மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆரோக்கிய வாழ்விற்கு வழிகோலும் மத்தியதரைக்கடல் நாடுகளின் உணவுமுறை

தேமொழி

Mar 26, 2016

arokiya vaazhvirku1மெடிட்டரேனியன் டயட் (Mediterranean Diet) என்ற பத்திய உணவுமுறை ஒரு ஆரோக்கியமான உணவுமுறை என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் உணவுமுறையாகும். இந்த மாதம், மார்ச் 2016, தேசிய ஊட்டச்சத்து மாதம் (March is National Nutrition Month 2016) என்பதால் இந்த உணவுமுறை மீண்டும் இம்மாதம் பரவலாக செய்திகளில் பேசப்படுகிறது. உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பிரிவு பிரசுரிக்கும் “ஹார்வர்ட் ஹார்ட் லெட்டர்”(Harvard Heart Letter – http://www.health.harvard.edu/newsletters/harvard_heart_letter/2016/april) என்ற செய்தி அறிக்கையின் சமீபத்தியப் பதிப்பு (ஏப்ரல் – 2016); மெடிட்டரேனியன் டயட் உணவுமுறை இதயநோய் வருவதைத் தடுக்க உதவும் என்பதுடன் நிரந்தர உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. ஐந்து ஆய்வறிக்கைகளை ஆராய்ந்து இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

சற்றொப்ப 1,000 அதிக எடையும், உடற்பருமனும் (overweight or obese people) கொண்டவர்கள் பங்குபெற்ற ஆய்வில் மெடிட்டரேனியன் டயட் உணவு முறையுடன், பிற உடல் எடை குறைக்கப் பரிந்துரைக்கப்படும் உணவு முறைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவை முறையே குறைந்த கொழுப்பு உணவு (low-fat diet), குறைந்த மாவுச்சத்து உணவு (low-carb diet), மற்றும் அமெரிக்க நீரிழிவு சங்கம் (ADA-American Diabetes Association) பரிந்துரைக்கும் உணவு ஆகிய உணவு முறைகளாகும். ஒரு ஆண்டுக்குப்பிறகு மெடிட்டரேனியன் டயட் உணவு முறையைப் பின்பற்றியவர்கள் 5 முதல் 10 கிலோ வரை எடை குறைந்திருப்பதும், குறைந்த கொழுப்பு உணவு முறையைப் பின்பற்றியவர்களையும் விட அதிக எடை குறைந்தவர்களாக அவர்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

verkadalai8உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்குப் பலவகை உணவுமுறைகளைப் பின்பற்ற வாய்ப்பிருந்தாலும், 30% மாரடைப்பையும் பக்கவாதத்தையும் தடுக்க உதவும் மெடிட்டரேனியன் டயட் முறையைப் பின்பற்றுவதை கடைப்பிடிக்கலாம், இதய நோய்களைத்தடுக்க மெடிட்டரேனியன் டயட் உணவு முறை சிறந்தது என்று அந்த அறிக்கையில் அறிவுரையும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆம்! ஆரோக்கிய வாழ்விற்குப் பலவகை உணவுமுறைகளைப் பின்பற்றி உணவுக்கட்டுப்பாட்டில் இருக்க விரும்புபவர்களுக்கு, நிரந்தரமாகப் பலனளிப்பது ஒரு சில உணவு முறைகளே. அதிலும் மருத்துவர்களால் உடல்நலத்திற்கு ஏற்ற, சமச்சீர் ஊட்டச்சத்து கொண்ட, சரிவிகித உணவு முறை என்றுஇதயநோய், நீரிழிவு நோய் போன்றவை வருவதைத் தடுக்க உதவும் உணவுமுறைகள் என்று பரிந்துரைக்கப்படும் முறைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். பெரும்பான்மையான உடல் எடையைக் குறைக்கப் பரிந்துரைக்கப்படும் உணவு முறைகள் ஏதோ ஒருவகையில் சமச்சீரற்ற உணவுவகையாக அமைவதுடன், சுவையிலும், நடைமுறையில் கடைபிடிப்பதிலும் குறைவைப்பதால் சிறிது நாட்களுக்குப் பிறகு அந்த உணவுமுறைகள் கைவிடப்படுவதும் வழக்கம். பல உணவுமுறைகளைப் பயன்படுத்திப் பார்த்து கைவிட்டவர்கள் ஏராளமானோர்.

arokiya vaazhvirku2உடலெடையைக் குறைப்பதற்கு என்று பரிந்துரைக்கப்படும் உணவுமுறைகள் யாவுமே உண்பதைக் குறைக்கவும், பசி எழாமல் வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும் உணவுகளை உண்பதற்கும் பரிந்துரைக்கும். அவை கார்போஹைட்ரேட் என்ற மாவுச்சத்து அல்லது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதையும், வயிறு முழுமையடையும் உணர்வைத் தரும் புரதச்சத்துக்களையும், நார்ச்சத்துக்களை அதிகரிப்பதையும் முதன்மைப்படுத்தும். அதிகக் கொழுப்புவகைகளை, குறிப்பாக இதயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் கொழுப்பு வகைகளைக் கட்டுப்படுத்துவதைக் குறிக்கோளாகவும் கொண்டிருக்கும். இந்த அடிப்படையைப் பலவகைகளில் மாற்றியமைத்து உணவின் அளவைக் குறைப்பதையும் அத்துடன் உடற்பயிற்சியை அதிகரிக்கும் அறிவுரைகளும் கொடுக்கப்படும்.

ஆரோக்கியமான உணவை உடலுக்குத் தேவையான முறையில், வயதுக்கு ஏற்ற வகையில், செய்யும் உடல் உழைப்பிற்குத் தக்க அளவில் உண்பதும் உடற்பயிற்சியும் தொடர்ந்து மருத்துவர்களால் ஆரோக்கிய வாழ்விற்காகப் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது, இதில் இன்று வரை எந்த மாறுதலும் இல்லை.

இதயநோய் வருவதைத் தடுக்க உதவும் என்று பரிந்துரைக்கப்படும் மெடிட்டரேனியன் டயட் என்பது மத்தியதரைக்கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள் காலம் காலமாகப் பின்பற்றும் உணவு முறை. இது தாவர உணவு முறையை முதன்மையாகக் கொண்டது. இந்த உணவு முறையில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், அவரை, மொச்சை, பயறு, பருப்பு, கொட்டை வகைகள், மூலிகைகள், மீன், கடல் உணவு மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியன நிறைந்திருக்கும். முட்டை, பால், தயிர், பாலாடைக் கட்டி, பறவைக்கறி ஆகியவை மிகக் குறைவாக உட்கொள்ளப்படும். சிவப்பிறைச்சி, அதிகக் கொழுப்பு, உப்பு நிறைந்த உணவுகள் தவிர்க்கப்படும். இந்த உணவும் அதை உண்ணும் கலாச்சார முறையும் யூனெஸ்கோ (UNESCO) நிறுவனத்தால் மானுடவியல் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பல மருத்துவ ஆய்வறிக்கைகள் மெடிட்டரேனியன் டயட் உணவுமுறையைப் பின்பற்றினால் மாரடைப்பு (heart attack), பக்கவாதம் (stroke), சர்க்கரை/நீரிழிவு நோய் (type 2 diabetes), உயர் இரத்த அழுத்தம் (high blood pressure), முடக்கு வாதம் (Rheumatoid arthritis), மன அழுத்தம் (Depression), மறதி நோய்கள் (Parkinson’s disease and Alzheimer’s disease), புற்றுநோய் (Cancer) ஆகியவை தடுக்கப்படும் என்றும்ஆயுள் (longevity) அதிகரிக்கும், முதுமையின் அறிகுறிகள் (Aging) தாமதப்படுத்தப்படும் என்றும் தொடர்ந்து கூறி வருகின்றன.

இவ்வாறு தொன்றுதொட்டு கடைபிடிக்கும் ஆரோக்கிய உணவுமுறையினால் மத்தியதரைக்கடல் நாடுகளின் பகுதிகளில் வாழும் மக்களிடம் நோய்கள் குறைவாக இருப்பதும், அவர்கள் நீண்ட நாள் வாழ்வதையும் கவனித்தப் பிறகு இந்த உணவுமுறை “மெடிட்டரேனியன் டயட் ” என அமெரிக்க மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டு சற்றொப்ப ஒரு கால் நூற்றாண்டும் ஆகிறது. ஒவ்வொரு உணவிலும் சிவப்பிறைச்சி, அதிக சர்க்கரை கொண்ட பானங்கள், மாவுச்சத்து நிறைந்த உணவுகள், அதிகக் கொழுப்பு நிறைந்த உணவுகள் என்பது போன்ற உணவுப் பழக்கத்தினைக் கடைப்பிடிக்கும் அமெரிக்க மக்களுக்கு இந்த ஆரோக்கிய மெடிட்டரேனியன் டயட் உணவுமுறை 1993 ஆண்டு ‘ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் மருத்துவப்பள்ளி’, ‘உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய அலுவலகம்’ மற்றும் ‘ஒல்ட்வேஸ்’ என்ற அமைப்பு (the Harvard School of Public Health, the European Office of the World Health Organization and Old ways) ஆகியன ஒருங்கிணைந்து உருவாக்கி, ஹார்வர்ட் பல்கலைக்கழக கருத்தரங்கு ஒன்றில், உணவுப் பிரமிடு படத்துடன், உணவுமுறையைக் கடைப்பிடிக்கும் விளக்கத்துடன் வெளியிட்டன.

arokiya vaazhvirku13இந்த உணவுப் பிரமிடு 1960-களில் மத்திய தரைக்கடல் நாடுகளில் நோய்கள் குறைவாக இருந்தபொழுதும், மருத்துவ வசதிகள் இல்லாத இடங்களிலும் மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்த காலத்தில் அவர்கள் உட்கொண்ட உணவுமுறையைப் பின்பற்றியும், தற்கால அறிவியல் ஆய்வுகள் வழியாகக் கிடைத்த முடிவுகளைக் கொண்டும் வடிவமைக்கப்பட்டது. இந்த உணவுப் பிரமிடு பல ஆரோக்கிய உணவுமுறைகளைப் வடிவமைப்பதற்கும் வழி காட்டியாக அமைந்தது. எனவே தொன்றுதொட்டு பலன்தரும் உணவுக் கலாச்சாரம் ஒன்று மேற்குலகில் மக்களின் கவனத்தைக் கவர்ந்து, அரை நூற்றாண்டாக அமெரிக்க மண்ணிலும் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆனாலும், அவசரகதி வாழ்க்கையில் சிவப்பிறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவு, விரைவுணவு, அதிக இனிப்புகள், இனிப்பு நிறைந்த பானங்கள், குறைந்த அளவே உணவில் காய்களும் பழங்களும், அதிகக் கொழுப்பு, அதிக மாவுச்சத்து என்ற உணவுமுறையும், உடற்பயிற்சியே இல்லாத வாழ்க்கைமுறைதான் பெரும்பாலான அமெரிக்கர்களின் வாழ்க்கைமுறையாக அமைந்து உடற்பருமன், அதன் விளைவாக இரத்த அழுத்தம், இதயநோய், சர்க்கரை நோய் என்பது மாற்ற முடியாத வழக்கங்கள் மக்களிடம் நிலைபெற்றுவிட்டது.

மெடிட்டரேனியன் டயட் என்பதன் அடிப்படை:

மத்தியதரைக்கடலைச் சூழ்ந்துள்ள நிலப்பரப்பில் உள்ள நாடுகளில்; குறிப்பாக சைப்ரஸ், குரோஷியா, ஸ்பெயின், கிரீஸ், இத்தாலி, போர்ச்சுகல் (Cyprus, Croatia, Spain, Greece, Italy, Morocco, Portugal) ஆகிய நாட்டு மக்களின் உணவுப் பழக்கமும், வாழ்க்கை நடைமுறைகளையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட உணவுமுறையே மெடிட்டரேனியன் டயட் என்பதன் அடிப்படை. மெடிட்டரேனியன் டயட் முறையைப் பின்பற்றுவோர்…

1. arokiya vaazhvirku4ஆலிவ் எண்ணெய்யை உணவின் முதன்மைக் கொழுப்பாக அல்லது எண்ணெய்யாகப் பயன்படுத்த வேண்டும். ஆலிவ் எண்ணெய்யில் உள்ள வைட்டமின் E, பீட்டா கரோட்டின், மோனோ அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் (vitamin E, beta-carotene, monounsaturated fatty acid) ஆகியவை இதயநோய்களை தடுக்க உதவுகிறது. அத்துடன் சமைக்கும் உணவையும் சுவை மிகுந்ததாக மாற்றுகிறது.

2. arokiya vaazhvirku5அதிகக் காய்கறிகளையும், பழங்களையும், கொட்டைகளையும், பருப்பு, பயறு வகைகளையும் உண்ண வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்கள் மூலம் நார்ச்சத்து, வைட்டமின் என்னும் உயிர்ச்சத்துக்கள், தாதுப்பொருட்கள் ( fibre, vitamins, and minerals) ஆகியவையும், நீரும் நம் உடலுக்குக் கிடைக்கின்றன. தினமும் 5 பழம் அல்லது காய்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பசுமையான தாவர உணவுகளில் உள்ள அதிக ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் (antioxidants), நார்ச்சத்து ஆகியன முதுமை அறிகுறிகளைத் தாமதப்படுத்துவதுடன், இதயநோய், சிலவகைப் புற்றுநோய் ஆகியவற்றையும் தவிர்க்கவும் உதவுகின்றன.

3. arokiya vaazhvirku6ரொட்டி மற்றும் பிற தானிய உணவுகளை (பாஸ்டா, அரிசி, முழு தானியங்கள்) தினமும் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றினால் உடலுக்குச் சக்தி கொடுக்கும் கார்போஹைட்ரேட் என்ற மாவுச் சத்துகள் நம் உடலில் சேரும். நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் ஆகியவற்றையும் தானிய உணவு நமக்குக் கொடுக்கின்றன.

4. புதியவனவாக உள்ளூர் சந்தையில் கிடைக்கும் பொருட்களை, அந்தந்த பருவகாலத்தில் கிடைக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பது ஊட்டச்சத்தும், சுவையும் மணமும் நிறைந்த உணவாக அமையும். வேதிப்பொருட்களால் பதப்படுத்தப்பட்ட, அதிக நாட்கள் சேமித்து வைத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

5. lacteosபால், பால் பொருட்களை முக்கியமாகத் தயிர் மற்றும் சீஸ் என்னும் பாலாடைக்கட்டி உணவுகளைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் பொருட்களின் மூலம் உடலுக்குத் தேவையான புரதங்கள் (proteins), கால்சியம், பாஸ்பரஸ் முதலிய தாதுப்பொருட்கள் அல்லது கனிமங்கள், வைட்டமின்கள் கிடைக்கின்றன. நொதிக்கவைக்கப்பட்ட அல்லது புளித்த தயிர் போன்ற பால் பொருட்களில் உள்ள நுண்ணுயிர்கள் குடலின் நலத்தை மேம்படுத்த உதவுகின்றன.

6. arokiya vaazhvirku8மிகக் குறைந்த அளவே சிவப்பிறைச்சியை உண்ணவேண்டும், இயன்றால் தவிர்த்துவிட வேண்டும். பிற உணவுகள் தயாரிப்பில் சிவப்பிறைச்சியையோ, பதப்படுத்திய சிவப்பிறைச்சியையோ சிறிதளவு எப்பொழுதாவது சேர்த்துக் கொள்ளலாம். சிவப்பிறைச்சியை முதன்மை உணவாக உட்கொள்ளக்கூடாது. சிவப்பிறைச்சியில் இரும்புச் சத்தும், புரதமும் இருந்தாலும், அதிக அளவில் கொழுப்பும் உள்ளது. அதிக அளவு கொழுப்பு உடலுக்கு ஊறு விளைவிக்கும், உறைகொழுப்பாக இரத்த நாளங்களில் படிந்து அவை அடைப்பை ஏற்படுத்தி இதயநோய்க்கு அடிகோலும். எனவே இவற்றை முடிந்தவரைத் தவிர்த்துவிட வேண்டும்.

7. trout filletமுட்டையைக் குறைந்த அளவிலும், மீன்களை அதிக அளவிலும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிவந்த நிற மீன் இறைச்சி கொண்ட, கொழுப்புச் சத்து அதிகமுள்ள மீன்களை வாரத்திற்கு இருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மீன் இறைச்சி விலங்கு இறைச்சி வகையைச் சேர்ந்தவை என்றாலும் மீனில் உள்ள கொழுப்பு தாவரக் கொழுப்பிற்கு இணையானது. இதயத்திற்கு நலம் தரும் கொழுப்பு வகையைச் சார்ந்தது. முட்டை இன்றியமையாப் புரதங்கள், உயிர்ச்சத்துக்கள், தாதுப்பொருட்கள், கொழுப்பு   ஆகியவை அடங்கிய ஒரு முழுமையான உணவு. எனவே மீனுக்குப் பதிலாகவோ அல்லது இறைச்சிக்குப் பதிலாகவோ வாரம் மூன்று அல்லது நான்குமுறை வரைகூட முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மீன் அல்லது இறைச்சிக்கு நல்லதொரு மாற்று உணவு பலவகை சத்துக்கள் முழுமையாக நிறைந்த முட்டை.

8. arokiya vaazhvirku10புதிய பழங்களில் கிடைக்கும் இனிப்பு மட்டுமே தினசரி உண்ணும் இனிப்பாக இருக்க வேண்டும். பாலில் செய்தஇனிப்புகளோ, அல்லது மற்ற கேக், ஐஸ்க்ரீம் போன்ற பிற இனிப்புச் சிற்றுண்டிகளையோ எப்பொழுதாவது ஒருமுறை மட்டுமே உண்ண வேண்டும். இனிப்புச் சிற்றுண்டிகள் தினசரி உணவில் இடம் பெறக்கூடாது. இனிப்புகளுக்கு நல்லதொரு மாற்று உணவாக ஊட்டச்சத்துகள் நிறைந்த பழங்களை மட்டுமே கருத வேண்டும்.

9. arokiya vaazhvirku11அதிக அளவு நீர் குடிக்க வேண்டும். சிவப்பு வைன் மதுக் குடிக்கும் பழக்கமுள்ளோர் மிகக் குறைந்த அளவு உணவின் ஒரு பகுதியாக அதனை அருந்தலாம். வைன் மெடிட்டரேனியன் டயட்டின் ஒரு கலாச்சார அடிப்படையாக இருந்தாலும், அது சில உடல் நலப் பலன்கள் கொடுத்தாலும், வைன் மதுவைக் குறைந்த அளவே சமச்சீர் உணவின் பகுதியாகக் கொண்டு, அதிக அளவிலான நீரைச் சரிவிகித உணவின் அடிப்படையாகக் கொள்ள வேண்டும். போதைக்கு அடிமைப்படுத்திவிடும் மதுவைத் தவிர்த்தலே நலம்.

10. arokiya vaazhvirku12ஆரோக்கிய உணவை உண்பது மட்டுமல்லாமல், தேவையான அளவு உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். சுறுசுறுப்பான முறையில் உடலுக்குப் பயிற்சி கொடுப்பதும் உடல்நலம் பேணும் ஆரோக்கிய வாழ்விற்கு இன்றியமையாத அடிப்படை வாழ்க்கைமுறை.

சுருக்கமாக, தேவையான அளவு ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சியைப் பகுதியாகக் கொண்ட வாழக்கைமுறை ஆகியவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது நோயற்ற நீண்ட ஆயுளுக்கு வழி வகுக்கும் என்பது மெடிட்டரேனியன் டயட் உணவுமுறையின் அடிப்படை.

______________________________________________________________

மேலும் மெடிட்டரேனியன் டயட் பற்றிய தகவலுக்கு:

Mediterranean diet beats low-fat diet for long-term weight loss; Harvard Heart Letter – April 1, 2016

http://www.health.harvard.edu/staying-healthy/mediterranean-diet-beats-low-fat-diet-for-long-term-weight-loss

Systematic Review of the Mediterranean Diet for Long-Term Weight Loss. Mancini, Joseph G. et al.

The American Journal of Medicine , Volume 129 , Issue 4 , 407 – 415.e4 – Dec. 22, 2015, issue of The American Journal of Medicine.

http://www.amjmed.com/article/S0002-9343(15)30027-9/abstract

An Olive a Day? The Preventive Power of the Mediterranean Diet

Richard W. Besdine, M.D.; Medical Officer, American Federation for Aging Research, – 03/23/2016

http://www.huffingtonpost.com/richard-w-besdine-md/an-olive-a-day-the-preven_b_9531392.html

The Complete Mediterranean Diet: Everything You Need to Know to Lose Weight and Lower Your Risk of Heart Disease… with 500 Delicious Recipes Paperback – April 29, 2014, by Michael Ozner

http://www.amazon.com/The-Complete-Mediterranean-Diet-Everything/dp/1939529956

Mediterranean diet (Cyprus, Croatia, Spain, Greece, Italy, Morocco, Portugal); Inscribed in 2013 (8.COM) on the Representative List of the Intangible Cultural Heritage of Humanity.

http://www.unesco.org/culture/ich/en/RL/mediterranean-diet-00884

Mediterranean Diet Pyramid, Traditional Med Diet

http://oldwayspt.org/

***

மெடிட்டரேனியன் டயட் நோய் தவிர்க்க உதவுவதாகக் கூறும் ஆய்வுக் கட்டுரைகள்:

Primary Prevention of Cardiovascular Disease with a Mediterranean Diet

Ramón Estruch, M.D., Ph.D. et al.,

http://www.nejm.org/doi/full/10.1056/NEJMoa1200303?query=featured_home

Plasma Phospholipid Long-Chain ω-3 Fatty Acids and Total and Cause-Specific Mortality in Older Adults: A Cohort Study

Dariush Mozaffarian, MD, DrPH; et al.,

http://annals.org/article.aspx?articleid=1671714

Adherence to a Mediterranean diet and risk of incident cognitive impairment

Georgios Tsivgoulis, MD, et al.,

http://www.neurology.org/content/80/18/1684.short?sid=ecbc0e41-026a-4ebd-81ee-7a402bc5d5d0

Mediterranean Diet and Invasive Breast Cancer Risk Among Women at High Cardiovascular Risk in the PREDIMED Trial: A Randomized Clinical Trial. Toledo E, Salas-Salvadó J, Donat-Vargas C, et al.JAMA Intern Med. 2015;175(11):1752-1760. doi:10.1001/jamainternmed.2015.4838.

http://archinte.jamanetwork.com/article.aspx?articleid=2434738

Rheumatoid arthritis management with nutrition, Mediterranean and anti-inflammatory diets

By: Emily Lunardo | Arthritis | Thursday, March 24, 2016

http://www.belmarrahealth.com/rheumatoid-arthritis-management-with-nutrition-mediterranean-and-anti-inflammatory-diets/

Mediterranean Diet May Help Preserve Memory

http://www.medpagetoday.com/TheGuptaGuide/Neurology/38746

Research shows Mediterranean diet can help fight depression, Extra virgin olive oil is crucial ingredient

http://www.click2houston.com/news/research-shows-mediterranean-diet-can-help-fight-depression


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆரோக்கிய வாழ்விற்கு வழிகோலும் மத்தியதரைக்கடல் நாடுகளின் உணவுமுறை”

அதிகம் படித்தது