மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆய்வு வழியில் வள்ளுவர்

தேமொழி

Nov 23, 2019

siragu thiruvalluvar1

ஆராய்ந்து அறியும் மனப்பான்மையைக் கொண்டோர் பண்புகள் எத்தகையனவாக இருக்கும்?

          அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

          பெரும்பயன் இல்லாத சொல். (பயனில சொல்லாமை: குறள் – 198)

அருமையான பயனளிக்கக் கூடியவை எவை என ஆராய்ந்து அதனை அடைய முயலுவோர், பெரும் பயன் தராத சொற்களைப் பேசமாட்டார்கள். அதாவது, அவர்கள் வெற்றுப் பேச்சைத் தவிர்ப்பவர்கள்.

வள்ளுவரும் அத்தகையவர் என்பதை அவர் தமது அறநூல் கருத்துக்களைக் குறட்பாக்களாக ஈரடியில் எழுதியது உறுதிப்படுத்துகிறது. இத்தகைய பண்பு கொண்ட வள்ளுவர் எப்பொழுதெல்லாம் ஆய்வு செய்யவேண்டும் என்கிறார்? ‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ (அறிவுடைமை: குறள் – 423) என்று கூறுமிடத்து, உண்மை எதுவென்று ஆராய்ந்து அறிவதுதான் அறிவுடைமை என்கிறார் வள்ளுவர். அவர் எந்தெந்த சூழ்நிலையில் ஆராய்வதைக் குறித்துத் தமது திருக்குறளில் கூறியுள்ளார் என்ற ஒரு மீள்பார்வை, வள்ளுவர் எவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதையும் நமக்கு அறியத் தரும். அதை கடைபிடிப்பது வாழ்வியல் வழிகாட்டியாகவும் உதவும் என்பதும் திண்ணம்.

நாம் ஆய்வைப் பயன்படுத்த வேண்டிய சூழல் எது? என்ற கோணத்துடன் குறட்பாக்களை ஆய்வு செய்யும்பொழுது (1) உறவுமுறை கொள்ளுதல், (2) செயலாக்கத் திட்டங்கள், (3) வாழ்வியல் அறிதல், (4) ஆட்சிமுறை அறங்கள் ஆகியவற்றில் ஆய்வுக் கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும் என்பது வள்ளுவரின் கூற்றின் மூலம் தெளிவாகிறது.

(1)    உறவின் விதிகள் – உறவுமுறை கொள்ளுதல்:

(2)    வள்ளுவர் ஆய்வு செய்து நடக்க வேண்டிய சூழ்நிலைகளாகக் கருதுவது “ஒருவருடன் நாம் மேற்கொள்ளும் தொடர்பு” குறித்து என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

நம் பிறப்பின் காரணமாக நம் உறவாக அமைபவர் குறித்து நமக்கு ஆராய்ந்து தெரிந்தெடுக்கவோ, மறுபரிசீலனை செய்யவோ, அவர்களை மாற்றவோ வாய்ப்பில்லை. ஆனால் நாம் நட்பாகத் தேர்வு செய்பவர்களை, துணையாக இணைத்துக் கொள்ள விரும்புபவர்கள் குறித்து ஆராய்ந்த பின்னரே அவர்களுடன் உறவாட வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்து.

          ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

          தான்சாம் துயரம் தரும். (நட்பு ஆராய்தல்: குறள் – 792)

ஆய்ந்தாய்ந்து, ஆய்ந்து-ஆராய்ச்சி செய்து, ஆய்ந்து-ஆராய்ச்சி செய்து. ஆய்ந்தாய்ந்து, அதாவது மீண்டும் மீண்டும் ஆராய்ச்சி செய்து என்று வள்ளுவர் இங்கு வலியுறுத்துவதைக் காணலாம். பலவகையிலும் ஆராய்ந்து தெளிவு பெறாமல், உணர்வின் வழியில் ஏற்படுத்திக் கொள்ளும் நட்பானது முடிவில் சாகும் அளவிற்கும் பெருந்துயரில் கொண்டுவிடும் என்கிறது ‘நட்பு ஆராய்தல்’ அதிகாரத்தின் குறள்.

ஆராயாமல் செய்த நட்பினும் கேடு வேறு ஒன்றும் இல்லை என்ற இதே கருத்தை;

          நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின்

          வீடில்லை நட்பாள் பவர்க்கு (நட்பாராய்தல்: குறள் – 791)

என்ற குறளும் கூறுகிறது. இக்குறளில் ஆராயாமல் செய்வதை நாடாது (நாடாது-ஆராயாமல்) என்கிறார் வள்ளுவர். ஆகவே, ஆராயாது நட்புச் செய்தலைப்போலக் கேடு வேறில்லை.

          siragu election2

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய

          வல்லார்நட்பு ஆய்ந்து கொளல் (நட்பு ஆராய்தல்: குறள் – 795)

நல்ல நட்பு என்ற கூறப்படும் தகுதி யாருக்கு உண்டென்றால், அழுகின்ற அளவுக்கு அறிவுரை சொல்லி ஒருவரைத் திருத்தும் உரிமையுடையவரையே அடையாளம் காட்ட இயலும். அவரையே நட்பாகக் கொள்ள வேண்டும். அத்தகைய இடித்துரைக்கும் பண்பில்லாத ஒருவரானால், அவர் குறித்து ஆராய்ந்து முடிவெடுத்த பின்னர்தான் (ஆய்ந்து நட்புக் கொளல் – ஆராய்ந்து நட்புக் கொள்க) அவரை நமது நட்பாக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் குறள் கூறும் கருத்து.

யாருடன் தொடர்பு கொள்ளுதல் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்ற இக்கருத்தை வள்ளுவர் வரைவின் மகளிருடன் கொள்ளும் தொடர்புக்கும் பொருத்திக் காட்டுகிறார். ஆராய்ந்து அறியும் அறிவற்றவரே பொதுமகளிர் உறவினை நாடிச் செல்வர் என்பது வள்ளுவரின் துணிபு.

           பொருட்பொருளார் புன்னலம் தோயா அருட்பொருள்

          ஆயும் அறிவி னவர் (வரைவின் மகளிர்: குறள் – 914)

மற்றொரு குறளில், அருளுடமை என்னவென்று ஆராய்ந்து தெளிந்த அறிவுடையவர், பொருள் ஒன்றையே கருத்தாகக் கொண்டு செயல்படும் பொதுமகளிரின் இழிவான உறவை நாடமாட்டார்கள் என்கிறார்.

          ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப

          மாய மகளிர் முயக்கு (வரைவின் மகளிர்: குறள் – 918)

ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதோருக்கு அழகிய மோகினியால் (அணங்கு தாக்கு) தாக்கப்பட்டவர் போல வஞ்சம் நிறைந்த பொதுமகளிரை நாடுவர் என்கிறர் வள்ளுவர்.

விலைமகளிரிடம் செல்வோர் மட்டுமன்று, அடுத்தவர் மனைவியை விரும்பிச் செல்பவரும் அதே ஆராயும் அறிவற்றவரே என்கிறது குறள்,

          எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்

          தேரான் பிறனில் புகல் (பிறனில் விழையாமை: குறள் – 144)

பெருமைமிக்க நிலையில் உள்ள ஒருவரும், தான் செய்வது எத்தகைய ஒரு இழிய செயல் என்று சிறிதும் ஆராய்ந்து பார்க்க மாட்டாதவராக (தேராது-தனது தகுதியின் நிலை குறித்து ஆராயாமல்) பிறன் மனைவியை நாடிச் செல்வது அவரது பெருமையை அழித்துவிடும்.

(2) செயல்வகை விதிகள் – செயலாக்கத் திட்டங்கள்:

          இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

          அதனை அவன்கண் விடல் (தெரிந்து வினையாடல்: குறள் – 517)

ஒரு செயலை குறிப்பிட்ட இந்தந்த வழிமுறைகளால் இவர் செய்து முடிக்க வல்லவர் என்பதைக் கண்டறிந்து அப்பணியை அவரிடம் ஒப்படைக்கவேண்டும். செயல், செய்முறைகள், செயலை முடிக்கக்கூடிய தகுதி இம்மூன்றும் தக்கவாறு பொருந்திவிட்டால் அச்செயல் நிறைவடைவதில் தடையிருக்காது. இதனை ஆராய்ந்து முடிவெடுத்துச் செயல்படவேண்டும் என்பது வள்ளுவர் அறிவுரை. Well begun is half done என்ற ஆங்கிலப் பழமொழியும் நன்கு துவங்கிய ஒரு செயல் என்றால் அதுவே பாதி முடிவடைந்த நிலை என்கிறது.

          தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு

          அரும்பொருள் யாதொன்றும் இல் (தெரிந்து செயல்வகை: குறள் – 462)

என்ற குறள், (தேர்ந்து-ஆராய்ந்து) தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையுள்ளவர்களுடன் இணைந்து தாமும் நன்கு சிந்தித்துச் செயல்படுவோருக்குச் செய்ய இயலாத கடினமான செயல் என்று எதுவுமே இல்லை என்று அறிவுறுத்துகிறது. பணியில் ஈடுபடுவோரை ஆராய்ந்து தேர்ந்து எடுத்து அவர்களுடன் சிந்தித்துச் செயலாற்றினால் பிறகு பணியில் வெற்றி என்பதுதான் விளைவு. அவ்வாறான திறமைசாலிகளை எவ்வாறு அடையாளம் காண என்ன வழி என்பதையும் வள்ளுவர் விளக்கத் தவறவில்லை.

          அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்

          திறம்தெரிந்து தேறப் படும் (தெரிந்து தெளிதல்: குறள் – 501)

அறம், பொருள், இன்பம், உயிர்அச்சம் ஆகிய இந்த நான்கிலும் ஒருவரது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என ஆராய்ந்து, பணிக்கு இவர் கொண்டுள்ள இத்தகைய பண்புகள் உதவுமா என்று ஆராய்ந்த பின்னரே ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும். அறம் தவறாதவராக, விலைக்கு வாங்க முடியாதவராக, இன்பவாழ்வில் நாட்டமில்லாதவராக, உயிரை இழக்க வேண்டியிருக்கும் இக்கட்டான சூழ்நிலையிலும் காட்டிக் கொடுத்துக் கைவிடாதவர் போன்றவரை நம்பி மட்டுமே சில நுட்பமான செயல்களை ஒப்படைக்க இயலும் என்பதுதான் உண்மை.

          தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்

          தேறுக தேறும் பொருள் (தெரிந்து தெளிதல்: குறள் – 509)

எவரையும் ஆராயாது பணிக்குத் தேர்ந்தெடுக்கக்கூடாது. ஆராய்ந்து தேர்வு செய்த பின்னரும் அவரது திறமைக்கு ஏற்ற செயலையே அவரிடம் ஒப்படைக்க வேண்டும். என மீண்டும் இந்தக் குறளிலும் ஆராய்ந்து ஒருவரைப் பணிக்குத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

siragu thirukkural2

(3) வாழ்க்கை விதிகள் – வாழ்வியல் அறிதல்:

தாம் வாழும் வாழ்வைக் குறித்த தெளிவான புரிதல் இருப்போருக்கு மன அமைதி இருக்கும் என்பது இக்கால மனவளக் கட்டுரை எழுதுவோர் கூறும் தத்துவக் கருத்தன்று. சங்கப் பாடலான புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் இதைத் தெளிவாகக் கீழ்வருமாறு கூறுகிறார்,

          ….

          சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்

          இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

          இன்னா தென்றலும் இலமே, மின்னொடு

          வானம் தண்துளி தலைஇ யானாது

          கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று

          நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

          முறை வழிப் படூஉம் என்பது திறவோர்

          காட்சியில் தெளிந்தனம்… (புறநானூறு-192)

எங்களுக்குச் சாதல் புதுமையில்லை, அவ்வாறே வாழ்தலும் இன்பமென்று மகிழ்ந்தது இல்லை, அந்த வாழ்வை வெறுத்து இது துன்பமான வாழ்வு என ஒதுங்கியதுமில்லை. பேராற்று நீர்வழி ஓடும் ஓடம் போல இயற்கைவழியில் எதுவும் நிகழ்வதுதான் உயிர்வாழ்வதன் இயல்பு என்று சான்றோர் அறிவுறுத்தியதை அறிந்து தெளிவு பெற்றுள்ளோம் என்று வாழ்க்கையின் இயல்பை கணியன் பூங்குன்றனார் நயம்பட உரைக்கின்றார். இத்தெளிவு வந்த பிறகு நமது மனம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு அலைபாயாது அஞ்சாது அமைதியுடன் இருக்கும்.

இந்த உண்மையை ஆராய்ந்து அறிவது பற்றியும் வள்ளுவர் கூறுகிறார்.

          கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

          மற்றீண்டு வாரா நெறி (மெய்யுணர்தல்: குறள் – 356)

இவ்வுலகிலே மெய்ப்பொருளைக் கற்று உணர்ந்தவர், வாழ்க்கைத் துன்பங்கள் இங்குத் தோன்றாதவாறு நல்வழியை அடைய முற்படுவர்.

          ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

          பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு (மெய்யுணர்தல்: குறள் – 357)

ஒருவரது உள்ளம் தாம் வாழும் வாழ்க்கையின் பொருளை (ஓர்த்து -ஆராய்ச்சி செய்து) ஆய்ந்து உறுதியாக உணர்ந்துவிடுமானால், பின்னர் பிறப்பின் காரணம் குறித்து எண்ண வேண்டியதில்லை.

அவ்வாறு ஆராய்ந்து அறிவதே அறிவுடைமை என்பதை மற்றொரு குறளிலும் வள்ளுவர் கூறுகிறார்.

          பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

          செம்பொருள் காண்பது அறிவு (மெய்யுணர்தல்: குறள் – 358)

பிறப்பு பற்றிய காரணம் அறியமுடியாத பேதைமை நீங்குமாறு எங்கும் சிறப்புற நிறைந்துள்ள செம்பொருளை ஆராய்ந்து உணர்வதே அறிவு.

(4) அரசாட்சியின் விதிகள் – ஆட்சிமுறை அறங்கள்:

ஆட்சி செய்வோருக்கு ஆராய்ச்சி மனப்பான்மை இன்றியமையாதது. அவர்கள் செங்கோல் தாழாது ஆட்சி செய்ய எதையும் ஆராய்ந்தே முடிவெடுக்க வேண்டும். இதைச் சிலப்பதிகாரத்தில், கண்ணகி தனது கணவன் கோவலனின் இறப்பிற்குப் பாண்டிய மன்னனிடம் நீதி கேட்கச் சென்ற பொழுது கூறுவதன் மூலம் தெளிவாகக் காணலாம். கண்ணகி தன்னை பாண்டியனிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளும்போதே அவனை நோக்கி “தேரா மன்னா” (தேரா மன்னா = ஆராய்ச்சி இல்லாத அரசனே) என்றுதான் பேசத் துவங்குகிறாள். தொடர்ந்து, ஆராய்ச்சி மணி கட்டி ஆட்சி செய்து, அம்மணியை ஒலித்து நீதி கேட்ட கன்றை இழந்த பசுவிற்கு நீதி வழங்க விரும்பி, தேரோட்டி அதைக் கொன்ற தனது மகனையே தேர்க்காலில் இட்டு நீதி வழங்கிய சோழமன்னனின் நாட்டைச் சேர்ந்தவள் நான் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறாள்.

          தேரா மன்னா செப்புவது உடையேன்

          எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்

          புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்

          வாயிற் கடைமணி நடுநா நடுங்க

          ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்

          அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்

          பெரும்பெயர்ப் புகார்என் பதியே”

               (சிலப்பதிகாரம்-வழக்குரை காதை: 50-63)

ஆராய்ந்து நீதி வழங்க வேண்டியது மன்னனின் கடமை, அதுவே அறம் என்று கூறும் வள்ளுவர்,

          ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

          தேர்ந்துசெய் வஃதே முறை (செங்கோன்மை: குறள் – 541)

வழக்கை ஆராய்ந்து, எவருக்கும் சார்புநிலையில் இரக்கம் காட்டாமல், இறையாண்மையுடன் தெளிவாக உணர்ந்து முடிவு செய்வதுவே அறமாகும் என்று குறளில் வலியுறுத்துகிறார். அடுத்த கட்டமாக, அவ்வாறு ஆராயாமல் அரசாளும் மன்னனின் ஆட்சிக்காலம் தானே அழியும் என்கிறார். முறைதவறித் தீர்ப்பு வழங்கிய பாண்டியன் நெடுஞ்செழியனின் வாழ்வும் அவ்வாறேதான் முடிவுற்றது.

          எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

          தண்பதத்தான் தானே கெடும் (செங்கோன்மை: குறள் – 548)

மக்கள் எளிதாக முறையிட வழி செய்து , காலந்தாழ்த்தாது ஆராய்ந்து தக்கவகையில் நீதி வழங்காத ஆட்சி தானே அழிந்துவிடும்.

மேலும் வள்ளுவர், ஒற்றுச் செய்திகளை ஆராய்ந்து உண்மைத் தன்மை அறிய வேண்டிய தேவையையும் மன்னனுக்கு உணர்த்துவார்.

          ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

          ஒற்றினால் ஒற்றிக் கொளல் (ஒற்றாடல்: குறள் – 588)

என்கிறார் வள்ளுவர். ஒரு உளவாளி சேகரித்துச் சொன்ன செய்திகளை மற்றொரு உளவாளி மூலம் முன்னர் கிடைத்த ஒற்றுச் செய்தியினை ஒப்பிட்டு நோக்கி உண்மை அறிய வேண்டும் என்பது குறள் சொல்லும் கருத்து. ஒரு ஒற்றர் சொல்லும் உளவுச் செய்தியை அப்படியே நம்பக்கூடாது, மற்றொரு ஒற்றர் கொண்டு வரும் செய்தியும் அதே தகவலைத் தந்தாலே அரசர் அதனை உறுதியாக நம்பி முடிவெடுக்கலாம்.

இவ்வாறு தரவுகளை ஒப்பிடச் சொல்லும் வள்ளுவர் அடுத்த குறளிலேயே மூன்றுகோணங்களில் அச்செய்தியை அலசி ஆராயவும் சொல்கிறார்.

          ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்

          சொற்றொக்க தேறப் படும் (ஒற்றாடல்: குறள் – 589)

ஒருவரை மற்றொருவர் அறியாத வகையில் மூன்று வெவ்வேறு ஒற்றர்களை ஒற்றறிய அனுப்பி, அந்த மூவரும் அறிந்து வந்து சொல்லும் கருத்தில் ஒற்றுமை இருப்பின் அதை உறுதியான உண்மை என அறியலாம் என்பது இந்தக் குறள் சொல்லும் கருத்து.

இதுகாறும், வள்ளுவர் ஆய்வு செய்க எனக் கூறும் குறட்பாக்களின் கருத்துக்களைப் பகுத்துக் காண்கையில் நாம் அறிவது, பிறப்பால் கிடைக்கும் உறவுகளைத் தவிர்த்து, நாம் தேடி அடையும் ஏனைய உறவுகளை ஆராய்ந்து அறிந்த பின்னரே அவர்களுக்கு நம் தனிப்பட்ட வாழக்கையில் இடம் அளிக்க வேண்டும். அந்த உறவுகளே அறம் சார்ந்த வகையில் நம் வாழ்க்கை அமைய உதவும். தொழில்முறையில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் பொழுதும் தக்கவரைத் தேர்ந்து தமது பணியில் இணைத்துக் கொள்ளுதல் பணியில் வெற்றிபெற வழி வகுக்கும். அத்துடன் இன்றி வாழ்க்கையின் இயல்பு என்னவென்று ஆராய்ந்து அறிந்து கொண்டால் துயர் வருத்தாது அமைதியுடன் வாழ இயலும். இவ்வாறு தனி மனிதருக்கு மட்டுமின்றி அரசாட்சி செய்வோருக்கும் கூறுகிறார். அறம் எது என ஆராய்ந்து தம் ஆட்சிக்குரிய மக்களுக்கு முறை செய்ய வேண்டும். இல்லாது போனால் அவர்கள் அழியும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்கிறார் வள்ளுவர்.

உதவிய நூல்கள்: திருக்குறள், புறநானூறு, சிலப்பதிகாரம்.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆய்வு வழியில் வள்ளுவர்”

அதிகம் படித்தது