மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆலகாலமும் பாம்பின் விஷமும்! – பாகம் 5

முனைவர். ந. அரவிந்த்

May 8, 2021

siragu aalakaalamum1

இறைவன் முதலில் பல கோடி தேவர்களைப் படைத்தான். இவர்களே ‘தேவ தூதர்கள்’ எனவும் அழைக்கப்படுகிறார்கள். இந்த தேவர்களின் மற்றொரு பெயர்தான் உம்பர்கள். தெய்வீக உலகங்களில் வாழ்பவர் உம்பர். உம்பர்கள் இருவகையினர். அவர்களில் முதல் வகை தேவர்கள், தெய்வீக உலகங்களில் வாழ்ந்து இறைத்தொண்டினை இடையறாதுசெய்பவர்கள். இரண்டாம் வகை தேவர்கள், பூவுலகில் வாழ்ந்து வரும் மனிதர்களுக்கு உதவுபவர்கள். இந்த உலகில் வாழும் மனிதர்கள் இம்பர்கள் எனப்படுவர். தேவர்களின் அரசன் இறைவன். திருவாசகத்தில் ஒரு பாடல் உம்பர்கட்கரசே! என்று ஆரம்பிக்கிறது.

இறைவன் படைத்த தேவர்களில் பெருமை எண்ணம் கொண்டவனை இறைவன் தன்னுடைய வானவர் நாட்டில் இருந்து விரட்டினார். இவ்வாறு இறைவனால் விரட்டியடிக்கப்பட்டன் ‘அசுரன்’ எனவும் அவனுக்கு துணையாக வந்த தேவர்கள் ‘அசுரர்கள்’ அல்லது ‘கயவர்கள்’ எனவும் அழைக்கப்படுகிறார்கள். இந்த அசுரர்களே துர்தேவதைகளெனவும் அழைக்கப்படுகின்றனர். இன்றைய கால கட்டத்தில் கூட, தமிழ்நாட்டில் உள்ள பல கோவில்களில் துர் தேவதைகளின் பெயரில் சிற்பங்கள் உள்ளன.மக்களும், அதன் முன் நின்று ‘தயவு செய்து என்னிடம் வந்து விடாதே’ என்று வணங்குகின்றனர்.

வள்ளுவர் பெருமான் தன்னுடைய குறள் எண்.1073 யில் தேவர்களையும் அசுரர்களையும் பற்றி கூறியுள்ளார்.

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான் – குறள்-1073

இதன் விளக்கம் யாதெனில், தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடந்ததேவர்களே கயவர்கள். இதற்கு மேலும் அர்த்தம் யாதெனில், இறைவன் படைப்பில் தேவர்களும் கயவர்களாகிய அசுரர்களும் ஒன்றே. எந்த மனிதனின் கட்டுப்பாட்டிலும் இருவரும் வருவதில்லை. இறைவன் தேவர்களுக்கு முழுசுதந்திரம் கொடுத்தார். மனக் கட்டுப்பாடின்றி, தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்ய நினைத்த தேவர்களே கயவர்களானார்கள்.

தேவர்களை படைத்த பின்னரே இறைவன், மனிதனை படைத்தான். மனிதனுக்கு, அமுதம் அருந்த ஆசை.அதற்கு அவன் பாம்பினை நாடினான். தமிழ் புராணங்களின்படி, அமுதம் பெறவிரும்பிய மனிதனும், அசுரனும் சேர்ந்து பாம்பினை வைத்து பாற்கடலை கடைந்தனர். அந்த சமயத்தில், பாம்பு கொடிய விஷத்தை கக்கியது. அதுவரை, மனிதன், பாம்பின் ஒரு துளி விஷத்திற்கு ஒரு உலகை அழிக்கும் வல்லமை உண்டு என உணரவில்லை. அந்த பாம்பு, காலத்தை உண்டு சுருண்டு கிடப்பது என்பதையும் உணராத மனிதன், அமுதம் உண்ண பாம்பினை நாடினான். ஒரு துளியில் உலகை அழிக்கும் வல்லமை உள்ளதாலும், அந்த விஷம் காலா, காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்பதாலும், அந்த விஷத்திற்கு, ‘ஆலகால விஷம்’ என பெயர் வந்தது.

அமுதமென நினைத்த மனிதன், பாம்பு கக்கிய பின்னரே அவனுக்கு அது விஷமென புரிந்தது. உலகம் முழுவதையும் அழிக்கும் வல்லமை கொண்ட அந்த விஷத்தை அழிக்க வழிதெரியாமால் பயந்த மனிதன் கருணைக்கடலான இறைவனிடம் ஓடினான். தன்முயற்சியினால் உண்டான முதல் பயனான விஷத்தை இறைவனே ஏற்று அருளும்படிவேண்டினான்.

”ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதியே! கடுமையான இந்த விஷத்தில் இருந்து எங்களைக் காக்க வேண்டும் சுவாமி” என்று வேண்டினான். உலகத்தை காக்கும் சர்வேஸ்வரரான சிவபெருமான், அந்த விஷத்தை முறியடித்து அனைவரையும் காப்பாற்றினார். இதனைக் கண்ட தேவர்கள் ‘ஆலாலகண்டா’ என்று இறைவனை வணங்கினர். பாம்பினால் உண்டான ஆலகால விஷத்தை சிவன் நீக்கிய நாளை பிரதோச நாள் என விசேசமாக இறைவனை இன்றுவரை வணங்குகிறார்கள் தமிழர்கள்.

யூதர்களின் தோரா, திருக்குரான் மற்றும் விவிலியத்தின் பழைய ஏற்பாடு, இவை மூன்றும் யூதர்களின் வாழ்க்கை முறைகளையும், ஆதி மனிதன் ஆதாமின் பிறப்பு முதல் இயேசுகிறிஸ்துவின் பிறப்பிற்கு முந்திய காலம் வரை உள்ள தலைமுறையின் வரலாறுமற்றும் இறைவாக்கினர்களின் வரலாற்றையும் விளக்குகிறது.

அதின்படி, இறைவன் வானுலகில் சொர்க்கத்தையும், பலகோடி தேவ தூதர்களையும் படைத்தார். அவைகளுக்கு வெவ்வேறு பணிகளை தந்தார். அவற்றில் முக்கிய பணிகளாவன: இறைவனை துதித்தல், இறைவன் படைக்கவிருக்கும் மனிதர்களை பாதுகாத்தல் மற்றும் இறைவனிடம் இருந்து மனிதர்களுக்கு செய்திகளை அறிவித்தல் முதலியவனவாகும். அதற்குப்பிறகு, இறைவன் வானம், பூமி, வெளிச்சம், நீர், தாவரங்கள், காலங்களை குறிப்பிடுவதற்கான விஷயங்கள், சூரியன், நிலா, நட்சத்திரங்கள், தண்ணீரில் நீந்தும் உயிரினங்கள், பறவைகள், மிருகங்கள், ஊர்வன போன்றவற்றை உருவாக்கினார்.

அதன்பின், மனிதனை மண்ணில் இருந்து இறைவனின் சாயலாக உருவாக்கி உயிர் கொடுத்தார். அவனுக்கு இறைவனின் படைப்புகளை ஆள அதிகாரம் கொடுத்தார். ஆதி மனிதனுக்கு துணையாக பெண்ணையும் படைத்தார். இறைவன் ஆதி மனிதனையும்(ஆதாம்) அவன் துணைவியையும்(ஏவாள்) ஏதேன் என்னும் தோட்டத்தில் சகல பழங்களையும் சாப்பிடு. ஆனால் நன்மை, தீமை அறியத்தக்க ஒரு பழத்தை மட்டும் சாப்பிட வேண்டாம் என்றார்.

ஆனால் பாம்பானது ஆதாமையும், ஏவாளையும் அந்த நன்மை தீமை அறியத்தக்க கனியை சாப்பிட வைத்து அவர்களை பாவத்தில் சிக்கவைத்து இறைவனின் சாபத்திற்கு ஆளானது. ஆதி மனிதனையும் அவன் துணைவியையும் சாபத்திற்குள்ளாக்கியது.

ஆதாமை நோக்கி இறைவன் வாழ்நாளெல்லாம் நீ வருத்தப்படுவாய் என்றும், ஏவாளை நோக்கி, நீ பிள்ளை பெறும் போது வலி மற்றும் வேதனையை அடைவாய் என்றும் சபித்தார். மேலும், இறைவன், மனிதனை நீ மண்ணிலிருந்து வந்தாய் இறந்தபின் மண்ணுக்கே திரும்புவாய் என்றும் சபித்தார்.

அதுமட்டுமின்றி, இறைவன் ஆதாமையும், ஏவாளையும் வஞ்சித்த பாம்பையும் சபித்தார்.இறைவன் பாம்பினை, நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வயிற்றினால் நகர்வாய் என்றார். உடனே அதனுடைய கால்கள் மறைந்து போய்விட்டன. இன்றும் சீன நாட்டில் கோயில்களில் பாம்புகளுக்கு கால்கள் உள்ள சிற்பங்களை வடித்துள்ளனர். இறைவன் படைப்பில், ஆதி காலத்தில் பாம்புகளுக்கு கால்கள் இருந்திருக்கலாம். இறைவனின் சாபத்திற்கு பின்னரே கால்கள் மறைந்திருக்கலாம். நடப்பன இனத்திலிருந்து செய்த பாவத்தின் காரணமாக ஊர்வனவாக மாறியிருக்க வாய்ப்புள்ளது.

தேவதூதர்களில் ‘லூசிபர்’ என்பவன் அழகும் அறிவும் நிறைந்தவன். நான் இறைவனுக்கு சமமாக இருப்பேன் என்ற ஆணவம் அவன் மனதில் எழுந்தது. உடனே அதனை அறிந்த இறைவன் தன்னுடைய வானலோகத்திலிருந்து கீழே தள்ளினார். அவன் மொத்த தேவதூதர்கள் கூட்டத்தில் மூன்றில் ஒரு பங்கினை தன்னுடன் சேர்த்துக் கொண்டான். அன்று முதல் இன்று வரை, புவியில் மனிதர்களை அடிமைப்படுத்தி நரகத்தில் சேர்ப்பதே அவனுடைய வேலை.

இறைவனால் விரட்டியடிக்கப்பட்ட தூதர்களே சாத்தான்கள். அந்த சாத்தான்களின் கூட்டதலைவன் பாம்பினை அனுப்பி தந்திரமாக ஆதிமனிதன் ஆதாமை நன்மை தீமை அறியக்கூடிய பழத்தை சாப்பிட வைத்து மனிதனை பாவத்திற்குள்ளும் சாபத்திற்குள்ளும் தள்ளினான் என யூதர்களின் முதல் வரலாற்று நூல் கூறுகிறது.

இரு பெரிய, பழமையான மற்றும் ஆழமான வரலாறு கொண்ட சமுதாயங்களின் புராணங்களும் ஆகமங்களும் பாம்புதான் முதல் மனிதனை பாவமெனும் விஷத்தில் சிக்க வைத்ததென ஒரே கருத்தினை கூறுவது என்னவொரு அதிசயம்.

தொடரும்…


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆலகாலமும் பாம்பின் விஷமும்! – பாகம் 5”

அதிகம் படித்தது