மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆரோக்கியம் + இன்பம் = மேசைப்பந்தாட்டம்

சிறகு நிருபர்

Mar 21, 2015

ஆரோக்கியம் + இன்பம் = மேசைப்பந்தாட்டம்

விளையாட்டு என்பதுஉள்ளத்திற்கு  உற்சாகத்தையும், உடலுக்கு உறுதியையும் கொடுக்கும் விடயத்தில் ஒன்று. வீட்டினுள் விளையாடும் விளையாட்டோ, மைதானத்தில் விளையாடும் விளையாட்டோ, எதுவாயினும் மன மகிழ்ச்ச்சியைத் தரும் (இங்கே கணிப்பொறி விளையாட்டை குறிப்பிடவில்லை). சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் விளையாட்டில் ஆர்வம் இருக்கும். விளையாட முடியாவிட்டாலும், விளையாட்டை நேரிலோ, தொலைக்காட்சியிலோ பார்த்து மகிழ்வர்.

அப்படிப்பட்ட விளையாட்டுக்களுள் ஒன்றாக, மேசைப்பந்தாட்டம் (Table Tennis) விளையாட்டைக் கூறலாம். அனைவரும் எளிதாக விளையாடக் கூடிய விளையாட்டு, மேசைப்பந்தாட்டம். எண்ணற்ற நன்மைகள் கொண்ட, இந்த விளையாட்டு உலகம் முழுதும் மிக பிரபலமானதாகும். பிரிட்டனில் உருவான இவ்விளையாட்டு சீனாவின் தேசிய விளையாட்டாக உள்ளது.

ஒன்பது அடி நீளமும் ஐந்து அடி அகலமும் கொண்ட மேசையில், நடுவில் வலை ஒன்று கட்டப்பட்டிருக்கும். விசிறி அளவிலான சிறிய மட்டைகளைகொண்டு மிக லேசான பந்தை மேசையின் இருபக்கமும் தட்டி, விளையாடவேண்டும். எளிமையான விதிகள் கொண்ட இவ்விளையாட்டை, விளையாடுவதால் ஏராளமான பலன்கள் கிடைக்கிறது. கற்றுக்கொள்வது மிக எளிது, குறுகிய காலத்தில் நன்கு பயிற்சி பெற்றுவிட முடியும். சற்றே பெரிய ஒரு அறையில் (பெரிய அறையா.. இங்க தான் இடிக்குது) அமைத்து விட்டால் ஆண்டு முழுதும் விளையாடலாம். விளையாடி விட்டு மடக்கி வைத்து விடக் கூடிய மேசைகளும் கிடைக்கின்றன.

மேசைப்பந்தாட்டம் விளையாட்டை வயது வித்தியாசம் இன்றி யார் வேண்டுமானாலும் விளையாடலாம். குடும்பத்தில் உள்ள அனைவரும் விளையாட முடியும், உடல் பலம் என்பது இதற்கு ஒரு தடையே அல்ல. ஒற்றையர் ஆட்டமாகவோ அல்லது இரட்டையர் ஆட்டமாகவோ விளையாட கூடிய அற்புதமான ஒன்றாகும். பெண்களும் எளிதாக இந்த விளையாட்டை விளையாட முடியும். மைதானம் தேவையில்லை என்பதால் மழை, வெயில் என்று எந்த காலத்திலும் விளையாடலாம்.

உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய டேபிள் டென்னிஸ் கைகளுக்கும், மேல் உடல் பகுதிக்கும், கால்களுக்கும் நல்ல பயிற்சியை தரக் கூடியதாகும். கண்களுக்கும் கைகளுக்கும் உள்ள விரைவான ஒருங்கிணைவு (Hand Eye Co-ordination) மிகவும் பலப்பட்டு பல்வேறு நன்மைகளை தரும். கீழே குனிவது, நிமிர்வது, நகர்வது அதிகம் உள்ளதால் உடலின் ரத்த ஓட்டம், செயல் திறன் ஆகியவை அதிகரிக்கும். ஆனால் உடலுக்கு எந்தவொரு காயத்தையோ, எலும்பு முறிவு போன்ற துன்பத்தையோ ஏற்படுத்தாது.

உடலுக்கு மட்டுமன்றி யோசித்தல், திட்டமிடுதல் என்று மூளைக்கும் நிறைய வேலை இருப்பதால், மூளைத் திறனையும் இந்த விளையாட்டு அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை குறைத்து லேசாக்குவதால் பல அலுவலகங்களில் ஊழியர்கள் விளையாட இந்த விளையாட்டு மேசை அமைக்கப்பட்டிருக்கும்.

மிக குறைந்த செலவில் இந்த விளையாட்டுக்கான மேசையை அமைத்துவிட முடியும், இதற்கு பயன்படும் மட்டைகளையும், பந்துகளையும் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும். நமது வீட்டிலேயே ஒரு பெரிய அறையில் அமைத்துவிட்டால் தினமும் விளையாடி களிக்கலாம். பொதுவான இடத்தில நண்பர்கள் பலர் இணைந்து அமைத்தால் செலவும் குறையும், விளையாடவும் நிறைய ஆட்கள் இருப்பார்கள். இப்படி ஏராளமான நன்மைகளை தருகிற இந்த விளையாட்டை ஆடி உடல் மற்றும் உள்ளத்து ஆரோக்கியத்தினை பேணுவோம். இன்பம் அடைவோம்.


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆரோக்கியம் + இன்பம் = மேசைப்பந்தாட்டம்”

அதிகம் படித்தது