மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இசை என்பது… (சிறுகதை)

மா.பிரபாகரன்

Jan 25, 2020

siragu isai enbadhu2

குட்டிக் கரடி ராணி திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தது போல் தனது அம்மாவிடம் “இசைனா என்னமா? எது இசை?”– என்று கேட்டது. ராணி இப்போதுதான் மியூசிக் வகுப்பில் சேர்ந்திருந்தது. அதன் ஆசிரியை புதிதாகச் சேர்ந்த மாணவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார். குட்டீஸ்களுக்குப் பதில் தெரியவில்லை. “சரி! அடுத்த வகுப்புக்கு வரும்போது நீங்க எல்லாரும் இதுக்குப் பதில் தெரிஞ்சிட்டு வந்து எனக்குச் சொல்லனும்! சரியா?”–என்றார் அவர். அதனால்தான் ‘இசை என்றால் என்ன?’ என்று தெரிந்து கொள்ள அம்மாவிடம் கேட்டது.

அம்மாகரடி இரவு உணவு தயாரிப்பதில் மும்மரமாக இருந்தது. அது ராணியின் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. “ராணி! நாளைக்கு நாம டிரெக்கிங் போறோம்!”–என்றது அது. டிரெக்கிங் என்றவுடன் ராணி உற்சாகமாகி விட்டது. அப்படிப் போகும்போது ராணியின் நண்பர்களும் அதில் சேர்ந்து கொள்வார்கள். அனைவரும் கூட்டமாக ஆடியும் பாடியும் பேசி மகிழ்ந்தபடியும் மலையேறுவார்கள். மிகவும் ஜாலியாக இருக்கும். அதுவுமல்லாமல் மலையில் சுவையான திணைகிழங்கு வகைகள் உண்ணக் கிடைக்கும். ராணி டிரெக்கிங் குறித்த சிந்தனைகளில் மூழ்கிவிட்டது. அது அம்மாவிடம் தான் கேட்;ட கேள்வியை சுத்தமாக மறந்து விட்டது.

மறுநாள் காலையில் பொழுதுபுலரும் முன்பே ராணியும் அம்மாவும் மலை அடிவாரத்திற்கு வந்து விட்டார்கள். கிழக்குப் பக்கம் கதிரவன் இன்னும் வெளிவரவில்லை. அதன் கதிர்கள் மட்டும் அடிவானத்தைச் சிவக்கச் செய்துகொண்டிருந்தது. பெயர் தெரியாத காட்டுப் பறவைகள் மரங்களின் மேற்கவிகையில் இருந்து குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. குளிர்ச்சியான தென்றல் உடலை வருடிச் சென்றது. வெண் திரளாய் பனி எங்கும் அப்பிக் கிடந்தது. ராணி செடி கொடிகளின் கிளைகளை அசைத்து பனித்துளிகளை தன்மீது சிந்தி விளையாடியது.

அம்மா முன்னே செல்ல, ராணி பாதுகாப்பாக பின்னால் மலைப்பாதையில் ஏறத்துவங்;கியது. கீழே உதிர்ந்து கிடந்த மரங்களின் காய்ந்த இலைச்சருகுகளை மிதித்து ‘சரக் சரக்’ என்று ஓசை எழுப்பியபடி அது நடந்து சென்றது. முன்னூறு அடி தூரம் சென்றிருப்பார்கள். ஒரு புதர்பக்கம் லேசாய் அசைவு தெரிந்தது. ராணியின் தோழி காட்டுப்பன்றி புதரிலிருந்து எட்டிப்பார்த்தது. “என்ன ஆன்ட்டி! டிரெக்கிங்கா! நானும் வரலாமா?”–கேட்டது அது.

“ஓ… தாராளமா! நீங்கள் எல்லாம் வந்தாத்தான் ராணிக்கு உற்சாகமா இருக்கும்!”–என்றது அம்மாகரடி, காட்டு பன்றியும் அவர்களோடு சேர்ந்து கொண்டது.

போகும் வழியில்; சுணை ஒன்று உண்டு. அதன் நீர் மிகவும் சுவையாய் இருக்கும். மூவரும் சுணையை நோக்கிப் போனார்கள். சுணை அருகே வசித்து வந்த முயலும், மான்குட்டியும் இவைகளோடு சேர்ந்து கொண்டன. “எப்படியும் நீங்க இன்னைக்கு வருவீங்கன்னு தெரியும்! அதான் இதை எடுத்து வைச்சேன்!”–என்றபடி சில வகை மலைத் தானியங்களை முயல் உண்ணக் கொடுத்தது. மான்குட்டியும் தன் பங்கிற்கு தான் சேகரித்த அழகிய வண்ணக் கூழாங்கற்களைப் பரிசளித்தது. குட்டிகள் தானியங்;களைக் கொறித்தன. கூழாங்கற்களை வைத்து வீடு கட்டின. சுணை நீரைக் கைகளால் அளைந்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடின. சுணையில் வெண்நுரையாய் பொங்கிய நீரின் அழகை இரசித்தபடி ராணி அமர்ந்திருந்தது. அதற்கு அங்கிருந்து கிளம்பவே மனசில்லை. அம்மாதான் “இன்னும் நாம ரொம்ப தூரம் மலை ஏறனும்”– என்றபடி ராணியை இழுத்துச் சென்றது.

மலை ஏற்றப் பாதையில் ஆங்காங்கே நிறைய காட்டுமலர்கள் பூத்துக் கிடந்தன. அவற்றில் சிலவற்றைப் பறித்து குட்டிகள் தலையில் சூடிக் கொண்டன. அடர்ந்த மரங்களின் ஊடாக வண்டுகள் ரீங்காரம் இட்டுக் கொண்டிருந்தன. பள்ளத்தாக்குகளில் மேகக்கூட்டங்கள் நகர்ந்து சென்று கொண்டிருந்தன. மலை உச்சியை அடைந்தபோது சூரியன் நன்றாக மேலே வந்திருந்தது. மலை உச்சியில் அருவி ஒன்று உண்டு. அது பேரிரைச்சலுடன் விழுந்து கொண்டிருந்தது. அதிலிருந்து புகைபோல் புறப்பட்ட சாரல் துளிகள் குட்டிகளை நனைத்தது. அருவியின் பக்கவாட்டில் வானவில் தெரிந்தது. அதுமிகவும் சிறியதாக இருந்தது. “அம்மா! இங்கயும் வானவில் வருமாமா? – ராணி ஆச்சரியத்துடன் கேட்டது.

“எங்கலாம் ஒளிச்சிதறல் ஏற்படுமோ அங்கலாம் வானவில் வர வாய்ப்புண்டு!”- என்றது அம்மாகரடி. அருவிநீர்; தடாகத்தில் விழுந்து வெளியேறும் இடம் அதிக ஆழமில்லாமல் இருந்தது. குட்டிகள் அதில் குதியாட்டம் போட்டன. அதில் திரிந்து கொண்டிருந்த மீன்களைப் பிடித்து விளையாடின. அம்மாகரடி தேன், பலாச்சுளை கிழங்குவகைகள் இவைகளைக் கலந்து பிசைந்து ஒரு பதார்த்தமாகச் செய்து தந்தது. குட்டிகள் அவற்றைத் தின்று களித்தன. பெரிய மரங்களின் கீழ் ஓடிப்பிடித்து விளையாடின. மாலையில் மலையை விட்டு கீழிறங்கின.

மறுநாள் காலை, பள்ளிக்குக் கிளம்பும் போதுதான் ராணிக்கு நினைப்பு வந்தது. “இசைனா என்னன்னு கேட்டுட்டு வந்து எனக்கு இன்னைக்குப் பதில் சொல்லனும்னு மிஸ் சொன்னாங்களே?”–ராணி யோசித்தது.

“அம்மா! இசைனா என்னமா?”–அது அம்மாவிடம் கேட்டது.

“நேத்து டிரெக்கிங் போனோமே! அப்ப உனக்குப்பதில் கிடைக்கலியா?”–அம்மாகரடி கேட்டது. “டிரெக்கிங் போனதுக்கும் இசைக்கும் என்ன சம்பந்தம்?”–ராணி குழம்பியது. அம்மா சொல்வதில் ஏதோ அர்த்தம் இருக்கும் என்று தோன்றியது. அது டிரெக்கிங் போன சம்பவங்களை மனதிற்குள் அசைபோட்டுப் பார்த்தது. ‘பறவைகளின் பூபாளம். காய்ந்த இலைச்சருகுகளின் சரசர ஓசை. மொட்டுக்கள் விடுபடும் சப்தம்’ என்று ராணிக்கு ஏதோ பிடிபடுவது போலிருந்தது. “தேங்ஸ்மா!”–என்றபடி அது பள்ளிக்குக் கிளம்பிப் போனது.

வகுப்பாசிரியை “இசைனா என்னனு எல்லாரும் கேட்டுத் தெரிஞ்சுகிட்டு வந்திருக்கீங்களா? எங்க சொல்லுங்க பார்ப்போம்”–என்றார். குட்டிகள் ஒவ்வொன்றும் கிடார், டிரம்ஸ், பியானோகீபோர்ட் என்று ஆளாளாளுக்கு ஒரு பதிலைச் சொல்லின. ஆசிரியைக்குத் திருப்தியில்லை. ராணியின் முறை வந்தது. “எங்க ராணி! நீ சொல்லு பார்ப்போம்!”–என்றார்.

“இசை என்றால் ஓசை! –என்றது ராணி.

“எப்படி! எதை வைச்சு இப்படி சொல்ற ராணி?”–கேட்டார் அசிரியை.

“நம்மைச் சுற்றி இயல்பா எழும் அனைத்து ஓசைகளிலும் இசை இருக்கு மிஸ்! பறவைகளின் குரல் வண்டுகளின் ரீங்காரம் சிற்றோடையின் சலசலப்பு அருவிகளின் ஆரவாரம் கடலின் பேரிரைச்சல் மழலையின் குரல் மழையின் சப்தம் இப்படி நம்மைச் சுற்றி எழும் எல்லா ஓசைகளிலும் இசை இருக்கு! அதுனாலதான் ஓசையே இசை என்கிறேன்!”–என்றது ராணி.

ஆசிரியை மிகுந்த ஆச்சரியத்துடன் ராணியைப் பார்த்தார். அவர் குட்டீஸ்களிடம் இது போன்ற பதில் ஒன்றைத்தான் எதிர்பார்த்தார். அவர் தன் பங்கிற்கு “புல்லாங்குழல் இசைன்னு சொல்றோம்! ஆனா புல்லாங்குழல் இசைப்பதில்லை! அதன் வழியே வரும் காற்றின் ஓசைதான் இசையா வெளிப்படுது! நாம வாழும் இந்த பூமியே பல இயற்கையான ஓசைகளால் நிரம்பியதுதான்! அந்த ஓசைகள் எல்லாத்துலயும் ஒரு சுருதியும் லயமும் இருக்கும்! அதுனால ஓசையே இசை! ரொம்ப அழகா சொன்ன ராணி!”–என்றபடி அவளைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்தார்.


மா.பிரபாகரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இசை என்பது… (சிறுகதை)”

அதிகம் படித்தது