவும் அமைதியாகவும் சாதித்து நிற்கிறார் தெய்வா ஆஸ்வின் ஸ்டான்லி. அவருடன் ஒரு நேர்க்காணல்..

உங்களைப்பற்றி?

தெய்வா ஆஸ்வின் ஸ்டான்லி: அப்பா ஸ்டான்லி சுபமணி, உடற்கல்வி ஆசிரியராக இருந்தவர். அம்மா அமலா பேபி, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்தவர். இருவரும் இப்போது இல்லை. ஒரு தங்கை, ஒரு தம்பி. இவ்வளவுதான் என் குடும்பம்.

தூத்துக்குடி புனித மேரி கல்லூரியில் தாவரவியலில் இளங்கலை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தாவரவியலில் முதுகலை, பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரியல் ஆராய்ச்சி நிலையத்தில் எம்.பில்,. தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் ஆண்கள் கல்லூரியில் கடல் உயிரியல் பாடத்தில் முனைவர் படிப்பு. சுமார் 4 ஆயிரம் ஆண்கள் மத்தியில் நான் ஒரே பெண்ணாக 5 ஆண்டு காலம் இங்கு பயின்றது ஒரு புதுமையான அனுபவம்.

சதுப்பு நிலம் மற்றும் கடல்சார் ஆராய்ச்சியில் ஆர்வம் எப்படி வந்தது?

தெய்வா ஆஸ்வின் ஸ்டான்லி: சின்ன வயதிலிருந்தே வனம் மற்றும் கடல் பற்றிய விஷயங்கள் என்னை மிகவும் ஈர்த்தது. அதுதொடர்பான தகவல்களை விரும்பி படிப்பேன். அதனால்தான் +1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, வனம் மற்றும் கடல் தொடர்பான பாடப்பிரிவுகளையே தேர்ந்தெடுத்தேன். எந்தவொரு சூழலும் என் ஆர்வத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டுமென நினைப்பேன். அதனால்தான் படிப்பு முதல் பணி வரை எல்லாமே என் ஆர்வம் சார்ந்ததான வனம் மற்றும் கடல் ஆராய்ச்சிகள் என அமைந்துவிட்டன.

சூழலியலில் சதுப்புநிலக் காடுகளின் பயன்கள் என்ன:

தெய்வா ஆஸ்வின் ஸ்டான்லி: கடலுக்கும், நிலத்துக்கும் இடையே உள்ள நிலங்களே சதுப்புநிலக் காடுகள் ஆகும். இவை அதிக வளம்மிக்கவை. இந்தியாவில் தற்போது 4,474 கி.மீ மட்டுமே சதுப்பு நிலங்கள் உள்ளன. மனித நடவடிக்கைகள் மற்றும் தட்பவெப்பநிலை மாற்றம் காரணமாக பெரும்பகுதி சதுப்புநிலக் காடுகள் அழிந்துவிட்டன; அழிந்து வருகின்றன.

சதுப்புநிலக் காட்டு மரங்களின் வேர்கள், நீரோட்டத்தை மிதப்படுத்தி, கடலலைகளால் உண்டாகும் நில அரிப்பைத் தடுக்கின்றன. நீர் மற்றும் நில வாழ் உள்ளிட்ட பல்வேறு பல்லுயிரினங்களின் புகலிடமாக திகழ்கிறது. வழிந்தோடும் நீரை உறிஞ்சி, அலையாத்தி காடுகள் நிலத்தை, சூறாவளி, அலைகள் மற்றும் வெள்ளத்திலிருந்து காக்கின்றது. இந்தக்காடுகள் மாசுக்களை வடிகட்டி, நீரின் தரத்தை உயர்த்துகின்றன. தெளிந்த நீர் கடலுக்குள் ஓடுவதால் பவளப்பாறை சார்ந்த சூழலமைப்பு செழிக்கிறது. அலையாத்தி காடுகள் கடல் வாழ் உயிரினங்களுக்கு சத்தான உணவையும் உற்பத்தி செய்கின்றன. அலைகளால் இந்த உணவு ஆழ் மட்டத்தில் உள்ள உயிரினக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மீனவனுக்கு அலையாத்தி இல்லையெனில் மீனும் இல்லை.

சதுப்புநிலக் காட்டுப் பயணங்கள் ஆபத்து நிறைந்ததாயிற்றே?

sadhuppu nilam2தெய்வா ஆஸ்வின் ஸ்டான்லி: உண்மைதான். சதுப்பு நிலங்கள் என்பவை அழகான, சுவாரஸ்யமான, சற்று கடினமான சுற்றுச்சூழல் கொண்டவை. சுற்றி தண்ணீர் இருக்கும், ஆனால் குடிக்க முடியாது. சகதியும், தூசியும் கலந்திருக்கும். கைக்குட்டை போன்ற துணிகளைக் கொண்டு வடிகட்டி சூடுபண்ணிதான் அதைக் குடிக்க முடியும். திடீரென்று யானை, காட்டெருமை, சிறுத்தை போன்ற ஆபத்தான விலங்குகளை எதிரெதிர் சந்திக்க வேண்டியதிருக்கும். அந்த சமயத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன, செய்யக் கூடாதது என்ன என்பதை மனதில்கொண்டு விவேகமாக செயல்பட்டு மோதல்கள் இல்லாமல் கடந்து செல்ல வேண்டும்.

நம் பயணத்தில் திட்டமிடலுக்கு அப்பாற்பட்டு ஒரு ஏரியோ, ஆற்றையோ கடந்து செல்ல வேண்டியதிருக்கும். அந்தமாதிரி சமயத்தில் பல கி.மீ தூரத்திற்கு நீந்தியும், தண்ணீரில் நடந்தும் செல்ல வேண்டும். இன்னும் பூச்சிக்கடி, உடல்நலத்தில் மாற்றம், வழிதவறி செல்தல், சிக்கலான நிலப்பரப்புகள் என்று எத்தனையோ சவால்களும் ஆபத்துக்களும் நிறைந்துள்ளன. ஆனால் நான் இம்மாதிரி கடினமான சூழலை ரசித்து வாழ்கிறேன். அந்த ஆர்வம்தான் ஒவ்வொரு காட்டுப் பயணத்தின் முடிவிலும் ஒரு வெற்றியைத் தருகின்றது. புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள உதவுகிறது.

கடல்சார் ஆராய்ச்சியின் முக்கியத்துவம்?

தெய்வா ஆஸ்வின் ஸ்டான்லி: உலகின் மிகப்பெரிய சொத்து கடல். பல்வேறு வகையான உயிரினங்களின் வாழிடம் அது. நிலத்தில் கிடைக்காத பல அரிய வளங்கள் கடலில் இருக்கின்றன. பல்வேறு வகையான வர்த்தகத்துக்கும், போக்குவரத்துக்கும் கடல் பயன்படுகிறது. மீன்பிடித்தல், துறைமுகப் பணிகள், கப்பல் பணிகள், கடல் தொடர்பான சட்டங்கள், கடல் வணிக மேலாண்மை என கடலைச் சார்ந்த துறைகள் ஏராளம். தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு கடல் வளத்தையும் பாதித்து வருகிறது. உலகின் கடல் பறவைகளில் தொண்ணூறு சதவீதமானவற்றின் வயிற்றுக்குள் சிறிதளவில் ஆவது பிளாஸ்டிக் இருப்பதாகவும், பென்குயின் உட்பட அறுபது சதவீத கடல் பறவைகளின் குடலில் பிளாஸ்டிக் இருப்பதாகவும், சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆண்டுக்கு எட்டு மில்லியன் டன்கள் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் கடலில் கலக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த அனைத்து உலக நாடுகளும் முன்வரவேண்டும்.

சதுப்புநில ஆராய்ச்சியில் பெண்களின் பங்கு?

தெய்வா ஆஸ்வின் ஸ்டான்லி: இந்தத் துறையில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவு. பாதுகாப்பு, உடல் ஒத்துழைப்பு, குடும்பத்தினரின் சம்மதம், வித்தியாசமான களப்பணி ஆகியவை அவர்களுக்கு தடைக்கல்லாக தெரிகின்றது. ஆனால் அதனையும் தாண்டி ஆர்வத்தினால் சிலர் இப்போது வரத்துவங்கி இருக்கிறார்கள். அதேசமயம் வெளிநாட்டுப் பெண்கள் கடல் மற்றும் காட்டு ஆராய்ச்சியில் தனி முத்திரை பதித்து வருகிறார்கள்.

இயற்கை அன்னையைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாகக் கொண்டுபோய் சேர்க்கும் பொறுப்பு பெண்களுக்கும் உள்ளது. இயற்கையை நேசிக்கவும் நிர்வகிக்கவும் பெண்களின் பங்களிப்பு பெரிய அளவில் தேவை. அதை உணர்ந்து இன்னும் நிறைய பெண்கள் சுற்றுச்சூழலைக் பேண முன்வரவேண்டும்.

துறை சார்ந்த கட்டுரைகள், நூல்கள் எழுதி இருக்கிறீர்களா?

தெய்வா ஆஸ்வின் ஸ்டான்லி: துறை சார்ந்த கட்டுரைகள் பல எழுதியுள்ளேன். ஐக்கிய நாடுகள் வெளியீட்டின் மூலம் மியான்மர் நாட்டின் சதுப்புநில காடுகள் குறித்து மூன்று நூல்கள், காடுகள் மற்றும் மீன்வள மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றியும் எழுதியுள்ளேன். மேலும், ‘ஆண் உலகம்’, ‘உடல்’, ‘மனம்’, ‘ஆரோக்கியம்’ என்ற மருத்துவ புத்தகத்தையும் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளோம்.

உங்கள் சாதனைகளுக்குப் பின்னால்?

தெய்வா ஆஸ்வின் ஸ்டான்லி: இப்படியொரு அரிய துறையில் கால் பதிப்பதும் தொடர்வதும் சவாலாக இருந்த காலத்தில் என் ஆர்வத்துக்கு ஊக்கம் தந்து, உற்சாகப்படுத்தியது என் அம்மா. என் நம்பிக்கையை வலுவிழக்கச் செய்யும்படியான விமர்சனங்கள் நிறைய வந்தது. அதையெல்லாம் என்றுமே நான் பொருட்படுத்தியதில்லை. என் லட்சியமும், என் ஆர்வமுமே என்னை வழிநடத்துகின்றன. அனைத்து விமர்சனங்களையும் தைரியமாக எதிர்கொள்ள பழக்கப்படுத்தினார் என் அம்மா. என் வெற்றிக்கும் உயர்வுக்கும் பின்னணியில் என் அம்மா மட்டும்தான் இருக்கிறார்.

கலங்கிய கண்களுடன் நமக்கு விடை கொடுத்தார்..


சா.சின்னதுரை

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆண்களே நுழையத் தயங்கும் சதுப்புநிலம் மற்றும் கடல் ஆராய்ச்சிகளில் அசத்திக் கொண்டிருக்கிறார் ஒரு தமிழ்ப்பெண்!”

அதிகம் படித்தது