மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆத்மாநாம்: பிரக்ஞைபூர்வமான கவிஞன்

இல. பிரகாசம்

Jul 6, 2019

siragu-aathmaa-naam1(ஜூலை-6 ஆத்மாநாம் நினைவு நாள்)

தமிழில் அவ்வப்போது சில எதார்த்தமான மாற்றங்கள் நிகழும். அவை காலப்போக்கில்ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுச் செல்லும். கவிதையும் அப்படித்தான் தன் போக்கில் சுயமாய்நிகழ்ந்து “எதிர்பாரா” தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும். ஆத்மாநாம் என்ற நபரை நாம் கவிஞனாகஅறியலாம். ஆனால் அவர் ஏற்படுத்திய தாக்கம் தமிழ்ச் சூழலில் அவருடைய இறுதிக் காலத்திற்குப் பின்பும் நிலவி வந்தது.

ஆத்மாநாம் பிறந்தது, வளர்ந்தது, மொழி, இடம், சூழல் என்று பல வேறுபட்ட காரணிகளைக்கொண்டிருந்தாலும், தான் வளர்ந்த தமிழகத்திற்கும் அதன் இலக்கியத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்தவர். வேறொரு மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் அவர் தன்னுடைய மொழிவளத்தை தமிழுக்காகவே பயன்படுத்தினார் என்று சொல்லாம். மொழிபெயர்ப்புகள் சில வேறொரு மொழியிலிருந்து பல நல்ல கவிதைகளை தமிழுக்கு பெயர்த்து கொடுத்தவர் ஆத்மாநாம்.

கவிதைகள் குறித்தும் அவர் பிரக்ஞைப் பூர்வமாகவே செயல்பட்டு வந்தார். அவருடைய பல கவிதைகள் அவருடைய காலத்தில் பேசப்பட்டன. என்றாலும் பிற்காலத்தில் அவருடைய கவிதைகள் குறித்த  பேச்சுக்கள் எழாமல் போனது வியப்பாகவே உள்ளது. அவருடைய இருப்பை சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பது  அவருடைய பிரக்ஞை பூர்வமான கவிதைகள். தற்போது ஏறக்குறைய அவருடைய கவிதைகள் குறித்த பேச்சுகள் முற்றிலும் குறைந்து போய் உள்ளதாகவே காணப்படுகிறது. இருப்பினும் உரைநடை எழுத்தாளர்கள் கவிஞர்களை கொண்டாடுவது குறைந்தவிட்ட காலத்தில் ஆத்மாநாம்-க்கு இக்கட்டுரை.

கவிதை குறித்து ஆத்மாநாம்:

ஆத்மநாம் எழுதவந்த காலத்தில் இலக்கியத்தில் குழுசெயல்பாட்டு முறை நிலவிவந்தது. அவர் அதனைபெரிதாய் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இருப்பினும் அவர் சில குழுக்களோடு செயல்பட்டும் வந்துள்ளார் என்றுதெரியவருகிறது. அப்போது இயங்கிக் கொண்டிருந்த சிற்றிதழ்களான எழுத்து, நடை, கசடதபற, இதழ்களிலும் தொடர்ந்துஎழுதிவந்துள்ளார். பிறகு பிரம்மராஜன் நடத்திய மீட்சி இதழ், அவருக்கு சிறப்பிடத்தை அளித்து வந்துள்ளது. அவருடைய இலக்கிய மொழிபெயர்ப்பு பணியை தொடர்ந்து செய்து வந்துள்ளார். அவர் நடத்திய இதழ் ‘ழ’-வும் குறிப்பிடத் தகுந்த இதழாக சிலகாலம் வெளிவந்து கொண்டிருந்தது.

மற்றவர்களைப் போல் கவிதைகள் குறித்து பெரும்குழப்பத்தை ஆத்மாநாம் கொண்டிருக்கவில்லை. அவர் கவிதைகள் குறித்து கூறியது மிக எளிதாக உள்ளது. அதாவது சிக்கலான ஒன்றை எளிமைப்படுத்திக் கொண்டு உணர்வு ரீதியாக புரிந்து கொள்வது. ‘கவிதையை நல்ல கவிதை, கெட்ட கவிதை என்று பிரிக்க முடியாது. கவிதை,கவிதை அல்லாதது என்று மட்டுமே பிரித்தாள முடியும். கவிதை அல்லாதது அப்பட்டமாகத் தன்னைத் தானேவெளிக்காட்டிக் கொண்டுவிடுகிறது.” என்று கூறுகிறார்.

பிரம்மராஜன் நடத்திய நேர்காணலின் போது அவரிடம் கேட்பட்ட கேள்வி:

பிரம்மராஜன்: ஒரு நல்ல கவிதைக்கும் அதிலிருக்கும் (அப்ஸ்கியூரிட்டி) புரியாத தன்மைக்கும் சம்பந்தமிருக்கா?

ஆத்மாநாம்: இது கவிதையின் கருப்பொருளை பொறுத்த விசயம். ஒருவரின் அனுபவம் சிக்கலானதாக இருந்தால் கவிதைகள் இருண்மையுடன் கூடியதாக இருக்கும். சில சமயம் கவிதைகள் தெளிவாகவே வெளியாகவும் கூடும்.எனவே கவிதைக்கும் (அப்ஸ்கியூரிட்டி) புரியாத தன்மைக்கும் நேரடித் தொடர்பு இருக்க வேண்டிய அவசியமில்லை.

சில கவிதைகள் படித்தவுடன் புரிந்துவிடுவதால் அது வார்த்தைக்கு மீறிய பொருளைக் கொள்ளவில்லை அல்லது கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியாது. ஒரு கவிதை புரியவில்லை என்னும் பொழுதும் அந்தக் கவிதையில் குற்றமுள்ளது அல்லது வாசகனிடம் குற்றமுள்ளது என்றும் சொல்லமுடியாது. சிறிது காலம் தாழ்த்தித்தான் எதுவும்சொல்ல முடியும்.” என்று கவிதை குறித்து தன்னுடைய பார்வையை வெளிப்படுத்துகிறார்.அது காலத்தைப் பொறுத்தும் அமையும் என்றும் குறிப்பிடத் தவறவில்லை. ‘தெளிவு என்பது காலத்திற்கு காலம் மாறுபடும் ஒன்றாகையில் கவிதையும் மாறுபடும் வினோதமான வண்ணக் கலவையாக தன்னை ஆக்கிக் கொள்கிறது.”

தோற்றமும் கவிஞனும்:

கவிதையின் தோற்றம் எப்படிப்பட்டதாக இருக்கலாம் என்ற கற்பனையை அவர் கொண்டிருந்திருக்கிறார்.

அதனை தோற்றம் கவிதையில் காணமுடிகிறது.

                ‘ கற்பனை உலகில் தோன்றுவது கஷ்டம்

                அங்கும் சில உண்மைகள் இருக்கிறார்கள்

                ஒரு விஞ்ஞானியாக

                ஒரு தத்துவவாதியாக

                ஒரு சிற்பியாக

                ஒரு ஒவியனாக

                ஒரு கவிஞனாக

                ஒரு இசை ரசிகனாக

                ஒரு நாடக இயக்கக் காரராக

                ஒரு கூத்துக் காரராக

                ஒரு நாட்டிய ரசிகராக

                ஒரு திரைப்படக் காரராக

                இவற்றில் நாம் யார்?

                கண்டுபிடிப்பது கஷ்டம்”

ஆத்மாநாம் கற்பனை என்பது கற்பனையான ஒரு மேடையை கொண்டிருப்பதாக நம்புகிறாரா? என்ற கேள்வி எழுகிறது.

அதில் ஆத்மாநாம் கற்பனையானவைதான் மேடையில் நடிப்பதற்கு உகந்தவை என்று கருதுகிறாரா? என்ற கேள்வியும்எழுகிறது. கவிஞனுக்கு கற்பனை மேடையில் தானே எல்லாமே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அது அங்கே அக்கவிஞனால் சாத்தியப்படுத்தப்படுகிறது.

அவருடைய மற்றொரு கவிதையான ‘என்றொரு அமைப்பு” கவிதையை எடுத்துக் கொள்வோம். அதில் அவர்செய்முயன்றிருப்பது யாரும் எதிர்பாராத ஒன்றாக இருக்கிறது.

                ‘ எழும்புகளைப் பற்றி ஆய்வு செய்தவனுக்கு

                ஒன்று துள்ளியமாய்த் தெரிந்தது

                எழும்புகளும் நம்மைப் போலவே வாழ்கின்றன

                வீடுகளில் பொட்டல்களில் காடுகளில் வயல்வரப்புளில்.”

இது அவருடைய அகவயமான அல்லது சுயம்சார்ந்த அல்லது அதனை பின்னோக்கித் தொடர்கிற ஒன்று தூலமாக விளங்குவதை அறியலாம்.

தன்னுடைய கவிதைகளில் பெரும்பாலும் முயன்றிருப்பது மனிதன் – சமூகம் என்றைப் பிரித்தறிய இயலாதஒன்றின் தன்மை என்ன என்பதற்கு விடைதேடும் படலமாக கருவாக அமைந்திருக்கிறது என்பதுதான் அவருடைய கவிதையின்சிறப்பம்சம் என்று கூறலாம்.

புற – அகவய போராட்டம்:

தன்னுடைய இளம்வயதில் ஆத்மாநாம் எதிர்கொண்ட பிரச்சனையாக, மிகவும் சிக்கலானதாக அவருக்கு இருந்துவந்துள்ளது. ஒரே நேரத்தில் பலசெயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு ‘எஃபக்டிவ் டிஸ்ஸார்டர்’எனும் மூளைச் சிக்கலுக்கு தீவிரமான தாக்குதலுக்கு உள்ளாக நேரிட்டது. அதன் வெளிப்பாடுகளை அவருடைய பிந்தைய காலத்தில்எழுதபட்ட கவிதைகளில் காணமுடிகிறது.

தீவிரமான உளச்சிக்கலில் இருந்த போது அவர் எழுதிய கவிதைகள் கவனம் பெறுகின்றன. அதில் ‘அழிவு’என்ற கவிதையை முக்கியமாகக் குறிப்பிடலாம். அதனை வாசிப்பது என்பது மிக பரவசம் தரக்கூடிய கவிதையாக அமைகிறது. அழிவுகவிதையை ஒரு வாசகன் மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் வாசிகலாம். இன்னும் நுட்பமான அனுபவ ரீதியாக அக்கவிதையை அறிய முற்படுகிறவர்கள் ‘அழிவு’கவிதையின் எந்த இடத்திலிருந்தும் வாசிக்கலாம். அப்படி வாசிக்கையில் எந்த இடத்திலும் பொருள் தெளிவு மாறுபடாது அமைந்திருப்பதை உணரலாம். மேலும் அது எந்த வரியில் இருந்து ஆரம்பித்தாலும்அது வாசிப்பவருக்கு மேலும் மேலும் என்ற அனுபவ பரவசத்தை ஏற்படுத்தும் கவிதையாக அமைந்திருப்பது அக்கவிதையின்தனித்துவமான, இன்றுவரை புதுக்கவிதை ஆய்வாளர்களுக்கு மேற்கோள் காட்டக்கூடிய கவிதையாக அமைந்திருப்பது அதனுடைய சிறப்பம்சம் என்று சொல்லலாம். நீண்ட கவிதையின் சிறு பகுதி மட்டும்:

                ‘ என்னை அழித்தாலும்

                என் எழுத்தை அழிக்க இயலாது

                என் எழுத்தை அழித்தாலும்

                அதன் சப்தத்தை அழிக்க இயலாது

                என் சப்தத்தை அழித்தாலும்

                அதன் எதிரொலியை அழிக்க இயலாது

                என் எதிரொலியை அழித்தாலும்

                அதன் உலகத்தை அழிக்க இயலாது”

என்று அக்கவிதையின் முதற்பகுதி முடிந்து அதனுடைய அடுத்து பகுதி அதனுடைய தொடர்ச்சியை போலவே அமைகிறது.

அதனுடைய இறுதி நான்கு வரிகள் முக்கியமானவை,

                ‘என்னை அழித்தாலும்

                என்னை அழிக்க இயலாது

                அழிப்பது இயல்பு

                தோன்றுதல் இயற்கை”

கவிதை எங்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதை நிதானிக்கலாம். அழிவு கவிதையைப் பொறுத்த மட்டில் வாசகன் எங்கிருந்து வாசிக்கத் தொடங்கினாலும் அங்கு தொடங்கி, எங்கு முடிக்க நினைத்தாலும் அதன் தொடர்ச்சி இறுதி வரிகளிலோ அல்லது முதல் வரியிலோ வாசிப்பை முடிக்கலாம். அது உற்சாகத்தை தருவதாகக் கூட சிலருக்கு அமையலாம்.

கவிதையில் வடிவ உத்தி தேவையா?

‘நல்ல கவிதை உருவத்தைச் சார்ந்திருக்காமல் கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகின்றது” என்பது கவிதையின் வடிவம், உருவம் பற்றிய கருத்தைக் கொண்டிருந்தார். இதற்கு காரணம் ஆரம்பத்தில் எழுந்த புதுக்கவிதையின்மீதான விமர்சனம், போக்குகள் அவருக்கு இதனை உணர்த்தியிருக்கக் கூடும். அதன் விளைவாக ஆத்மாநாம் எழுதிய கவிதைகள் உருவத்தை அளவீடாகக் கொண்டிருக்காமல், வடிவத்தை அதன் பேதத்தை ஆதரிக்காது கவிதைக்கான நடையானது

அதன் கச்சிதமான பொருளை வெளிப்படுத்தும் சொல்லை பயன்படுத்தியிருப்பதில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.உதராணமாக உறைந்து போனநேரம் கவிதையையும், மறுபரிசீலனை கவிதையையும் குறிப்பிடலாம். இதில் முன்னதாக குறிப்பிட்ட உறைந்த போன நேரம் வடித்தை முற்றிலும் இழந்த ஒன்றாக இருக்கிறது. அல்லது அதற்கு வடிவம் தேவையற்றதாக இருக்கிறது. இரண்டாவதாக குறிப்பிடப்பட்ட மறுபரிசீலனை கவிதையில் ‘செமி’வடிவ முறையை ஆத்மாநாம் பயன்படுத்தியதாகத் தோன்றுகிறது. இருப்பினும் இரண்டு கவிதைகள் பொருளை வெளிப்படுத்துவதில் கச்சிதமான சொல் அமைப்பை மட்டும் கொண்டுள்ளன. அல்லது இதில் வடிவ உத்திகள் கூடிய வரையில் தவிர்க்க முயன்றிருக்கிறார்.

சில கவிதைகள்:

ஆத்மாநாம் தன்னுடைய பிந்தைய காலத்தில் எழுதிய கவிதைகள் ஒரு தத்துவார்த்த தன்மையை சார்ந்ததாக காணப்படுகிறது. அப்போது அவருடைய மனநிலை மிகவும் பாதிக்பட்ட நிலையில் சிலகாலம் சிகிச்சை பெற்று திரும்பிய காலகட்டமாக இருக்கலாம்.

‘களைதல்’கவிதையும் அத்தகைய தத்துவார்த்த தன்மையைச் சார்ந்து இயங்குகிறது.

                ‘என்னைக் களைந்தேன்

                என் உடல் இருந்தது

                என் உடலைக் களைந்தேன்

                நான் இருந்தது

                நானைக் களைந்தேன்

                வெற்றிடத்துச்

                சூனிய வெளி இருந்தது

                சூனிய வெளியைக் களைந்தேன்

                ஒன்றுமே இல்லை”

‘குளிர்க் கண்ணாடிகள்’கவிதையும் தத்துவார்த்து தன்மையைச் சார்ந்து இயங்குவதை காணலாம், அதனுடைய

சில வரிகள்,

                ‘ஆயிரம் காரணங்களை

                நான் கூற எத்தனித்தேன்

                உண்மையை அவன் நம்பவேயில்லை

                கண்ணாடியைக் கழற்றி வைத்தேன்

                உலகம்

                ஒரு விதத்தில் அழகாகவே இருந்தது”

இந்த உலகம் சாயம் பூசப்பட்டதாக சமூகத்தைச் சார்ந்தவனிடம் எழும் கேள்விகள், அதற்கு ஆத்மாநாம் கண்ட உலகம் என்ன என்பதாக இந்தவரிகள் இருக்கின்றன.

சமூகத்துடன் தொடர்ந்து வினையாற்றிக் கொண்டிருக்கும் கவிஞன் அவனுடைய மொழிவெளிப்பாடு சமூகத்தோடு இடைவினையாற்றவேண்டிய பொறுப்பு கொண்டவனாக இருக்கிறான். ‘பதில்’கவிதையில் நிகழ்வது வினையாற்றலும், எதிர் அல்லது இடைவினையானது தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது.

                ‘குற்றுகர முறு;றகரச் சந்திகளை

                சீர்சீர் ஆய்ப் பிரித்து

                தளை தளையாய் அடித்து

                ஒரு ஒற்றை வைத்து

                சுற்றிச் சுற்றி வந்து

                எங்கும் மை நிரப்பி

                எழுத்துக்களை உருவாக்கி

                பொருளைச் சேர்த்து

                வார்த்தைகளாய்ச் செய்து

                ஒவ்வெரு வாக்கியத்திற்கும்

                கமா மற்றும் முற்றுப்புள்ளி வைத்து

                ஏதாவது சொல்லியாக வேண்டும்

                நமக்கேன் வம்பு”

சமூகம் – சமூகத்துடனான தொடர்ந்த வினையாற்றல் என்பது கவிஞக்கு இருக்கவேண்டும். அது கவிஞனுக்கு தெரியாமலேதொடாந்து நடந்துவரும். அதனை அவதானிப்பது தேவை என்பதாக உணரலாம்.

என்னை அழித்தாலும் , என்னை அழிக்க இயலாது:

இளம்வயதிலேயே மூளைச் சிக்கலுக்கு உள்ளாகி அதிக வீரியமிக்க மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. ஆத்மாநாம் தன்னுடைய உளச்சிக்கல் உணருவதற்கு முன்பே அல்லது உணர்ந்தும் அதனை மருந்தால் தீர்க்க முடியாது என்றும், அவருடைய துயரமான வாழ்க்கையை வாழ வேண்டிய சூழ்நிலை உருவானது. இதன் விளைவாக முதல் முறை மேற்கொண்ட தற்கொலை முயற்சி தோல்வியடைந்தது. பின் எடுத்துக் கொள்ளப்பட்ட சிகிச்கை முறைகளும் மருந்துகளும் கைகொடுக்காது 1983ல் அதன் தீவிரம் அதிகமாகி அவருடைய இறுதி தற்கொலை முயற்ச்சி வரை பல வகையான தீவிர உளச்சிக்கலுக்கு ஆளாக்கியது துயரமானது. எனவேதான் அவர் இறுதி மூன்று ஆண்டுகள் அதிகமான இலக்கிய பணியை ஆற்றாமல் இருந்துவந்துள்ளார்.

பிரக்ஞைப் பூர்வமான கவிஞன் உருவாகிக் கொண்டிருந்த சமயத்தில் ஆத்மாநாம் ‘குட்டி இளவரசியோடு’ம் , ‘அழிவு’ கவிதையில்; ’என்னை அழித்தாலும் என் எழுத்தை அழிக்க இயலாது’என்று 1984 ஜூலை 6 -ல் கரைந்து போனார்.


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆத்மாநாம்: பிரக்ஞைபூர்வமான கவிஞன்”

அதிகம் படித்தது