மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆரிய திராவிட கிரகணம் – ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு)

சாகுல் அமீது

Jan 7, 2017

siragu-jallikattu

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் மாதிரி இது என்ன புதிதா ஆரிய திராவிட கிரகணம் என்று கேட்கிறீர்களா? கிரகணத்தன்று சூரியனும் நிலாவும் ஓரே நேர்கோட்டில் வருவது போன்று ஆரிய கொள்கைகள் கொண்டவர்களும் திராவிட கொள்கைகள் கொண்டவர்களும் ஒரே நேர்கோட்டில் செயல்படும் சூழ்நிலைகள் தான் ஆரிய திராவிட கிரகணம். அவ்வப்போது நடக்கும் இந்த மறைமுக நிகழ்வு தற்போது ஜல்லிக்கட்டை ஒட்டி வெட்ட வெளி மைதானத்திற்கு வந்திருக்கின்றது.

இங்கு ஆரியம் என்று பொதுவாக ஒரு சாதியினரை குறிப்பிடவில்லை. உழைத்தது சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு செல்வம் கொண்டு பொழுதுபோக பொது வாழ்க்கை வாழ்பவர்களில் சிலரை மட்டுமே குறிப்பிடுகிறேன். அவர்கள் இலங்கை, பாலஸ்தீன், ஆப்பிரிக்கா என்று உலகில் இருக்கும் அத்தனை மனிதர்கள் படும் துன்பங்களை எல்லாம் போராடி வழக்குகள் வாதாடி முழுமையாக தீர்த்து விட்டதால் மீதம் இருக்கும் பொழுதுகளை விலங்குகளை காக்க களமிறங்கி இருக்கும் பணக்கார பார்ப்பனர்ககளை மட்டுமே இங்கு ஆரியம் என்று குறிப்பிடுகிறேன். இந்த பணக்கார பார்ப்பனர்களுக்கு உழைக்கும் மக்கள் எல்லோரும் இன்னும் நாகரீகம் அடையாதவர்கள். உழைக்கும் மக்களின் வாழ்க்கை முறைகள் அனைத்தும் காட்டு மிராண்டித்தனம்.

அதே போன்று இங்கு திராவிடம் என்பது பெரியாரின் கொள்கைகளை பின்பற்றும் உழைக்கும் மக்களை குறிப்பிடவில்லை. பெரியாரையும் அவரது கொள்கைகளையும் மக்களிடம் இருந்து பிரித்து நாங்கள் தான் தீவிர திராவிடர்கள் நாங்கள் சொல்வது தான் திராவிட கொள்கைகள் என்று புரட்டு பேசும் வறட்டு திராவிடர்களை மட்டுமே குறிப்பிடுகின்றேன். பேருந்து நடத்துனர் சில்லறை தராததற்கு பாகிஸ்தான் தீவிரவாதம் தான் காரணம் என்று கூறும் போலி தேசபக்தர்கள் போன்று நாட்டில் நடக்கும் எந்த சிறு எதிர்மறை செயலுக்கும் பார்ப்பனர்கள் மட்டுமே காரணம் என்று தொடங்குவதிலே நீங்கள் எளிதாக இந்த வறட்டு திராவிடர்களைக் கண்டறிய முடியும். பெரியார் கொடுத்த பகுத்தறிவை தொலைத்து விட்டு பார்ப்பனர்களின் வீடுகளில் தேடிக்கொண்டிருக்கும் குருட்டு திராவிடகர்களை மட்டுமே இங்கு குறிப்பிடுகின்றேன்.

இப்படி எதிர் எதிர் திசையில் செயல்படும் என்று பொதுவாக நாம் நினைத்து கொண்டிருக்கும் பணக்கார பார்பனீயமும் வறட்டு திராவிடமும் இணையும் கிரகணங்களில் ஒன்று தான் ஜல்லிக்கட்டு.

பணக்கார பார்ப்பனர்கள் கூறும் விலங்கு பாதுகாப்பு என்பது ஜல்லிக்கட்டிற்கு முற்றிலும் பொருந்தாது என்பது ஜல்லிக்கட்டை ஒருமுறை நேரில் பார்த்தவர்கள் கூட உறுதியுடன் கூற முடியும். இன்று பேராசிரியர் பூரணசந்திரன் முகநூலில் பதிவிட்டிருந்த கருத்தில் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ஏ.எல். பாஷம் தனது The Wonder that was India என்ற நூலில் எழுதி இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

“One form of animal contest confined to the Dravidian South was the bullfight, of which we have a vivid description in an early Tamil poem.(note: He means a poem from Kalittogai.) This sport did not closely resemble the Spanish bullfight, where the scales are heavily weighted against the bull, for here the bull appears to have had the advantage….they (i.e. the Tamils) made no attempt to kill the bull, and it was not previously irritated, but the bullfight was evidently a sport of great danger (i.e. for men, not for the bull), for the poem gives a gory description of a victorious bull, his horns hung with the entrails of his unsuccessful opponents….(A.L. Basham, The Wonder that was India, 3rd edition, Picador, p.211)

இதில் பாஷம் தெளிவாக, இது மனிதர்களுக்கு ஆபத்தான விளையாட்டு மாட்டிற்கல்ல என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் எத்தனை சான்றுகள் கொடுத்தாலும் கேட்கும் மனநிலையில் இல்லாதவர்கள் இந்த பணக்கார பார்ப்பனியர்கள். வெளிநாட்டு அமைப்பை இங்கு தொடங்கி டாலர்களில் வரும் பணத்தை செலவு செய்து பரப்புரை செய்து கொண்டு இருக்கிறார்கள். இதே போன்று வெளிநாட்டு அமைப்பில் தொடர்புடைய யாரேனும் மக்களின் நலனுக்கு பரப்புரை செய்தால் உடனே வெளிநாட்டு சதி தேச துரோகம் என்று முத்திரை குத்துபவர்களும் இவர்களே. மாட்டுக்காக வரும் டாலர் நல்ல பணம் நாட்டுக்காக வரும் டாலர் கள்ள பணம்?

siragu-jallikkattu3

வறட்டு திராவிடர்கள் ஜல்லிக்கட்டை தடுக்க கூறும் காரணம் இந்த விளையாட்டில் சாதி வித்தியாசம் இருக்கின்றது. சாதி ஒழிக்கப்பட வேண்டியது என்பதில் நல்ல மன நிலையில் இருக்கும் எந்த மனிதருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் சாதியை காரணமாகக் கூறி ஜல்லிக்கட்டை தடுக்க நினைப்பது அவர்கள் மற்ற அனைத்து இடங்களிலும் சாதியை ஒழித்துவிட்டார்களோ என்று கேள்வியைத் தான் எழுப்புகின்றது. திருமணத்தில் சாதி பார்க்கிறார்கள் என்பதற்காக திருமணத்தை தடை செய்ய கோருகின்றார்களா என்ன? சாதியை தவிர்த்து திருமணத்தை நடத்திக் காட்டுகின்றார்களே, அதே போன்று சாதியை விடுத்து ஜல்லிக்கட்டு நடத்தி காட்டலாமே? பெரியார் இன்று இருந்தால் இதைத் தானே செய்திருப்பார்.

ஆடு, மாடு, கோழி போன்ற பிராணிகள் மக்களின் செல்வங்களாக கருதப்படுவைகள். அதன் உரிமையாளர்கள் அவற்றைப் பராமரிக்க பொறுப்புடையவர்கள். கடா வெட்டி விருந்து வைப்பதற்கும், கோழி அடித்து குழம்பு வைப்பதற்கும் அதன் உரிமையாளருக்கு உலக அனுமதி இருக்கின்றது. பல இடங்களில் மாடுகளுக்கும் அதே நிலமை தான். ஆனால் தமிழ்நாட்டில் மாடு, குடும்ப உறுப்பினர் போன்று வளர்க்கப்படுவது உலகறிந்தது.

ஒரு மாட்டை வளர்ப்பது எவ்வளவு பொறுப்புகளுடைய செயல் என்பது மாட்டை திரையில் பார்ப்பவர்களுக்குப் புரியாது. எங்களுடைய நேரத்தையும் பொருளையும் செலவு செய்து நாங்கள் வளர்க்கும் எங்களது சொந்த மாடுகளை எங்கள் ஊர் மைதானத்தில் எங்கள் சொந்தங்களுடன் விளையாட விடுவதை சென்னையில் இருந்தும் டில்லியில் இருந்தும் தடுப்பதற்கு யார் இவர்கள்? இன்று இத்தடையை வேடிக்கைப் பார்த்தால், நாளை விவசாயத்திற்கு மாடு பயன்படுத்தக் கூடாது, ஆடு- கோழி சாப்பிடக் கூடாது என்று ஒவ்வொன்றாகத் தடை செய்வார்கள்.

திரையில் கதாநாயகன் பலரை வெட்டிக் கொள்வதை மட்டுமே வீரம் என்று பார்த்து வளர்ந்தவர்கள், வீர விளையாட்டு என்றால் சிங்கத்துடன் விளையாட வேண்டியது தானே என்று கேட்கிறார்கள். மாட்டுடன் விளையாடுவது வீரமில்லை என்றால் கோட்டு சூட்டுடன் வந்து எங்கள் மாட்டுக் கொம்பை தொட்டுத்தான் பாருங்களேன். வீரத்தைத் தெரிந்து கொள்ள உங்களுக்கு ஒரு எளிய சோதனை சொல்கிறேன். நீங்கள் வசிக்கும் மாநகரில் ஏதேனும் ஒரு கடைத்தெருவில் நடந்து சென்று எதிரே வருபவரின் கன்னத்தில் அறைந்து பாருங்கள். அடி வாங்கியவர் கன்னத்தைத் தடவிக்கொண்டே செல்வார், சுற்றி இருப்பவர்களும் வேடிக்கை தான் பார்ப்பார்கள். இதே சோதனையை மதுரையின் ஏதேனும் ஒரு தெருவில் செய்து பாருங்கள் வீரத்தை அன்று விளங்கிக் கொள்வீர்கள்.

ஜல்லிக்கட்டை எதிர்க்கும் நீங்கள் எந்த அமைப்புக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், உங்கள் அமைப்பு அல்லது கட்சித் தலைவரை ஜல்லிக்கட்டைத் தடுக்க வேண்டும் என்று நேரடியாக அறிக்கை விடச்சொல்லுங்கள் பார்க்கலாம் உங்களுடைய வீரத்தையும் உங்களது தலைவர்களின் வீரத்தையும்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எங்கள் காளைகளைத் தவிர வேறேதும் எங்களுக்குத் தேவையில்லை. ஆனால் எங்களைத் தடுப்பதற்கு உங்களுக்குத் தான் சட்டம், நீதி மன்றம், காவல் துறை என்று தேவை இருக்கின்றது. நீங்கள் அனுப்பும் காவல் படையினர் யாரும் இந்தி பேசும் அயல் மாநிலத்தவறன்று. எங்கள் ஊரில் குடும்பம் நடத்தும் எங்கள் சொந்தங்கள் தான். அவர்கள் எப்படி எங்களைத் தடுப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், எங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பரிச்சியமானது தான். நடப்பது வழக்கம் போல் நடக்கும், என்ன வித்தியாசம் என்றால் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களில் படங்கள் வெளிவராமல் நடத்த வேண்டும். உங்கள் கையில் இருக்கும் பெரு ஊடகங்களில் ஜல்லிக்கட்டு தடுக்கப்பட்டது என்று ஒரு காவல் வாகனம் மற்றும் சில காவலர்கள் வேகமாக நடந்து செல்லும் செய்தியைக் கண்டு நீங்கள் மகிழ்ந்து கொள்ளுங்கள். எங்கள் கையில் இருக்கும் சமூக ஊடகங்களில் சீறிப் பாய்ந்த காளைகளைக் கண்டு நாங்கள் மகிழ்ந்து கொள்கிறோம்.


சாகுல் அமீது

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆரிய திராவிட கிரகணம் – ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு)”

அதிகம் படித்தது