மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆஷா (ASHA) என்னும் தேவதைகள்

பேராசிரியர் பு.அன்பழகன்

Jun 4, 2022

 siragu asha health worker

உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய சுகாதார முதல்வன் விருது 2022. 75வது உலக சுகாதாரக் கூட்டம் 22.5.2022 அன்று ஜெனிவாவில் நடைபெற்றதில் ஆறு பேருக்கு அறிவிக்கப்பட்டது (ஹார்வார்டைச் சார்ந்த மருத்துவர் பால் ஃபெர்மர். பிரிட்டனைச் சார்ந்த மருத்துவர் அகமது ஹாங்கிர். கேப் வெர்டேவைச் சாரந்த லுட்மிலா சோபியா ஒலிவேர் வரேலா. ஆப்கானிஸ்தானின் போலியே பணியாளர்கள். இந்தியாவின் ஆஷாஎனப்படும் அங்கிகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் மற்றும் ஜப்பானைச் சாரந்த யோஹே சசகாவா). இதில் இந்தியாவைச் சார்ந்த ஆஷா (ASHA –Accredited Social Health Activities) என்கிற சமூக சுகாதார ஆர்வலர்களுக்கு இவ்விருது கிடைத்திருப்பது உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கோவிட் பெருந்தொற்று காலங்களில் அவர்களின் முன்களச் சேவைகள் மற்றும் சமுதாய-சுகாதார ஒருங்கிணைப்பிற்கு ஆற்றியப் பணியினையும் பாராட்டி இவ்விருது அளிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பான குழந்தைப் பிரசவம். பேறு கால இறப்பினைக் குறைத்தல். சிறார் இறப்பு விகிதத்தை குறைத்தல். சமூக தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்துதல். காச நோய் தடுப்பு. உயர் ரத்த அழுத்த பாதிப்பைக் குறைத்தல். ஊட்டச்சத்து வழங்கள். தடுப்பூசி செலுத்தல் போன்ற சுகாதார நடவடிக்கைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது மறுக்க முடியாது. இதற்கான முக்கியமான காரணமான முன்களப் பணியளர்களில் முக்கியமானவர்கள் அங்கன்வாடி பணியாளர்கள். துணை செவிலியர் மருத்துவச்சி. ஆஷாஆர்வலர்கள் ஆவார்கள். இதில் முதல்நிலையில் சமுதாய-சுகாதாரத் தொடர்பாளர்களாக ஆஷாஆர்வலர்கள் திகழ்கின்றனர்.

இந்தியப் பொது சுகாதார அமைப்பு தொடக்க நிலையில்,துணை சுகாதார மையங்களும். அதற்கு அடுத்த நிலையில் ஆரம்ப சுகாதார மையங்களும் அடுத்த நிலையில் மருத்துவ மனைகளும் என்ற கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முதல்நிலையில் ஆஷாஎன்கிற சமூக சுகாதார ஆர்வலர்கள் மக்களுக்கான சுகாதார இணைப்பையும். சேவையையும் ஆற்றுபவர்களாக உள்ளனர். இவர்களின் முக்கியப் பணி. கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால மருத்துவ உதவி. குழந்தைகளுக்குச் சத்து மாத்திரைகளை வழங்குதல். இளம் பெண்களுக்குச் சானிட்டரி-நாப்கின் வழங்குதல். மாதவிடாய் குறித்து வளர்இளம் பெண்களிடையே விழிப்புணர்வுனை ஏற்படுத்துதல். பிறப்பு-இறப்பு பதிவிடுதல். குழந்தைகளுக்கான தடுப்பூசி. தொற்று நோயினைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல். குடும்பக் கட்டுப்பாடு. விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி போன்றவை ஆகும்.

ஆஷாஆர்வலர்கள் என்கிற திட்டம் உருவாக இரண்டு முக்கியக் காரணிகள் பின்புலமாக உள்ளன. ஒன்று. 1978இல் கசகஸ்தானில் அல்மா ஆட்டா என்ற நகரத்தில் 134 உலக நாடுகள். 67 பன்னாட்டு அமைப்புகள் ஒன்றிணைந்து அறிவிக்கப்பட்ட பிரகடனத்தின்படி 2000ஆம் ஆண்டிற்கு முன் அனைவருக்குமான சுகாதாரம் அளிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஆரம்ப சுகாதாரப் பாதுகாப்பு சேவையினை அளிக்க இந்தியாவில் சமுதாய சுகாதார பணியாளர்களை நியமனம் செய்தது. இவர்களைச் சமுதாய சுகாதார தன்ஆர்வலர்கள் என்று அழைக்கப்பட்டனர். இந்த நடைமுறையில் அரசியல் ஒத்துழைப்பின்மை. மக்களிடையே போதுமான ஆதரவின்மையினால் இந்த திட்டம் தோல்வியினை அடைந்தது. இரண்டாவதாக சத்தீஸ்கர் மாநிலத்தில் 2002இல் “ஒரு பெண் தோழி” என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு 50 குடியிருப்புகளுக்கும் 250 மக்கள்தொகைக்கு ஒரு பெண் தோழிகளை நியமனம் செய்து சுகாதாரச் சேவைகளை அளித்தது. இவர்கள் அரசின் சுகாதாரத் திட்டங்களை மக்களிடையே முன்னெடுத்துச் செல்லும் பணியினை சிறப்பாகச் செய்தனர். இந்த திட்டம் அம் மாநிலத்தில் பெரும் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசு ஆஷாஆர்வலர்கள் திட்டமாகத் தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்டது.

ஆஷாஆர்வலர்கள் திட்டமானது தேசிய ஊரக சுகாதார இயக்கம் 2005-06இல் நடைமுறைப்படுத்தப்பட்டபோது அதன் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டு கிராமப்புறங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்பு 2013இல் தேசிய நகர்புற சுகாதார இயக்கம் தொடங்கப்பட்டபோது நகர்புறங்களில் இவற்றை விரிவுபடுத்தினர். ஓவ்வொரு கிராமங்களில் 1000 கொண்ட மக்கள்தொகைக்கும்நகரங்களில் 2000 கொண்ட மக்கள்தொகை;கும் ஒரு ஆஷாஆர்வலர்கள் நீக்கு போக்குடன் உருவாக்கிக்கொள்ள நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் சமுதாய ஆற்றலைக் கட்டமைக்க சுகாதாரச் சேவைகளை அளிப்பதாகும். இந்த சமூக ஆர்வலர்கள் அனைவரும் பெண்கள் ஆவார்கள் குறிப்பாக இவர்கள் 25வயதிலிருந்து 45வயதுக்கு உட்பட்ட விதவைகள். திருமணம் ஆனவர்கள். கணவனால் கைவிடப்பட்டவர்கள் ஆகும். இவர்கள் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். இப்பணியாளர்கள் பெரும்பாலும் அதே ஊர்களை அல்லது பகுதிகளைச் சார்ந்தவர்களாகவும். ஊராட்சி நிருவாகத்தினால் இவர்கள் தேர்தெடுக்கப்படுகின்றனர். இவர்களுக்கு மாதம்தோரும் மதிப்பூதியமாக ரூ.7000 முதல் ரூ.10000 வரை வழங்கப்படுகிறது. இதைத் தவிற்று சில செயல்பாட்டுக்கான சிறப்பு ஊக்கத் தொகையும் இவர்களுக்கு அளிக்கப்படுகிறது. தேர்தெடுக்கப்பட்ட ஆஷாஆர்வலர்களுக்குத் தகுந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. ஊரக நிலையிலிருந்து மாவட்ட நிலைவரை அரசினால் அமைக்கப்பட்ட குழுவினால் இவர்களின் செயல்பாடுகளை காலமுறையில் கண்காணிக்கப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.. சுகாதாரச் சேவை வழங்குவதற்காக மற்ற அமைப்புகளுடன் ஒன்றிணைந்து பயனிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆஷாஆர்வலர்கள் 37 மாநிலங்கள். யூனியன் பிரதேசங்களில் 773 மாவட்டங்களில் உள்ள 277000 கிராமங்களில் செயல்பட்டுக்கொண்டுன்ளது. தற்பேது சுமார் ஒரு மில்லினுக்கு மேல் ஆஷாஆர்வலர்கள் இந்தியா முழுக்க செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் குடியிருப்புகளுக்கு நேரடியாகச் சென்று மருத்துவச் சேவையினை அளிப்பதால் விளிம்பு நிலை மக்களின் நம்பிக்கையினை பெருமளவிற்கு இவர்கள் பெற்றுள்ளனர்.

ஊட்டச்சத்து, சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றை வழங்குவதிலும் கோவிட் பொருந்தொற்று காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சேவையினைச் செய்வதிலும் முன்களப் பணியாளர்களாக ஆஷாஆர்வலர்களின் பங்கு மகத்தானது. ஆனால் மற்ற முன்களப் பணியாளர்கள் போல் இவர்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. குறைவான-நிலையற்ற ஊதியம். ஊதிய உயர்வின்மை, பாதுகாப்பின்மை போன்ற அறைகூவல்களை எதிர்கொண்டுள்ளனர். இதற்காக இவர்கள் பல முறை போராடியும் இப்போக்கு களையப்படவில்லை என்பது வருத்தத்துக்குறியது. மற்ற முன்களப் பணியாளர்களின் ஊதியத்தினை ஒப்பிடும்போது இவர்களின் ஊதியம் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே இவர்களின் பொதுசேவையினையும் உழைப்பையும் மனதில்கொண்டு இவர்களுக்கு சரியான ஊதியத்தினை உயர்த்தி அளிக்கவேண்டும். பணிமேம்பாடு மற்றவர்களுக்கு வழங்கப்படுவது போன்று இவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். இவர்களின் சேவை மருத்துவ பாதுகாப்புடன் தொடர்புடையதால் இவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டினை அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும். தற்போதைய நிலையில் மருத்துவச் சேவையில் மனிதவள பற்றாக்குறை அதிக அளவில் நிலவி வருகிறது இதனைப் போக்க இவர்களை அரசு பணியாளர்களாக அங்கிகாரம் செய்ய வேண்டும். பன்னாட்டு அளவில் ஆஷாஆர்வலர்களின் சுகாதாரச் சேவையினை அங்கிகாரம் செய்துள்ளது இந்த நிலையிலாவது அவர்களின் அருமை கருதியும், சேவையினைப் போற்றும் வகையில் அவர்களின் பிரச்சனைகளைக் களைய அரசு முன்வரவேண்டும்.


பேராசிரியர் பு.அன்பழகன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆஷா (ASHA) என்னும் தேவதைகள்”

அதிகம் படித்தது