மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு…

சித்திர சேனன்

Sep 20, 2014

aarambappalli1“குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளா தவர்”என்பார் திருவள்ளுவர். அவ்வாறு மழலை மொழி பேசி,ஆடிப்பாடி,சுதந்திரமாகச் சுற்றித் திரியும் மழலைப் பருவத்திலேயே கல்வி என்ற பெயரில் அவர்களுக்கு பெரும் சுமையை சுமத்தி அழகு பார்க்கும் அறிவார்ந்தவர்கள் நாம்.

இன்றைய குழந்தைகள்,சமுதாயத்தில் சுதந்திரப் போக்கையே விரும்புகின்றனர். பொழுது போக்கை நாடுகின்றனர். வேடிக்கை பார்ப்பதிலும்,சுவரொட்டிகளை ரசிப்பதிலும்,இதரக் கவர்ச்சிகளிலும் தங்களை ஈடுபடுத்துவதில் குறியாக உள்ளார்கள். ஆனால் இதற்கு மாறாக ஆசிரியர்கள்,பெற்றோர்கள் தங்களின் கட்டளைகளுக்கு அடிபணிய வைக்கவே விரும்புகின்றனர். குழந்தைகள் தங்களின் ஆளுமையின் வளர்ச்சிக்கு மகிழ்ச்சியும்,அன்பும் பெறக்கூடிய சூழலில் பெரும்பாலும் வளரவில்லை,இல்லை வளர்க்கவில்லை என்றே கூறலாம்.

மூன்றரை வயதில் பள்ளிக்குள் நுழையும் போது ஒவ்வொரு குழந்தைகளும் தங்களுக்கு விருப்பமின்றியே நுழைகின்றனர். இவர்களின் பள்ளி அனுபவம் தான் கல்வியாக அமைய வேண்டும். ஆனால் இந்த அனுபவம் அவர்களை பெரும்பாலும் திணற வைக்கின்றது.

சுதந்திரத்தைத் தடை செய்யும் சுமைகள்:

aarambappalli8எடைச்சுமை,பாடச்சுமை,கற்கும் சுமை இவற்றைப் போன்ற சுமைகளை பள்ளிச் சிறார்கள் எதிர்கொள்ள வேண்டிய காலச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தொடக்கப் பள்ளிகளில் 20 நிமிடங்கள் அளவிற்குத்தான் பாடங்களிலிருந்து வீட்டுப்பாடம் தரவேண்டும். ஆனால் அதிக வீட்டு வேலையைக் கொடுப்பதால் குழந்தைகள் முடிக்க முடியாமல் திணறும் நிலையைக் காண்கிறோம்.

சிறுவர்களின் வாழ்க்கை அனுபவங்களோடு பள்ளிப் படிப்பறிவு இணைக்கப்படுவதில்லை.ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குத் தகுந்த நுண்ணறிவோடு பதில் கூற முடியாதே என்ற தயக்கம் சிலருக்கு,பலர் கற்பனை உலகில் இருப்பதால் ஆசிரியர் பாடம் நடத்தும்போது கவலையின்றி இருக்கிறார்கள்.

சில குழந்தைகள் பெற்றோரைச் சிறுவயதில் இழப்பதாலும்,குடும்பத்தில் நடந்த கொடூரச் சம்பவங்களாலும் மனமுடைந்து போய் நீங்காத நினைவுகளில் புதைந்து கிடக்கிறார்கள். இதிலிருந்து மீள முடியாததால் படிக்க முடியாமல் தவிக்கின்றார்கள்.

இன்றைய பள்ளிகளில் அச்சுறுத்தக்கூடிய பயமுறுத்தக்கூடிய பல கூறுகள் குழந்தைகளை பள்ளியிடமிருந்து அந்நியப்படுத்துகின்றனர். அதில் வகுப்பறை,ஆசிரியர்கள்,கால அட்டவணை,பாடத்திட்டம்,தேர்வுகளும் தேர்வின் முடிவுகளும்,பள்ளி நிர்வாகத்தின் சட்டதிட்டங்கள்,கல்வித் துறையின் அச்சுறுத்தல்.

வகுப்பறை:

aarambappalli4கவர்ச்சி இல்லாத வகுப்பறை,அளவுக்கு மீறிய குழந்தைகளின் எண்ணிக்கை,இவர்களுக்கு இடம் பற்றாக்குறை இவற்றால் ஆசிரியர்கள் ஒரு சில குழந்தைகளை மட்டும் சிந்தனையைத் தூண்டிப் படிக்க வைக்கின்றனர். சிலர் புறக்கணிக்கப்படுகின்றனர். பலர் மறைந்தே வாழ்கின்றனர். குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒரே மாதிரி இல்லை. தனித்தனி பண்புகள் உடையவர்கள். எனவே ஒவ்வொருவருக்கும் ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். ஆனால் இவ்வாறு பெரும்பாலும் இல்லை என்பதே உண்மை.

ஒரே விதமான துளைகளில் வேறு வேறு வடிவங்களை உடைய முகங்களைப் பொருத்துவது கடினம். இவ்வாறே குழந்தைகள் பல்வேறு சூழலில் பல்வேறு வடிவங்களுடன் வகுப்புக்கு வருகிறார்கள். இவர்கள் ஒரே விதமாக அமைவது முடியாத காரியம். குழந்தைகளின் வேறுபட்ட தன்மைகளுக்கு ஏற்றார்போல் வடிவங்களை வகுப்பறையில் மாற்றி அமைப்பது முக்கியமாகும்.

எடுத்துக்காட்டாக சிறுவர்கள் படிக்கும் வகுப்பறையில் அனைத்து மாணவ-மாணவிகளும் கரும்பலகையை பார்த்தவாறே அமர்கின்றனர். ஆனால் இந்த முறையை மாற்றி அனைத்து மாணவர்களோடு ஆசிரியரும் சேர்ந்து,வட்டவடிவில் தரையில் அமர்ந்து அவர்களோடு இணைந்து பாடம் நடத்தினால் அதை அனைவரும் இன்புற்று கேட்பார்கள்.

மேலும் வகுப்பறையில் முதலாம் வகுப்பு குழந்தைகளுக்கு கைக்கெட்டும் அளவிற்குக் குறையாமல் கரும்பலகை அமைத்தல் வேண்டும். எழுத்துப் பலகையும்,கரும்பலகையும் தான் முதல் வகுப்பு குழந்தைகளுக்கு வேண்டியவை. நோட்டு புத்தகங்கள் அல்ல. ஆனால் இதற்கு மாறாக இன்றைய கல்வி முறையில் பல்வேறான நோட்டு புத்தகங்களை வழங்கி சிறுவர்களை வேலை வாங்குவது என்பது காய்களை அடித்து அடித்து பழமாக்கும் முயற்சியே.

ஆசிரியர்கள்:

aarambappalli5இன்று தமிழகத்தில் 1,90,015 இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். குழந்தைகளுக்கு ஆசிரியர்தான் ஒரு சிறந்த முன்மாதிரி ஆசிரியர்களின் கடுப்பான முகம்,கையில் வைத்திருக்கும் குச்சி,வாயிலிருந்து புறப்படும் கடுமையான சொற்கள்,வழங்கும் தண்டனைகள்,கேட்கும் கேள்விகள் இவற்றால் குழந்தைகள் அச்சமும்,வெறுப்பும் கொண்டு ஆசிரியரை விட்டு அகன்று செல்கின்றனர்.

ஆசிரியர்கள்,குழந்தைகள் உறவு ஆழப்படுத்தப்பட வேண்டும் குழந்தைகளின் குடும்பச் சூழல்,பின்னணி,அவர்களின் போக்கு,இவற்றை அறிந்திருக்க வேண்டும் ஆசிரியர்கள் குழந்தைகளின் நிலைக்கு தங்களை வளைத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய தொடக்கப் பள்ளிகளில் இயந்திரமயமாக மனப்பாடம் செய்வதே குழந்தைகளின் நிலையாக இருக்கிறது. இதனால் குழந்தைகள் மழுங்கடிக்கப்படுகிறார்கள்.

எடுத்துக்காட்டாக கரும்பு எப்படி இருக்கும்? என்ற கேள்விக்கு புத்தகத்தில் இருந்த கருத்தை கரும்பையே நேரில் பார்க்காத குழந்தை பதில் எழுதினால் மதிப்பெண் கிடைக்கிறது. கிராமத்தில் கரும்பை காட்டில் பார்த்து வளர்ந்த குழந்தை கரும்பைப் பற்றி எழுதினால் மதிப்பெண் வழங்கப்படுவதில்லை. காரணம் புத்தகத்தில் என்ன உள்ளதோ அதை மட்டும் மனப்பாடம் செய்து எழுதினால் போதும் என்கிறது இன்றைய கல்வி முறை.

இறுக்கமான கல்வி அமைப்பில்,குழந்தைகளில் ஒரு சிலர் மட்டுமே திறமைசாலிகளாக வளருகின்றனர். ஒரே இடத்தில் அமரச்செய்து போதிப்பதால் குழந்தைகளுக்கும் சலிப்பு ஏற்படுகிறது. தவிர கல்வி கற்பிப்பது ஆசிரியரின் வயிற்றுப் பிழைப்பிற்கான ஒரு தொழிலாக மாறிக்கொண்டே வருகிறது. ஒழுங்காக பள்ளி நேரத்தில் வருகை தராமல்,கற்பித்தலுக்கான போதிய தயாரிப்பு இல்லாமல் வகுப்பிற்குள் சில ஆசிரியர்கள் நுழைகிறார்கள் எனவே இத்தகையோர் கற்பிக்கும் கல்வி கவர்ச்சி அற்றதாக அமைகிறது. இந்நிலையை ஆசிரியர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஒரு பாடத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் குழந்தைகளின் மண்டைக்குள் புகுத்திவிட வேண்டும் என்ற நெருக்கடியோடு ஆசிரியர்கள் செயல்படுவதால் குழந்தைகள் வெறுப்பு அடைகின்றனர். பாடத்தை முடிப்பதே முக்கிய நோக்கமாகக் கொண்டு கற்பிக்காமல் குழந்தைகள் நன்கு புரிந்து கொள்ளும் அளவிற்கு சொல்லிக் கொடுப்பதுதான் ஆசிரியரின் கடமை. கவனி,படி,அங்கே பார்க்காதே,இங்கே பார்,எழு,உட்கார் என்ற கட்டளைச் சொற்களைத் தவிர்த்து கவனிப்போமா? படிக்கலாமா? என்று அவர்களோடு உரையாடுவது போன்று குழந்தைகளை மனரீதியாக ஊக்குவிப்பது பயனளிக்கும்.

ஒவ்வொரு ஆசிரியர்களும் வகுப்பறையில் ஆசிரியரைப்போல் நடந்து கொள்ளாமல் தானும் ஒரு குழந்தை போல குழந்தைகளிடம் நடந்துகொள்ளும் போது கற்றலும்,கற்பித்தலும் எளிமையானதாகவும்,அனைவரும் விரும்பக் கூடியதாகவும் அமையும்.


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு…”

அதிகம் படித்தது