மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆவணப்படுத்தல் பயனும், அதில் தமிழர்களின் சிறப்பும் – பகுதி 2

காசி விசுவநாதன்

Jan 14, 2012


தனி ஒருவர் ஆவணத்திரட்டு

தனி ஒருவர் ஆவணம் திரட்டுதல் அல்லது பாதுகாத்தல் என்பது ஒவ்வொரு குடும்பம் தோறும் செய்ய முடியும். அது குடும்ப ஆவணமாக அறியப்படும். அவர்களின் நாட்குறிப்பேடு, பாராட்டுச் சான்றிதழ்கள், தம் முன்னோர் பொதுவாழ்வில் ஈடுபட்ட குறிப்புகள், புகைப்படங்கள் அதனோடு தொடர்புடைய ஆவணங்கள், ஆகியவற்றைத் தொகுப்பதும் பாதுகாப்பதும் ஆகும். இது போல பலர் தங்களின் ஆவணங்களை தங்கள் வீட்டின் வரவேற்பறையில் வைத்துள்ளனர். அப்படி இட வசதி இல்லாவிட்டாலும் அவைகளை முறையாக கோப்புகளில் வைத்து பாதுகாத்து வரலாம். இப்படி பாதுகாக்கப்படும் தனி ஒருவர் ஆவணத்திரட்டு பிற்காலங்களில் தேசிய ஆவணத்தின் நிலைக்கு உயர்ந்து நிற்கும். எளிய சேகரித்தல் என்ற நிலையில் முன்னெடுக்கப்பட்ட, ரோசா முத்தையா அவர்களளின், திரட்டு பல பல்கலைக்கழகங்கள் தேடிவந்து பயன்படுத்தும் பெட்டகமாக திகழ்கிறது.. நம் தமிழ் மண்ணில் ஒப்புயுர்வற்ற அருஞ்செயலை செய்து, வாழ்வாங்கு வாழ்ந்த தமிழ்ப்பெருங்குடி மக்களின் வாழ்வியல், இலக்கியம், தொன்மை அனைத்தையும் ஆவணப்படுத்திய பெருமை தமிழ் தாத்தா திருமிகு. உ.வே.சாமி நாத ஐயர் அவர்களையே சாரும்.

தமிழ் தாத்தா

செவ்வியல் தமிழ் மொழியினை மீட்டுருவாக்கம் செய்த பெருந்தகை: இன்று நாமும், நம் குழந்தைகளையும் பிழைப்புக்காகவே படிக்கவைக்கும் நோக்கம் இருக்கும் காலத்தில், சற்று முன்னரே தன் வாழ்வை, தமிழ் படிப்பதே தன் நோக்கம் என்று, ஒரு நல்லாசிரியரைத் தேடி இறுதியில், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் வந்து சேர்ந்து, அந்த நாள் முதலாய் தமிழையும், தன் வாழ்வையும் ஆவணமாக்கியவர் திருமிகு ஐயா தமிழ் தாத்தா அவர்கள். அவர் வாழ்ந்த காலம் என்பது, மிகச்சரியாக “ஒரு கால நிலையின் தன்மாற்றத்தைக் கொண்டிருந்தது ”. அதனை நாம் இன்றும் கூட அவரது ” என் சரிதம் ” என்ற தன் வரலாற்று நூலில், காணும் போது உணர முடியும். ஆனால் அதனை தான் வாழும் நாளிலேயே உணர்ந்த தமிழ் தாத்தா அவர்கள், சரியான நேரத்தில் ஏட்டில், ஒரு சில கவிராயர் வீடுகளில் இருந்த பழந்தமிழ் இலக்கியங்களை அச்சேற்றினார். இந்த கால மாற்றத்தையும், வாழ்வியலின் தன்மாற்றத்தையும் மிகச்சரியாக புரிந்து கொள்வதே ஒரு குடிமகனுக்கு தேவையான பண்பு. அதனையும் தாண்டி, வழக்கில் இருந்த வைதீக பக்தி இலக்கியங்கள் தவிர்த்து, மிகச் சிறுபான்மையாக உயர் பண்டிதர் வீடுகளில் இருந்த பல இலக்கியங்கள் பெயர் தெரியாத பல தமிழர்களால் 2500 வருடங்களாக படி எடுக்கப்பட்டு, படி எடுக்கப்பட்டு ( இதுவும் மிகப்பெரிய தொடர் ஆவணப்படுத்தலே….!)பெயர் தெரியாத பல தமிழர்கள் காலத்தே தம் கடமையை, இடைவிடாது பலன் எதிர் பாராமல் செய்து போனதனால், அதனை தமிழ் தாத்தா 19ம் நூற்றாண்டில் அச்சேற்றினார். இதற்கு முன்னோடியாக, ஈழத்து அறிஞர் திருமிகு சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் 1853ல் நீதி நெறி விளக்கம், மற்றும் தொல்காப்பியத்தை அச்சில் ஏற்றினார். இதன் பிறகு பல அரிய நூல்களையும், அதன் மணிமுடியாய் சங்க இலக்கியங்களையும் தமிழ் தாத்தா அவர்கள் வெளியிட்ட பிறகே, தமிழின் தொன்மை உலகறிந்த ஒன்றானது.

ஊர் தோறும் சென்று ஒவ்வொருவர் வீடுகளிலும் இருக்கும் அருந்தமிழ் இலக்கியத்தை மீட்டு அச்சேற்றி அழகுபடுத்தினார் என்றால்- அவரது ஆவணப்படுத்தல் என்ற அரும்பணியினை, ஈதென்ன பெரிது ? என்று இன்றைய தலைமுறை நினைக்கக்கூடும். பனை ஓலைச்சுவடிகள் எல்லாம் ஒரு நூற்றாண்டிற்கு மேல் இற்றுப்போகும். அதனை இரு பக்கங்களிலும் நூல் கொண்டு கோர்த்து கட்டி ( அதனால் தான், நாம் படிக்கும் ” புத்தகம் ” என்ற வடமொழி சொல்லுக்கு நம் சங்க காலம் தொட்டு ” நூல் ” என்றனர். ” நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை… ” என்பது படித்தவர்கள் பதிவு செய்து தொகுப்பது என்று பொருள். வேப்பிலை போன்ற மருத்துவ காப்பில் தான் பாதுகாப்பர். அதன் உறுதிக்காலம் இறுதியினை அடைவது அறிந்து, மீண்டும் படி எடுப்பர். இவ்வாறு சங்க இலக்கியங்களை, கடந்த இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாய் மதம் கடந்த, உண்மை அறிந்த, பண்டிதர் பெருமக்கள் காத்து வந்துள்ளது, தமிழ் செய்த தவப்பயனேயன்றி வேறு என்ன ? அந்தத் தொடர் வழியில் கால மாற்றத்தினை உணர்ந்த இருவர் தான், தமிழ் தாத்தாவும் ஈழத்து அறிஞர் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களும்.

கிடைத்த சுவடிகளை தரம்பிரிப்பது, அதனை வேறு இடத்தில் கிடைத்த சுவடிகளுடன் ஒப்பு நோக்குவது, செல்லரித்த இடங்களை அதன் நேர் இணையான வேறு சுவடிகளில் சரிபார்த்து காகிதத்தில் பெயர்த்து எழுதுவது, செல்லரித்து விடுபட்டு தக்க சான்று இல்லாத இடங்களை (…… ) கோடிட்டு, இந்த இடங்களை “ பழுதுபட்ட சுவடிகளில் காணக் கிடைக்காமையால் அதன்படியே விடுகிறேன்….” என்று குறிப்பெழுதுவது, எழுதியவற்றை தொகுத்து காகித வடிவிலேயே பாதுகாத்து (அவர் காலத்தில் குடுவையில் தொட்டு எழுதும் பேனா என்பதனையும் நினைவில் கொள்க; மேலும் காகிதம் என்பது அதிகம் புழக்கத்தில் இல்லாத ஒன்று என்பதும் நினைவில் கொள்க) பின்னர் சென்னை வந்து ( முதலில் தமிழ் தாத்தா கும்பகோணத்தில் வாழ்ந்து வந்தார் ) அச்சில் ஏற்றுவதும் அதற்கு முன்னர் அச்சுப்பிழை சரிபார்ப்பது, ( Proof reading ) என்பதாக ஒரு பெரும்பணியை செப்பமுற செய்தார். இந்தத் தகவல்கள் மிக எளிமையாக, சென்னை வந்து போகும் பயண நிகழ்வினைக்கூட தன் வரலாற்றில் எழுதி உள்ளார். அவரது “என் சரிதம்” என்ற தன் வரலாற்று நூலும் ஒரு நூற்றாண்டின் ஆவணமாய் திகழ்கிறது.

இப்படியாக தனி ஒருவர் ஆவணத்திரட்டு என்பது பின் நாளில் தேசிய ஆவணத்தின் உயர் நிலைக்குச் சென்று நிற்கும். தமிழ் தாத்தா அவர்களின் ஆவணங்கள் அனைத்தும் அவர் பெயரில் ஒரு நூலகமாக, அவரது சுவடிகள், அவரது நாட் குறிப்பேடு மற்றும் அவர் பதிப்பித்த நூல்கள், மற்றும் தமிழ் இலக்கியங்கள் சார்ந்த நூல்கள் என அனைத்தும் கொண்ட, ஒரு ஆவண நூலகமாக, சென்னை திருவான்மியூரில் இயங்குகிறது. அவர் இன்றளவும் தமிழோடு அங்குதான் வாழ்கின்றார்.

முதல் நிலை ஆவணங்கள்

ஆவணங்களை இனம் காண்பதில் மேலும் ஒரு வகை. அதாவது, 1. நாட்குறிப்பேடு, 2.கடிதங்கள், 3. விருப்ப உயில், 4. அரசு அறிவிக்கைகள், 5. எழுத்தாளர்கள், கவிஞர்களின் எழுத்துப்படிகள், குறிப்புகள். 6. நீதி மன்ற வழக்குக் குறிப்புகள், 7. அரசிதழ் ( Gazetteer ), 8. தடயவியல் சான்றிதழ்கள் போன்றவைகள்.
நாட்குறிப்பேடு, தன் வரலாறு ஆகியவை, வரலாற்றில் முதல் நிலை ஆவணங்கள் ஆகின்றன. ஒரு நேர்மையான சிந்தனையாளரின் மேற்படி பதிவுகள், காலத்தை வென்று சமூகத்தை தாங்கிப்பிடிக்கும் ஆற்றல் உடையன.

சிறந்த எடுத்துக்காட்டு

  1. புதுவை ஆனந்த ரெங்கப்பிள்ளை அவர்களின் நாட்குறிப்பேட்டு தொகுப்புகள்
  2. மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களின் நாட்குறிப்பேடு
  3. மறை மலை அடிகள் நாட் குறிப்பேடு
  4. தமிழ் தாத்தா மற்றும் நாமக்கல் கவிஞர் ஆகியோரின் ” தன் வரலாறு ” நூல்கள் ஆகியவை சிறந்த முதல் நிலை ஆவணங்களாக உள்ளன.

 

புதுவை ஆனந்தரெங்கப்பிள்ளை அவர்களின் நாட்குறிப்பேடு

மொத்தம் 12 தொகுதிகள் கொண்ட இவரது நாட் குறிப்பேடு, உலகில் உள்ள தனி ஒருவரின் முதல் நிலை ஆவணங்களில் மிகச் சிறந்தனவாகவும், தமிழகம், இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே பல அரிய தகவல்கள் கொண்ட களஞ்சியம் என்றால் அது, இந்த தொகுப்பு ஒன்றுதான். இவரது நாட்குறிப்பேட்டினை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி, பின்னர் 1898 ம் ஆண்டு தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு 12 தொகுதிகளாக மொழி பெயர்த்தனர். அதில் தெரிய வந்தது, ஆங்கிலேயரின் ஆவணக்குறிப்புகளில் உள்ளதை விட, மிகத்துல்லியமாக, கிழக்கிந்திய கும்பெனி மற்றும் பிரஞ்சுப் படைகளுக்கு இடையே நிகழ்ந்த சரித்திர நிகழ்வுகளை முறையாக பதிவு செய்து வந்துள்ளதும், 1736 – 1761 கி.பி. அதாவது எழுதப்பட்ட 18ம் நூற்றாண்டினிடைக்காலம் அனைத்தும் நாள் வாரியாக தெளிவுற பதிவாகி உள்ளது, அன்றைய ஆங்கில அதிகாரிகளை, வியப்பால் வாயடைத்து நிற்கச்செய்தது. பிள்ளை அவர்கள் தனது பிரஞ்சு பாசத்தால், ஆங்கிலேய படைகள் கொல்கத்தாவில் பெற்ற வெற்றிகளை பொறுக்க முடியாமல், அவர்களைத் திட்டி எழுதியதையும், அதே ஆங்கிலேயர்கள் மறைக்காமல் மொழிபெயர்த்தது நேர்மையான ஆவணப்படுத்தலின் சான்று.

அது மட்டுமல்லாமல் ஆனந்த ரெங்கப்பிள்ளை அவர்கள், பார்சி, பிரஞ்சு, ஆங்கிலம் என பல மொழிகள் தெரிந்திருந்தார் என்பதும் அவருக்கு ஆர்க்காடு ( ஆற்காடு அல்ல ) நவாபுகள், வங்க நவாபுகள், டில்லி பாதுஷாக்கள், மராட்டிய மன்னர்கள், கிழக்கிந்திய கும்பெனி நிர்வாகத்தினர், ஒல்லாந்தர் ( தரங்கம்பாடி கோட்டை / இலங்கை யாழ் கோட்டை ), போர்த்துகீசியர்கள் ( கொங்காணிப்பகுதி ) என பலரிடமும் இருந்தும் நேரடி கடிதத்தொடர்பும், கொண்டிருந்தார். மேலும் பிரஞ்சு ஆளுனருக்கு கடித மொழிபெயர்ப்பு செய்ததையும், தனது நாட் குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளார். புதுச்சேரி பட்டிணம் பிரஞ்சு ஆளுகையில் இருந்த போது உள்ளே வந்து போக ” பாஸ்போர்த்து” என்ற கடவுச்சீட்டு முறை இருந்ததும், அவர்கள் காலத்தில் மக்கள் தொகை கணக்கிடப்பட்டதையும் பதிவு செய்துள்ளார்.

18ம் நூற்றாண்டின் இடைப்பகுதி காலங்களில், இந்தியா என்ற ஒரு நாடு உருவாகாத நிலையில் அப்போதிருந்த நாவாபுகள், நிசாம், டில்லி பாதுஷா, தஞ்சை மராட்டியர், சென்னையிலும் திருச்சியிலும் இராபர்ட் கிளைவு நடமாட்டம், தேவனாம்பட்டிணம், மச்சிலிப்பட்டிணம் மற்றும் திருவண்ணாமலையில் நிகழ்ந்த போர் என அப்போதைய துணைக்கண்ட நாடுகள் அணைத்தும் ஒன்றோடு ஒன்று பொருதி (போர் புரிந்து) ஐரோப்பிய கும்பெனியரிடம் அடிமைப்பட்டு வரும் அரிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் புதுவை பிரஞ்சு ஆட்சியில் நடந்த முறைகேடுகள், கவர்னர் மாளிகையில் நடந்த லஞ்ச பேரம், ஆளுனருக்கு அடுத்த பதவிகளுக்கான பிரஞ்சு அதிகாரிகளிடையே உள்ள போட்டியும், அதற்கான லஞ்சத்தொகை ஏலத்தொகையாக மாறிய கணக்குகளும் உண்டு. பிரஞ்சு அரசாங்கம் அப்போதே சில ஆவணக்குறிப்புகளை பாதுகாத்து வந்தது, அவரது குறிப்புகளில் தெரிய வருகிறது. இது போன்றே மதராசப்பட்டனம் புனித ஜார்ஜ் கோட்டையிலும் நடக்கும் லஞ்ச பேரங்களையும் தனக்கு நெருக்கமானவர்கள் வாயிலாகக் கிடைத்த தகவலாகப் பதிவு செய்கிறார். ஐரோப்பியர்களிடம் உள்ள பொதுவான நடைமுறையாக பிள்ளை அவர்கள் இதனை அவதானிக்கிறார். இது தவிர்த்து நவாப் குடும்பங்களில் ஏற்படும் பங்காளிச் சண்டைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவரது வாழ் நாளும் பதிவுகளும், வளையா வீரன் திப்பு மற்றும் மருது சகோதரர்களின் வீழ்ச்சிக்கு முந்தைய கட்டம். வரலாற்றின் தொடர் நிகழ்வினை தொய்வின்றி, கால் நூற்றாண்டுகளுக்கு ( 25 ஆண்டுகள் ) பதிவு செய்து, உலக வரலாற்று ஆசிரியர்களை வியக்க வைத்தவர் புதுவை ஆனந்த ரெங்கப்பிள்ளை என்ற தமிழரே. {இவரது நாட்குறிப்பேடு நம்பிக்கைக்குரிய எழுத்தர்களால் தொடர்ச்சியாக இவரது வாய்மொழியினைக் கேட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் சில வருடங்களே ஆனந்த ரெங்கப்பிள்ளை அவர்கள் தன் கைப்பட எழுதி உள்ளார். பின்னர் தனது அலுவல் மிகுதி காரணமாக, எழுத்தர்களை பணி அமர்த்தி உள்ளார்.}

நம் தமிழர்களின் ஆவணப்படுத்தும் கலை, இந்திய துணைக்கண்டத்தில் மட்டும் அல்ல, உலகோரையும் வியக்க வைத்தது எனில் அதற்கு இவரும், இவருக்கு முந்தைய மூவேந்தர்களும், சங்க இலக்கியமும் தான் என்பது திண்ணம்.

அரசிதழ் ( Gazetteer )

செய்தியாளர் என்ற பிரஞ்சு மொழியில் இருந்து வந்த வேர்ச்சொல். அதுவே செய்திகளை பாதுகாப்பவரையும் குறிக்கும் சொல்லானது. இது பின் நாளில் அரசாங்கம் வெளியிடும் ஆவணக்குறிப்புகளாகவும் ஆனது. ஒவ்வொரு அரசாங்கமும் தங்களது அரசு ஆவணத்தகவல்களை மாவட்ட வாரியாக பிரித்து பதிவு செய்து வெளியிடும். இதுவே அரசிதழாகும். இதில் சமூகம்,வரலாறு, அரசாங்க செயல் திட்டங்கள், மாவட்டம் தோறும் ஏற்பட்ட நிகழ்வுகள் என தகவல்கள் செய்திகள் அடங்கி இருக்கும்.

நூலகம்

அரசு நூலகம்,ஆவணக்காப்பக நூலகம், கல்வி நிலைய நூலகம், தனி திரட்டுகளாய் உங்கள் வீடு தோறும் உள்ள நூலகம் அனைத்துமே ஆவணங்கள் தான், ஆவணக்காப்பகங்கள் தான். உங்கள் வீடுகளில் உள்ள மிக அரிய பழமை வாய்ந்த நூல்கள் மிகவும் தேவைப்படும் ஒன்றாக இருக்கலாம். ஆகவே அது பாதுகாக்கப்பட வேண்டும். இதன் தேவை அறியாமல் சிலர் நூல்களை எடைக்கு விற்பனை செய்யும்பொழுது, நாம் நமது எதிர்காலத்தை விலைக்கு விற்றுத் தொலைக்கின்றோம் என்பதை உணரமாட்டோம். இதிலும் சில, பழைய நூல் விற்பனையாளர்களிடம் வந்து சேரும். இது நன்மைக்கே. அது நம் எதிர்காலத்தை மீட்க ஒரு வாய்ப்பு. சென்னை மயிலாப்பூர் பகுதியில், சாலைகள் கூடும் இடத்தில், திரு. ஆழ்வார் என்ற பழைய நூல் விற்பனையாளரை தவறாமல் சந்தித்து பல அரிய நூல்களை வாங்கிச்செல்லும் வாடிக்கையாளர்களில் ஒருவர்தான் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

தொடரும் …

ஆவணப்படுத்தல் பயனும், அதில் தமிழர்களின் சிறப்பும் – முந்தைய பகுதி 1


காசி விசுவநாதன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆவணப்படுத்தல் பயனும், அதில் தமிழர்களின் சிறப்பும் – பகுதி 2”

அதிகம் படித்தது