மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆன் தி பேசிஸ் ஆஃப் செக்ஸ்

தேமொழி

Jan 5, 2019

Siragu Ruth Bader Ginsburg1

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது பெண் நீதிபதியாகப் பதவியேற்றவர் ஜஸ்டிஸ் ரூத் பேடர் கின்ஸ்பர்க் (Ruth Bader Ginsburg). முற்போக்கு எண்ணங்கள் கொண்டவரான இவர் 1993 ஆம் ஆண்டில் அன்றைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனால் பரிந்துரைக்கப்பட்டு, நாட்டின் ஆட்சிமன்றத்தின் பலத்த வாக்கு ஆதரவுடன் (ஆதரவு: 96 – மறுப்பு: 3) பதவியேற்றார். 85 வயதாகும் ஜஸ்டிஸ் கின்ஸ்பர்க் அவர்களது பணியின் கால்நூற்றாண்டு நிறைவுறும் 2018 ஆம் ஆண்டு அவரைப் பெருமைப்படுத்தி மதிப்பளிக்கும் விதத்தில் ஒரு ஆவணப்படமும், அவர் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஒன்றும் வெளியாயின.

ஜஸ்டிஸ் ரூத் பேடர் கின்ஸ்பர்க் சட்டத்தின் கீழ் அனைவரும் சமம், மக்கள் பாலினசமத்துவ அடிப்படையில் பேதமின்றி நடத்தப்பட வேண்டும் என்ற கொள்கை கொண்டவர். கல்லூரியில், பணி வாய்ப்பில், குழந்தை இருந்த காரணத்தால் பணிபுரியும் இடத்தில் பதவி நிலை தாழ்த்தப்பட்டது, கிடைத்த பணியிலும் அவரது தகுதிக்கான ஊதியம் தராமல் நல்ல வசதி வாய்ப்புடன் வருமானம் உள்ள கணவர் உள்ளவருக்கு ஆண்களுக்கு இணையான ஊதியம் தேவையில்லை என்று குறைந்த ஊதியம் கொடுக்கப்பட்ட நிலை என அவரே பல வகையில் பாலினபேத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர். பாலினசமத்துவம் இல்லாமையால் ஏற்படும் பாதிப்புகளை நன்கு உணர்ந்தவர் என்பதால், அவரது பணியும் தீர்ப்புகளும் அமெரிக்க சட்டத்தில் ஆண்பெண் பாலினபேதம் இருக்கக்கூடாது என்ற வகையிலேயே இருந்து வந்திருக்கிறது. ஆகவே திரைப்படத்திற்கும் அதனை எதிரொலிக்கும் வண்ணம் “ஆன் தி பேசிஸ் ஆஃப் செக்ஸ்” (On the Basis of Sex) என்ற தலைப்பு சூட்டப்பட்டுக் கடந்த கிறிஸ்துமஸ் அன்று நாட்டின் சில இடங்களில் மட்டும் படம் திரையிடப்பட்டுள்ளது.

Siragu Ruth Bader Ginsburg2

பெரிய மாநகர்களில் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களுக்கு நாட்டின் 33 நகரங்களில் வெளியிடப்பட்ட இந்தப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருக்கும். படம் பரவலாக நாடுமுழுவதும் இந்த வாரம் வரும் வெள்ளியன்று (ஜனவரி 11, 2019) வெளியிடப்படவுள்ளது. இதுவரை வெளியான திரைவிமர்சனங்களும், ஓரிரண்டைத் தவிர, படத்தைப் பாராட்டியே எழுதப்பட்டுள்ளது. ஜஸ்டிஸ் கின்ஸ்பர்க் பாத்திரமேற்று நடித்துள்ள இங்கிலாந்து நடிகை ஃபெலிசிட்டி ஜோன்ஸ் (Felicity Jones) சிறப்பாக நடித்துள்ளது அவருக்கு அடுத்த ஆண்டின் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றுத்தரக்கூடும்.

உக்ரைன் மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குக் குடியேறிய யூதசமயம் சார்ந்த குடும்பத்துப் பெற்றோருக்கு 1930 களில் நியூயார்க் நகரில் பிறந்தவர் ரூத் பேடர். வளரும்பொழுது படிப்பில் பள்ளியிலும், கார்னெல் பல்கலைக்கழக பட்டப்படிப்பிலும் சிறந்த மாணவியாகத் திகழ்ந்தவர். அங்குத் தனது வருங்காலக் கணவர் மார்ட்டின் கின்ஸ்பர்கைச் சந்தித்து பட்டம் பெற்றவுடன் அவரை மணந்து கொள்கிறார். மார்ட்டின் கின்ஸ்பர்க் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரி மாணவராக உயர்படிப்பிற்குச் செல்லும்பொழுது கைக்குழந்தையுடன் குடும்பம் பாஸ்டன் பகுதிக்குக் குடிபெயர்கிறது. கணவரைத் தொடர்ந்து தானும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரியில் கல்வியைத் தொடர முடிவெடுக்கிறார் ரூத் பேடர். அக்காலகட்டத்தில், 1950 களில் கல்விக்கூடங்களும் பணியிடங்களும் ஆண்களின் உலகமாக இருந்த நேரம். இங்குதான் திரைப்படம் துவங்குகிறது.

டென் தவுசண்ட் மென் ஆஃப் ஹார்வர்ட் (Ten Thousand Men of Harvard) என்ற பாடலின் பின்னணியுடன் கல்லூரிப் படிகளில் ஏறும் கால்சராய் அணிந்த பலநூறு ஆண்களின் கால்களுக்கு இடையே ஒரு பெண்ணின் (ரூத் பேடர்) கால்களும் படியேறுகின்றன. ஹார்வர்ட்டில் பயிலும் ஆண்களிடம் உலகம் என்ன எதிர்பார்க்கிறது என்று வகுப்பில் விவரிக்கப்படுகிறது. அவர் வகுப்பின் 500 மாணவர்களில் மொத்தம் ஒன்பது பேர் மட்டுமே பெண்கள் பயிலும் நிலை. மேலும் அந்தச் சட்டக்கல்லூரியின் முதல்வர் அவர்களுக்குத் தரும் விருந்தின்பொழுது அவர்களிடம், ஆண்கள் படித்திருக்க வேண்டிய இடங்களைப் பிடித்துக்கொண்ட பெண்களாகிய உங்களின் எதிர்காலக் குறிக்கோள் என்னவென்று நேரிடையாகவே கேட்கிறார். இது போன்ற சிலகாட்சிகளும் உரையாடல்களும் அக்காலத்தில் படிக்கும் பெண்கள் எதிர் கொண்ட சூழ்நிலையைத் தெளிவாக விவரிக்கிறது. கணவருக்குப் புற்றுநோய் தோன்றிவிட உயிர்பிழைக்கும் வாய்ப்பும் குறைவு என்று மருத்துவர் கூறும்பொழுது ரூத் பேடர் நிலைகுலைந்து போகிறார். தனது வகுப்புகளுக்கும், கணவருக்காக அவரது வகுப்புகளுக்கும் சென்று பாடம் கேட்டு குறிப்புகள் எடுக்கிறார். வீட்டிற்கு வந்து கைக்குழந்தையையும் நோயாளியான கணவரையும் பராமரிக்கிறார். இருவரது வகுப்பிற்கும் தேவையான பாடங்களை மாறி மாறி தட்டச்சு செய்த வண்ணம் கணவரின் கல்வியைத் தொடர உதவுகிறார்.

வகுப்பிலும் சிறந்த மாணவியாக கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார். புற்றுநோயிலிருந்து விடுபட்ட அவரது கணவர் மார்ட்டின் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று நியூயார்க்கில் பெரிய நிறுவனம் ஒன்றில் ஒரு நல்ல பணியில் அமர்கிறார். அவரைத்தொடர்ந்து செல்லும் ரூத் பேடர், கல்வியை முடிக்கத் தேவையான தனது வகுப்புகளை நியூ யார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற விரும்புகிறார். அவரது வேண்டுகோளுக்கு அக்கால கல்லூரி விதிகளின் படி ஹார்வர்ட் அனுமதியளிக்க மறுத்துவிடுகிறது. வேறுவழியின்றி ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் படித்த பாடங்களை கொலம்பியா பல்கலைக்கழக சட்டப்படிப்பிற்கு மாற்றிக்கொண்டு கொலம்பியாவில் படிப்பைத் தொடர்ந்து முடித்து முதல்நிலையில் தேர்ச்சி பெறுகிறார். இருப்பினும் ஹார்வர்ட் கொலம்பியா போன்ற ஐவி லீக் என்று உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்ற வழக்கறிஞராக இருந்தும் பெண் என்ற ஒரே காரணத்தால் ரூத் பேடர் கின்ஸ்பர்க்கிற்குப் பணிவாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. வேறுவழியின்றி ரட்கர்ஸ் பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் பேராசிரியர் தொழிலை ஏற்றுக் கொள்கிறார்.

தனது தொழில், கல்லூரி வகுப்பு ஆகிய யாவும் பாலின சமத்துவ விழிப்புணர்வு என்பதை முன்னெடுக்கும் நோக்கத்தைக் கொண்டதாக அமைத்துக் கொள்கிறார். அவரது கணவர் வரிகள் குறித்த சட்ட வல்லுநராக அறியப்படுகிறார். அவர் தனது மனைவியின் கவனத்திற்கு டென்வர் மாநில கொலராடோ நகரின் சார்லஸ் மோரிட்ஸ் (Charles E. Moritz*) என்பவர் வழக்கைக் கொணர்கிறார். அந்த வழக்கின்படி,  திருமணம் செய்து கொள்ளாமலே வாழும் நடுத்தர வயது ஆண் மோரிட்ஸ், தனது வயதான தாயாரை தன் இல்லத்தில் பராமரித்து வருகிறார். தன் அன்னைக்குத் தன்னையே கவனித்துக்கொள்ள முடியாத ஒரு நிலை ஏற்படுகையில் தான் வேலைக்குச் செல்லும்பொழுது தனது அன்னையைப் பராமரிக்க ஆள் ஒருவரை ஏற்பாடு செய்துவிட்டு பணிக்குச் செல்கிறார். அமெரிக்க வருமானவரி சட்டத்தில் அவ்வாறு பராமரிப்பவருக்கான ஊதியத்தை வரிச்சலுகையாக வரிவிலக்கு பெற சட்டம் அனுமதிக்கிறது. இது பணி செய்யும் பெண்களுக்கு தங்கள் பராமரிப்பில் உள்ளவருக்காக ஆகும் செலவிற்கு வரிவிலக்கு தரும் முயற்சி ஆண்களுக்கும் உண்டு. ஆனால், அவர்கள் திருமணம் ஆகி மனைவியை இழந்தவராகவோ அல்லது விவாகரத்து செய்து குடும்பத்தை ஏற்கும் பொறுப்பில் மனைவி என்ற ஒருவர் பராமரிக்க வீட்டில் இல்லாதபொழுது அவரும் அந்த வரிச்சலுகையைப் பெறலாம். அதாவது, சுருக்கமாக, திருமணம் செய்து கொள்ளாத ஒரு ஆண் தனது குடும்ப உறுப்பினர் ஒருவரைப் பராமரிக்கும் செலவிற்கு வரிச்சலுகை பெறமுடியாது. இந்தக் கெடுபிடியின் மூலம் இச்சட்டம் மறைமுகமாகக் குறிப்பிடுவதுகுடும்பப் பராமரிப்பு என்பது பெண்களின் கடமை. அது ஆண்களின் கடமையல்ல.

திருமணமே செய்து கொள்ளாத மோரிட்ஸ் பணியில் இருக்கும்பொழுது அன்னையைப் பராமரிக்க உதவி பெற்றதாக வரிச்சலுகை எடுத்துக் கொள்கிறார். அமெரிக்க சட்டப்படி இது தவறு என்று கூறி, அவர் செய்தது வருமானவரி ஏய்ப்பு என்று குற்றம்சாட்டி அரசு அவரை அபராதம் கட்ட வைக்கிறது. இது பாலின அடிப்படையில் பழமையான அணுகுமுறையால் விளைந்தது. ஆனால், இங்குப் பாதிக்கப்பட்டதோ ஒரு ஆண் என்று மார்ட்டின் அந்த வழக்கை ரூத் பார்வைக்குக் கொண்டுவருகிறார். பாலினபேதத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த வழக்கு தரும் வாய்ப்பை ரூத் பேடர் உணர்கிறார். கணவருடன் கூட்டு முயற்சியாக வருமானவரி வழக்கின் பகுதியை மார்ட்டினும், பாலினபேதம் என்று சுட்டி வாதமிடும் பகுதியை ரூத் பேடரும் வழக்காடலாம் என முடிவுக்கு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மோரிட்ஸ்ஸிடம் ஊதியம் பெறாமல் இலவசமாக வழக்காட விரும்புவதாகக் கூறுகிறார்கள். அவரும் வழக்கு வெற்றிபெற்றால் தன்னைப்போல பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தத் தீர்ப்பு உதவும் என்று ஏற்றுக் கொள்கிறார். அமெரிக்க சிவில் லிபர்டி யூனியன் (A.C.L.U.) முதலில் தயங்கினாலும் பிறகு இவர்களுக்கு ஆதரவு தர முன்வருகிறது.

வழக்கில் வாதாடும்பொழுது வழக்கறிஞரான ரூத் பேடர் கின்ஸ்பர்க், ஆணையும் பெண்ணையும் பொதுமைப்படுத்தும் நோக்கில் இவரிவர் இதைத்தான் செய்யவேண்டும் என்ற முன்முடிவு கொண்டு வகுக்கப்பட்ட சட்டங்கள் காலம் மாறிய பிறகு பொருளற்றவை என்ற நிலையை அடைகிறது. பெற்ற தாயைப் பராமரிக்கும் மோரிட்ஸ் செய்தது ஒரு பாராட்டிற்குரிய செயல். ஆண்கள் உழைத்து குடும்பத்தைக் காப்பற்ற வேண்டும் என்பதும் பெண்கள் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டும் என்ற கருத்து பாலின சமத்துவத்திற்கு எதிரானது. அமெரிக்க அரசியலமைப்பானது, சட்டத்தின் முன் ஆண் பெண் என அனைவரும் சமம் என்றுதான் சொல்கிறது என வாதிடுவார். நீதிபதி அமெரிக்க அரசியலமைப்பில் ‘வுமன்’ என்ற வார்த்தை ஒருமுறைகூட குறிப்பிடப்படவில்லை என்று புன்னகையுடன் சொல்வார். ரூத் பேடர் கின்ஸ்பர்க் அதற்குச் சற்றும் அசறாமல் அமைதியான குரலில், அமெரிக்க சட்ட அமைப்பில் ‘ஃபிரீடம்’ என்ற சொல்லும்தான் இல்லை, யுவர் ஆனர் என்று மறுமொழி அளிப்பார். நீதிபதிகள் குழு அதைச் சற்றே சிந்திப்பர். அமெரிக்க அரசியல் அமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்களில்தான் பின்னர் ஃபிரீடம் என்பதே குறிப்பிடப்படும். அதுபோல அரசியல் அமைப்பில் மாற்றங்கள் நிகழ்ந்து பல புதியவையாகச் சேர்க்கப்பட்டது போல காலத்திற்கேற்ப மாற்றங்கள் அமைய வேண்டும் எனக் குறிப்பால் உணர்த்துவார் ரூத் பேடர் கின்ஸ்பர்க். அதன் பிறகு வரலாற்றில் முன்னர் இல்லாதவை இப்பொழுது எவை எவை எவ்வாறு மாறிவிட்டது எனக் காட்டுவார்.

தனது வாழ்க்கையையே எடுத்துக் கொண்டு நூறாண்டுகளுக்கு முன்னர் என்னைப்போல ஒரு பெண் வழக்கறிஞர் இது போல வழக்காடவே வந்திருக்க முடியாது. “பாலின அடிப்படையில் ஒருவர் வாழ்க்கையில் என்ன செய்யலாம் அல்லது கூடாது என்பது இக்காலத்திற்கு ஏற்றதல்ல, சட்டங்கள் சொல்லாமலே உலகம் மாற்றிக்கொண்டிருக்கிறது. சட்டமும் அதை எதிரொலிக்கும் வகையில் மாறவேண்டும்” (இதுதான் படம் சொல்ல விரும்பும் மையக் கருத்து) என்பார். எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் குழு அவர்கள் கட்சியை வலுப்படுத்த விரும்பி கணினி உதவியுடன் நடைமுறைச் சட்டங்களில் பாலினபேதம் காட்டும் அனைத்துச் சட்டங்களையும் திரட்டி நீதிமன்றத்தின் பார்வைக்கு வைத்துள்ளார்கள், அவையாவும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டியவை என்று தனது வாதத்தில் நிறுவுவார்.

இந்தப் படத்தை ஜஸ்டிஸ் ரூத் பேடர் கின்ஸ்பர்க்கின் வாழ்க்கை வரலாறு என்பதைவிட, அமெரிக்க மக்கள் குடிமை குறித்த வரலாற்றின் ஒரு பகுதி எனக் கூறலாம். ‘செக்ஸ் டிஸ்க்ரிமினேஷன்’ என்று குறிப்பிடும் முறையைத் தவிர்த்து ‘ஜென்டர் டிஸ்க்ரிமினேஷன்’ என்று அழைக்க முற்பட்டவரும் ரூத் பேடர் கின்ஸ்பர்க். படத்தின் துவக்கம் சட்டக்கல்லூரியில் துவங்கி, உச்சநீதிமன்றம் வரை சென்று முடிகிறது. படத்தின் கரு வழக்கறிஞர்கள் வாழ்வையும், அமெரிக்க சட்ட அமைப்பின் கூறுகளை விவாதித்த வண்ணம் தொடர்கிறது. இத்தகைய பின்னணியைக் கேட்கும் எவருக்கும் படத்தை தொய்வின்றி எடுத்துள்ளார்கள் என்று சொன்னால் அது நம்பமுடியாத செய்தியாக இருக்கும். ஜஸ்டிஸ் ரூத் பேடர் கின்ஸ்பர்க் தனது பாலினசமத்துவ வழக்கின் வெற்றிக்குப் பிறகு, அவர் அதே பாதையில் பயணித்துத் தொடர்ந்து பல பாலினசமத்துவம் கோரும் வழக்குகளை வெற்றி கொள்வதும், அந்த வழக்குகளுக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் பாலினபேதம் காட்டிய சட்டச்சிக்கல்களில் பலவற்றிற்குத் தீர்ப்புகள் வழங்கப்படுவதும் பின்னணி ஒலியாக ஒலித்தவண்ணம் படத்தின் இறுதிக் காட்சி அமைகிறது. குரல்களின் பின்னணியில் நீல வண்ண உடையில் ஜஸ்டிஸ் ரூத் பேடர் கின்ஸ்பர்க்கின் பாத்திரத்தில் நடித்த ஃபெலிசிட்டி ஜோன்ஸ் உச்சநீதிமன்ற படிகளில் ஏறிய வண்ணம் இருக்கையில், குறுக்கிடும் ஒரு தூண் ஒன்று காட்சியை மறைத்துக் கடந்து செல்கையில், ஜஸ்டிஸ் ரூத் பேடர் கின்ஸ்பர்க்கே படியேறி வருவதாகக் காட்சி மாறுகிறது. அப்பொழுது அரங்கம் பார்வையாளர் கரவொலியால் அதிர்வதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

இப்படத்தைப் பார்க்க தங்களது மகள்களைப் பெற்றோர் அழைத்துச் செல்லுமாறும், அதைவிட முக்கியமாக, சிறந்த வாழ்க்கைத்துணையாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று புரிந்து கொள்வதற்காகத் தங்கள் மகன்களையும் அழைத்துச் செல்லுமாறும் வாசிங்டன் போஸ்ட் பரிந்துரைத்தது. அது உண்மையே. பார்த்த இளவயதுப் பெண்களில் பலருக்கு ஜஸ்டிஸ் ரூத் பேடர் கின்ஸ்பர்க்காக மாற கனவுகள் தோன்றியிருக்கும் என்று நம்பலாம். அது போல ஆண்களும் பெண்களை சமமாக மதிக்கும் பண்பை வளர்த்துக் கொள்வார்கள் என்றும் நம்பலாம் (எது எப்படியோ எனது மகனை நான் அழைத்துச் சென்று காட்டிவிட்டேன், எதிர்காலத்தில் எனக்கு வரக்கூடிய மருமகள் என்னைப் பாராட்டுவார் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது).

_______________________

*Charles E. Moritz, Petitioner-appellant, v. Commissioner of Internal Revenue, Respondent-appellee, 469 F.2d 466 (10th Cir. 1972)

https://law.justia.com/cases/federal/appellate-courts/F2/469/466/79852/

**The Constitution of the United States:

A Transcription – https://www.archives.gov/founding-docs/constitution-transcript

*** Take your sons to see the new Ruth Bader Ginsburg movie — to show them how a powerful man can be a partner

https://www.washingtonpost.com/lifestyle/style/take-your-sons-to-see-the-new-ruth-bader-ginsburg-movie–to-show-them-how-a-powerful-man-can-be-a-partner/2018/12/26/4cd816c2-053a-11e9-9122-82e98f91ee6f_story.html


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆன் தி பேசிஸ் ஆஃப் செக்ஸ்”

அதிகம் படித்தது